திருவள்ளூரில் அமையவிருந்த பாலிமர் தொழிற்பூங்காவிற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி ரத்து

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் வலசைப் பறவைகளின் வாழிடமான நீர்நிலையை அழித்து அமையவிருந்த தமிழ்நாடு பாலிமர் தொழிற்பூங்காவிற்கு 2019ம் ஆண்டு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் உள்ள புழுதிவாக்கம் மற்றும் வாயலூரில் தமிழ்நாடு அரசின் தொழிழ் வளர்ச்சி நிறுவனம்(TIDCO) மற்றும்  சிறு தொழில் வளர்ச்சிக் கழகம்(SIDCO) நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் தமிழ்நாடு பாலிமர் தொழிற்பூங்கா(Tamilnadu Polymer Industries Park) ஒன்றை 243.78 ஏக்கர் பரப்பளவில் 217 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க கடந்த அதிமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டது. இத்திட்டத்திற்கு 2019ம் ஆண்டு தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது.

இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்தது, திட்ட அமைவிடத்தில் இருந்த நீர்நிலையை அளிக்க சாம்பல் கழிவுகளைக் கொட்டியது, அங்கீகாரமில்லாத நிறுவனத்தைக் கொண்டு EIA அறிக்கை தயார் செய்தது, மாற்று இடங்கள் குறித்து ஆராயாதது உள்ளிட்ட காரணங்களுக்காக இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்யக்கோரி எண்ணூர் கழுவெளி பாதுகாப்பு பிரச்சாரக் குழுவைச் சேர்ந்த  சரவணன் என்பவர் பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இம்மனு மீதான இறுதித் தீர்ப்பை தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு வழங்கியது. அத்தீர்ப்பில் இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்வதாகவும் திட்ட அமைவிடத்தில் இருந்த நீர்நிலையில் கொட்டப்பட்ட சாம்பல் கழிவுகளை அகற்றி மறுசீரமைப்பு செய்து சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மேற்கொள்ள புதிய ஆய்வு எல்லைகளை மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்க வேண்டும் எனவும்  அதனடிப்படையிலேயே இத்திட்டத்திற்கான விண்ணப்பம் பரிசீலிக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு திட்ட அமைவிடத்தை நேரில் ஆய்வு செய்து விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டும் என்றும் இப்பணிகள் அனைத்தையும் ஒன்பது மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

வடசென்னையில் குறிப்பாக எண்ணூரில் தங்களது வாழ்வாதரமான ஆற்றையும், கடலையும், கழிமுகத்தையும் காப்பாற்றப் போராடி வரும் மீனவ மக்களுக்கு கிடைத்த வெற்றியாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது.

– செய்திப் பிரிவு

Polymer park
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments