என்.எல்.சியின் புதிய சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கக் கூடாது

Image: Amirthraj stephen

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் கடலூரில் 1320 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட( 2*660MW Thermal Power Station II (2nd Expansion)) அனல்மின் நிலையம் மற்றும் இந்த அனல்மின் நிலையத்திற்காக  ஆண்டிற்கு 11.5 மில்லியன் டன் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கப்படும் வகையில்  புதிய சுரங்கம்  ஒன்றையும் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. ரூ.3755.51 கோடி செலவில் நிலக்கரி சுரங்கத் திட்டத்தையும், ரூ. 11,189.20 கோடி செலவில் அனல்மின் நிலையத் திட்டத்தையும் செயல்படுத்துவதற்கான ஒப்புதலை 21.07.2022 அன்று நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் இயக்குனர் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

board

இந்த நிலக்கரிச் சுரங்கத் திட்டம் 4841.99 ஹெக்டேர் பரப்பளவில் செயல்படுத்தப்படவுள்ளது. 4841.99 ஹெக்டேர் நிலப்பரப்பு என்பது வெறும் நான்கிலக்க எண்ணாகத் தெரிந்தாலும் அதன் ஒட்டுமொத்த பரப்பளவு 30 கிராமங்களை உள்ளடக்கியது. சின்ன நெற்குணம், கோ.ஆதனூர், பெருவரப்பூர், பெருந்துறை, ஒட்டிமேடு, வலயமாதேவி கீழ்பாதி, கோட்டுமுளை, சிறுவரப்பூர், புதூர், சாத்தப்பாடி, அகரலாம்பாடி, பி.ஆதனூர், தர்மநல்லூர், பெரிய நெற்குணம், விளக்கப்பாடி, யு.அகரம், எறும்பூர், வளையமாதேவி மேல்பாதி, யு.ஆதனூர், கோபாலபுரம், யு.கொளப்பாக்கம், கம்மாபுரம், சு.கீனணூர், குமாரமங்கலம், வீரமுடையான்நத்தம் உள்ளடக்கிய 30 கிராமங்கள் இத்திட்டத்தால் பாதிக்கப்படவுள்ளன.

 

2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பார்த்தால் இந்த கிராமங்களில் மொத்தமாக 14,061 வீடுகளில் 54,315 பேர் வசிக்கின்றனர். இவர்களின் முக்கியமான தொழிலாக விவசாயமே உள்ளது. சுரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பகுதியில் 440.88 மில்லியன் டன் பழுப்பு நிலக்கரி இருப்பு உள்ளதாகவும் அதில் 386.87மில்லியன் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்படும் என்றும் என்.எல்.சி. நிறுவனம் தனது சுற்றுச்சூழல் அனுமதிக்கான விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.

 

இத்திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தபோது கடும் எதிர்ப்பையும் போராட்டத்தையும் சந்தித்தது. இத்திட்டத்தால் பாதிப்படைபவர்கள் குறித்த சமூக தாக்க ஆய்வொன்றை என்.எல்.சி. நிறுவனம் தயாரித்து சுற்றுச்சூழல் அனுமதிகோரி விண்ணப்பம் செய்திருந்தது. அந்த ஆய்வின் படி இச்சுரங்கத் திட்டத்தால் 11கிராமங்கள் முழுமையாகவும், 19 கிராமங்கள் பகுதியாகவும் பாதிக்கப்படும். இந்த சுரங்கத்தால் 2,420பேர் தங்கள் நிலத்தை இழப்பார்கள். 6,331 பேர் தங்கள் தங்கள் நிலத்தையும் , வீடுகளையும் இழப்பார்கள். ஒட்டுமொத்தமாக 8,751 குடும்பங்கள் திட்டத்தால் பாதிப்படைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. வீடுகளை இழக்கும் குடும்பங்களை எருமானூர், கோபுராபுரம், காணாதுகண்டான், சின்னபண்டாரங்குப்பம் ஆகிய நான்கு கிராமங்களில் மறுகுடியமர்வு செய்ய என்.எல்.சி. திட்டமிட்டுள்ளது. பாதிப்படையும் அனைவருக்கும் “நியாயமான இழப்பீடு பெறும் உரிமை, மறு வாழ்வு, மறு குடியமர்வு மற்றும் நிலம் கையகப்படுத்தலில் வெளிப்படைத்தன்மை” சட்டத்தின் கீழ் உரிய இழப்பீடு மற்றும் மாற்று இடம் வழங்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்காக ஒரு குடும்பத்திற்கு 11.13 லட்சம் வீதம் மொத்தமாக 8751 குடும்பங்களுக்கு ரூ. 705 கோடி செலவிட என்.எல்.சி. திட்டமிட்டுள்ளது. நிலம் கையகப்படுத்திய பின்னர் சுரங்கம் அமையவுள்ள பகுதியைச் சுற்றி கல்வி, கட்டமைப்பு வசதி மேம்பாடு, சுகாதாரம், வேளாண்மை, விவசாயம், குடிநீர், மகளிர் மேம்பாடு போன்றவற்றிற்காக பல்வேறு திட்டங்களை என்.எல்.சி. மேம்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே கையகப்படுத்திய நிலங்களுக்கு உரிய இழப்பீடோ, நில உரிமையாளர்களுக்கு வேலைவாய்ப்போ, கிராமங்களுக்கான கட்டமைப்பு வசதிகளோ எதையும் இதுவரை முறையாக என்.எல்.சி. நிர்வாகம் வழங்கவில்லை. தற்போது செயல்பாட்டில் இருக்கும் சுரங்கத்தில் இருந்து அருகில் உள்ள விவசாய நிலங்களில் வேண்டுமென்றே நச்சு கலந்த கழிவுநீர் கலக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக புகாரளித்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு வசிக்கும் மக்களை மேலும் பாதிக்கும் வகையில் புதிய சுரங்கத்தையும் அனல்மின் நிலையத்தையும் செயல்படுத்த முனைவது கண்டனத்திற்குரியதாகும்.

 

நெய்வேலி பகுதியின் புவி அமைப்பு சுரங்க நடவடிக்கைகளுக்கு சிக்கலானது மற்றும் சவாலானது. இந்தியாவில் வேறெந்த சுரங்கம் நடைபெறும் பகுதிகளிலும் இவ்வளவு சிக்கலான புவி அமைப்பு இல்லை. ஏனெனினில் பழுப்பு நிலக்கரி தோன்றி இருக்கும் பகுதிக்கு கீழ் சுமார் 400மீ அளவிற்கு நீர் நிறைந்த மணல் அடுக்கு (aquifer) உள்ளது.  இந்த நீர் அடுக்கு மேல்நோக்கி அழுத்தத்தை (Hydrostatic) வெளியிடும். இதனை நீர் பொங்குற்று நிலை (Artesian Condition) என்று கூறுவர். பழுப்பு நிலக்கரி தோண்டும் போது, மேற்பரப்பின் அழுத்தம் குறையும், நீர் அடுக்கின் அழுத்தம் அதிகரித்து நீர் வெளியேறி சுரங்கம் முழுவதும் நிறைந்து விடும். எனவே அழுத்தத்தை குறைக்க நீர் அடுக்கின் மேற்பரப்பில் உள்ள நீரை ஆழ்துளை கிணறுகள் மூலம் 15- 35 மீ  அளவுள்ள அடுக்கின் நீரை முன்னதாகவே வெளியேற்றிவிடுவர். வெளியேற்றப்படும் நீரின்  அளவு ஒவ்வொரு சுரங்கத்திற்கும் மாறுபடும். சுரங்கம் II-இல் பழுப்பு நிலக்கரி அடுக்கிற்கு கீழுள்ளதை போல மேலும் ஒரு நீர் அடுக்கு இருப்பதால் அந்த நீரை முழுமையாக வெளியேற்றுவர். நீர் பொங்குற்று நிலை என்பதால் பழுப்பு நிலக்கரிக்கு கீழுள்ள நீரையும் வெளியேற்றிவிடுவர். நிமிடத்திற்கு 3785 லிட்டர் (1 Gallon) நீரை ஒரு துளைக்கிணற்றிலிருந்து 24*7 மணி நேரமும் வெளியேற்றப்பட்டு கொண்டிருக்கிறது . சுரங்கம் I- இல் 7-10 பம்புகள் செயல்பட்டு வருகின்றன. சுரங்கம் II-இல் 20-25 பம்புகள் இயங்கி வருகின்றன. நெய்வேலியில் 1 டன் பழுப்பு நிலக்கரியை எடுக்க 13 டன் நீரினை வெளியேற்றிக் கொண்டு இருக்கின்றனர். 1961-ல் 25 துளைக்கிணறுகளிலிருந்து 94,000 லிட்டர் நிமிடத்திற்கு வெளியேற்றப்பட்டது. 1965-1983 வரை 1,20,960 லிட்டர் நீர் நிமிடத்திற்கு வெளியேற்றப்பட்டது. தற்போது 2,45,700 லிட்டர் வரை நீர் நிமிடத்திற்கு வெளியேற்றப்பட்டு, அந்த நீர் நெய்வேலி அனல்மின் நிலையங்களிலும் விவசாய பாசனத்திற்கும் உபயோகப்படுத்தப்படுகிறது. இப்போது வரவிருக்கும் சுரங்கம் III பகுதியிலும், சுரங்கம் II-ன் அமைப்பு போலவே உள்ளது. ஏற்கனவே சுரங்கம் II-பகுதியில் கசிவின் காரணமாக வெளியேறும் நீரினை சரி செய்ய முடியாத சூழலில் சுரங்கம் III அமைக்க திட்டமிடப்படுள்ளது. இவ்வளவு சிக்கலுக்குபின் எடுக்கப்படும் பழுப்பு நிலக்கரியில் கார்பன் (60-65%) அளவு மிகவும் குறைவே. மேலும் பழுப்பு நிலக்கரியின் எரிதிறன் (Calorific value) மிகவும் குறைவு. 100 கிராம் பழுப்பு நிலக்கரி எரித்தால்  20 கிராம் சாம்பல் வெளியேறும். இங்கு எடுக்கப்படும் பழுப்பு நிலக்கரி வேறெந்த அனல்மின் நிலையங்களிலும் உபயோகப்படுத்தப்படவில்லை. சுரங்கம் III-ன் ஆயுட்காலம் 35 ஆண்டுகள் என வரையறுக்கப்பட்டுள்ளது. இதே காலத்தில் கார்பன் சமநிலையை நோக்கி பிற நாடுகள் சென்று கொண்டிருக்கும் வேளையில் சுரங்கம் III தேவைதானா? என சிந்திக்க வேண்டியுள்ளது.

 

மேலும் என்.எல்.சி. நிர்வாகத்தால் அங்கு ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் அனல்மின் நிலையங்களால் கடுமையான காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. ஆயுட்காலம் முடிந்தும் கூட அனல்மின் நிலையங்களை இயக்கியதால் கடந்த காலங்களில் பல்வேறு விபத்துகள் நடந்துள்ளன.

 

மே 20, 2014
நெய்வேலி முதல் அனல்மின் நிலையத்தில் 7வது அலகில் பாய்லரில் உள்ள குழாய் வெடித்து 2 பேரு உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.

ஜூன் 2019
நெய்வேலி இரண்டாம் அனல்மின் நிலையத்தில் உள்ள ஒரு அலகில் வால்வு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

மே 5 , 2020
நெய்வேலி இரண்டாம் அனல்மின் நிலையத்தில் நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் யாருக்கும் பாதிப்பில்லை.

மே 7, 2020
நெய்வேலி இரண்டாம் அனல்மின் நிலையத்தின் ஆறாவது அலகின் பாய்லரில் ஏற்பட்ட வெடிப்பில் 5 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர்.

 

ஜூலை 1, 2020

இரண்டாவது அனல்மின் நிலையத்தின் ஐந்தாவது அலகில் ஏற்பட்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.

குறிப்பாக உயிரிழப்பை பொறுத்தவரையில் 2016ஆம் ஆண்டு 3 பேரும்
2017 ஆம் ஆண்டு 3 பேரும் 2020ஆம் ஆண்டு 23 பேரும் என மொத்தமாக 5 ஆண்டுகளில் 29பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 9 பேர் நேரடி தொழிலாளர்கள், 19பேர் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆவர்.

விபத்துகளைப் பொறுத்தவரையில்
2016ஆம் ஆண்டு 7
2017ஆம் ஆண்டு 6
2018ஆம் ஆண்டு 2
2019 ஆம் ஆண்டு 4
2020ஆம் ஆண்டு 2
என 19 விபத்துகள் நடைபெற்றுள்ளன.

இப்படி ஒரு கவனக் குறைவான நிறுவனம் மேலும் மேலும் தனது உற்பத்தித் திறனை அதிகரிப்பது சுற்றுச்சூழலுக்கும் கடலூரில் வசிக்கும் மக்களின் ஆரோக்கியத்தையும் கடுமையாகப் பாதிக்கும்.

 

மேலும் அண்மையில் வெளியான ஐ.பி.சி.சி. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் ஆய்வுகளும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தையும் அதன் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கான வழிகளையும் எடுத்துரைத்துள்ளன. புவி வெப்பமடைதலைத் தடுக்க  நிலக்கரி அனல்மின் நிலையங்கள் உள்ளிட்ட புதை படிம எரிசக்தியைக் கைவிட்டு புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி நகர வேண்டியதன் அவசியமாகிறது. கடந்த ஆண்டு க்ளாஸ்கோவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கா இந்தியாவின் பஞ்சாமிர்த செயல்திட்டத்தை அறிவித்திருந்தார். 2070-இல் இந்தியா பூஜ்ய உமிழ்வு இலக்கை அடையும், 2030-ஆம் ஆண்டில் புதுப்பிக்க எரிசக்தித் திறனை 500 கிகாவாட்டாக இந்தியா அதிகரிக்கும், 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவுக்குத் தேவைப்படும் எரிசக்தித் தேவையில் 50% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பெறப்படும், 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது கார்பன் உமிழ்வில் 1 பில்லியன் டன் அளவைக் குறைக்கும், 2030-ஆம் ஆண்டுக்குள் பொருளாதாரத்தில் கார்பனின் சார்பை 45% குறைப்போம் என்பதுதான் பிரதமர் மோடியின் அறிவிப்புகள். ஆனால், இந்த அறிவிப்புகளுக்கு முற்றிலும் மாறாக புதிய அனல்மின் நிலையங்களையும், நிலக்கரிச் சுரங்கங்களையும் இந்திய அரசு திறப்பதற்கு முன்வருவது இந்திய மக்களையும் உலக நாடுகளையும் ஏமாற்றும் செயலாகும்.

 

இவற்றைக் கருத்தில் கொண்டு புதிய அனல்மின் நிலையங்கள் அமைப்பதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.

நிலக்கரி சுரங்கத்தைப் பொருத்தவரை கடலூர் மக்கள் யாரும் இத்திட்டத்திற்காக தங்கள் நிலத்தைக் கொடுக்க தயாராக இல்லை. தமிழக அரசும் இத்திட்டத்திற்கான எவ்வித ஒப்புதலையும் வழங்கக் கூடாதென பூவுலகின் நண்பர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள், வேளாண் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் அனைவரும் இத்திட்டங்களைக் கடுமையாக எதிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

 

 

 

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Bala
Bala
1 year ago

Thanks for the detailed article.