பொது சுகாதாரத்தையும் காற்று மாசிலிருந்து சூழலையும் பாதுகாக்க 2009ல் 12 மாசுபடுத்தும் விஷயங்களுக்கு தேசிய சுற்றுச்சூழல் காற்றின் தரக் கட்டுப்பாடுகளை (NAAQS – National Ambient Air Quality Standards) அரசு அறிவித்தது. NAAQS என்பது ஆரோக்கியத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அளவுகோல் ஆகும். இது அரசாங்கத்தின் கண்காணிப்பு, திட்டமிடல் மற்றும் செயல்முறைகளுக்கு வழிகாட்டும் ஒரு முக்கியமான மேற்பார்வைக் கருவியாகவும் செயல்படுகிறது. இந்தியாவில், The Air (Prevention and Control of Pollution) Act, 1981 கீழ், மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம்தான் NAAQS அமைக்கும் பொறுப்பை வகிக்கிறது.
வரலாறு
உலக சுகாதார அமைப்பின் (WHO) தொழில்நுட்ப அறிக்கை எண் 157, 1958-இல் காற்றுத் தரநிலைகள் முதன்முறையாகக் குறிப்பிடப்பட்டன. அவ்வறிக்கை, மனித ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் தரநிலைகளை வகுப்பதற்குத் தேவையான போதிய தரவுகள் அந்நேரத்தில் இல்லை எனக் குறிப்பிட்டது. அதன் பின், 1972-இல் WHO “ஊரக காற்று மாசுபாடுகளுக்கான கையேடு மற்றும் வழிகாட்டுதல்கள்” எனும் தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இது, போட்டோகெமிக்கல் ஆக்ஸிடண்ட்ஸ், நைட்ரஜன் டைஆக்சைடு (NO2), சஸ்பென்டட் பார்டிகுலேட், கார்பன் மோனாக்சைடு (CO), மற்றும் சல்ஃபர் டைஆக்சைடு (SO2) ஆகியவற்றின் பாதிப்புகளை விவரித்தது. இந்திய நிபுணர்கள் இவ்விரு அறிக்கைகள் உருவாக்கத்திலும் பங்கேற்றனர்.
அதே ஆண்டில் ஸ்டாக்ஹோம் மாநாட்டில் (Conference for the Human Environment), 113 நாடுகள் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் கொள்கைகளை நிறைவேற்ற உறுதியளித்தன. இதன் விளைவாக, இந்திய அரசு 1981-இல் The Air (Prevention and Control of Pollution) Act-ஐ கொண்டு வந்தது. இது இந்தியாவின் காற்று மாசுபாடு பிரச்சனையைக் கையாண்ட முதல் தேசிய சட்டமாகும். இச்சட்டத்தின் பிரிவு 16 (2) (h) படி, மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு தேசிய காற்றுத் தரநிலைகளை நிர்ணயிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது.
இந்தியாவின் முதல் NAAQS, நவம்பர் 1982-இல் அறிவிக்கப்பட்டது. இதில் நான்கு மாசுறுத்திகள் — சஸ்பென்டட் பார்டிகுலேட் மேட்டர் (SPM), சல்ஃபர் டைஆக்சைடு (SO2), நைட்ரஜன் டைஆக்சைடு (NO2), மற்றும் கார்பன் மோனாக்சைடு (CO) — அடங்கும். இவை 8 மணி நேர சராசரிக்கு ஏற்ப வரையறுக்கப்பட்டிருந்தன. கண்காணிப்பு முறைகள் பற்றிய விவரங்கள் இதில் குறிப்பிடப்படவில்லை.
இத்தரநிலைகள் நிலப் பயன்பாட்டு வகைப்பாடுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டன: (1) தொழிற்துறை மற்றும் கலப்புப் பகுதிகள், (2) குடியிருப்பு மற்றும் கிராமப்புற (வணிக) பகுதிகள், மற்றும் (3) பராமரிக்கப்பட வேண்டிய (Sensitive) பகுதிகள். இப்பராமரிக்கப்பட வேண்டிய பகுதிகளில் மலைநகரங்கள், தேசிய பூங்காக்கள் மற்றும் நினைவுச்சின்னங்களைச் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும். 1982 தரநிலைகளின்படி, 12 மாதங்கள் முழுவதும் வாரத்திற்கு குறைந்தது ஒரு முறை கண்காணிப்பு நடைபெற வேண்டும். கண்காணிப்பு காலகட்டத்தில் 95% நேரம் மாசுபாடு அளவுகள் வரையறுக்கப்பட்ட வரம்பிற்குள் இருந்தால், தரநிலைகள் பூர்த்தி செய்யப்பட்டதாகக் கருதப்பட்டது.
NAAQS-ன் மேம்படுத்தப்பட்ட இரண்டாவது பதிப்பு 1994-இல் வெளியிடப்பட்டது. இதில் ஆறு மாசுறுத்திகள் சேர்க்கப்பட்டன; அவற்றில் முக்கியமானவை ரெஸ்பிரபிள் சஸ்பென்டட் பார்டிகுலேட் மேட்டர் (RSPM) அல்லது PM10 மற்றும் லெட்(Pb) ஆகும். இப்போது தரநிலைகள் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டன: (1) தொழிற்துறைப் பகுதிகள், (2) குடியிருப்பு, கிராமப்புறம் மற்றும் பிற பகுதிகள், மற்றும் (3) பராமரிக்கப்பட வேண்டிய பகுதிகள். 1982-இல் இருந்த கலப்பு மற்றும் வணிகப் பகுதிகள் நீக்கப்பட்டன; “other areas” என்ற புதிய வகை சேர்க்கப்பட்டது.
மாநிலங்களுக்கு, NAAQS அறிவிக்கப்பட்ட தேதி முதல் 6 மாதங்களில் அவர்களது எல்லைகளுக்குள் பராமரிக்கப்பட வேண்டிய பகுதிகளை அறிவிக்கை செய்ய அனுமதியளிக்கப்பட்டது. வாரத்திற்கு ஒருமுறை என்றிருந்த கண்காணிப்பு வாரத்திற்கு இருமுறை என உயர்த்தப்பட்டது. ஓராண்டில் 98% நேரம் மாசுபாடு அளவுகள் அனுமதிக்கப்படும் வரம்பிற்குள் இருந்தால், தரநிலைகள் பூர்த்தி செய்யப்பட்டதாகக் கருதப்பட்டது. எனவே, சட்டபூர்வமான NAAQS ஒழுங்குமுறை ஆண்டின் குறைந்தபட்சம் 28.5% நாட்களை அடிப்படையாகக் கொண்டது.
மேம்படுத்தப்பட்ட மூன்றாவது பதிப்பு அக்டோபர் 1998-இல் வெளியிடப்பட்டது, இதில் அமோனியா (NH3) பட்டியலில் சேர்க்கப்பட்டது. நான்காவது மற்றும் தற்போதைய மேம்படுத்தல் 2009-இல் வெளியிடப்பட்டது, இதில் NAAQS மூலம் கண்காணிக்கப்படும் மாசுறுத்திகளின் பட்டியல் மேலும் விரிவாக்கப்பட்டது. பார்டிகுலேட் மேட்டர் PM2.5 மற்றும் PM10 என வகைப்படுத்தப்பட்டது. மேலும் ஓசோன் (O3), ஆர்செனிக் (As), நிக்கல் (Ni), பென்சீன் (C6H6) மற்றும் பென்ஸோ-பைரீன் (BaP) ஆகியவை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் IIT கான்பூர் ஆகியவற்றின் ஆராய்ச்சி, WHO வழிகாட்டுதல்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வரம்புகளை அடிப்படையாகக் கொண்டு சேர்க்கப்பட்டன.
கண்காணிப்பு முறைகள் முதன்முறையாக 1994 தரநிலைகளில் சேர்க்கப்பட்டன. 2009 மேம்படுத்தல்படி பார்டிகுலேட் மேட்டருக்கான (PM) முறைகளைத் தவிர மற்ற அனைத்திற்கும் முந்தைய நடைமுறைகளே தொடர்ந்தன. தற்போது, NAAQS கீழ் 12 மாசுறுத்திகள் ஒழுங்குப்படுத்தப்படுகின்றன. கடந்த மேம்படுத்தலில், தொழிற்துறை, குடியிருப்பு, கிராமப்புறம் மற்றும் பிற பகுதிகள் ஒரே வகையாகச் சேர்க்கப்பட்டன. சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்கள் (Ecologically Sensitive Zones) தனி வகையாகக் குறிப்பிடப்பட்டன.
முக்கியமாக, மூன்றாவது மேம்படுத்தல் (2009), இரண்டாவது மேம்படுத்தல் (1994)-உடன் ஒப்பிடும்போது, சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களுக்கான தரநிலைகள் பலவீனமாக இருந்தன. மாநிலங்களுக்கே சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களை அறிவிக்க பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.
தற்போதைய நிலை
தற்போதைய பதிப்பு 2009-இல் அறிவிக்கப்பட்டது. இது உலக சுகாதார அமைப்பின் (WHO) இடைநிலை காற்றுத் தரக் கொள்கை வழிகாட்டுதல்களுடன் ஒத்துப்போகும் வகையில் இருந்தது. ஆனால், 2021 செப்டம்பரில் WHO தனது வழிகாட்டுதல்களை மறுசீரமைத்ததையடுத்து, NAAQS மிகவும் பலவீனமாக உள்ளது. இப்புதிய WHO வழிகாட்டுதல்களுடன் NAAQS ஒத்துப்போக வேண்டும் என்றால், 2009-க்குப் பிறகு உலகளாவிய மற்றும் உள்ளூர் அளவில் காற்று மாசுபாடானது ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து உருவாக்கப்பட்ட புதிய மருத்துவத் தரவுகளின் ஒருங்கிணைப்பு தேவைப்படும்.
2009 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட NAAQS பல்வேறு விவரங்களைக் கொண்ட ஒரு அரசு ஆவணமாக வெளியிடப்பட்ட போதிலும், அதைத் தயாரித்த குழுவின் அமைப்பு, பயன்படுத்திய தரவுகள் மற்றும் எந்த அளவிற்கு ஏற்றதாக இருந்தது என்பதற்கான தீர்மானங்களை எவ்வாறு எடுத்தனர் என்பது குறித்த விவரங்கள் வழங்கப்படவில்லை. ஆகஸ்ட் 2021-இல், மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் புதிய குழுவை அமைத்து NAAQS -ஐ மீண்டும் மதிப்பீடு செய்து புதுப்பிக்க நடவடிக்கை எடுத்தது. இக்குழுவின் பணிகளில், காற்று மாசுபாடால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகளின் மதிப்பீடு, கண்காணிப்பு வழிகாட்டுதல்களை உருவாக்குதல், non-attainment பகுதிகளை அடையாளம் காணுதல் மற்றும் காற்றுத் தரக் குறியீட்டை (AQI) மறுஆய்வு செய்வதும் அடங்கும்.
இம்மாற்றம் ஒரு நேர்திசையில் முன்னேற்றமாக இருக்கலாம், இருந்தபோதிலும், இவ்வாவவணத்தின் வெளியீட்டு நேரத்தில், குழுவினரால் ஆரோக்கிய பாதிப்புகளுக்கான ஆதாரங்கள் எவ்வாறு பரிசீலிக்கப்படும் என்பது தெளிவாக இல்லை. மேலும், குழுவில் பல துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் உள்ளனரா? அவர்கள் பொருளாதார மற்றும் சமூக அம்சங்களை எவ்வாறு கருதுகிறார்கள்? பொதுமக்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள்? என்பன அனைத்தும் கேள்விக்குறியாக உள்ளன. இக்கருத்துகL ஏற்கனவே 2006-இல் வெளியான தேசிய சுற்றுச்சூழல் கொள்கை (NEP) மற்றும் 2019-இல் வெளியான நேஷனல் மாசற்ற காற்றுக்கான தேசியத் திட்டம்(NCAP) போன்ற அரசாங்க ஆவணங்களிலும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக, NEP ஆவணம், மனித ஆரோக்கியம், தொழில்நுட்ப சாத்தியக்கூறு மற்றும் பொருளாதாரத் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் தரநிலைகளை மதிப்பீடு செய்வதற்காக “மூன்றாம் தரப்புக் குழு” (permanent machinery) ஒன்றை உருவாக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்தது. இது பொதுவாக “பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி” என்ற நோக்குகளை அடைவதற்கான வழிமுறையாகும். NCAP-ன் தேசிய அளவிலான கொள்கை ஆவணத்திலும், இத்தகைய மதிப்பீடுகளுக்கான கால அளவுக்கான வழிகாட்டுதல்களை நிறுவ வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது.
தற்போது உள்ள அறிவியல் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு விரைவில் புதுப்பிப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அவ்வாறு புதுப்பிக்கப்பட்டால், பல உயிரினங்களும் மனித உயிர்களும் பாதுகாக்கப்படலாம்; மேலும், மக்களுக்குள் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளும் உடல்நலச் சிக்கல்களும் குறையக்கூடும்.
– முனைவர். அபிநயா சேகர்
இவர் ஒரு காற்றுத் தர விஞ்ஞானியாக பயிற்சி பெற்றவர், மற்றும் இங்கே வெளிப்படுத்தப்படும் அனைத்து கருத்துகளும் அவரது தனிப்பட்டவை; அவை அவர் பணியாற்றும் நிறுவனத்தின் கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை.
