தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் தடை செய்யப்பட்ட தூண்டில் வளைவு, அலைத் தடுப்புச் சுவர்களை சட்டத்திற்குப் புறம்பாக அமைத்து வரும் மீன்வளத்துறை மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கடல் அரிப்பைத் தடுக்கும் திட்டங்களை தயாரிக்கும்போது பாறைகளைக் கடலில் கொட்டி கடல் அலைத் தடுப்ப்புச்சுவர், தூண்டில் வளைவு அமைப்பதற்கு பதிலாக செயற்கை பவளப்பாறைகள் போன்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பான வழக்கு ஒன்றில் 2022ஆம் ஆண்டு தீர்ப்பளித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிக்கை 2019ன் கீழ் அதிக, நடுத்தர, குறைவான அளவுகளில் கடலரிப்பு ஏற்படும் இடங்கள் குறிக்கப்பட்டிருக்கும் கடலோர மண்டல மேலாண்மைத் திட்டத்தின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களும் கடற்கரை மேலாண்மைத் திட்டத்தை (Shoreline Management Plan) தாயாரிக்கும்வரை கடல் அலைகளைத் தடுக்கும் தூண்டில் வளைவு, அலைத் தடுப்புச் சுவர்கள் உள்ளிட்டவற்றை அமைக்கக் கூடாதென உத்தரவிட்டிருந்தது. மேலும் இத்தகைய தூண்டில் வளைவு, அலைத் தடுப்புச் சுவர்களை அமைக்க கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதி பெறுவதும் அவசியமாகும்.
இவ்வனுமதியைப் பெறாமலும், தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராகவும் செங்கல்பட்டு மாவட்டத்தின் புதுப்பட்டினம், தென்பட்டினம், வடபட்டினம், கடலூர், திருவிடந்தை மற்றும் முட்டுக்காடு கிராமங்களில் தமிழ்நாடு மீன்வளத்துறை பெரிய அளவிலான பாறாங்கற்கள், Tetrapods எனப்படும் கான்க்ரீட் கற்களைக் கொண்டு அலைத்தடுப்புச் சுவர்களை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
report
இது தொடர்பாக மீனவ செயற்பாட்டாளர் சரவணன் தொடர்ந்த மனு மீது தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. அப்போது கிராம மக்கள் தங்கள் கடற்கரை மற்றும் குடியிருப்புகளைக் கடலரிப்பிலிருந்து பாதுகாக்குமாறு பலமுறை கோரிக்கை எழுப்பியதன் அடிப்படையில்தான் அலைத்தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டு வருவதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக நேரில் ஆய்வு செய்த தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணைய அதிகாரிகள் தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் அலைத்தடுப்புச் சுவர்களை அமைப்பதற்கான கடலோர ஒழுங்காற்று மண்டல அனுமதியை மீன்வளத்துறை தங்களிடமிருந்து பெறவில்லை எனத் தெரிவித்தனர்.
இதனையறிந்த தீர்ப்பாய உறுப்பினர்கள், பொதுமக்கள் கோரிக்கையின் அடிப்படையில் அலைத்தடுப்புச் சுவர்கள் அமைத்தாலும் சட்டப்படி உரிய அனுமதியைப் பெற்ற பின்னரே அதனை அமைத்திருக்க வேண்டும் என மீன்வளத்துறையைக் கடிந்தனர். உரிய அனுமதி இல்லாமல் அலைத்தடுப்புச் சுவர்கள் அமைக்கப்படுவது கண்டறிந்த பின்னர் அதனை நிறுத்துவதற்காவது தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். கடற்கரைகளைப் பாதுகாக்க வேண்டிய பாதுகாவலர்களே இவ்விஷயத்தில் பாராமுகம் காட்டியது ஆச்சர்யத்தை அளிப்பதாகவும் மனுதாரர் சமர்ப்பித்த புகைப்படங்கள் CRZ விதிகளுக்குப் புறம்பாக உயர் அலைக் கோட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக வீடுகள் கட்டப்பட்டிருப்பதைப் பார்க்க முடிவதாகவும் தெரிவித்தனர்.
இதனையடுத்து உத்தரவிட்ட தீர்ப்பாயம், உடனடியாக அனுமதியின்றி நடக்கும் அலைத்தடுப்புச் சுவர் அமைக்கப்படும் பணிகளை நிறுத்தவும், சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட்டது. CRZ அனுமதியின்றி கடற்கரையில் குடியிருப்புகளை எழுப்பிய 8 தனி நபர்களையும் இவ்வழக்கில் மனுதாரர்களாக சேர்க்கவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
வங்கக் கடலில் ஆண்டிற்கு 8-9 மாதங்களுக்கு காற்று தெற்கிலிருந்து வடக்காக வீசும், 3-4 மாதங்கள் குறிப்பாக வடகிழக்கு பருவ மழை காலத்தில் வடக்கிலிருந்து தெற்காக வீசும். இது வங்க கடலில் ஒரு நீரோட்டத்தை தோற்றுவிக்கின்றது. காற்றின் திசையைப் பொருத்தே இந்த நீரோட்டம் மற்றும் அலைகளின் திசையும் பெரும்பாலும் அமைகின்றன. ஆதலால், தமிழக கரையின் ஓரத்தில் வங்க கடலின் நீரோட்டமும் வருடத்தில் 3-4 மாதங்கள் தவிர்த்து மற்ற எல்லா மாதங்களும் தெற்கிலிருந்து வடக்காக செல்கின்றது.
தமிழ்நாட்டில் உள்ள காவிரி, வைகை, பொருநை, தென்பெண்ணையாறு, பாலாறு போன்ற நதிகள் கொண்டு வந்து சேர்க்கும் மணல் துகள்கள் இந்த நீரோட்டத்தால் வடக்கு நோக்கி (வட-கிழக்கு பருவ காலங்களில் தெற்கு நோக்கி) நகர்கின்றன. இவ்வாறான மணல் துகள்களின் நகர்வைதான் littoral drift என்கிறோம். உரிய ஆய்வுகளின்றி கடல் அலைகளைத் தடுப்பதற்காகப் பாறைகள், Tetrapods உள்ளிட்ட கடினமான அமைப்புகளால் ஒருபுறம் கடற்கரை உருவாக்கமும் மறுபுறம் தீவிர கடலரிப்பும் ஏற்படுகிறது.
– சதீஷ் லெட்சுமணன்
stop order