சத்தியமங்கலம் மலைப்பாதையில் தளர்வுகளுடன் இரவு நேர போக்குவரத்துக்குத் தடை: சென்னை உயர்  நீதிமன்றம் தீர்ப்பு

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்திற்குட்பட்ட திம்பம் மலைப்பாதையில் சில தளர்வுகளுடன் இரவு நேர போக்குவரத்துத் தடையை அமல்படுத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பண்ணாரி வாகன சோதனை மையத்தில் தொடங்கி சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக கர்நாடகா செல்லும்  கோவை – பெங்களூர் நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் அதிகமாகவும் வேகமாகவும் செல்வதால் தொடர்ச்சியாக காட்டுயிர்கள் உயிரிழந்தன. இதனைத் தடுக்கும் நோக்கில் இச்சாலையில் இரவு நேர போக்குவரத்திற்கு தடைவிதித்து 2018 மற்றும் 2019ல் ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இத்தடை உத்தரவை முழுமையாக செயல்படுத்தக் கோரி சில தரப்பும், ரத்து செய்யக்கோரி சில தரப்பும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தன. இந்த மனுக்கள் மீதான இறுதித் தீர்ப்பு 6.04.2022 அன்று சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வால் நேற்று வழங்கப்பட்டது.

DHIMBAM

அத்தீர்ப்பில் 12 சக்கரங்களுக்கு மேல் உள்ள வாகனங்களும், 16.2 டன்னுக்கும் மேல் எடையுள்ள வாகனங்கள் எப்போதும் இச்சாலையில் பயணிக்க அனுமதி இல்லை. அதற்குக் கீழ் உள்ள வாகனங்கள் மாலை 6 மணிக்கு மேல் காலை 6 மணிக்குள் அனுமதி எனவும் அந்தச் சாலையில் அனுமதிக்கப்படும் வாகனங்கள் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்திற்கு செல்லக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகளின் பொது போக்குவரத்து வாகனங்களுக்கும், இரு  சக்கர வாகனங்களுக்கும் காலை 6 மணி முதல் இரவு 9 வரை மட்டுமே அனுமதி. பால் மற்றும் மருத்துவ பொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்களுக்கு அனுமதி அனைத்து நேரத்திலும் அனுமதி எனவும் 27 கி.மீ. தூரமுள்ள சாலையில், ஒவ்வொரு 5 கிலோமீட்டர் தூரத்திற்கும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். மின் இணைப்பு இல்லாத இடங்களில் சூரிய ஒளி மூலம் இயங்கும் சிசிடிவி பொருத்த வேண்டும். அவற்றின் பதிவுகளை 45 நாட்களுக்கு பாதுகாக்கும் வகையில் அமைக்க வேண்டும். வணிக பயன்பாட்டிற்கான வாகனங்களிடம் கட்டணம் வசூலித்து, அதை சாலை மற்றும் சிசிடிவி பராமரிப்பதற்கு பயன்படுத்தலாம் எனவும் 27 கி.மீ. சாலையில் உள்ள கிராம மக்கள் தங்கள் வாகனங்களைப் பயன்படுத்த புகைப்படத்துடன் கூடிய பாஸ் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

காட்டுயிர்கள் சாலையை எளிதாக கடக்கும் வகையில் மேல்மட்ட அல்லது கீழ்மட்ட பாலங்களை அமைக்க வேண்டும். அவற்றிற்கு ஒரு போதும் சிரமங்கள் இல்லாத வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மற்றும் பழங்குடியினர் உரிய அனுமதியுடன் எந்த நேரமும் சென்று வரலாம் எனவும் மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்களும் உரிய அனுமதியுடன் பயணிக்கலாம எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

– செய்திப் பிரிவு

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments