தமிழ்நாட்டிற்கான வரைவு கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டத்தின் மீதான குறைபாடுகள் அனைத்தையும் சரிசெய்த பின்னரே பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் அறிவிக்கப்பட வேண்டும் என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு.
கடலோர ஒழுங்காற்று மண்டல அறிவிக்கை 2019ன் விதிகளின்படி வரைவு கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம்(Coastal Zone Management Plan) தயாரிக்கப்படவில்லை என மீனவ செயற்பாட்டாளர்கள் ஜேசு ரத்தினம், மற்றும் சரவணன் தொடர்ந்த வழக்கில் பசுமைத் தீர்ப்பாயம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் CRZ 2019 அறிவிக்கையின்படி தயாரிக்கப்பட்ட CZMP மீதான கருத்துக் கேட்புக் கூட்டங்களை 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, NCSCM உதவியுடன் தயாரித்த கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டத்தில் மீனவர்கள் குடியிருப்பு, மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் இடம், மீன்கள் பிடிபடும் இடம், மீனவ கிராமங்களின் பெயர்கள், எல்லைகள் விடுபட்டுள்ளதாகவும், தவறாக இருப்பதாகவும் ஜேசு ரத்தினம், சரவணன் ஆகிய மீனவ செயற்பாட்டாளர் தாக்கல் செய்த மனுவைத் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரித்து வந்தது.
கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம் முழுமையற்றும் தவறாகவும் இருப்பதால் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தக்கூடாது என நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே இடைக்கால உத்தரவிட்டிருந்தது.
அந்த வழக்கில் இறுதி விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் 17.10.2024 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில்,
- தமிழ் நாட்டின் கடற்கரை பகுதிகளில் எங்கெல்லாம் தேவை இருக்கிறதோ அந்தப் பகுதிகளிலும், உயர் நீதிமன்றம், பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுகள் மற்றும் மீனவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட பகுதிகளிலும் உள்ள சூழல் கூருணர்வு மிக்க பகுதிகளை வரையறை செய்ய TNSCZMA/NCSCM இணைந்து கள ஆய்வு செய்ய வேண்டும்.
- அனைத்து தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட திருத்தங்கள், மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்தும் பெறப்பட்ட தரவுகள் மற்றும் கருத்துகள் அனைத்தையும் வரைவு அறிக்கையில் இடம்பெறச் வேண்டும்.
- அனைத்துத் தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட திருத்தங்கள், சேர்ப்புகள், நீக்கங்கள் அனைத்தும் வரைவு CZMPயில் இடம்பெறுவதை TNSCZMAயின் உறுப்பினர் செயலர் உறுதி செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்தும் பெறப்பட்ட தரவுகள் மற்றும் கருத்துகள் அனைத்தையும் வரைவு அறிக்கையில் இடம்பெறச் வேண்டும். மனுதாரர் எழுப்பிய குறைபாடுகள், மாவட்ட ஆட்சியர்களின் கருத்துகள் மற்றும் CRZ விதியில் கூறுகள் அனைத்தும் வரைவு CZMPயில் சேர்க்கப்பட்டதை உறுதி செய்த பின்னரே அது வெளியிடப்பட வேண்டும்.
- அனைத்துத் தரப்பினரும் CZMPயை ஆராய்ந்து தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க உரிய கால அவகாசம் வழங்கப்பட்டு திருத்தங்கள் குறித்து கருத்துகளைப் பெற்ற பின்னர் உரிய சட்டவிதிகளின்படி பொது மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை அறிவிக்கலாம்.
என அத்தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
– சதீஷ் லெட்சுமணன்
CZMP Judgment OA 101 of 2023