மேட்டுப்பாளையம் – அவிநாசி சாலை விரிவாக்கத்திற்கு மரங்கள் வெட்ட எதிர்ப்பு; NGT முக்கியத் தீர்ப்பு

Source: ETV Bharat

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் முதல் அவிநாசி வரையிலான சாலையை விரிவாக்கம் செய்ய 1342 மரங்களை வெட்டுவது தொடர்பான வழக்கில் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முக்கியமான தீர்ப்பளித்துள்ளது.

வெட்டப்படும் மரக்கன்றுக்கு பதிலீடாக நடப்படும் மரங்களை  Geo Tag செய்து குறைந்தது 5 ஆண்டுகள் அல்லது மரக்கன்று நன்றாக வளரும் வரை மாநில நெடுஞ்சாலைத்துறை பராமரிக்க வேண்டும் என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத்துறையானது  அவிநாசி முதல் மேட்டுப்பாளையம் வரையிலான இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக அவிநாசி முதல் நரியம்பள்ளி வரையிலான 13 கி.மீ. சாலையில் உள்ள 477 மரங்கள் வெட்டப்பட்டன. பின்னர் நரியம்பள்ளி முதல் மேட்டுப்பாளையம் வரையிலான 38 கி.மீ. தூரமுள்ள சாலையை விரிவாக்கம் செய்ய ரூ. 226 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக 1342 மரங்களை வெட்டும் பணி தொடங்கியது. இதற்குப் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சாலை மறியல் உள்ளிட்டப் போராட்டங்கள் கூட நடைபெற்றன.

இது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு தாமாக முன்வந்து வழக்காக விசாரித்தது. இவ்வழக்கு விசாரனையின்போது பதில் மனுத் தாக்கல் செய்த நெடுஞ்சாலைத்துறை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட பசுமைக் குழுவின் உரிய அனுமதி பெற்ற பின்னரே மரங்களை வெட்டும் பணிகள் நடைபெறுவதாகவும் வெட்டப்படும் மரங்களுக்கு பதிலீடாக புதிய மரக்கன்றுகள் நடப்படும் எனத் தெரிவித்தது.

மேலும் முதற்கட்ட சாலை விரிவாக்கப் பணிகளின்போது வெட்டப்பட்ட 477 மரங்களுக்கு பதிலீடாக 1 மரத்திற்கு 10 மரக்கன்றுகள் எனும் கணக்கில் மொத்தம் 4770 மரக்கன்றுகள் நட நிதி ஒதுக்கப்பட்டதாகவும் அதில், 3,270 மரக்கன்றுகள் அவிநாசி – மேட்டுப்பாளையம் சாலையை ஒட்டியும் 1500 மரக்கன்றுகள் அ சேலம்-கொச்சின் சாலையை(NH-47) ஒட்டியும் நடுவதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் இந்த 1500ல் ஏற்கெனவே 500 கன்றுகள் நடப்பட்டு விட்டதாகவும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மீதமிருக்கும் மரக்கன்றுகளை வரும் பருவமழை காலத்தில் நடுவதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

உட்கட்டமைப்பு வசதிகள் அவசியம் என்றாலும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் அறிவியல் அடிப்படையில் மரங்களை நடுவதன் மூலம் குறைக்கப்பட்டு சுற்றுச்சூழல் பேணப்பட வேண்டும் என வலியுறுத்திய தீர்ப்பாயம் சில உத்தரவுகளைப் பிறப்பித்தது. அவை பின்வருமாறு;

  1. 4770 மரக்கன்றுகளை நடும் பணியை மாநில நெடுஞ்சாலைத்துறை அடுத்த இரண்டு மரம் நடவு பருவத்திற்குள் செய்து முடிக்க வேண்டும்.
  2. வேம்பு, புங்கன், புளியமரம், கடம்ப மரம், நாவல், மகிழம் உள்ளிட்ட நாட்டு மரக்கன்றுகளுக்கு முக்கியத்துவமளிக்க வேண்டும்.
  3. நடப்படும் கன்றுகள் அனைத்தும் நன்றாக வளரும் வரையில் அல்லது 5 ஆண்டுகளுக்கு மாநில நெடுஞ்சாலைத்துறை கன்றுகளின் வளர்ப்பு, பராமரிப்பிற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
  4. ஒவ்வொரு மரக்கன்றையும் கண்காணிக்க Geo-tag செய்து அதுகுறித்தான தரவுகளைப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.
  5. ஏற்கெனவே பதிலீடாக மரக்கன்றுகள் நடப்படும் திட்டத்தைச் சரிபார்த்த பின்னரே இத்திட்டத்திற்காக மேற்கொண்டு மரங்களை வெட்ட அனுமதிக்க வேண்டும்.

மேற்கூறிய உத்தரவுகளின் அடிப்படையில் இவ்வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

– செய்திப் பிரிவு.

avinashi tree felling
avinashi tree felling
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments