கடலோர நீர்வாழ் உயிரின ஆணையத்தின் அனுமதியின்றி செயல்படும் இறால் பண்ணைகளை இடித்து அகற்றுமாறு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு பரமசிவம் என்பவர் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில் திருவள்ளூர் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் இறால் உற்பத்தி மற்றும் வளர்ப்பு பண்ணைகளால் அங்குள்ள விளைநிலங்கள் பாழ்படுவதாகவும், பழவேற்காடு ஏரி மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் இறால் பண்ணைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியிடப்படும் கழிவுநீரால் பாதிக்கப்பட்டும் வருவதாலும் இறால் பண்ணைகளை மூட உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் கடலோர நீர்வாழ் உயிரின ஆணையத்தின்(CAA- Coastal Aquaculture Authourity) அனுமதியில்லாமல் 119 உவர்நீர் இறால் பண்ணைகள் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து கடலோர நீர்வாழ் உயிரின ஆணையத்தின் மாவட்ட அளவிலான குழு அனுமதியில்லாமல் செயல்பட்டு வந்த 119 உவர்நீர் இறால் பண்ணைகளை நிரந்தரமாக மூடவும் 113 நன்னீர் இறால் பண்ணைகளின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறும் மீன்வளத்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியிருந்தது. மேலும் காஞ்சிவாயல் பகுதியில் அனுமதியில்லாமல் செயல்பட்டு வந்த 13 இறால் பண்ணைகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக இழப்பீட்டுத் தொகையாக 67 லட்சத்து 43 ஆயிரத்து 750 ரூபாய் விதிக்கப்பட்டது.
மேலும் 2016ம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த அறிக்கையில் 166 இறால் பண்ணைகளை அகற்றியுள்ளதாகவும், 52 இறால் பண்ணைகள் அனுமதியுடன் பட்டா நிலத்தில் செயல்பட்டு வருவதாகவும், 217 இறால் பண்ணைகள் அனுமதியின்றி செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பானது கடந்த 26.05.2022 அன்று தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் சிறப்பு அமர்வால் வழங்கப்பட்டது. அத்தீர்ப்பில்
கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கையின் கீழ் இதுபோன்ற பண்ணைகளை CRZ பகுதியில் அமைப்பது தடை செய்யப்பட்டிருந்தாலும், CAAன் கீழ் உயரலைக் கோட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவிற்கு அப்பால் இப்பண்ணைகளை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இத்தகையத் திட்டங்களுக்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கையின் கீழ் அனுமதி அவசியம் எனக் கூறப்பட்டுள்ளது. இறால் பண்ணைகள் CAAன் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிகள், மாசுக் கட்டுப்பாடு வாரியம், வனத்துறை உள்ளிட்ட துறைகளின் அனுமதியைப் பெற்றுத்தான் அவை செயல்பட வேண்டும் எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் இறால் பண்ணைகள் அதிகளவில் இருப்பதாகவும், இவற்றின் மீதான கண்காணிப்பு போதுமான அளவில் இல்லை என்றும் கூறியுள்ள தீர்ப்பாயம் சென்னை மாவட்ட கடலோர நீர்வாழ் உயிரின ஆணையம் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் CAA பிரிவு 13(8)ன் கீழ் உரிய அனுமதி இல்லாமல் செயல்படும் இறால் பண்ணைகள் அனைத்தையும் இடித்து அகற்ற வேண்டும் எனவும் அனுமதியின்றி செயல்பட்ட காலத்தில் சுற்றுச்சூழலுக்கு உண்டான பாதிப்பிற்கு இழப்பீடாக மாசுபடுத்தியவரே இழப்பீடு செலுத்தும் கொள்கையின் அடிப்படையில் அனைவரிடமும் இழப்பீட்டுத் தொகை வசூலிக்க வேண்டும் எனவும் உத்தவிட்டது.
மேலும், தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையமும் CRZ விதிகளுக்கு புறம்பான பண்ணைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நீர் மாசுபாடு தடுப்புச் சட்டத்தின் விதிகளை மீறிய பண்ணைகள் மீது தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியமும், காட்டுயிர் பாதுகாப்புச் சட்ட விதிகளை மீறி செயல்படும் பண்ணைகள் மீது தமிழ்நாடு தலைமை காட்டுயிர் பாதுகாவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, தேசிய கடற்கரை மண்டல மேலாண்மை ஆணைய உறுப்பினர் செயலர், வளங்குன்றா கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம், தமிழ் நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம், தலைமை காட்டுயிர் பாதுகாவலர் ஆகியொர் கொண்ட மேற்பார்வைக் குழு ஒன்றையும் உருவாக்கி அக்குழுவை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கூடி மேற்கண்ட உத்தரவை செயல்படுத்துவது குறித்த செயல்திட்டம் உருவாக்குமாறும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
– சதீஷ் லெட்சுமணன்
pulicat