பாலக்காடு – போத்தனூர் ரயில் வழித்தடத்தில் யானைகள் உயிரிழப்பைத் தடுக்க உடனை நடவடிக்கை தேவை

CATERS NEWS
Image: Rupak Dastidar

பாலக்காடு – போத்தனூர் ரயில் வழித்தடத்தில் 2002 ல் இருந்து 2021 வரை 20 ஆண்டுகளில்  19 ரயில் விபத்துகளில் 26 யானைகள் உயிரிழந்துள்ளதாக ஆய்வுக்குழு  அறிக்கையில் தெரிய வந்துள்ளது. ரயில் மோதி யானைகள் உயிர் இழப்பதை தடுக்க  16 பரிந்துரைகளையும் ஆய்வுக்குழு  வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், பாலக்காடு –  போத்தனூர் ரயில் வழித்தடத்தில் இரவு நேரத்தில் ரயில் விபத்துகளில் சிக்கி யானைகள் உயிரிழப்பதாக வெளியான பத்திரிகைச் செய்தியின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்காக எடுத்து, மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற துறை அமைச்சகத்திற்கு, உடனடியாக ஆய்வு குழு அமைத்து அறிக்கையை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டிருந்தது.

அந்த அறிக்கையை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்று ஆராய்ந்ததில் சில அதிர்ச்சியான தகவல்கள் தெரிய வந்துள்ளது.

Committee Report Palakkad

 

7 பேர் கொண்ட குழு

கேரள முதன்மை தலைமை வன பாதுகாவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஹரிகுமார் தலைமையில்  அமைக்கப்பட்ட இந்தக் குழுவில், யானைகள் திட்டத்தைச் சார்ந்த வல்லுனர் முத்தமிழ்ச் செல்வன் செயலாளராகவும், தமிழக வனத்துறை, கேரள வனத்துறை, தென்னக ரயில்வே பிரதிநிதிகள் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.இந்தக் குழு 04 செப் 2021 அன்று பாலக்காடு சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து மதுக்கரை ரயில் நிலையம் வரை விரிவான ஆய்வு மேற்கொண்டது.

பாலக்காடு – போத்தனூர் ரயில் வழித்தடம்

போத்தனூர் சந்திப்பில் இருந்து பாலக்காடு செல்லும் போது இடதுபுறம் அமைக்கப்பட்ட லைன் ஏ எனவும் வலதுபுறம் அமைக்கப்பட்ட லைன் பி எனவும் அழைக்கப்படுகிறது. ஏ லைன் 1861 ம் ஆண்டும், பி லைன் 1974 ம் ஆண்டும் அமைக்கப்பட்டது. இந்த இரு லைன் களிலும் இரு திசைகளிலும் ரயில்களை இயக்கும் வசதி உள்ளது. பாலக்காடு – மதுக்கரை ரயில் நிலையங்களுக்கு இடையே அடர் வனப் பகுதிக்கு வழியே செல்லும் ஏ லைன் 39 கிமீ நீளமும், பெரும்பகுதி  அடர் வனப் பகுதி வழியாக செல்லும் பி லைன் 42 கிமீ நீளமும் கொண்டது. 2000 க்கு பிறகு நகரமயமாதல் அதிகரித்ததாலும், கிராமப் பகுதிகளில் விவசாய நிலங்கள் அதிகரித்ததாலும் பி லைனில் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பது அதிகரிக்கத் தொடங்கியது.

 

ரயில் தண்டவாளங்களில் யானைகள் உயிரிழப்பு

ரயில்வே குறிப்புகளில் 1978 ல் தான் ரயில் மோதி யானைகள் உயிரிழக்க ஆரம்பித்தன எனவும், பத்திரிக்கை செய்திகளில் 1970 மற்றும் 1980 களில், ரயில் மோதி யானைகள் இறந்துள்ளன என உள்ளது. 2002 ல் இருந்து 2021 நவம்பர் வரை 20 ஆண்டுகளில் 19 விபத்துகளில் 26 யானைகள் உயிரிழந்துள்ளன. 2011 ல் இருந்து 2015 வரை 5 ஆண்டுகள் விபத்து எதுவும் நடைபெறவில்லை. கேரளா எல்கைக்குள்  நடந்த 10 விபத்துக்களில் 12 யானைகளும், தமிழக எல்லைக்குள் நடந்த 10  விபத்துக்களில் 15 யானைகளும் உயிரிழந்துள்ளன.

 

பி லைனில் அதிக விபத்துக்கள்

11 கிமீ தூரம் கொண்ட கஞ்சிக்கோடு –  வாளையார் ரயில் நிலையங்களுக்கு இடையே 9 விபத்துக்களும், 9 கிமீ தூரம் கொண்ட வாளையார் – எட்டிமடை ரயில் நிலையங்களுக்கு இடையே 7 விபத்துக்களும் நடைபெற்றுள்ளது. மொத்தம் நடைபெற்ற 20 விபத்துக்களில் 15 விபத்துக்கள் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான 6 மாத காலத்தில் தான் நடைபெற்றுள்ளது. மொத்தம் நடைபெற்ற 20 விபத்துகளில் 75 சதவீத, அதாவது 15 விபத்துகள் பி லைனிலும், 5 விபத்துக்கள் ஏ லைனிலும்  நடைபெற்றுள்ளது. 90 சதவீத விபத்துக்கள் இரவில்தான் நடைபெற்றுள்ளன. அதாவது மொத்த 20 விபத்துக்களில் 18 இரவிலும், 2 விபத்துக்கள் காலை 6 மணி முதல் 8 மணிக்குள்ளும் நடைபெற்றுள்ளது.

ரயில் தண்டவாளங்களில் தென்பட்ட யானைகளின் எண்ணிக்கை

பாலக்காடு- மதுக்கரை ரயில் நிலையங்களுக்கு இடையே 2009 ம் ஆண்டிலிருந்து 2021 செப் வரை 12 ஆண்டுகளில் 395 முறை ரயில் தண்டவாளங்களில் யானைகள்  இருப்பதை ரயில் ஓட்டுனர்கள் பார்த்துள்ளனர். இதில் அதிகபட்சமாக 2016-17 ஆண்டில் 105 முறை ரயில் தண்டவாளங்களில் யானைகள் தென்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் 90 சதவீதம் பி லைனில் மட்டுமே யானைகள் தென்பட்டுள்ளது. அதிகபட்சமாக 20 கிமீ தூரம் கொண்ட கஞ்சிக்கோடு –  வாளையாறு – எட்டிமடை ரயில் நிலையங்களுக்கு இடையே தான் அதிக எண்ணிக்கையில் யானைகள் தென் பட்டுள்ளன.

 

ரயில்வே மற்றும் வனத்துறையால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

ரயில் மோதி யானைகள் உயிரிழப்பைத் தடுப்பதற்கு, தண்டவாளத்தின் இரு புறமும் உள்ள செடிகொடிகளை வெட்டுதல், விபத்து அதிகம் நடக்க வாய்ப்பு உள்ள பகுதிகளில் வேக கட்டுப்பாடு கடைபிடித்தல், யானைகள் அதிகம் கடக்கும் பகுதிகளில் ஒளி எழுப்புவதற்காக எச்சரிக்கை பலகைகள், ரயில் ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குறைந்த மின் அழுத்தம் கொண்ட வேலிகள் அமைத்தல், தண்டவாளங்கள் உயரமாக செல்லும் பகுதிகளுக்கு யானைகள் செல்லாத வகையில் இருபுற முகப்பிலும் விளக்குகள் அமைத்தல், தேவையான  இடங்களில் யானைகள் கடந்து செல்வதற்கு சாய்வு தளம் அமைத்தல், தண்டவாளங்கள் உயரமாக செல்லும் பகுதிகளில் இருபுறமும் அகலப்படுத்துதல், தேனி போன்ற சத்தம் எழுப்பும் ஒலி பெருக்கி தண்டவாளத்துக்கு அருகில் அமைத்தல், தண்டவாளத்தின் இரு புறமும் உணவுப்பொருட்கள் சிந்தாத வகையில் பாதுகாத்தல், வனத்துறை மற்றும் ரயில்வே துறை இடையே போதுமான சந்திப்புகள் நடத்துதல், யானைகள் கண்காணிப்பதற்கு போதுமான ஆட்கள் நியமித்தல், கண்காணிப்புக் கோபுரங்கள் அமைத்து யானைகளை கண்காணித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நிபுணர் குழுவின் பரிந்துரைகள்

தண்டவாளத்தின் இரு புறமும் உள்ள செடிகொடிகளை 10 – 15 மீ வரை வெட்டுதல், 50 அகலம் கொண்ட சாய்வு தளம் அமைத்து யானைகள் கடந்து செல்வதற்கு உரிய வழி அமைத்தல், பி லைனில் வாளையார் – எட்டிமடை ரயில் நிலையங்களுக்கு இடையே இரு இடங்களில் யானைகள் கடந்து செல்வதற்கு ரயில்வே செலவில் இரு சுரங்க கடவு பாதைகள் அமைத்தல், எச்சரிக்கை ஒலியுடன் கூடிய தரைமட்ட கடவு பாதைகள் அமைத்தல், பி லைனில் மட்டுமே அதிக விபத்துகள் நடைபெறுவதால் அதிகப்படியான பயணிகள் ரயில்களை ஏ லைனில் இயக்க செய்தல், கேரளப் பகுதியில் 4.5 கிமீ நீளத்திற்கு சோலார் வேலிகள் அமைத்தல், தமிழக பகுதியிலும் விபத்துகள் நடைபெறும் பகுதிகளை கண்டறிந்து சோலார் மின் வேலிகள் அமைக்க வேண்டும், ரயில்வேயின் வனத் துறையும் இணைந்து ஆய்வுகள் நடத்தி போதுமான இடங்களில் தண்டவாளங்கள் மூலம் தடுப்புகள் அமைக்க வேண்டும், ரயில் ஓட்டுனர்களுக்கு உதவும் வகையில்,  போதுமான வெளிச்சம் தரக்கூடிய சோலார் விளக்குகள் அமைக்கப்பட வேண்டும், இரவு நேரங்களில் 45 கிமீ எனவும் பகல் நேரங்களில் 65 கிமீ வேகக் கட்டுப்பாடு தொடர்ந்து கடைபிடிக்கப்பட வேண்டும், தண்டவாளங்களில் இருபுறமும் அமைக்கப்பட்ட மழைநீர்   கால்வாய்கள் சிமென்ட் சிலாப்கள் கொண்டு மூடப்பட வேண்டும், ரயில் தண்டவாளங்களுக்கு அருகே 2 கிமீ நிலத்திற்கு அணுகு சாலைகள் அமைக்க வேண்டும், ரயிலிலிருந்து  தண்டவாளங்களுக்கு அருகே உணவுகள் சிந்தாத வகையில் போதுமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், வேட்டை தடுப்பு அலுவலர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும், தமிழ்நாடு பகுதியில் ஏ லைனில் கண்காணிப்புக் கோபுரம் அமைக்கப்பட வேண்டும், ஆப்டிகல் கேபிள் மூலம் தண்டவாளங்கள் வழியாக யானைகள் கிடப்பதை கண்டறியும் நுண்ணறிவு அமைப்பு அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ரயில் மோதி யானைகள் உயிரிழப்பைத் தடுக்க தற்காலிக தீர்வாக தெர்மல் கேமராக்கள் அமைத்து கண்காணிக்கப்பட வேண்டும். அசாம் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது போல ஆப்டிகல் கேமரா, அகச்சிவப்பு கேமரா, ரேடார் கேமரா ஆகிய மூன்றும் இணைந்து மூன்று கண்கள் எனப்படும் தொழில்நுட்பம் பாலக்காடு போத்தனூர் ரயில் வழித்தடத்தில் அமைக்கப்படவேண்டும். நிரந்தரத் தீர்வாக,  மத்திய பிரதேச மாநிலம் பெஞ்ச் புலிகள் சரணாலயத்தில் 16 கிமீ நீளத்திற்கு உயர்மட்ட நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளதை போல, கஞ்சிக்கோடு – வாளையார் – எட்டிமடை ரயில் நிலையங்களுக்கு  இடையே 20 கிமீ நீளத்திற்கு உயர்மட்ட ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும். வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும்.

– பாண்டியராஜா, பாவூர்சத்திரம்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments