நிதி ஒதுக்கீட்டில் குறைபாடு; ஆபத்தில் இந்திய கடற்கரை.

Image: Palani Kumar M, PARI

ஒன்றிய அரசின் அலட்சியத்தால் இந்தியாவின் கடற்கரை பாதுகாப்புத் திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

15.03.2023 அன்று  சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்ற அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு தனது 378வது அறிக்கையை மாநிலங்களவையில் சமர்ப்பித்தது.  அந்த அறிக்கையில் இந்திய கடற்கரை இயக்கத்திற்கு 2022 – 2023 நிதிநிலை அறிக்கையில் ரூ.195 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் திருத்தப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் அத்திட்டத்திற்கு வெறும் ரூ.4 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அதேபோல, தேசிய கடற்கரை மேலாண்மை திட்டத்திற்கு(இத்திட்டத்தின் ஒரு பகுதிதான் தேசிய கடற்கரை இயக்கம்) ஒட்டுமொத்தமாக ரூ.723.60 கோடி தேவைப்படும் என மானியக்கோரிக்கையில் கூறப்பட்டிருந்த நிலையில் 2023-2024 நிதிநிலை அறிக்கையில் ரூ.12.50 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதையும் நாடாளுமன்ற நிலைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதுகுறித்து நிலைக்குழுவிடம் சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்ற அமைச்சகம் அளித்த விளக்கத்தில் “ EAP – ENCORE எனும் திட்டத்தின்கீழ் ரூ.723.60 கோடிக்கான ஒப்புதலை உலக வங்கி அளிக்கும் என்ற எதிர்பார்ப்பில் மானியக்கோரிக்கையில் நிதி ஒதுக்கீட்டை ரூ.723.60 கோடியாக குறிப்பிட்டிருந்தோம். ஆனால், உலக வங்கி சில நிர்வாகக் காரணங்களுக்காக இந்நிதிக்கான ஒப்புதலை வழங்க மறுத்துவிட்டது” எனக் கூறியுள்ளது.

தேசிய கடற்கரை மேலாண்மைத் திட்டம் என்பது இந்தியா மற்றும் அந்தமான் & நிகோபார், இலட்சத் தீவுகளில் மீனவர்கள் உள்ளிட்ட கடலோர சமூகத்தினரின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, கடலோர சூழல் அமைவுகளை பாதுகாத்து அறிவியல் அடிப்படையில் வளங்குன்றா வளர்ச்சியை ஊக்குவிக்க உருவாக்கப்பட்டது.

புவி வெப்பமாதலால் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை அதிகம் சந்தித்து வருவது இந்தியாவின் கடற்கரையும் அங்கு வசிக்கும் மீனவ மக்களும்தான். தேசிய கடற்கரை ஆய்வு மையத்தின்(National Centre for Coastal Research, (NCCR)) ஆய்வறிக்கை 33.6% இந்திய கடற்கரை கடலரிப்பால் பாதிப்படையும் நிலையிலும், 26.9% கடற்கரையில் அதிகம் மணல் சேர்ந்து வருவதாகவும் குறிப்பிடுகிறது.  தமிழ்நாட்டில் உள்ள 1076  கிலோமீட்டர் நீளத்திற்கான கடற்கரையில்  41% அதாவது 402.94 கிலோமீட்டர் தூரமானது கடலரிப்பினால் பாதிப்படைந்து வருவதாகவும் NCCR தெரிவித்துள்ளது.

இப்படி ஒரு நிலையில் கடற்கரை பாதுகாப்பிற்கான நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு காட்டும் அலட்சியம் எண்ணற்ற மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கடலோர சூழல் அமைவுகளுக்கு கடும் பாதிப்பினையும் உண்டாக்கும்.

இதுகுறித்து நாடாளுமன்ற நிலைக்குழு ”தேசிய கடற்கரை இயக்கத்திற்கான நிதி ஆதாரங்களை ஒன்றிய அரசு, உலக வங்கி போன்ற வெளி நிறுவனங்களிடமிருந்து பெறுவது அரசின் ஆயத்தமின்மையை வெளிப்படுத்துகிறது. இத்திட்டத்திற்கான நிதி ஆதாரங்கள் கிடைக்காவிடில் இந்தியாவின் நீண்ட கடற்கரை, அதைச் சார்ந்துள்ள மக்கள்தொகை மற்றும் பலவீனமான கடலோர சூழல் அமைவுகள் பாதிப்பை எதிர்கொள்ல நேரிடும்” என எச்சரித்துள்ளது. மேலும் உடனடியாக இத்திட்டத்தை செயல்படுத்த பற்றாக்குறையாக இருக்கும் நிதியை நிதி அமைச்சகத்தின் மூலமாகவே வேறு நிறுவனங்கள் மூலமாகவோ திரட்ட வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு தனது பரிந்துரையில் கூறியுள்ளது.

– சதீஷ் லெட்சுமணன்

Report standing committee
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments