சென்னை கொடுங்கையூர் பகுதியில் இயங்கி வரும் 50 டன் குப்பை எரியுலை சுற்றுச்சூழல் விதிகளைப் பின்பற்றாமல் செயல்பட்டு வருவதாக உண்மை கண்டறியும் குழு வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.
திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016-ன் படி கட்டாயமாகக் கண்காணிக்கப்பட வேண்டிய காரணிகளான புகை வெளியீடுகள், ஆபத்தான படிமச் சாம்பல், பறக்கும் சாம்பல், கழிவு நீர் வெளியேற்றுதல் போன்ற மாசு அளவுகளில் சுமார் 90% மாதிரிகளை, நிறுவனம் தொடங்கியதிலிருந்து ஒருமுறை கூட பரிசோதிக்கப்படவில்லை என எரிவுலையற்ற சென்னைக்கான கூட்டமைப்பு (AIFC) மற்றும் வடசென்னை குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு (FNCRWA) ஆகியோர் இணைந்து வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வறிக்கையை சென்டர் ஃபார் ஃபைனான்ஷியல் அக்கவுண்டபிலிட்டி(CFA) என்கிற அமைப்பைச் சேர்ந்த சுபஶ்ரீ என்பவர் தயாரித்துள்ளார்.
அதிக மாசு ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகளின் பட்டியலான “சிவப்பு பட்டியல்” தொழிற்சாலையான நாள்தோறும் 50 டன் குப்பையினை எரிக்கும் எரிவுலையானது கொடுங்கையூர் பகுதியில் அமைந்துள்ளது. இக்குப்பை எரிவுலையினை பெருநகர சென்னை மாநகராட்சியிடம் ஒப்பந்தம் பெற்று MAK Controls and Systems Pvt. Ltd நிறுவனம் நடத்தி வருகிறது.
இக்குப்பை எரியுலையின் சட்ட விதிமீறல்கள் குறித்துத் தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) மூலம் பெறப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல்கள், குப்பை எரிவுலை உள்ள இடத்திற்கு நேரில் சென்று நடத்திய ஆய்வு, அதன் அருகாமையில் வசிக்கும் மக்களை சந்தித்து அவர்களின் அனுபவப் பதிவு, திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016 போன்ற விதிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-இன் படி குப்பை எரியுலையிலிருந்து வெளியேறும் புகை மாசு தொடர்பான பல்வேறு காரணிகளைக் குறிப்பிட்ட கால அளவில் பரிசோதிக்க வேண்டும். ஆனால், மக்கள் ஆரோக்கியத்திலும் சுற்றுச்சூழலிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் துகள்மாசு (Particulates), சல்பர் டையாக்சைடு (SO₂), நைட்ரஜன் ஆக்சைட்கள் (NOx – NO மற்றும் NO₂) உள்ளிட்ட மாசுறுத்திகளை கடந்த 5 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே பரிசோதனை செய்து கண்காணிக்கப்பட்டுள்ளது. ஹைட்ரஜன் குளோரைடு (HCl), கார்பன் மோனாக்சைடு (CO), மொத்த கரிம கார்பன் (Total Organic Carbon), ஹைட்ரஜன் ஃப்ளூரைடு (HF), மொத்த டையாக்சின்கள் மற்றும் ஃப்யூரான்கள், கேட்மியம் + தாலியம் மற்றும் அவற்றின் சேர்மங்கள், மெர்குரி மற்றும் அதன் சேர்மங்கள், அண்டிமனி + ஆர்சனிக் + ஈயம் + குரோமியம் + கோபால்ட் + செம்பு + மேங்கனீஸ் + நிக்கல் + வெனேடியம் மற்றும் அவற்றின் சேர்மங்கள் உள்ளிட்ட முக்கியமான மாசுறுத்திகளின் அளவுகளை ஒருமுறை கூடப் பரிசோதித்துக் கண்காணிக்கவே இல்லை.
திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016-னை வெளிப்படையாக மீறி, இக்குப்பை எரிவுலைகளில் உருவாகும் கசிவு நீர்(leachate) தொடர்பான எந்த அளவுகளும் ஒருமுறைகூட பரிசோதிக்கப்படவில்லை. இதனால், அந்நீரில் உள்ள மாசுகளை சுத்திகரிப்பு நிலையம் உண்மையில் நீக்குகிறதா என்ற பெரிய சந்தேகம் எழுந்துள்ளதாக ஆய்வறிக்கை குற்றம் சாட்டுகிறது. மேலும், இந்த எரிவுலையினை தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் ஆய்வு செய்தபோதும், உண்மை கண்டறியும் குழு நேரில் பார்வையிட்டபோதும், ஸ்க்ரப்பர் மூலம் வெளியேறும் கழிவுநீர் சரியாக நிர்வகிக்கப்படவில்லை என்பதை அறிய முடிந்ததாகவும் இது அந்த நிர்வாகம் கழிவுநீரை (trade effluent) சரியாக கையாளாத நிலையை சுட்டுவதாகவும் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.
மொத்தமாகப் பார்த்தால் கட்டாயமாகக் கண்காணிக்க வேண்டிய 48 மாசுறுத்திகளில் 45 மாசுறுத்திகள் ஒருமுறைகூட பரிசோதிக்கப்படவில்லை. அதாவது, மொத்தத்தில் சுமார் 6% மாசுறுத்திகள் மட்டுமே கண்காணிக்கப்பட்டுள்ளன. அதுவும் இந்த எரியுலை 2021ல் தொடங்கியதிலிருந்து ஒரே முறை மட்டுமே. இத்தனை விதிமுறை மீறல்கள் இருந்தபோதிலும், இந்நிலையத்திற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் 31-மார்ச்-2028 வரை இயங்க அனுமதி வழங்கியுள்ளது.
இன்று நடந்த உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை வெளியீடு தொடர்பான செய்தியாளர் சந்திப்பு.
இக்குப்பை எரியுலையால் தொடர் துர்நாற்றம் வீசுகிறது, புகை தெளிவாகத் தெரிகிறது, கருப்பு தூசி வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் படிந்து கொண்டே இருக்கிறது. மேலும், குப்பை எரிப்பில் இருந்து வரும் சாம்பல் மற்றும் கழிவுகள் காரணமாக நிலத்தடி நீரும் மண்ணும் மாசுபடுகிறதோ என்ற பயமும் மக்களிடம் உள்ளது. அதேபோல், மூச்சுத்திணறல், ஆஸ்துமா, தோல் மற்றும் கண் எரிச்சல் போன்ற உடல்நல பிரச்சினைகள் அதிகரித்துள்ளன என்று ஆய்வுக் குழுவினரிடம் கொடுங்கையூர் பகுதியில் உள்ள இந்த எரிவுலைக்கு அருகாமையில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மணலி பகுதியில் இருந்த 10 டன் எரிவுலை உண்டாக்கிய சுற்றுச்சூழல் மற்றும் உடல்நல பாதிப்புகள் கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் AIFC வெளியிட்ட இதே மாதிரியான உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையால் வெளிச்சத்துக்கு வந்தது. மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டவற்றை தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியமும், தேசிய பசுமை தீர்ப்பாயமும் கூட தனது அறிக்கையில் உறுதிப்படுத்தியதை தொடர்ந்து, சுற்றுச்சூழல் விதிமுறைகள் மற்றும் சட்ட நெறிமுறைகளை பின்பற்றாத காரணத்தால், மேற்குறிப்பிட்ட 10 டன் எரிவுலையினை பெருநகர சென்னை மாநகராட்சி கடந்த டிசம்பர் மாதம் 2025-ல் நிரந்தரமாக மூடியது.
இக்குப்பை எரியுலை மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், எரிவுலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட நிலம், நீர் மற்றும் சுற்றுச்சூழலை சீரமைக்கும் பணிகளும் மேற்கொள்ள வேண்டும் என உண்மை கண்டறியும் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கொடுங்கையூர் மற்றும் தாம்பரத்தில் முன்மொழியப்பட்டுள்ள பெரிய அளவிலான குப்பையை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டங்களால் சுமார் 18 லட்சம் மக்களின் உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதால் இத்திட்டங்களை ரத்து செய்ய வேண்டுமெனவும் கோரியுள்ளனர்.
தொழிற்சாலைகளின் கழிவு வெளியேற்றத்தைச் சிறந்த முறையில் கண்காணித்து வருவதாக ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை 2025- 26ல் பாராட்டு பெற்ற தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இக்குப்பை எரியுலையின் விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்குமா?
முழு அறிக்கை:
