M SAND ஆலைகளால் காற்று மாசுபாடு; விதிகளை மறு ஆய்வு செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

எம்-சாண்ட் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, காற்று மாசுபாட்டைத் தடுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளை தளர்த்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உத்தரவை மறு ஆய்வு செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இரண்டு எம் சாண்ட் உற்பத்தி செய்யும் அரவை ஆலைகளுக்கு இடையே 1கிமீ தொலைவு இருக்க வேண்டும் என்ற விதியை மாசு கட்டுப்பாடு வாரியம் தளர்த்தியதை 3 மாதங்களுக்குள் மறு ஆய்வு செய்ய வேண்டும் என பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 2004 ஆம் ஆண்டு பாறை பொடி தயாரிக்கும் அரவை ஆலைகளை (Stone Crushing Units) அமைப்பதற்கான விதிகளை உருவாக்கியது. அவ்விதிகளின்படி புதிதாக அமைக்கப்படும் பாறை பொடி ஆலைகள் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் அல்லது வழிபாட்டுத் தலங்களில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் அமையக்கூடாது. இரண்டு பாறை பொடி ஆலைகளுக்கு இடையில் குறைந்தது ஒரு கிலோமீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.

பாறைகளை அரைத்து பொடி ஆக்கும்போது அதிலிருந்து அதிகளவில் தூசு பறக்கும் என்பதாலும் அதில் சிலிகா போன்ற உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் தனிமங்கள் இருப்பதாலும் சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் உடல்நலத்தை பாதுகாக்கும் பொருட்டு இந்த விதிகள் உருவாக்கப்பட்டன.

கடந்த 2017ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கடும் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டதாலும் ஆற்று மணலை அதிகளவில் தோண்டி எடுப்பதால் நீர்வளம் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் பொருட்டிலும் 2017 ஜூலை மாதம் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கட்டுமாங்களில் மணலுக்குப் பதிலாக எம் சாண்டை பயன்படுத்த வேண்டும் என அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு பின்னர் பல இடங்களில் புதிதாக எம்சாண்ட் தயாரிக்கும் பாறை பொடி அரவை ஆலைகள் உருவாக்கப்பட்டன. ஆனால் முறையான காற்று மாசுபாட்டைத் தடுக்கும் உபகரணங்கள் ஏதும் இல்லாமலே இந்த எம் சாண்ட் ஆலைகள் இயங்கி வந்தன. மேலும் குவாரிகளில் இருந்து பெரிய பெரிய லாரிகளில் ஒரு நாளைக்கு பலமுறை பாறைக் கற்கள் எம்சாண்ட் ஆலைகளுக்கு கொண்டு செல்கையில் அதிக அளவில் காற்று மாசுபாடு ஏற்பட்டது. இந்த காற்று மாசுபாட்டினால் பொது மக்களுக்கு பலவிதமான நோய்கள் உண்டாகின.

விவசாயத்திற்கு பயன்படுத்தப்படாத நிலங்களில் இருந்து பெறப்படும் கற்களை அரைத்து உருவாக்கப்படுவதுதான் எம்.சாண்ட். இது ஆற்று மணலுக்கு மாற்று மணலாக பார்க்கப்படுகிறது. கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கடந்த 20 ஆண்டுகளாக இந்த எம் சாண்டை பயன்படுத்தி வருகின்றனர்.

எம் சாண்ட் மணலைப் பயன்படுத்தி கட்டுமானங்கள் கட்டுவதற்கு அரசு வலியுறுத்தினாலும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளால் உற்பத்தியாளர்களுக்கு புதிதாக பாறை பொடிகளை அமைப்பதில் சிக்கல் இருந்ததால் அந்த விதிகளை தளர்த்த வேண்டும் என்று எம் சாண்ட் உற்பத்தியாளர்கள் அப்போதைய சுற்றுச்சூழல் துறை அமைச்சரைச் சந்தித்து பலமுறை கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து எம்சாண்ட் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை பரிசீலிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டம் 2019 மார்ச் மாதம் நடைபெற்றது. காற்று மாசுபாட்டைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட இரண்டு விதிகளைத் தளர்த்துவது குறித்து ஆய்வு செய்வதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நீரி(NEERI) அமைப்பின் நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவானது காஞ்சிபுரம் திருவண்ணாமலை மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள எம்சாண்ட் உற்பத்தி ஆலைகளை நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளித்தது.

அந்த அறிக்கையில் இரண்டு எம்சாண்ட் ஆலைகளுக்கு இடையே ஒரு கிலோ மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்ற விதியை தளர்த்தலாம் என்றும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் வழிபாட்டுத்தலங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவிற்கு அப்பால் தான் எம் சாண்ட் ஆலைகள் இருக்க வேண்டும் என்ற விதியை தளர்த்துவது குறித்து நிறுவனத்தினால் விரிவான அறிவியல் ரீதியிலான ஒரு ஆய்வை மீண்டும் மேற்கொண்டு அதன் அடிப்படையில் முடிவெடுக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.

இதனைக் கருத்தில் எடுத்துக் கொண்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் விரிவான அறிவியல் ரீதியிலான ஆய்வை மேற்கொள்வதற்கான ஒரு திட்டத்தை நீரி நிறுவனத்திடம் கோரியிருந்தது. அதுவரை தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் வழிபாட்டுத் தலங்களில் இருந்து 500 மீட்டர் இடைவெளி விட்டுத்தான் ஆலைகளை அமைக்க வேண்டும் என்ற விதியே தொடரும் எனவும் எம் சாண்ட் ஆலைகளுக்கு இடையில் ஒரு கிலோ மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்ற விதி தளர்த்தப்படுவதாகவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் காற்று மாசுபாட்டினால் ஆண்டிற்கு 12 லட்சம் பேர் உயிரிழப்பதாக பல்வேறு ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இந்நிலையில் காற்று மாசுபாட்டை தடுப்பதற்கான சட்டங்களை மேலும் வலுவாக்க வேண்டுமே தவிர இருக்கின்ற விதிகளை தளர்த்தக் கூடாது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இம்முடிவைக் கடுமையாக எதிர்த்தனர்.

இரண்டு எம் சாண்ட் ஆலைகளுக்கு இடையே 1கிமீ தொலைவு இருக்க வேண்டும் என்ற விதியை தளர்த்தியதால் எம் சாண்ட் ஆலைகள் புற்றீசல் போல் உருவாகின. இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த சம்பத் என்பவர் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உத்தரவுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீதான இறுதித் தீர்ப்பை 08.08.2024 அன்று தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு வழங்கியது.

அந்த உத்தரவில்,

  • இரண்டு எம் சாண்ட் உற்பத்தி செய்யும் அரவை ஆலைகளுக்கு இடையே 1கிமீ தொலைவு இருக்க வேண்டும் என்ற விதியை மாசு கட்டுப்பாடு வாரியம் தளர்த்தியதை 3 மாதங்களுக்குள் மறு ஆய்வு செய்ய வேண்டும்
  • தனி அரவை ஆலைக்கும், பல அரவை ஆலைகள் சேர்ந்த தொகுப்புக்கும் தனித்தனியான இடைவெளிகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் நிர்ணயம் செய்ய வேண்டும்.
  • பல அரவை ஆலைகள் அடங்கிய தொகுப்பிற்கான அனுமதி வழங்குகையில், அவ்விடத்தின் தாங்குதிறன் குறித்த ஆய்வு மேற்கொண்டு ஒரு தொகுப்பில் எத்தனை ஆலைகளை அனுமதிக்கலாம் என நிர்ணயம் செய்ய வேண்டும்.
  • பல அரவை ஆலைகள் கொண்ட தொகுப்புக்கு அனுமதி வழங்குகையில் அவற்றால் அருகிலுள்ள குடியிருப்புகள், நீர்நிலைகள், பொது கட்டிடங்கள், சூழல் கூருணர்வு கொண்ட பகுதிகளின் மீது ஏற்படும் ஒட்டுமொத்த தாக்கத்தை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் விதிகளை மீறி செயல்பட்டு வந்த எம் சாண்ட் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

– சதீஷ் லெட்சுமணன்

 

MSAND
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments