காற்று மாசைப் பொறுத்தவரையில் அதற்கு எல்லைகள் கிடையாது, அனைவரையும் காற்று மாசு பாதிக்கிறது, ஆனால் எல்லோருக்கும் பாதிப்பின் தாக்கம் ஒன்றாக இருப்பதில்லை. சிறியவர்கள், வயதானவர்கள், பெண்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் எனப் பல்வேறு தரப்பினர்களுக்குக் காற்று மாசின் பாதிப்புகள் வெவ்வேறாக உள்ளது. உலகெங்கும் காற்று மாசின் பாதிப்புகளால் உயிரை இழப்பது பெரும்பாலும் விளிம்புநிலை மக்களாகத் தான் இருக்கிறார்கள்.
வளர்ந்த நாடுகளில் கூட நகர்ப்புறங்களில் காற்று மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் தென்படுவதில்லை, அனைத்து ஆபத்தான தொழிற்சாலைகளும் எளிய மக்கள் வாழும் பகுதிகளில் தான் குவிக்கப்படுகின்றது. இதற்கு ஆங்கிலத்தில் ‘Red Lining’ என்று ஒரு பெயரே உள்ளது.
இதற்கு தென் ஆப்பிரிக்காவும் விதிவிலக்கல்ல, தென் ஆப்பிரிக்காவின் பூமேலங்கா, கவுடெங் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஹைவெல்ட் தொழிற்சாலைப் பகுதியில் மட்டும் தனியாருக்குச் சொந்தமான 12 அனல் மின் நிலையங்களும், நிலக்கரிச் சுரங்கங்களும் இயங்கி வருகின்றன. நாள் ஒன்றிற்கு ஆயிரம் டன் கணக்கில் சல்பர் டை ஆக்சைடு, நைட்ரோஜன் ஆக்சைடு, கார்பன், சாம்பல், நுண்துகள்கள் போன்ற காற்று மாசுக்களை வெளியேற்றும் 12 அனல் மின் நிலையங்கள் ஒரே இடத்தில் அமைந்திருப்பதால் அப்பகுதியில் காற்றின் தரம் மிகவும் மோசமாகவே இருந்து வந்தது.
ஹைவெல்ட் பகுதியில் மட்டும் ஆண்டிற்கு சுமார் 4500 பேர் இறப்பதற்குக் காரணமாக இருக்கும் இந்தக் காற்று மாசு பிரச்சனையைச் சரி செய்ய வலியுறுத்தி மக்கள் 12 ஆண்டு காலமாகப் போராடி வந்த சூழலில். இந்த அநீதிக்கு எதிராக வுகானி சுற்றுச்சூழல் நீதிக்கான இயக்கம் (Vukani Environmental Justice Movement) மற்றும் சூழலியல் உரிமைக்கான அமைப்பும் (Centre for Environmental Rights) ஆப்பிரிக்க நீதி மன்றத்தில் 2019 ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கினை விசாரித்த தென் ஆப்பிரிக்காவின் வட கவுடெங் உயர் நீதிமன்றம் சூழலியல் நீதியை நிலைநாட்டும் வகையில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பினைக் கடந்த 18.03.2022 அன்று வழங்கியது.
TRUSTEES-JUDGMENT-DATED-18-MARCH-2022-1இந்தத் தீர்ப்பின் மூலம் ஹைவெல்ட் பகுதியில் காற்றின் தரம் மோசமாக அப்பகுதியில் காற்று மாசை கட்டுப்படுத்தத் தவறிய தென் ஆப்ரிக்க நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சரும், தேசியக் காற்றுத் தரக்கட்டுபாட்டு அதிகாரியுமே காரணம் என்று கூறப்பட்டுள்ளது. நடந்திருப்பது மக்களுக்கு எதிரான மிகப்பெரிய அநீதி எனவும் தென் ஆப்பிரிக்க அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 24(a) (right to an environment that is not harmful to their health and well-being) வின் படி காற்று மாசு ஆரோக்கியமான சூழலில் வாழும் மக்களின் உரிமைக்கு எதிரான குற்றம் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
ஹைவெல்ட் பகுதி காற்றின் தரத்தை 12 மாதத்திற்குள் மேம்படுத்தவும், உரிய நிதியினை ஒதுக்கவும், துறை சார்ந்த நடவடிக்கைகளை உடனே துவங்கவும், காற்று மாசைக் குறைப்பதற்கான தொழில் நுட்பங்களை நடைமுறைப் படுத்தவும், அதற்கான செயல் திட்டங்களை உருவாக்கவும், விதி மீறலில் ஈடுபட்ட நிறுவனங்களின் மீது நடவடிக்கைகளை எடுக்கவும், காற்று மாசின் அளவினைத் தொடர்ந்து கண்காணிக்கவும் அதை வெளிப்படைத் தன்மையுடன் பகிரவும் இந்தத் தீர்ப்பின் மூலம் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பினால் மகிழ்ச்சி அடைந்துள்ள தென் ஆப்பிரிக்காவின் சூழலியல் செயல்பாட்டாளர்கள் இந்தத் தீர்ப்பை அடிக்கோள் காட்டி காற்று மாசால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் தென் ஆப்பிரிக்காவின் வால் (Vaal) மற்றும் வாட்டர்பெர்க் (Waterberg) பகுதியிலும் இதே போன்று சூழலியல் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற கோரிக்கையினை விடுத்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவின் அரசியல் அமைப்புச் சாசனத்தின் 24(a) (right to an environment that is not harmful to their health and well-being ) பிரிவில் பாதுகாப்பான ஆரோக்கியமான சூழலியல் என்பது அடிப்படை உரிமை என்று இருப்பது போல. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திலும் பிரிவு 21-ன் கீழ் (Right to healthy environment is Right to life) ஆரோக்கியமான சுற்றுச்சூழல் என்பது மனிதனின் அடிப்படை உயிர் வாழும் உரிமை என்று குறிபிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சூழலியல் சீர்கேடு, நீர் மாசு, காற்று மாசு என்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 21ம் பிரிவின் படி குற்றமாகும்.
எண்ணூர்-மணலி பகுதிகளில் செயல்பட்டு வரும் அனல் மின் நிலையங்களும், பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகளும் தொடர்ந்து விதி மீறல்களில் ஈடுபட்டு வருகின்றன . ஏப்ரல் 2019 இல் இருந்து டிசம்பர் 2020 வரை 600 நாட்களில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் 418 நாட்களும், வட சென்னை அனல் மின் நிலையம் 273 நாட்களும், தமிழ்நாடு பெட்ரோலியம் நிறுவனம் 228 நாட்களும் காற்று மாசு விதி மீறல்களில் ஈடுபட்டுள்ளது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
இவ்வளவு விதி மீறல்கள் வெளிப்படையாகத் தெரிந்தாலும் சம்மந்தப்பட்ட நிறுவனகளின் மீது அபராதம் விதிப்பதைத் தவிர்த்து வேறு எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை. மக்கள் உயிரினைத் துச்சமாக மதித்து விதி மீறல் செய்யும் இந்த அரசு நிறுவனங்களுக்கு வருடா வருடம் கோடிகணக்கான ரூபாய் மக்கள் வரிப்பணத்தை அபராதங்களாக கட்டுவதில் எந்தக் குற்ற உணர்வும் இருப்பதில்லை.
உலக நாடுகளில் இருக்கும் பல நல்ல சட்டங்களை முன் உதாரணமாகக் கொண்டு இந்தியாவில் சட்டங்கள் பல உருவாகியுள்ளது. தென் ஆப்பிரிக்க நீதி மன்றம் வழங்கியுள்ள காற்று மாசு விதி மீறல்களுக்கு எதிரான இந்தத் தீர்ப்பினை முன் உதாரணமாக எடுத்துக் கொண்டு இந்தியாவிலும் காற்று மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராகவும் இத்தனை ஆண்டுகளாகக் காற்று மாசை கட்டுப்படுத்தத் தவறிய அரசு இயந்திரத்திற்கு எதிராகவும் இந்திய நீதிமன்றங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
– பிரபாகரன் வீர அரசு.