கெட்டி மார்சேலோ; காலநிலைக்கு எதிரான போரில் நதியை ஆயுதமாக்கிய பெண்

கெட்டி

பெரு நாட்டின் மத்திய அமேசான் காடுகளில் பாயும் ‘பேரனே’ நதி பற்றிப் பேசும்போது அதை ஒரு வளமாக குறிப்பிடுவதில்லை கெட்டி மார்செலோ. அவரைப் பொறுத்தவரையில் நதிக்கு உயிர் இருக்கிறது. அது குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போல. அஷானிங்கா பழங்குடியினத்தைச் சேர்ந்த புச்சாரினி (Pucharini) சமூகத்தில் வளர்ந்த சிறுமி அவர். நதியில் நீராடுவதும், படகில் அதைக் கடப்பதும், நதிக்கடியில் மீன்கள் நீந்துவதும் அவர் பால்யத்தின் ஒரு பகுதி. பின்னர், நீர் மாசடைந்து, மீன்கள் இறக்கத் தொடங்கியபோது அது கெட்டிக்கு தனிப்பட்ட துயரமாக இருந்தது. “மிக நெருங்கியவர்களை இழந்தது போன்ற” ஒரு உணர்வு இருந்ததாகச் சொல்கிறார். நதியுடனான கெட்டியின் இப்பந்தம்தான் சூழலுக்கான அவரது போராட்டத்தின் அடித்தளம்.

பெருவின் அஷானிங்கா பழங்குடியினத்தைச் சேர்ந்த தலைவர்தான் கெட்டி மார்செலோ. ஆண்டீஸ் மற்றும் அமேசான் பகுதிகளில் உள்ள பழங்குடியினர் பெண்களை ஒருங்கிணைக்கும் ONAMIAP (National Organization of Indigenous Andean and Amazonian Women of Peru) அமைப்பின் ஒரு முக்கிய உறுப்பினரும் கூட. பழங்குடியின உரிமைகள், பாலின நீதி, காலநிலை நடவடிக்கை ஆகியவற்றைச் சார்ந்துதான் கெட்டியின் பணி அமைந்திருக்கிறது. இவையனைத்தும் ஒன்றோடு ஒன்று பிணைந்திருப்பவை என்று கெட்டி உறுதியாக நம்புகிறார். மக்கள் குழுக்களை திரட்டுவதன் மூலமும், தேசிய அளவில் செய்திகளை எடுத்துச் செல்வதன் மூலம் கெட்டி மார்செலோ வலியுறுத்துவது ஒன்றுதான்: பழங்குடியினப் பெண்களின் தலைமையையும் சூழல் பாதுகாப்பையும் பிரித்துப் பார்க்க முடியாது.

அமேசானின் மழைக்காடுகளில் சமூக வாழ்வில் பெண்கள் மையமாக இருந்த ஒரு சூழலில்தான் கெட்டி வளர்ந்தார். அவர்கள் காடு வளர்த்தார்கள், விதைகளைப் பாதுகாத்தார்கள், மருத்துவ மூலிகைகளைச் சேகரித்தார்கள் அதோடு நீர் வளங்களைக் காத்து நின்றார்கள். இப்பணிகளுக்கும் பொறுப்புகளுக்கும் வேறொரு பொருளும் இருந்தது. சூழல் பற்றிய மிக ஆழமான புரிதல் அவர்களிடத்தில் இருந்தது. நிலம் உள்ளிட்ட வளங்களை நிர்வகிப்பதிலும் பாதுகாப்பதிலும் பெண்கள் முன்னணியில் நின்றாலும் முடிவெடுக்கும் அதிகார நிலைகளில் அவர்களுக்கான இடம் இல்லை. சமூகத் தலைமைகள், அதிகார மையங்களுடனான பேச்சுவார்த்தைகள், நில நிர்வாக உரையாடல்கள் என எல்லாத் தளங்களிலும் ஆண்கள்தான் நிறைந்திருந்தார்கள்.

கெட்டி மார்செலோவின் தொடக்ககால அரசியல் விழிப்புணர்வை இந்த இடைவெளி செதுக்கியது எனலாம். விதைகளின், உயிர்ப்பன்மையத்தின், உணவு அமைப்புகளின் பாதுகாவலர்களாக இருக்கும் தொல்குடி பெண்களின் குரல்கள் காடுகள், நதிகளைப்பாதிக்கும் வளர்ச்சி சார்ந்த முடிவுகளில் எடுபடுவதில்லை என்பதைக் கெட்டி திரும்பத் திரும்ப சுட்டிக்காட்டினார். ONAMIAPயுடனான அவரது பணியில் அதைக் கவனப்படுத்தினார். நிர்வாகத்தில்,உரிமைகளை பாதுகாப்பதில், தொல்குடி அறிதலில் வேரூன்றியிருந்த சூழல் பாதுகாப்பில் பெண்களின் பங்கேற்பை உறுதிப்படுத்தினார்.

பேரனே நதியில் நேர்ந்த மாற்றங்கள் அவரது சமூகத்தைப் பாதித்தபோதுதான் கெட்டியின் பணியில் ஒரு முக்கிய மாற்றம் வந்தது. அப்போது கட்டமைப்பு மற்றும் சுரங்கப்பணிகள் போன்ற வளர்ச்சி சார்ந்த அழுத்தங்கள் காரணமாக நதியின் சூழல் அமைப்பு மாறியது. மீன்களின் எண்ணிக்கைக் குறைந்தததோடு நீரின் தன்மையும் மாறியது. உணவு, போக்குவரத்து, தினசரி வாழ்க்கை என்று கிட்டத்தட்ட எல்லாவற்றுக்கும் நதியைச் சார்ந்திருந்த சமூகங்களுக்கு உடனடியாக அதன் தாக்கம் தெரிந்தது. “இதற்கு மேல் சுற்றுசூழலுக்கு நேரும் சேதத்தைப் புறக்கணிக்க முடியாது” என்று அம்மாற்றத்துக்கான தருணத்தைப் பற்றிச் சொல்கிறார் கெட்டி.

அந்த அனுபவத்திலிருந்து அவர் ஆற்றி வந்த களப்பணியின் திசை மாறியது. பரந்துப்பட்ட சூழல் பாதுகாப்பை முன்னெடுத்தார் கெட்டி. அதில் தொல்குடிப் பெண்களின் பங்களிப்புகளுக்கான அங்கீகாரத்துக்கு முன்னுரிமை அளித்தார். இயற்கையின் உரிமைகள்” (Rights of Nature) என்ற கருத்தை முன்னிறுத்தும் தொல்குடி பெண்களின் முயற்சிகளில் கெட்டி தன்னை இணைத்துக் கொண்டார். இந்த அணுகுமுறை, இயற்கையை – அதாவது நதிகளை, காடுகளை, நிலங்களை – மனிதர்களின் சொத்தாக அல்லாமல் தனித்த உரிமைகள் கொண்ட உயிராகக் காண வேண்டும் என்று வலியுறுத்துகிறது. சமூக அடையாளங்களோடும் உயிர்வாழ்தலோடும் தொடர்புடைய உயிர்முறை.

கெட்டியைப் பொறுத்தவரையில் நீருக்குப் பெயரிடுவது என்பது இந்த உறவின் ஒரு தன்மை. நதிகள் வெறும் நீர் வளங்கள் இல்லை. அவை நம் உறவினர்கள். வாழ்தலுக்கான ஆதாரங்கள். அவற்றுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும். சூழல் பாதுகாப்பு என்பது பாதுகாப்புக் கொள்கைகள் என்பதைத்தாண்டி இயற்கையின் உள்ளார்ந்த மதிப்பை அங்கீகரிக்கும் ஒன்றாக மாற வேண்டும் என்கிற கெட்டியின் வாதத்துக்கு இப்பார்வை அடிப்படையாக அமைந்தது. நதிகளை உயிருள்ள ஒன்றாக முன்வைப்பதன் மூலம், அரசுகளும் அமைப்புகளும் சூழல் நிர்வாகத்தை அணுகுவதில் மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்று கெட்டியும் அவரைப் போன்ற தொல்குடித் தலைவர்களும் நம்பினார்கள்.

காலநிலையைக் கையாள்வதில் பழங்குடியினப் பெண்களின் முக்கியமானப் பங்களிப்பையும் கெட்டியின் பணி முன்னிறுத்துகிறது. பெரும்பாலான, அமேசான் சமூகங்களில் பெண்கள் உணவு முறைகளை நிர்வகித்து, விதைப் பல்வகைமையைக் காத்து, நீர்நிலைகளைப்பாதுகாக்கிறார்கள். இதற்கான நடைமுறைகள் உயிர்ப்பன்மையத்தைக் காக்க உதவுவதோடு, சுற்றுச்சூழல் மாற்றங்களுக்குச் சமூகங்களைத் தயார்நிலையில் வைத்திருக்கின்றன. காலநிலை மாற்றம் பற்றிய உரையாடல்களில் இப்பங்களிப்புகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று சொல்லும் கெட்டி, இந்த உரையாடல்கள் தொல்குடி மக்களின் பாரம்பரிய அனுபவ அறிவைப் புறக்கணிப்பதாகவே இருக்கின்றன என்கிறார்.

மார்செலோவின் செயல்பாடுகள், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் பழங்குடியினத் தலைமைத்துவம் குறித்த உலகளாவிய உரையாடலைப் பிரதிபலிக்கின்றன. பழங்குடியினரின் நிலப்பகுதிகள் பெரும்பாலும் அதிக உயிர்ப்பன்மையம் கொண்ட பகுதிகளுடன் இணைந்து காணப்படுகின்றன; தவிர காடுகள் மற்றும் ஆறுகளை நேரடியாகச் சார்ந்து வாழும் சமூகங்களே சுற்றுச்சூழல் மாற்றங்களின் பாதிப்புகளை முதலில் அனுபவிக்கின்றன.

குறிப்பாக, நீர், உணவு மற்றும் மருந்துகளை உறுதிப்படுத்தும் பொறுப்பு பெரும்பாலும் பெண்களிடமே உள்ளது. இதனால் காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதற்கான உத்திகளில் முக்கியப் பங்குதாரர்களாக பெண்களே இருக்கிறார்கள். கெட்டியின் பணி இந்த வாழ்வியல் அனுபவத்தின் மீது கவனத்தை ஈர்ப்பதுடன், பழங்குடியினப் பெண்களைச் சுற்றுச்சூழல் தலைவர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் வாதிடுகிறது.

கெட்டியின் கதை தனிப்பட்ட நினைவுகளை சார்ந்ததெனினும், அது ஒரு கூட்டுச் செயல்பாடாக விரிவடைகிறது. அவர் வளர்ந்த காலத்தில் அவரோடு பிணைந்திருந்த நதி, இழப்பு மற்றும் பொறுப்பு என இரண்டிற்குமான அடையாளமாக மாறியது. அந்நதி மாறுவதைப் பார்த்த கெட்டி,  ஒருங்கிணைப்பு, வாதாடுதல் (advocacy) மற்றும் தலைமைத்துவத்தை நோக்கித் நகர்ந்தார். அவ்வகையில், உள்ளூர் சுற்றுச்சூழல் சிக்கல்களைத் தேசிய மற்றும் உலகளாவிய உரையாடல்களாக மாற்றும் பழங்குடியினப் பெண்களின் பரந்த செயல்பாட்டு முறையையே அவரது போராட்டமும் பிரதிபலிக்கிறது

கெட்டி  மார்செலோவின் கதை, தமிழ் நிலத்துக்கு அன்னியமான கதை இல்லை.  வெவ்வேறு புவியியல் பகுதிகளுக்கு இடையிலான ஒற்றுமைகளை அழகாக வெளிப்படுத்தும் ஒரு கதை அது. இந்தியாவிலும் நதிகளுக்கு பெயரிடப்படுகின்றன, கொண்டாடப்படுகின்றன, அவற்றுக்கு உயிர் இருக்கின்றன. இந்நதிகளை நம்பி நாகரிகங்கள் செழித்திருக்கின்றன. இப்போதும் வேளாண்மை, உணவு, பண்பாட்டு வாழ்வுக்காகச்சமூகங்கள் நதிகளை சார்ந்திருக்கின்றன. நதிகள் மாசுபடும்போது, அவற்றின் பாதை மாற்றப்படும்போது, அதன் தாக்கம் சூழல்ரீதியாக மட்டுமல்லாமல், உணர்வுப்பூர்வமான சமூகரீதியிலான தாக்கமாகவும் இருக்கிறது. நீர் என்பதை உயிர் உறவாகக் கெட்டி முன்வைக்கிறார். நீரின்றி அமையாது உலகு என்பது தமிழர்களின் உயர்ந்த தத்துவம்.

கெட்டியின் பணிகள் காலநிலை மாற்றத்தை மாறுபட்ட கோணத்தில் அணுகுகின்றன. வெறும் நச்சுப்புகை வெளியேற்றம் (emissions) அல்லது தொழில்நுட்பத்தின் மீது மட்டும் கவனம் செலுத்தாமல், இது மனிதர்களுக்கும் நதிகளுக்கும், பெண்களுக்கும் விதைகளுக்கும், சமூகங்களுக்கும் காடுகளுக்கும் இடையிலான உறவுகளுக்கு முதன்மையான இடத்தை அளிக்கிறது. பழங்குடியினப் பெண்களின் தலைமைத்துவத்தை வலுப்படுத்துவதன் மூலமும், இயற்கையின் உரிமைகளுக்காக வாதிடுவதன் மூலமும், சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பண்பாட்டுத் தொடர்ச்சி மற்றும் சமூக நீதியுடன் இணைக்கும்   ஓர் இயக்கத்தை கெட்டி வலுப்படுத்துகிறார்.

பெரெனே நதியில் நீந்தி விளையாடிய ஒரு குழந்தையிலிருந்து, இயற்கையின் உரிமைகளை அங்கீகரிக்கக் கோரும் ஒரு போராளியாக மாறிய கெட்டி மார்செலோவின் பயணம், தனிப்பட்ட அனுபவங்கள் எப்படிச் சுற்றுச்சூழல் தலைமைத்துவத்தை உருவாக்கும் என்பதைக் காட்டுகிறது.

காலநிலை மாற்றத்திற்கு எதிரான செயல்பாடு என்பது பெரும்பாலும் சமூக மட்டத்திலேயே தொடங்குகிறது என்பதையும், அது நினைவு, அரவணைப்பு மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றில் வேரூன்றியிருப்பதையும் கெட்டி மார்செலோவின் பணிகள் காட்டுகின்றன.  பழங்குடியினப் பெண்கள்,  பாரம்பரியத்தைப் பாதுகாப்பவர்கள் மட்டுமல்ல, காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளை வடிவமைக்கும் தலைவர்களும் கூட என்பதே கெட்டியின் பணி முன்வைக்கும் செய்தி.

  • கவிதா முரளிதரன்
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted