மேய்ச்சல் நிலங்கள் மீட்டெடுப்பின் அவசியத்தை உணர்த்திய உயர் நீதிமன்ற தீர்ப்பு.

Grazing
Image: Satheesh lakshmanan

காடுகளில் கால்நடை மேய்ச்சலை அனுமதிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பு கடும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதிக்குள் கால்நடைகள் மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்லப்படுவதாகவும், அதற்குத் தடை விதிக்க வேண்டும் என, திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில்,புலிகள்  சரணாலயமாக அறிவிக்கப்பட்ட காட்டிற்குள் பலநூறு மாடுகளை, மாதக்கணக்கில் மேய்ச்சலுக்கு விடுவதால் காடுகளின் இயற்கைச் சூழல் சீர்கெடுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கட்டுப்பாடின்றி மேய்ச்சல் அனுமதிகளை வழங்குவதாகவும் சில மாட்டு உரிமையாளர்கள் அத்தகைய அனுமதிகளைத் தவறான வழிகளில் பயன்படுத்துவதாகவும் அனுமதி பெறப்பட்டதை விட அதிக எண்ணிக்கையில் மாடுகளை மேய்ச்சலுக்காகக் காட்டுக்குள் கொண்டு செல்வதாகவும் மனுதாரர் குற்றம் சாட்டியிருந்தார்.

அதிக எண்ணிக்கையில் மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளைக் காட்டிற்குள் மேய்ச்சலுக்கு அனுமதிப்பதால் அங்குள்ள தாவரங்களின் வளர்ச்சி பெரிதளவில் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாகக் காடுகள் சீர்கெட்டு வைகை ஆற்றின் நீர் ஆதாரம் குறைந்து அதனால் பயன்பெறும் பல்வேறு மாவட்டங்கள் பாதிப்பைச் சந்திப்பதாகவும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்திருந்த மேகமலை வனக் கோட்டத்தின் காட்டுயிர் பாதுகாவலர் தேனி மற்றும் மேகமலை வனக்கோட்டத்தில் தமிழ்நாடு காடுகள் சட்டம் 1882 ம் பிரிவு 21(2)(a) ன் படி உள்ளூர் வாசிகளுக்கு எந்த வித கட்டணமும் பெறாமல் குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட கால அளவிற்கு மட்டும் மேய்ச்சலுக்கான அனுமதியைத் தமிழ்நாடு வனத்துறை வழங்கிவருவதாகவும் தற்போது மேய்ச்சலுக்காகக் காட்டுக்குள் அனுமதிக்கப்படும் கால்நடைகளின் எண்ணிக்கை சற்று குறைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் முற்றிலுமாக இது தடை செய்யப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும் அந்தப் பதில் மனுவில் மேகமலை வனக்கோட்டத்தில் பல்வேறு அருகிவரும் தாவர விலங்கின வகைகள் இருப்பதாகவும் சில கால்நடை உரிமையாளர்களின் வணிக  இலாபத்திற்காக அருகி வரும் தாவர விலங்கின வகைகளைப் பலியிட முடியாது எனவும் மேய்ச்சலுக்கு என வரையறுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட வேண்டுமே தவிர காப்புக் காடுகளில் கால்நடை மேய்ச்சலை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்திருந்தார்.

மேய்ச்சலுக்காகக் கால்நடைகளைக் காட்டிற்குள் அனுமதிப்பதால் அவைகளிடமிருந்து ஆந்த்ராக்ஸ், காசநோய், ஒட்டுண்ணித் தொற்று உள்ளிட்ட பல்வேறு நோய்கள் காட்டுயிர்களுக்குப் பரவுவதாகவும், மேய்ச்சலுக்காகக் கால்நடைகளைக் காட்டிற்குள் அனுமதிப்பதால் காட்டுயிர்களுக்கு உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு அவை மனிதர் வாழ்விடங்களுக்கு வருவதற்கும் அல்லது காட்டிற்குள்ளாகவே வேறு இடங்களுக்கு இடம் பெயர்வதால் காட்டின் உணவுச் சங்கிலி, காட்டுயிர்களின் எண்ணிக்கை, இனப்பெருக்கம் மற்றும் காட்டின் சமநிலை கெடுவதாகவும் சூழலியலாளர் பிரியா டேவிதார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் ஒரு தரப்பான பென்னிகுவிக் பாரம்பரிய மலைமாடு வளர்ப்போர் சங்கம் அவர்கள் தரப்புவாதத்தையும் நீதிமன்றத்தில் முன்வைத்தது. மலைமாடு என்பது மேகமலைப்பகுதியின் சூழலியலில் ஒரு அங்கம் எனவும் அவை மிகவும் அருகி வரும் உயிரினம் என்பதால் மற்ற மாடுகளைப்போலக் காட்டிற்கு வெளியே அவற்றை மேய்க்க முடியாது என்பது அவர்களது வாதம். அக்டோபர் முதல் டிசம்பர் மற்றும் ஏப்ரல் முதல் ஜூன் வரை மட்டுமே மாடுகளை மேய்ச்சலுக்காகக் காட்டில் விடுவதாகவும் இந்த மாடுகள் இடும் சாணம் அனைத்தும் விவசாய உரங்களாகப் பயன்படுத்தப்படுவதாகவும் ஆறுமாதங்களுக்கு ஒருமுறை இம்மாடுகளுக்கு நோய்களைத் தடுப்பதற்கான தடுப்பூசி போடப்படுவதாகவும் மாடுகளின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். காட்டின் மையப் பாதுகாப்புப் பகுதிக்கு வெளியே மட்டும்தான் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிப்பதால் காட்டின் சீரழிவுக்கோ, நீர் ஆதாரத்தைப் பாதிக்கவோ எந்த வகையிலும் கால்நடை மேய்ச்சல் காரணமில்லை என்றும் அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்த வாதங்களை எல்லாம் கேட்ட நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அடங்கிய அமர்வு, மேய்ச்சலுக்காக கால்நடைகளைக் காடுகளுக்குள் குறிப்பாக புலிகள் காப்பகங்கள் பகுதியில் அனுமதிப்பது காட்டுயிர்கள்  மற்றும் அவற்றின் வாழிடங்களுக்குத் தீவிர அபாயத்தை ஏற்படுத்தும் என்பதோடு அது சட்டத்தின் அடிப்படையில் தடைசெய்யப்பட்ட நடவடிக்கை என்றும் புலிகள் காப்பகங்களில் மேய்ச்சலுக்காக கால்நடைகளை கொண்டு செல்வது தங்களுக்கு வழங்கப்பட்ட உரிமை என கால்நடை உரிமையாளர்கள் கூற முடியாது என்பதால் காட்டுயிர்களின் பாதுகாப்பு நலன் கருதித் தமிழ்நாடு முழுவதும் காட்டுப் பகுதிகளில் கால்நடை மேய்ச்சலை அனுமதிக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதாகக் கடந்த மார்ச் 4ம் தேதி தீர்ப்பளித்தனர்.

நீதிமன்றத்தில் அரசு அளித்த அறிக்கையில் தேனி மாவட்டத்தில் மட்டும் 20,000 மலை மாடுகளும் தென் மாவட்டங்கள் முழுவதும்  1.25 இலட்சம் மலைமாடுகள் மேய்ச்சலுக்காகக் காட்டிற்குள் அனுமதிக்கப்படுவதாகக் கூறப்பட்டிருந்தது. தேனி – மேகமலை வனக்கோட்டத்தில் மட்டும் கால்நடை மேய்ச்சலுக்குத் தடை கோரப்பட்ட ஒரு வழக்கில் தமிழ்நாடு முழுவதும் கால்நடை மேய்ச்சலுக்குத் தடை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதாவது, தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 20.31% ( 26,419 சதுர கிலோமீட்டர்) காடுகளாக வரையறுக்கப்பட்ட இடங்களில் இனிமேல் யாரும் ஆடு,மாடு மற்றும் எருமை உள்ளிட்ட கால்நடைகளை மேய்க்க முடியாது என்பதே அந்த உத்தரவின் அர்த்தமாகும்.

தமிழ்நாட்டில் கால்நடை வளம்

20வது கால்நடை கணக்கெடுப்பின்படி தேசிய அளவில் தமிழ்நாடு, பசுவின எண்ணிக்கையில் 13-வது இடத்திலும் எருமையின எண்ணிக்கையில் 14-வது இடத்திலும் செம்மறியாட்டின எண்ணிக்கையில் 4-வது இடத்திலும் வெள்ளாட்டின எண்ணிக்கையில்  7- வது இடத்திலும் கோழியின எண்ணிக்கையில் 2-வது இடத்திலும் உள்ளது.

தமிழ்நாட்டில் பழங்காலம் தொட்டே கால்நடைகள் மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக இருந்து வருகின்றன. கால்நடைகளை நடமாடும் சொத்தாகவும் மனிதர்களுக்கு உற்ற துணையாகவும் கருதி வருகின்றனர் மக்கள். கால்நடைகள் மூலம் கிடைக்கும் உற்பத்திப் பொருட்கள் மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகின்றன.

தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறை தரவுகளின் படி காங்கேயம், உம்பளாச்சேரி, ஆலம்பாடி, பர்கூர் மற்றும் புலிக்குளம் ஆகிய நாட்டின பசுக்களும் தோடா இன எருமைகளும் தமிழ் நாட்டில் வளர்க்கப்படும் உள்நாட்டு மரபினங்களாகும். இவற்றில் காங்கேயம் இன மாடுகள் திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், மற்றும் கரூர் ஆகிய மேற்கு மாவட்டங்களிலும், உம்பளாச்சேரி இன மாடுகள் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் ஆகிய கிழக்கு மாவட்டங்களிலும், ஆலம்பாடி இன மாடுகள் தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் ஆகிய மேற்கு மாவட்டங்களிலும், புலிக்குளம் மாடுகள் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய தென் மாவட்டங்களிலும், பர்கூர் இன மாடுகள் ஈரோடு மாவட்டத்திலும் தோடா எருமைகள் நீலகிரி மாவட்டத்திலும் வளர்க்கப்படுகின்றன.

அதேபோல உள்நாட்டு செம்மறியாடுகளான மேச்சேரி( சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்கள்), இராமநாதபுரம் வெள்ளை (தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள்), கீழக்கரிசல் (இராமநாதபுரம், விருதுநகர், மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள்), சென்னை சிவப்பு (சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள்), வேம்பூர் (தூத்துக்குடி மாவட்டம்), திருச்சி கருப்பு (பெரம்பலூர், அரியலூர், திருச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள்), கோயம்புத்தூர் (கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்கள்) போன்றவையும் உள்நாட்டு வெள்ளாடுகளான கன்னியாடு (விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள்), கொடியாடு (தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள்) மற்றும் சேலம் கருப்பு(சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள்) போன்றவையும் தமிழ்நாட்டில் வளர்க்கப்படுகின்றன. இத்தகைய உள்நாட்டினங்கள் மட்டுமல்லாது கூடுதலான பால் உற்பத்தியைத் தரும் ஜெர்சி கலப்பின மாடுகள் சமவெளிப் பகுதிகளிலும், ஹோல்ஸ்டீன் பிரிசியன் கலப்பின மாடுகள் மலைப்பிரதேசங்களிலும் விவசாயிகளால் வளர்க்கப்படுகின்றன.

20வது கால்நடை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் கால்நடைகள், கோழியினங்கள் மற்றும் பிற பறவையினங்கள் எண்ணிக்கை

இனம் கால்நடைகளின் எண்ணிக்கை(இலட்சத்தில்)
பசுவினம் 95.19
எருமையினம் 5.19
செம்மறியாடுகள் 45.00
வெள்ளாடுகள் 98.88
பன்றிகள் 0.67
மற்றவை(குதிரைகள், மட்டக் குதிரைகள்,கோவேறு கழுதைகள், கழுதைகள் மற்றும் ஒட்டகம்) 0.07
மொத்தக் கால்நடைகள் 245.00

 

தமிழ்நாட்டில் மேய்ச்சல் நிலங்களின் தற்போதைய நிலை

தமிழ்நாட்டில் கால்நடை மேய்ச்சலுக்கும் வேளாண்மைக்கும் நெருக்கமான தொடர்பு பல ஆண்டு காலமாக இருந்து வருகிறது. அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் தரவுகளின் படி மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 45% நிலப்பரப்பு(59.42 இலட்சம் ஹெக்டேர்) பயிரிடும் பரப்பாக உள்ளது. ஆனால் கால்நடைகளுக்கான நிரந்தர மேய்ச்சல் நிலங்களின் பரப்பு மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 0.83% ( 1.08 இலட்சம் ஹெக்டேர்) மட்டுமே உள்ளது. இந்த வேளாண் பரப்பிற்கும் மேய்ச்சல் நிலப்பரப்பிற்குமுள்ள  வித்தியாசமே தமிழ்நாட்டில் மேய்ச்சல் நிலங்களை அதிகப்படுத்துவது மற்றும் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுத்து பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

இந்தியா முழுவதும் எந்த வளர்ச்சித் திட்டமாக இருந்தாலும் அதற்குத் தெரிவு செய்யப்படும் இடம், மேய்ச்சல் நிலமாகத்தான் உள்ளது. தொழிற்சாலைகள், சுரங்கங்கள், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், கல்வி நிலையங்கள், காற்றாலைகள், சூரிய மின்னுற்பத்தி நிலையங்கள், விமான நிலையங்கள் எனப் பல்வேறு வகையான திட்டங்களும் இந்த வறண்ட புல்வெளிகளில்தான் செயல்படுத்தப்படுகின்றன எனவும் காடழிப்பு பேசப்படும் அளவிற்கு புல்வெளிகளின் அழிவு பேசப்படுவதில்லை என்கிறார் அசோகா சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் ஆராய்ச்சி அறக்கட்டளையைச் சேர்ந்த மூத்த ஆய்வாளர் மதிவாணன்.

மேலும் நாடு முழுவதும் காடுகளின் பரப்பை அதிகரிக்கிறோம் எனும் பெயரில் காடு எனும் வரையறைக்குள்ளேயே வராத பகுதிகளையெல்லாம் காட்டுப் பகுதியாக வரையறுத்து இந்தியாவில் காடுகள் பரப்பளவு அதிகரித்துள்ளதாக மார்தட்டி வருகிறது ஒன்றிய அரசு. அண்மையில் வெளியான இந்தியாவின் காடுகளின் நிலை குறித்தான அறிக்கையில் India State of Forest Report 2021 பல்வேறு குறைபாடுகள் இருந்ததைக் கவனிக்க முடிந்தது. அதுமட்டுமின்றி காப்புக் காடுகளை ஒட்டியும் அதற்குள்ளேயும் கூட பணப்பயிர்கள் உற்பத்தியை முன்னெடுப்பதை அரசே ஊக்குவித்து வருகிறது. இப்படி கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் காடுகளை ஒட்டிய சமவெளிகளில் துண்டாடப்பட்டுக் கிடக்கின்றன. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டு வருவோர் மீது ஒரு பேரிடியாக இறங்கியுள்ளது.

காடுகளில் மேய்ச்சலை அனுமதிப்பதால் காட்டுயிர்களுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது, நோய்கள் பரவுகிறது, காட்டின் சூழல் சமநிலை பாதிக்கப்படுகிறது. மேய்ச்சலுக்காக காடுகளுக்கு மாடுகளின் உரிமையாளர்கள் தீ வைக்கின்றனர் என்பது வனத்துறை தரப்பு நியாயமாக உள்ளது என்றாலும் மேய்ச்சல் நிலங்கள் துண்டாடப்பட்டதால் மேய்ச்சல் தொழிலில் ஈடுபடும் சமூகத்தினர் கடுமையான வாழ்வாதாரச் பிரச்சனையில் சிக்கியுள்ளனர் என்பதையும் காடுகளிலும் அவர்களுக்குத் தடை விதித்தால் மிகப்பெரிய எண்ணிக்கையில் கால்நடைகள் அழியும் என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் தீர்ப்பின் ஒரு பத்தியில் காட்டில் பருவமழை காலங்களில் மேய்ச்சலுக்கு அனுப்பப்படும் மாடுகள் கோடைகாலங்களில் மீண்டும் விவசாய நிலங்கள் அல்லது பண்ணைகளுக்கு கொண்டு வரப்படுவதால் உணவிற்காக இம்மாடுகள் காடுகளை மட்டுமே நம்பியுள்ளது என்பதை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இக்கருத்தை மறுக்கிறார் “ஆயர் வாழ்வியல்” என்னும் பொருண்மையில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர் சா.கருணாகரன். அவர் கூறுகையில் “ கால்நடைகள் மலைப்பகுதிகளில் கட்டாயமாக மேய வேண்டியதற்கான காரண காரியங்கள் உண்டு. யானைகளால் எப்படிக் காடுகள் பெருகுகின்றனவோ அதுபோலவே கால்நடைகளாலும் (மலைமாடுகள்) காடுகள் பெருகுகின்றன; வளம் அடைகின்றன. சமவெளிகளில் விலைகொடுத்துப் பெறப்படும் சாணக் கழிவுகள், மலைப்பகுதிகளில் விலையில்லாமல் பரப்பப்படுகின்றன. இதனால் காடுகள் வளமடைகின்றன. இந்தச் சங்கிலியைத் தான் வனத்துறையும் நீதிமன்றமும் தடுத்து வருகின்றன.மலைமாடுகள் மலைப்பகுதியில் மேயக்கூடியவை. மலைப் பகுதிகளிலும் காட்டுப்பகுதிகளிலும் சுற்றித் திரிந்த இத்தகைய மாடுகளைத்தான் ஆயர்கள் தன்வயப்படுத்தி வளர்த்து பயன்பெற்று வருகின்றனர்.தமிழகத்தின் நாட்டு மாடுகள் அனைத்துமே காட்டு மாடுகள் தான். அவற்றின் மூர்க்கத்தனத்தின் மூலம் இதனை நன்கு அறியலாம். மலைப்பகுதிகளில் கால்நடைகளை மேய்ப்பதற்கான உரிமைகளைப் பழைய அரசர்களிடமிருந்து மலைமாட்டு ஆயர்கள் பெற்றிருந்தனர். இவை தற்போது செல்லாதவைகளாக்கப்பட்டு, அவர்களது வாழ்வாதாரமும் நிலைகுலையச் செய்யப்பட்டு வருகிறது. எல்லோருடைய துன்பங்களையும் கவனத்தில் கொள்ளும் புதிய அரசு, மலைமாட்டு ஆயர்களின் – மலைமாடுகளின் வாழ்வாதாரத்திற்கும் உதவ வேண்டும். மலைப்பகுதிகளில் மலைமாடுகள் மேய்வதற்கு ஆவண செய்ய வேண்டும். இது கால்நடைகளுக்காக மட்டும் அல்ல. நாம் இழந்த  இலட்சக்கணக்கான மலைமாடுகளுக்காகவும் தான்” எனக் கூறினார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரனையின்போதும் தீர்ப்பின் போதும் விவாதிக்கப்படாமல் விடுபட்ட முக்கியமான விஷயம் வன உரிமைச் சட்டம் 2006  காடுகளில் வாழும் மக்களுக்கு வழங்கியிருக்கிற உரிமைகள் ஆகும். ”பழங்குடிகள் மற்றும் பாரம்பரியமாக வனம் சார்ந்து வாழ்வோர் உரிமைகள் அங்கீகரிப்புச் சட்டம்-2006 (வன உரிமைச்சட்டம்2006), வனப்பகுதியில் வாழும் பழங்குடியினர் மற்றும் வனப்பகுதியில் பாரம்பரியமாக வாழும் (dewellers)மக்களின் பாரம்பரிய வன உரிமைகளை அங்கீகரிக்கிறது. இச்சட்டம் குறிப்பிட்டுள்ள சமூக வன உரிமைகளில்(COMMUNITY RIGHTS) மேய்ச்சலும் அடங்குகிறது. இச்சட்டம், தேசியப் பூங்காக்கள்,வன விலங்கு சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள் அனைத்திற்கும் பொருந்தும். உயர்நீதிமன்றம், இச்சட்டத்தின் எந்த அம்சங்களையும் தனது தீர்ப்பில் கணக்கில் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. இச்சட்டத்தினை நிறைவேற்றிய-அமல்படுத்தும் பொறுப்பில் உள்ள பழங்குடிகள் நலத்துறையும் இதுபற்றி நீதிமன்றத்தில் எடுத்துரைத்ததாகவும் தெரியவில்லை” என்கிறார் விவசாயிகள் தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ்.

இதுகுறித்து நம்மிடம் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சுற்றுச்சூழல் அணியின் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி இந்த உத்தரவை நிச்சயமாகக் காடுகள் பாதுகாப்பு என்கிற கருத்திற்கு எதிரானதாகவே தான் பார்ப்பதாகக் கூறினார். அவர் மேலும் கூறியதாவது, “காடுகளில் வாழும் மக்களுக்கு அங்குள்ள தாவர, விலங்கினங்கள் குறித்து இருக்கும் பாரம்பரிய அறிவை பாதுகாக்க வேண்டியதை உயிர்ப் பன்மையச் சட்டம் 2002 வலியுறுத்துவது குறித்தும்,வன உரிமைச் சட்டம் 2006 காடுகளில் வாழும் மக்களுக்கு வழங்கியிருக்கும் உரிமைகள் குறித்தும் இந்தத் தீர்ப்பில் விவாதிக்கப்படவில்லை. இந்த இரண்டு சட்டங்களும் காடுகளில் வசிக்கும் மக்கள் அங்கு தங்கள் கால்நடைகளை மேய்ப்பதற்காக வழங்கியிருக்கும் உரிமைகளுக்கு எதிராகவே இத்தீர்ப்பு அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் காங்கேயம் இன மாடுகளைத் தவிர பிற நான்கு வகையான இன மாடுகளையும் மேய்ச்சலுக்கு உட்படுத்தியே வளர்க்க முடியும். 2013ம் ஆண்டு அப்போதைய கால்நடைத்துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடியிடம் ’சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையம்’ சார்பில் மனு அளித்ததன் அடிப்படையில் தான் ஈரோடு மாவட்டம் பர்கூர் பகுதியில் மலை மாடுகளை பராமரிக்க அரசின் சார்பில் ஒரு பண்ணை அமைக்கப்பட்டது. காடுகளில் மாடுகளை மேய்ச்சலில் ஈடுபடுத்துவதால் காட்டிற்கும் பிற விலங்கினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என்ற வாதம் தவறானது. குறிப்பிட்டுச் சொல்லப்போனால் காடுகளை அழித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் மனிதர்கள் நடவடிக்கைகளால் மட்டுமே காடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தடை அமல்படுத்தப்பட்டால் மேய்ச்சலுக்காகக் காடுகளை மட்டுமே நம்பியிருக்கும் மாடுகள் முற்றாக அழியும் நிலைதான் ஏற்படும். திமுக சுற்றுச்சூழல் அணியின் சார்பில் இந்தத் தீர்ப்பை மேல்முறையீடு செய்ய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

தீர்ப்பில் திருத்தம்

தமிழ்நாடு முழுவதும் காட்டுப் பகுதிகளில் மேய்ச்சலுக்குத் தடை என்கிற பொத்தாம் பொதுவான உரிய அறிவியல் பூர்வ ஆய்வுகளின் அடிப்படை இல்லாத சென்னை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டது. தீர்ப்பிற்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் மலை மாவட்டங்களில் 16ம் தேதி புலிகள் காப்பக மக்கள் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தின. இதன் விளைவாக மார்ச் 17ம் தேதி தமிழ்நாடு முழுவதும் காடுகளில் தடை எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதை “புலிகள் சரணாலயம், தேசிய பூங்காக்கள், சரணாலயங்களில் மட்டுமே கால்நடை மேய்ச்சலுக்குத் தடை. பிற காப்புக் காடுகள் தமிழ்நாடு காடுகள் சட்டத்தின்கீழ் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேய்ச்சலுக்கான அனுமதியை வழங்கலாம்” என மாற்றியமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புலிகள் சரணாலயங்கள், தேசிய பூங்காக்களை பாதுகாத்தால் மட்டுமே அங்குள்ள காட்டுயிர்களை பாதுகாக்க முடியும். அதே நேரத்தில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களையும் மீட்டெடுத்து ஒழுங்குபடுத்த வேண்டிய கடமை அரசிற்கு உள்ளது. இதுகுறித்து ஆய்வாளர் மதிவாணன் மேலும் கூறியதாவது, “இந்தியாவில் உள்ள புல்வெளிகளில் 7% புல்வெளிகள் மட்டுமே பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. உள்ளூர் மக்கள் பங்களிப்புடன் வழிகளை மேலாண்மை செய்ய நிர்வகிக்கத் திட்டங்கள் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். பரந்த புல்வெளிகள் அழியும் பட்சத்தில் அவற்றை நம்பி வாழும் மேய்ச்சல் சமூகம் மோசமான பாதிப்பை சந்திக்கும். விரைவாக அழிக்கப்பட்டும் அழிந்தும் வரும் வறண்ட புல்வெளிகளை மீட்டெடுத்து வளம் குன்றா வளர்ச்சியை நோக்கிப் பயணிக்க வேண்டிய காலம் இது” என்றார்.

”உள்நாட்டின கால்நடைகளை அவற்றின் வாழிடங்களிலேயே பாதுகாத்து அவற்றின் எண்ணிக்கையைப் பெருக்குவது” என்பது தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையின் முக்கியக் குறிக்கோள்களில் ஒன்றாகும். அக்குறிக்கோளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நிலை தற்போது உருவாகியுள்ளது.

– சதீஷ் லெட்சுமணன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments