மேகதாது அணை: சுற்றுச்சூழல் அனுமதி பெற கர்நாடக அரசு புதிய முயற்சி

மேகதாது அணை
மேகதாது அணை

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது எனுமிடத்தில் அணை கட்டுவதற்குச் சுற்றுச்சூழல் அனுமதிகோரி கர்நாடக அரசு ஒன்றிய சுற்றுச்சூழல்,  வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திடம் ஜனவரி 5அம் தேதி விண்ணப்பித்துள்ளது. இவ்விண்ணப்பத்தைப் பரிசீலிக்கக் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையைச் சமர்ப்பிப்பது அவசியமென ஒன்றிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு தெரிவித்துள்ளது.

மேகதாது அணை கட்டுமானத்தின் சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மேற்கொள்வதற்கான ஆய்வு எல்லைகளை வழங்கக்கோரி ஒன்றிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் (Expert Appraisal Committee – EAC) கர்நாடக அரசின் நீர்வளத்துறை (காவிரி நீராவாரி நிகம நியமித) 2024 மே மாதம் விண்ணப்பித்திருந்தது.

அவ்விண்ணப்பத்தில்

“மேகதாது அணை கட்டுமானத்திற்கு உச்சநீதிமன்றம் எவ்விதத் தடையும் இதுவரை வழங்கவில்லை.

மாநிலங்களுக்கிடையேயான விவகாரத்தை மத்திய நீர் ஆணையம் பரிசீலிக்கிறது. ஆகவே சுற்றுச்சூழல் தாக்க ஆய்வறிக்கை தயாரிப்பதற்கான அனுமதியை ஒன்றிய அரசு வழங்க தடை கிடையாது.” எனக் கூறியிருந்தது கர்நாடக அரசு.

அணைத் திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களைக் கர்நாடக அரசிடம் EAC கோரியிருந்தபோது  அவற்றை அளிக்காத காரணத்தால் விண்ணப்பத்தைப் பரிசீலனைப் பட்டியலிலிருந்து 2024 அக்டோபர் 30ஆம் தேதி EAC நீக்கியது.

இந்நிலையில் கடந்த 2025 நவம்பர் 13ஆம் தேதி இவ்விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு ஒன்று நிராகரிக்கப்பட்டிருந்தது.  அம்மனுவில் மேகதாது அணைத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை(Detaild Project Report – DPR) தயார் செய்ய கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் 22.11.2018 அன்று வழங்கிய அனுமதியை ரத்து செய்யுமாறு தமிழ்நாடு அரசு கூறியிருந்தது.  காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே மத்திய நீர்வள ஆணையம் கர்நாடக அரசின் DPR ஐ பரிசீலிக்கும் என்பதால் தமிழ்நாடு அரசின் மனுவை நிராகரிப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இந்நிலையில் 05.01.2026 அன்று ஏற்கெனவே EAC பரிசீலனையில் இருந்து நீக்கப்பட்ட தங்களது விண்ணப்பதை மீண்டும் கர்நாடக அரசு பரிசீலனைக்குப் பட்டியலிட்டுள்ளது. ஆனால், ஜனவரி 15ஆம் தேதி ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் EAC கர்நாடக அரசுக்கு எழுதிய கடிதத்தில் இவ்விண்ணப்பத்தைப் பரிசீலிக்க மேகதாது அணை கட்டுவதற்கு ஒன்றிய நீர்வள அமைச்சகத்தால் இறுதி செய்யப்பட்டு, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையைச் சமர்ப்பிப்பது அவசியம் எனக் கூறிவிட்டது.

01.02.2024 அன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் கர்நாடக அரசு தயாரித்த மேகதாது அணைத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. அது மீண்டும் மத்திய நீர்வள ஆணையத்திடமே திருப்பி அனுப்பப்பட்டிருந்தது. தற்போதுவரை இந்நிலையேத் தொடர்கிறது. DPR இல்லாமல் சுற்றுச்சூழல் அனுமதி பெற முடியாது என்பதால் கர்நாடக அரசின் புதிய முயற்சியும் பின்னைடைவைச் சந்தித்துள்ளது.

பல்வேறு துறைகளுக்கு ஒரே நேரத்தில் அழுத்தம் கொடுப்பதன்மூலம் அணை கட்டுவதகான சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்று விடலாமெனக் கர்நாடக அரசு முயன்று வருகிறது.

  • சதீஷ் லெட்சுமணன்
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments