அசாமின் “மொலாய் காடு” குறித்துக் கேள்விப்பட்டிருக்கீர்களா? பிரம்மபுத்ரா நதிக்கரையில் 1360 ஏக்கர் பரப்புள்ள, யானை, காண்டாமிருகம், புலி போன்ற பெரு மிருகங்கள் வசிக்கும் அடர்வனம் இது! நாற்பது ஆண்டுகளுக்கு முன் இவ்விடம் காடாக இல்லை; உயிர்கள் அற்ற மணல் திட்டு மட்டுமே இருந்தது. ஜாதவ் பாயேங் என்னும் வன அலுவலரின் பல வருட விடா முயற்சியால் அந்த இடம் இன்று காடாக மாறி செழித்து வளர்ந்திருக்கிறது! காடு உருவாக முக்கியக் காரணியாக ஜாதவ் சொல்வது சிவப்பு எறும்புகளைத் தான்!
ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா? எறும்புகள் இயல்பிலேயே மண்ணின் தன்மையை மாற்றுபவை. ‘எறும்பு ஊறக் கல்லும் தேயும்’ என்றொரு பழமொழி உண்டு. கல் தேயுமா என்று தெரியாது; ஆனால் உணவு தேடி நிலத்தின் மீது மட்டுமல்லாது, அடியிலும் சென்று வரும் எறும்புகள் அடியில் உள்ள செழிப்பான மண்ணை மேலே கொண்டுவருகின்றன; கூடவே அவைகளின் கூட்டில் சேமிக்கப்படும் மக்கும் உயிரினங்கள் மண்ணுக்கு உரமூட்டும்! மூங்கில் மட்டுமே வளரும் மணல்திட்டை, சிவப்பு எறும்புகளை விட்டு இப்படித்தான் வனமாக்கியுள்ளார் ஜாதவ்!
உலகின் மொத்தப் பூச்சிகளின் நிரையில் (insect biomass) கால் பங்கு எறும்பினங்கள் தான். இரைக் கொல்லிகளாகவும், நிலத்தில் இறந்த உயிர்களை மக்க உதவும் துப்புரவாளராகவும் பெரும் பங்கு வகிக்கின்றன எறும்புகள். எறும்புகள் தனித்துவமான சமூகக் கட்டமைப்பு கொண்டவை. “இராணி” என்னும் இனப்பெருக்கம் செய்யக்கூடிய பெண் எறும்பு, உணவைத் தேடும், கூடு கட்டும் இனப்பெருக்கம் செய்ய இயலாத பெண் எறும்புகள், இராணி எறும்புக்கு இனப்பெருக்கத்துக்கு உதவவென்றே இருக்கும் ஆண் எறும்புகள்- இவையே ஒரு சராசரி எறும்பினத்தின் கட்டமைப்பு.
‘மனிதனுக்கு அடுத்து எறும்பினங்களில் தான் மிக நுட்பமான சமூகக் கட்டமைப்பு உள்ளது’ என்கிறார் எறும்புகள் ஆராய்ச்சியாளரும் இயற்கையியலாளருமான E.O. Wilson. இவரது ஒரு கண்டுபிடிப்பு அது வரை மனித இனம் எறும்புகள் மேல் கொண்ட பார்வையை முற்றிலுமாக மாற்றியது!
சமூகமாய் வாழும் எறும்புகளில் தகவல் பரிமாற மொழி அல்லது சமிக்ஞை (Signals) ஏதாவது இருக்கவேண்டும் இல்லையா? அதைத் தேட முயன்றார் வில்சன். எறும்புகளின் அபாரமான நுகர்தல் திறன் கொண்டு, மண்ணில் முன்னே செல்லும் எறும்பு விட்டுச் சென்ற ஏதோ ஒரு வாசனைத் திரவத்தைப் பின்தொடர்ந்தே எறும்புகள் செல்கின்றன என்று அறிந்த வில்சன், தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு எறும்புகளின் தகவல் தொடர்புக்கு உதவுவது pheromone என்னும் உயிர்வேதி சமிக்ஞைதான் என்று கண்டுபிடிக்கிறார்! இத்தகைய தகவல் பரிமாற்றம் மூலம் இதுவரை மனிதனால் மட்டுமே செய்ய முடியும் என்று நாம் நம்பிவந்த நுண்ணறிவு கொண்ட செயல்பாடுகளையும், எறும்புகள் எப்படிச் செய்கின்றன என்று இதை வைத்துப் புரிந்துகொள்ள முடியும்!
எறும்புகளின் நுண்ணறிவு:
உலகம் முழுக்கப் பல கோடி ஆண்டுகளாக எறும்புகள் ஊர்ந்துகொண்டே இருக்கின்றன; அதுவும் சாரை சாரையாக, பக்குவமான நேர்கோட்டில் செல்லும் எறும்புகளைப் பார்த்து வியந்த பெல்ஜியம் அறிவியல் அறிஞர் ஜீன் லூயிக்கு (Jean Louis Deneubourg), எறும்புகளால் தம் உணவை நோக்கிய மிகக்குறைந்த தொலைவைக் கண்டுபிடிக்க முடியுமா? என்ற சந்தேகம் உண்டானது.
வேதியியல் நிபுணரான அவர், மிக எளிய ஒரு சோதனை முறையை உருவாக்கினார். எறும்புகளை ஒரு பெட்டியிலும், அதற்கான உணவை இன்னொரு பெட்டியிலும் வைத்து இரண்டு பாலங்களால், இரு பெட்டிகளையும் இணைத்தார். அதில் ஒரு பாலத்தின் நீளம் மற்றதை விடக் குறைவு. எறும்புகளின் பெட்டியைத் திறந்து விட்டதும் அவை இரு பாலங்களிலும் செல்லத் தொடங்கியது. சற்று நேரத்தில் அவை அனைத்தும் குறைந்த தொலைவுள்ள பாலத்தைத் தேர்வு செய்து செல்லத் தொடங்கியது. என்ன நடக்கிறது இங்கே?
ஜீன் லூயி சொல்கிறார்: “எறும்பு, தேனீ, குளவி போன்ற சமூகமாய் வாழும் பூச்சிகள் தமக்குள் தகவல் பரிமாற்றத்துக்குப் பல்வேறு முறைகளைக் கொண்டிருக்கின்றன. அதில் குறிப்பாக எறும்புகள் Pheromone என்னும் உயிர்வேதி சமிக்ஞையைக் கொண்டு தகவல் பரிமாறுகிறது. இங்கே நடந்ததும் அது தான்! எறும்புகள் தான் போகும் வழியில் உயிர்வேதிச் சமிக்ஞையை விட்டுச் செல்லும். அதே நேரம் அவற்றின் அபாரமான நுகர்தல் திறன் மற்ற எறும்புகளின் சமிக்ஞையைப் பின்பற்றிச் செல்ல உதவும். குறைந்த தொலைவுள்ள பாலத்தில் செல்லும் எறும்புகள், மற்ற பாலத்தில் செல்லும் எறும்புகளை விடச் சீக்கிரமே உணவைச் சேகரித்துத் திரும்பச் செல்லும். அதனால் அப்பாலத்தில் உயிர்வேதியின் நெடி மற்ற பாலத்தை விட அதிகம் இருக்கும். இதனால் தான் எப்போதும் எறும்புகளால் மிகக் குறைந்த தொலைவுள்ள பாதையைத் தேர்வு செய்ய முடிகிறது!”
உணவு வகை:
இத்தகைய எறும்புகளின் உணவுப் பழக்கம் என்னவாக இருக்கும்? பொதுவாக எறும்புகள் அனைத்துண்ணிகள்; அவைகளில் வேட்டையாடி உண்ணும் காலனிகள், இறந்த உயிரினங்களை உண்ணும் வகைகள், வெறும் இலைகளை மட்டுமே உண்ணும் வகைகள் என்று பல உண்டு. மற்ற பூச்சி, விலங்கினங்கள் எல்லாம் அன்றாடம் தம் உணவுத் தேவைக்காக இரைதேட, எறும்புகள் மட்டும் பல நாட்களுக்கான உணவைக் கூட்டில் சேர்த்து வைக்கின்றன; மழைக்காலங்களில் அல்லது அடாத குளிர்காலத்தில் கூட்டில் சேமித்தவை தான் எறும்புக் காலனியின் உணவு! இவ்வாறு உணவைத் தம் கூட்டில் சேமித்து வைப்பது குளவி, தேனீ, எறும்பு (hymenoptera) இனங்களின் பொதுப் பண்பு!
கூடு வகைகள்:
உலகிலுள்ள பல்லாயிரம் எறும்பு இனங்களுக்குள் கூடமைப்பதில் பெரும் வித்தியாசங்கள் காணப்படுகின்றன. மண்ணுக்கு அடியில், இலைகளில், பாறைகளுக்கு அடியில், மரப்பொந்துகளில் என இனத்துக்கு இனம் கூடு வைக்கும் இடமும் மாறுகிறது. சில எறும்பினங்கள் கூடமைக்காமல் காட்டின் தரையில் அலைகின்றன; பகல் முழுக்க இரைதேடும் இவை, இரவில் தற்காலிகக் கூடமைத்து இராணியையும், தம் புழுக்களையும் காக்கின்றன; எப்படி ஒரே இரவில் கூடமைக்கின்றன? தொழிலாளர் எறும்புகள் ஒன்றோடொன்று கால்களைப் பின்னிப் பிணைந்து தம்மையே கூடாக்குகின்றன! Bivouac என்று அழைக்கப்படும் இந்த அமைப்பில் சாதாரணமாக 1.5 லட்சம் முதல் 10 லட்சம் தொழிலாளர் எறும்புகள் பங்கு கொள்கின்றன!
எறும்புக் கூட்டில் இராணி எறும்பும், அதன் முட்டைகள்/புழுக்களும், சேகரித்து வைத்த உணவும் இருக்கும்; இவற்றோடு சில இனங்களில், காவலுக்காகவென்றே படைவீரர் எறும்புகளும் இருக்கும். இவை மற்ற காலனி எறும்புப் படைகள் உணவைக் களவாட வந்தால் தற்காத்துக் கொள்ளவும், மற்ற எறும்புக் கூடுகளுக்குள் சென்று உணவைத் திருடி வரவும் செய்கின்றன. சஹாரா பாலைவனத்தில் வாழும் ஒரு குறிப்பிட்ட எறும்பினம் (Matabele ants), காயமுற்ற சக எறும்புகளுக்கு உதவுவதை கவனித்து வியந்திருக்கிறார்கள் அறிஞர்கள்!
தமக்குள் வேலைப் பிரிவினை, தகவல் தொடர்பு, போர் என்று கிட்டத்தட்ட மனித சமூகம் போல் வாழும் எறும்புகள் இயற்கை உலகின் ஆச்சர்யம் தானே! அவை எப்படி பரிணாம வளர்ச்சி கொண்டன என்று ஆராய்வது இங்கு அவசியம்.
பரிணாமம்:
சுமார் 54 கோடி ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற உயிரியல் உலகின் குறிப்பிட்ட சில தகவமைப்புகளை இங்கு காண்போம்:
- பறத்தல்: உலகின் ஒரு உயிரினம் முதன்முதலில் மண்ணை விட்டு வானில் பறந்தது. அது ஒரு பூச்சி! அப்பூச்சி, காலப்போக்கில் பல்வேறு இனங்களாகப் பரிணாமம் கொண்டு பல்கிப் பெருகியது.
- அப்பூச்சிகள், இப்போதிருக்கும் தட்டான்கள், இரு சிறகிகள் போல மடக்க முடியாத இறக்கைகள் கொண்டிருந்தன. அவைகளின் ஒரு சந்ததி, மடக்கும் வகையில் இறக்கைகள் பெற்று இன்னும் பல்வேறு பூச்சி இனங்களாகப் பரிணாமம் அடைந்தன. மடக்கும் இறக்கைகளால் பறக்கத் தேவையில்லாத நேரத்தில் அவைகளால் மண்ணில் நடந்து சென்று, இரை தேட முடிந்தது.
- மூன்றாவது முக்கிய தகவமைப்பு, பூச்சிகளில் உண்டான முழு உருமாற்றம் (full metamorphosis). அது வரை முழுமையற்ற உருமாற்றம் என்னும் முறையில், உருவ அளவில் முதிர் நிலைப் பூச்சியை ஒத்திருக்கும் இளரிகள், வளர்ந்து தோலுரித்து வளர்நிலைகளைக் (instars) கடந்து முதிர்ந்த நிலை அடையும். இந்நிலை மாறி, முட்டையில் இருந்து புழு(larva), கூட்டுப் புழு(cocoon), பின்னர் வளர்ந்த பூச்சி என்ற உருமாற்ற நிலைகளுடன் கூடிய வளர்ச்சி நிலைகளைப் பூச்சிகள் பெற்றன. இப்பூச்சிகளில் இருந்து தான் இப்போது நாம் காணும் பட்டாம்பூச்சிகள், வண்டுகள் (beetle), எறும்புகள் ஆகியவை தோன்றின.
- முக்கியமான இம்மூன்று தகவமைப்புகளும் பூச்சிகள் உலகில், ஆச்சர்யம் கொள்ளத்தக்க வகையில், சமூகம் என்னும் அமைப்பை உண்டாக்கியது! இனப்பெருக்கம் செய்யக்கூடிய குழுக்கள், இனப்பெருக்கம் செய்யாத தொழிலாளர் குழுக்கள் என்று இன்று எறும்பு, குளவி, தேனீ இனங்களில் நாம் காணும் சமூக அமைப்பு அப்படி உருவானது தான்!
இதன் சிறப்பு என்னவென்றால், அது வரை தனித்த ஒரு உயிரினமாக வாழ்ந்து வந்தவை, இப்போது ஒரு இராணி எறும்பு (சில இனங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட இராணிகள்!) தொழிலாளர், படை வீரர் என்று தனித்தனி வேலைப் பிரிவுகள் கொண்டு ஒரே சமூக உயிரினமாகத் தகவமைத்துப் பரிணமித்தது தான்! இதை ஆங்கிலத்தில் ‘super organism’ என்பர். மனித சமூகத்தில் இருப்பது போல ஆதிக்கத்தால், அடக்குமுறையால் உண்டான சமூகக் கட்டமைப்பு அல்ல எறும்புகளில் இருப்பது. மாறாகப் பல்லாயிரம் ஆண்டுகால பரிணாமத்தால் உருவான வேலைப் பிரிவுகள் தான் நாம் எறும்பில் காண்பது. இராணி எறும்பின் கட்டளையால் தொழிலாளர்களும், படைவீரர் எறும்புகளும் வேலை செய்யவில்லை; மரபணு அளவிலேயே அவைகள் ஒன்றுக்கொன்று உதவி, இயைந்து வாழ்வதற்கென்றேத் தகவமைத்து வந்தவை. இந்த சமூக அமைப்பே எறும்புகளின் பலம்!
நம் வீடுகளில் அடிக்கடி வரும் எறும்பினங்கள் எவை? அதன் இயல்பு என்ன? முக்கியமாக அவற்றின் சூழல் பங்கு என்ன ஆகியவற்றை விரிவாக அடுத்தக் கட்டுரையில் காண்போம்!
– அமர பாரதி
useful article