காலநிலை மாற்றங்களுக்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழுவின் ஆறாவது மதிப்பீட்டு காலத்தின் இறுதி அறிக்கை மார்ச் 20ம் தேதி வெளியிடப்படவுள்ளது. உலக நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் சேர்ந்து உருவாக்கிய இந்த அறிக்கை புவி வெப்பமாதலைத் தடுக்க நாடுகள் செய்து வரும் முயற்சிகள் எந்தளவிற்கு நமக்கு பலனளிக்கப் போகிறது என்பதையும் தொடர்ந்து என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் தெரிவிக்கப்போகிறது.
காலநிலை மாற்றங்களுக்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழு என்பது பல்வேறு அறிவியலாளர்களை கொண்ட ஒரு குழுவாகும். இந்த ஐ.பி.சி.சி. அமைப்பானது 1988ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையின் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் உலக வானிலை அமைப்பால் இணைந்து உருவாக்கப்பட்டது. இதன் நோக்கம் என்பது உலக நாடுகளுக்கு காலநிலை மாற்றம் குறித்த கொள்கையை உருவாக்குவதற்கான அறிவியல் பூர்வ தகவல்களை அளிப்பதாகும். பன்னாட்டு அளவில் காலநிலை மாற்றம் குறித்த உரையாடல்களுக்கு முக்கியமான கருவியாக ஐ.பி.சி.சி. தயாரித்து வெளியிடும் அறிக்கைகள் விளங்குகின்றன.
இந்த அமைப்பில் தற்போது 195 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பானது தன்னிச்சையாக ஆய்வுகள் எதையும் மேற்கொள்ளாது. பல்வேறு நாடுகளில் உள்ள அறிவியலாளர்கள் மேற்கொள்ளும் ஆய்வுகளை குழு அமைத்து ஆராய்ந்து அதன் மூலம் காலநிலை மாற்றத்திற்கான காரணங்கள், தாக்கங்கள், எதிர்கால ஆபத்துகள், தடுப்பு மற்றும் மட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கைகளாக வெளியிடுகிறது.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வானிலை அமைப்பு ஆகியவற்றில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகள் தங்கள் காலநிலை விஞ்ஞானிகளின் பெயர்களை சமர்ப்பிப்பார்கள். இப்பட்டியலில் இருந்து ஐ.பி.சி.சி.யின் தலைமைக்குழு குறிப்பிட்ட அளவிலான விஞ்ஞானிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பணிக் குழுவை ஒதுக்கும். ஐ.பி.சி.சி. அமைப்பானது மூன்று பணிக்குழுக்கள் மற்றும் ஒரு செயற்குழுவாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் பணிக் குழுவானது காலநிலை மாற்றத்தை உண்டாக்கும் இயற்பியல் அறிவியலின் அடிப்படை குறித்து ஆராய்கிறது. இரண்டாவது பணிக் குழுவானது காலநிலை மாற்றத்தின் தாக்கம் மட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் பாதிப்பு குறித்தும் மூன்றாவது பணிக்குழு காலநிலை மாற்றத்திற்கு தகவமைத்துக் கொள்வது குறித்தும் ஆராய்கிறது. செயற்குழுவின் முக்கிய நோக்கமாக பசுமை இல்ல வாயு குறித்த ஆய்வு மற்றும் அதனை நீக்குவது அமைந்துள்ளது.
இந்த அடிப்படையில் ஐ பி சி சி ஆனது இதுவரை 5 மதிப்பீட்டு அறிக்கைகளை (Assesment Report) தயாரித்து வெளியிட்டுள்ளது.
முதல் மதிப்பீட்டு அறிக்கை ( FAR)
1990ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த முதல் மதிப்பீட்டு அறிக்கையானது காலநிலை மாற்றத்தின் பின்னணியில் உள்ள அறிவியல் குறித்த ஒரு பரந்த கண்ணோட்டத்தை வழங்கியது மேலும் உலக வெப்பமயமாதலின் ஆதாரங்கள் மற்றும் நிச்சயமற்றத் தன்மை குறித்தும் இவ்வறிக்கையில் பேசப்பட்டிருந்தது.
இரண்டாவது மதிப்பீட்டு அறிக்கை ( SAR)
1995ஆம் ஆண்டு வெளியான இரண்டாவது மதிப்பீட்டு அறிக்கையானது உலக அளவில் காலநிலை மாற்றத்தில் தெளிவாக கண்டறியக்கூடிய அளவில் மனித செயல்பாடுகளும் காரணமாக இருக்கலாம் என தெரிவித்தது.
மூன்றாவது மதிப்பீட்டு அறிக்கை (TAR)
2001ஆம் ஆண்டு வெளியான மூன்றாவது அறிக்கை கடந்த 50 ஆண்டுகளில் உலகம் சந்தித்த வெப்பநிலை உயர்வுக்கு மனிதச் செயல்பாடுகளே காரணம் என்பதற்கான புதிய மற்றும் வலுவான ஆதாரங்களை முன்வைத்தது.
நான்காவது மதிப்பீட்டு அறிக்கை (AR4)
2007ஆம் ஆண்டு வெளியான இந்த அறிக்கையில் உலகளவில் சராசரி காற்று மற்றும் கடல் வெப்பநிலை உயர்வு, பனிப்பாறைகள் உருகுதல், கடல்நீர் மட்டம் உயருதல் போன்றவற்றை கண்காணித்ததின் அடிப்படையில் உலக வெப்பமயமாதல் என்பது சந்ததேகத்திற்கிடமின்றி தெளிவாகியதாக கூறப்பட்டிருந்தது.
ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கை (AR5)
2014ஆம் ஆண்டு வெளியான இந்த அறிக்கையில் அனைத்து கண்டங்கள் மற்றும் கடல்களில் காலநிலை அமைப்பில் மனிதச் செயல்பாடுகளின் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 95% மனிதர்கள் மட்டுமே உலக வெப்பமயமாதலுக்கு காரணம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது ஐ.பி.சி.சி. தனது ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையின் காலத்தில் உள்ளது. இந்த ஆறாவது அறிக்கை காலமான 2015 முதல் 2023 ல் மொத்தமாக 8 அறிக்கைகள் வெளியிடப்படும். இதுவரை : WGI – The Physical Science Basis, WGII – Impacts, Adaptation and Vulnerability, WGIII – Mitigation of Climate Change எனும் பணிக்குழுக்களின் மூன்று அறிக்கைகளும் Global Warming of 1.5°C, Climate Change and Land, The Ocean and Cryosphere in a Changing Climate எனும் மூன்று சிறப்பு அறிக்கைகளும் இந்த மதிப்பீட்டு காலத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அறிக்கைகளில் கூறப்பட்டுள்ள முக்கியமான அம்சங்களை ஒருங்கிணைத்து Synthesis Report இறுதி அறிக்கையாக வெளிவரவுள்ளது. இந்த அறிக்கை இரண்டு பாகங்களாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகமுழுவதுமுள்ள அரசு கொள்கை வகுப்பாளர்களுக்கான சுருக்கம் ஒன்றையும், முழு நீள அறிக்கையுமாக இறுதி அறிக்கை வெளியிடப்படவுள்ளது.
முதல் பணிக்குழு அறிக்கை: https://poovulagu.org/news/normal-life-between-disasters/
இரண்டாம் பணிக்குழு அறிக்கை: https://poovulagu.org/topics/scientists-warns-irreversible-imopacts-of-global-warming/
மூன்றாம் பணிக்குழு அறிக்கை: https://poovulagu.org/topics/we-can-halve-emissions-by-2030-says-ipcc/