எண்ணூர் கழிமுக ஆக்கிரமிப்பு: மின்வாரியத்திற்கு ரூ.5கோடி அபராதம் விதித்தது பசுமைத் தீர்ப்பாயம்

Image: Saravanan.K

எண்ணூருக்கு அருகே பக்கிங்காம் கால்வாய் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் கட்டிடக் கழிவுகளை கொட்டி நீர் போக்குவரத்துக்கு இடையூறாக சாலை அமைத்ததற்கு அபராதமாக ரூ. 5 கோடி ரூபாயை மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு செலுத்த, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

எண்ணூர் அனல் மின்நிலைய விரிவாக்க திட்டத்திற்காக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பக்கிங்ஹாம் கால்வாயில் உரிய அனுமதிகளைப் பெறாமல் சாலை அமைத்துள்ளதாகவும், கட்டிடக் கழிவுகள் கொட்டப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன், கொசஸ்தலை ஆற்றின் நீர் போக்குவரத்தை தடுத்ததாகவும் கூறி, கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தவும், கட்டிட கழிவுகளை அகற்றி, அப்பகுதியை மறுசீரமைக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த மீனவர் சீனிவாசன் என்பவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் 2017ம் ஆண்டு வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கை 20.07.2022 அன்று இறுதித் தீர்ப்பை தேசிய பசுமை தீர்ப்பாயத் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல், நீதித்துறை உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், சுதிர் அகர்வால், நிபுணத்துவ உறுப்பினர்கள் சத்யகோபால், செந்தில்வேல் அடங்கிய சிறப்பு அமர்வு வழங்கியது.  அத்தீர்ப்பில் ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை 2017 ம் ஆண்டு ஆய்வு மேற்கொண்டு அளித்த அறிக்கையில், ஆற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள், ஆற்றின் நீர்ப் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும் அறிக்கை அளித்துள்ளதன் அடிப்படையில், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறியுள்ளதால் எண்ணூர் அனல் மின்நிலையம் இழப்பீடு செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

கொசஸ்தலை ஆற்றின் நீர்ப் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தாலும், கடந்த காலங்களில் ஏற்படுத்திய சேதத்திற்கு இழப்பீடு செலுத்தியாக வேண்டும் என்பதால், இழப்பீட்டைத் தீர்மானிக்க மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம், மாநில மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியர் அடங்கிய கூட்டுக்குழுவை நியமித்த தீர்ப்பாயம், மூன்று மாதங்களில் இழப்பீட்டைத் தீர்மானித்து வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும், சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் வகையில் இடைக்கால இழப்பீடாக ரூ. 5 கோடியை மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இரண்டு மாதங்களில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Tangedco 1

கூடுதல் தகவல்களுக்கு: https://storyofennore.wordpress.com/2022/07/21/tangedco-fined-rs-5-crores-for-constructing-roads-within-the-ennore-wetlands-for-the-construction-of-a-coal-conveyor-belt/

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments