எண்ணூர் அருகே கொசஸ்தலை ஆற்றை ஆக்கிரமித்துள்ள அயல் படர் உயிரினமான காக்கா ஆழிகளை அகற்றும் பணி ரூ. 56.50 கோடி மதிப்பீட்டில் விரைவில் தொடங்கவிருப்பதாகத் தமிழ்நாடு அரசு சார்பில் பசுமைத் தீர்ப்பாயத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
’காக்கா ஆழி – Mytella strigata’ என்பது ஒரு வகையான தென் அமெரிக்க சிப்பியினம். எண்ணூர் பகுதிக்கு இது அயல்வகை உயிரினமாகும். கடந்த 4 ஆண்டுகளாக எண்ணூர் முதல் பழவேற்காடு வரையிலான கொசஸ்தலை ஆறு, முகத்துவாரம், பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைப் பகுதிகளில் நீருக்கடியில் போர்வைபோலப் படர்ந்து காணப்படுகிறது காக்கா ஆழி. ஆற்றின் மணலிலும் சேற்றிலும் மேல்பகுதியில் காணப்படுவதுபோலத் தெரிந்தாலும் ஆற்றில் இறங்கினால் 2 முதல் 3 அடி ஆழம் வரை இந்தச் சிப்பிகள் காணப்படுகின்றன.
காக்கா ஆழிகள் எண்ணூர் முதல் பழவேற்காடு வரையில் ஆறு, முகத்துவாரம் பகுதிகளில் மீன்பிடித் தொழில் நடத்தும் மீனவர்களின் வாழ்வாதரத்தையே அழித்துள்ளது. காக்கா ஆழிகளின் பரவலால் ஆற்றில் இறால், நத்தை மற்றும் நாட்டினங்களான மஞ்ச மட்டி, பச்சை ஆழி உள்ளிட்ட சிப்பியினங்கள் அழிந்து வருவதாக அப்பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது தொடர்பாகக் குமரேசன் சூலூரான் என்பவர் 2023ஆம் ஆண்டு தொடுத்த மனுவைத் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. இவ்வழக்கை தொடுத்தபோது கொசஸ்தலை ஆற்றில் வெறும் 4 கி.மீ. தொலைவுக்கு மட்டுமே காணப்பட்ட காக்கா ஆழி ஆக்கிரமிப்பின் பரவல் இப்போது 24 கி.மீ. தொலைவுக்குப் பரவி விட்டது.
காக்கா ஆழிகள் துறைமுகங்க:ள் வழியாக எண்ணூர் பகுதியில் பரவியிருக்கலாமெனக் கூறப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வரும் சர்க்கு கப்பல்கள் கப்பலை நிலைப்படுத்துவதற்காகக் கப்பலுக்குள் இருக்கும் தொட்டிக்குள் நீர் நிரப்பி வரும். சரக்குகளை இறக்கும் துறைமுகத்தின் இறங்குதளத்தைப் பொறுத்து அந்த நீர் வெளியேற்றப்படும். இம்முறைய Ballasting என்றழைப்பர். அப்படி காமராஜர் அல்லது காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு வந்த கப்பல்களின் வழியாக இக்காக்கா ஆழிகள் பரவியிருக்கக்கூடும் எனவும் கூறுகிறார்கள்.
இவ்விவகாரம் தொடர்பாக டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சமர்ப்பித்த அறிக்கையில் காக்கா ஆழிகள் 25cm2 பரப்பில் 180 முதல் 250 காக்கா ஆழிகள் காணப்படுவதாகவும் இறால் உற்பத்திக்கு அவசியமான மிதவைவாழிகளை இக்காக்கா ஆழிகள் அழித்துள்ளன எனக் கூறப்பட்டிருந்தது. மேலும் தூர்வாருவதன் மூலமாக அல்லது மீனவர்களைக் கொண்டு ஆழிகளைச் சேகரித்து மீன்களுக்கு உணவாகவும் அல்லது மீன் உரம் தயாரிப்பதன் மூலமாகவும் இவற்றை அகற்ற அரசு முன்வர வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டது.
தொடக்கத்தில் 700 மீ தூரத்திற்கு காக்கா ஆழிகளை அகற்ற 8.5 கோடி தேவைப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், இப்பிரச்னைக்கு நீர்வளத்து, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, காமராஜர் துறைமுக நிர்வாகம் ஆகியோர் யாரும் பொறுப்பேற்க முன்வராததால் நிதி ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் காக்கா ஆழிகளை அகற்ற ரூ. 90 கோடி மதிப்பீட்டில் நீர்வளத்துறை விரிவான ஒரு திட்ட அறிக்கையைத் தயார் செய்தது. ஆனால், இந்நிதி ஒதுக்கப்படவில்லை, போதுமான நிதி ஒதுக்கக் கோரி நீர்வளத்துறை செயலாளருக்குப் பல முறை கடிதம் எழுதியும் எந்தப் பலனும் இல்லையெனத் தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையத்தின் உருப்பினர் செயலரும் தமிழ்நாடு வனத்துறைத் தலைவருமான ஸ்ரீநிவாஸ் ரெட்டி இ.வ.ப., பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கைத் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இவ்வழக்கு விசாரணை 24.11.2025 அன்று தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் பிரசாந்த் கார்கவா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதார தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் யோகேஷ்வரன் மனுத்தால் செய்தபோது வெறும் 4 கி.மீ. மட்டுமெ இருந்த காக்கா ஆழி இப்போது 24 கி.மீட்டருக்குப் பரவிப் பழவேற்காடு ஏரிக்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளதால் விரைவில் காக்கா ஆழிகளை அகற்ற வேண்டுமெனவும் காக்கா ஆழிகள் மலைபோல் குவிந்துள்ளதால் மீனவர்கள் தங்கள் படகுகளை இயக்க முடியவில்லையெனக் கூறினார்.
தமிழ்நாடு அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் காணொளி வாயிலாக ஆஜரானார். காக்கா ஆழிகளை அகற்றுவது தொடர்பாகச் சுற்றுச்சூழல் துறையின் அரசு கூடுதல் செயலாளர் சுப்ரியா சாகுவிடம் விரிவாகப் பேசியதாகவும் இப்பணிகளை மேற்கொள்வதற்கான தூர்வாரும் இயந்திரங்கள், ஜே.சி.பி. எந்திரங்கள் உள்ளிட்டவற்றை வாடகைக்கு எடுப்பத்தால் ஆகும் செலவைவிட அவற்றை விலைக்கு வாங்குவது குறைவாக இருக்குமென்பதால் விரைவில் அவற்றைத் தமிழ்நாடு அரசு வாங்கவிருப்பதாகத் தெரிவித்தார். மேலும் இதற்காகத் தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களைப் பாதுகாத்தல் மற்றும் ஆறுகளைச் சீரமைத்தல் கழகத்திடம் ரூ. 56.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது இக்கோரிக்கை நிதித்துறையின் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்தார். இந்நிதி ஒதுக்கீடு செய்யப்படும் வரைக் காத்திருக்காமல் ஏற்கெனவே அரசிடம் உள்ள இயந்திரங்கள் மற்றும் சில இயந்திரங்களை வாடகைக்கு அமர்த்தித் தூர்வாரும் பணிகள் தொடங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட தீர்ப்பாயம், விரைவில் பணிகளைத் தொடங்கவும் இப்பணிகளில் சென்னை காமராஜர் துறைமுக நிர்வாகத்தின் உதவியினையும் தமிழ்நாடு அரசு கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறி மனுமீதான அடுத்த கட்ட விசாரணையை டிசம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
- சதீஷ் லெட்சுமணன்
