முல்லை பெரியார் அணைக்குக் கீழே புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை செய்வதற்கான ஆய்வு எல்லைகள் கோரி 05.02.2024ல் கேரள அரசின் நீர்வளத்துறை ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் விண்ணப்பித்திருந்தது. இந்த விண்ணப்பத்தை மே 28 தேதி பரிசீலனைக்காக ஒன்றிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பட்டியலிட்டுள்ளது.
இந்த புதிய அணை கேரள மாநிலம், பீர்மேடு தாலுகா, பெரியார் கிராமத்தில் அமைகிறது. இந்த இடம் வண்டிப்பெரியாரிலிருந்து 8கிமீ தூரத்தில் உள்ளது. தற்போது இருக்கும் அணையிலிருந்து 1200அடி கீழ்திசையில் புதிய அணையைக் கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போதுள்ள அணையின் வயது 128 ஆண்டுகள் ஆனதால் பாதுகாப்பற்ற நிலையை எட்டியுள்ளதாகவும், அணை உடைந்தால் கேரளாவில் பெரும் பொருட்சேதமும், உயிர்ச்சேதமும் ஏற்படும் மற்றும் தமிழ்நாட்டின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைக்கான நீரைத் தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்யவும் இப்புதிய அணை அவசியம் எனவும் புதிய அணை கட்டிய பின்னர் தமிழ்நாட்டிற்கு இப்போது வழங்குவதைவிட அதிக தண்ணீரை வழங்க முடியும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.
Layout
அணையின் உயரம் 175.95 அடி, நீளம் 1437 அடி.
இதற்கு துணை அணையாக 82 அடியில் இன்னொரு அணையும் கட்டப்படவுள்ளது.
மொத்த மதிப்பீடு 1000 கோடி.
இந்த அணை கட்டுவதால் பழைய அணையைவிட 183 மில்லியன் கன அடி அதிக நீரை தேக்கி வைக்க முடியும்.
0.502 சதுர கிலோமீட்டர் நீர்ப்பிடிப்பு பகுதி அதிகரிக்கும்.
24.91 ஹெக்டேர் பரப்பளவு பகுதி நீரில் மூழ்கும்.
புதிய அணை கட்டி முடித்த பின்னர் பழைய அணையானது பகுதி பகுதியாக செயலிழக்கம் செய்யப்பட்டு உடைத்து அகற்றப்படும்.
அனைத்து அனுமதிகளும் பெறப்பட்ட 4 – 5 ஆண்டுகளில் புதிய அணை கட்டி முடிக்க திட்டம்.
PFR
கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி 7 நிபந்தனைகளுடன் மத்திய சுற்றுச்சூழல் துறை கேரள அரசுக்கு புதிய அணை கட்டுமானத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மேற்கொள்ள ஆய்வு எல்லைகளை வழங்குயிருந்தது. ஆனால் அந்த ஆய்வு எல்லைகளின் கால அவகாசம் 4 ஆண்டுகள்தான் என்பதால் 2022 உடன் முடிவடைந்த நிலையில் கேரள அரசு தற்போது மீண்டும் விண்ணப்பம் செய்துள்ளது.
2018ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு வழங்கிய இந்த அனுமதியைத் திரும்பப் பெறுமாறு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தார். தமிழ்நாட்டின் முக்கியமான அரசியல் கட்சிகள் அனைத்தும் கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தனர். ஆனால், ஒன்றியர அரசு 2018ஆம் ஆண்டு கேரள அரசுக்கு வழங்கிய அனுமதியில் முக்கியமான சில நிபந்தனைகள் இடம் பெற்றிருந்தன. தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே அணைக் கட்டுமானத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும் என்பது அந்த நிபந்தனைகளில் ஒன்றாகும்.
நிபந்தனைகள்:
1)2014உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இரண்டு மாநிலம் சேர்ந்து எடுக்கும் முடிவுன்படியே அணை கட்ட முடியும் என்பதால் தமிழக அரசின் ஒப்புதல் கடிதம் இணைக்க வேண்டும்.
2) முல்லை பெரியார் அணை தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை சமர்ப்பிக்க வேண்டும்.
3) ஆய்வு எல்லைகள் வழங்கப்பட்டிருப்பதால் சுற்றுச்சூழல் அனுமதிக்கு இந்த விண்ணப்பம் தகுதியானது என்று அர்த்தமில்லை.
4) அனைத்து வகையான அனுமதி/ தடையில்லாச் சான்றுகளையும் பெற வேண்டும்.
5) தற்போது வழங்கப்பட்டுள்ள ஆய்வு எல்லைகள் உச்சநீதிமன்ற/பசுமைத் தீர்ப்பாய உத்தரவுற்கு கீழ்பட்டவை.
6) டாக்டர். தாத்தே கமிட்டியின் முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
7) அணை கட்டுவதால் மூழ்கக் கூடிய பகுதிகள் மற்றும் அணையின் பராமரிப்பு தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால். சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை செய்வதற்கு தமிழ்நாடு அரசின் ஒப்புதல் அவசியம்.
tor
அப்போது தி.மு.க. எம்.பி. கனிமொழி மாநிலங்களவையில் முல்லை பெரியார் அணை கட்டுவதற்கான ஆரம்பகட்ட தகவல்களை திரட்டுவதற்கான ஒப்புதலைக் கேரள அரசு, தமிழ்நாடு அரசிடம் பெற வேண்டுமா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்த மத்திய இணை அமைச்சர் மகேஷ் சர்மா சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை, 2006 அறிவிக்கையின்படி தமிழக அரசின் ஒப்புதல் அவசியம் இல்லை என்று கூறியிருந்தார்.
EIA PRIOR
ஆனால், தற்போது கேரள அரசு சமர்ப்பித்துள்ள விண்ணப்பத்தில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே சுற்றுச்சூழல் தாக்க ஆய்வை மேற்கொள்ள அனுமதித்திருப்பதால் தமிழ்நாடு அரசின் ஒப்புதலை சுற்றுச்சூழல் அனுமதிக்கான பரிசீலனையில் சமர்ப்பிக்க அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளது.
- சதீஷ் லெட்சுமணன்