இந்தியாவின் அந்தமான் நிகோபர் பகுதியைச் சார்ந்த ‘கிரேட் நிகோபார் தீவு’ (Great Nicobar Island) பகுதியில் சுமார் 81 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ‘டிரான்ஸிப்மண்ட் முனையம்’ (Transshipment terminal), ராணுவ மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான விமான நிலையம், மின் உற்பத்தி நிலையம், குடியிருப்புகள் மற்றும் சுற்றுலா மையம் போன்றவற்றை இந்திய அரசாங்கம் அமைக்கவுள்ளது.
சுமார் 244 சதுர கி.மீட்டருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பை உள்ளடக்கிய இத்திட்டம் குறித்தும், இது அப்பகுதியின் உயிர்ப்பன்மையத்திற்கும், அங்கு வசிக்கும் பூர்வகுடிகளுக்கும் எவ்வாறு ஆபத்தானதாக அமையும் என்பது குறித்து பல சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பத்திரிகைகளும் தொடர்ந்து விரிவான விளக்கங்களுடன் எதிர்க்குரல் எழுப்பி வருகின்றனர். இத்திட்டம் ‘கிரேட் நிகோபார்’ பகுதியில் வசிக்கும் ‘சோம்ப்பன்’ எனப்படும் பூர்வகுடிகளின் இருப்பையே கேள்விக்குள்ளாக்குவதுடன், அம்மக்களின் இனப்படுகொலைக்கு வழிவகுக்கும் கொடிய பாதகச் செயலாக அமையக்கூடும் என சர்வைவல் இண்டர்நேஷனல் (Survival International) அமைப்பின் அறிக்கை எச்சரிக்கிறது.
யார் இந்த சோம்ப்பன் பூர்வகுடிகள்?
மிகவும் பாதிக்கப்படக்கூடிய (Particularly Vulnerable Tribal Group – PVTG) பூர்வகுடி குழுக்களில் ஒன்றாக இந்தியா அரசாங்கத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ள இப்பூர்வகுடி மக்களின் ஒட்டுமொத்த மக்கள் தொகையே 300க்கும் குறைவாகவே உள்ளது. உலகிலேயே அந்தமானின் தென்கோடிப்பகுதியான இந்த நிகோபார் பகுதிகளில் மட்டுமே வசித்து வரும் இவர்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்நிலங்களில் குடியேறி உயிர்ப்பன்மையமிக்க இப்பகுதிக்கு ஒரு பாதுகாப்பு அரணாகவேத் திகழ்கின்றனர்.
வேட்டையாடி உணவு சேகரிப்பவர்களாகவும், சில சமயங்களில் நாடோடிகளாகவும் வாழும் சோம்ப்பன் பூர்வகுடிகள் தங்களுக்குள் சிறுசிறு குடும்பங்களாகவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலும் தங்கள் உணவுத் தேவைக்காகக் காட்டையேச் சார்ந்து வாழும் இவர்களின் பிரதான உணவாக தாழ்நிலங்களில் விளையும் தாழம்பழமே(pandanus fruit) அமைந்துள்ளது. தங்கள் இனக்குழுக்களுக்கு மழைக்காடுகளின் ஊடாகப் பாயும் நதிகளின் (சோம்ப்பன் மக்களின் மொழியில் இவை ரூகி என்றழைக்கப்படுகின்றன) பெயர்களையே சூட்டிக்கொள்ளும் இவர்களின், இடம்பெயர்வு, திருமணங்கள் மற்றும் வாழ்வாதாரம் உள்ளிட்ட வாழ்வின் அனைத்து அம்சங்களும் இந்த ரூகிகளைச் சார்ந்தே அமைந்துள்ளன.
மூன்றில் இரண்டு பங்கு சோம்ப்பன் மக்கள் தங்களைத் தவிர்த்த அந்நியர்களுடனான தொடர்பைத் தவிர்க்கின்றனர், சிலரே அந்நியர்களுடன் தொடர்புகொண்டாலும், அத்தொடர்புகளையும் மிகமிகக் குறைந்த அளவிலேயே வைத்துக்கொள்கின்றனர். இதன் அர்த்தம் சோம்ப்பன் பூர்வகுடிகளுக்கு மற்ற வாழ்வுமுறைகள் தெரியாது என்பதல்ல. மாறாக அவர்கள் தனித்திருப்பதையே பெரும்பாலும் விரும்புகின்றனர். FPIC எனப்படும் சுதந்திரமான, முன்கூட்டிய அறிவிக்கப்பட்ட ஒப்புதல் (Free Prior and Informed Consent (FPIC) என்பது உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பூர்வகுடி மக்களுக்கான உரிமையாகும். பெரும்பாலான சோம்ப்பன் பூர்வகுடிகள் தொடர்புகொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்கள் வாழ்விடங்களில் மற்றவர்களால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்காக ஒருபோதும் அவர்களிடம் இத்தகைய ஒப்புதல் பெறப்படவில்லை.
இந்த ‘கிரேட் நிகோபர் திட்டம்’ சார்ந்து சோம்ப்பன் பூர்வகுடிகளைச் சாராத அந்நியர்கள் அம்மக்களின் நிலங்களின் உள்ளே வருவது குறித்து சோம்ப்பன் இனத்தைச் சார்ந்த பெண் ஒருவரிடம் கேட்கப்பட்டபோது, “எங்கள் காடுகளுக்குள் வராதீர்கள், அவற்றை அழிக்காதீர்கள், இங்கே தான் எங்களுக்கும், எங்கள் குழந்தைகளுக்குமான உணவைச் சேகரிக்கின்றோம். எங்கள் காடுகளுக்குள் அந்நியர்கள் நுழைவதை நாங்கள் விரும்பவில்லை” என தனது எதிர்ப்பை தெரிவிக்கிறார். சோம்ப்பன் இனத்தைச் சேர்ந்த மற்றொரு ஆண் “அந்நியர்கள் எங்கள் மலைகளுக்கு அருகே வராதீர்கள்” என முழங்குகிறார். தொடர்புகொள்வதற்கு சிக்கலாக உள்ள உலகின் மற்ற பூர்வகுடி இனங்களை ஒப்பிடும்போது, சோம்ப்பன் இனமக்கள் அந்நியர்களுடன் தொடர்புகொள்வதால் அவர்களால் பல்வேறு கொள்ளை நோய்களுக்கு ஆளாவதால், அவர்களின் மக்கள்தொகைக் கணிசமாகக் குறைகிறது.
சோம்ப்பன் பூர்வகுடிகளை ‘கிரேட் நிகோபார் திட்டம்’ அச்சுறுத்துவதற்கான காரணங்கள்
சுற்றுச்சுழல் பேரழிவு
துறைமுகம், விமானநிலையம், மின் உற்பத்தி நிலையம், சுற்றுலாப் பகுதிகள் மற்றும் குடியிருப்புகள் என சுமார் 130 சதுர கிலோமீட்டருக்கும் மேற்பட்ட மழைக்காடுகளையும் சேர்த்து மொத்தம் 244 சதுர கிலோமீட்டருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பு இத்திட்டத்திற்காகப் பயன்படுத்தப்படவுள்ளது. தீவின் மூன்றில் ஒரு பங்கு அளவிலான பகுதியில் அமையவிருக்கும் இத்திட்டத்திற்காகப் பாதிக்கும் மேற்பட்ட சோம்ப்பன் மற்றும் நிகோபாரிஸ் பூர்வகுடிகளின் பாதுகாப்பட்ட வனப்பகுதியும் பயன்படுத்தப்படவுள்ளன.
ஏற்கனவே, இந்தியாவின் சொந்த சட்டத்தினை மீறி பல முக்கியமான பகுதிகளின் பாதுகாப்பு அரண்கள் தகர்பட்டுள்ள நிலையில் இத்திட்டம் மேலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தவல்லது. குறிப்பாக 2004ம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட தங்களின் பூர்விக நிலங்களுக்கு நிகோபாரி பூர்வகுடிகள் இனி எக்காலத்திலும் திரும்பவே முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடியது.
அமெரிக்காவின் லாஸ் வெகாஸ் நகரத்தின் அளவிற்கு இப்பகுதியில் மிகப்பெரிய நிலையான நகரம் ஒன்றை அமைப்பது இத்திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இது அப்பகுதியின் மக்கள்தொகையை சுமார் 8 ஆயிரம் மடங்கு அதிகரிப்பதுடன், திட்டத்தின் ஆரம்பகால பகுதிகளையும் தாண்டி சோம்ப்பன் பூர்வகுடிகளின் நிலங்களை வெளிப்புற குடியேறிகள் ஆக்கிரமிக்க வழிவகுக்கிறது. மேலும், இத்திட்டத்திற்காக நிலங்களை வெடிவைத்து தகர்த்தல், அகழ்தல் போன்ற பணிகளால் அப்பகுதியின் சூழல் அமைவுகள் கடுமையாக பாதிக்கப்படக்கூடுவதுடன், சோம்ப்பன் மக்களின் வேட்டை மற்றும் மேய்ச்சல் நிலங்கள் பேரழிவைச் சந்திக்கும். இதுமட்டுமல்லாது, அங்கு அமையவுள்ள மிகப்பெரிய துறைமுகம் காலத்தியா நதியின் முகத்துவாரத்தை 90 சதவீதத்திற்கும் மேல் கட்டுப்படுத்துவது, வடக்கே அமைந்துள்ள உணவு சமவெளிகளை மிகக்கடுமையாக பாதிப்பதுடன், சோம்ப்பன் மக்களின் உணவாதாரமான தாழை மரங்களுக்கும் அழிவை ஏற்படுத்தும். இத்தகைய நிகழ்வுகள் சோம்ப்பன் மக்களை அப்பகுதியிலிருந்து இடம்பெயரச் செய்யவல்லதால் இது அவர்களின் ரூகி பாரம்பரிய அமைப்பையே நிலைகுலையச் செய்யும். இனப்படுகொலைகள் குறித்த ஆய்வாளர் முனைவர். மார்க் லெவனின் கூற்றுப்படி “இதன் விளைவுகள் சோம்ப்பன் மக்களை மனதளவில் நிலைகுலையச் செய்வதுடன், மெதுமெதுவாக அவர்களின் மரணத்திற்கு வழிவகுக்கும் ஒன்றாக அமையும்”.
இதேபோல, மானுடவியல் நிபுணர்கள் குழு ஒன்றின் கூற்றுப்படி, “நிலப்பரப்பில் பேரழிவை ஏற்படுத்தும் இத்தகைய மாற்றமானது தீவிலுள்ள ஒட்டுமொத்த இயற்கை வளங்களையும் மீட்க இயலாத அழிவு நிலைக்கு கொண்டு செல்வதுடன் இதனைத் தடுத்து நிறுத்தவில்லையெனில் அந்தமான் பகுதியின் அந்தமானி மற்றும் ஓங்கெஸ் பூர்வகுடியினரின் கதியே சோம்ப்பன் பூர்வகுடிகளுக்கும் ஏற்படும்”. (இந்திய குடியேறிகள் மற்றும் பிரிட்டிஷ் காலனிய அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் ஏற்பட்ட சூழலியல் பாதிப்புகள் மற்றும் நோய்களினால் அம்மக்களின் மக்கள் தொகை 85 முதல் 99% வரை அழிந்துள்ளது).
கடந்த 2022ம் ஆண்டு இந்திய அரசாங்கம் வெளியிட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டில் சோம்ப்பன்கள் வாழும் நிலத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் அவர்களின் இருப்பிற்கே மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அபாயமாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனை புறந்தள்ளியே அரசாங்கம் இந்த திட்டத்தை செயல்படுத்த முனைந்துள்ளது.
“இந்த இழப்பு அவர்களுக்கு மிகப்பெரியது, கடுமையான மனஉளைச்சலை ஏற்படுத்தும். வெளியுலகினராகிய நாம் வளர்ச்சி எனக்கூறும் எதும் அவர்களின் நலனுக்கு உகந்ததல்ல. அவர்கள் தங்களுக்கான தொன்மையான வாழ்வியலைக் கொண்டுள்ளனர். எந்திரமயமான உலகைப் பற்றியோ அதில் பிழைத்திருப்பது பற்றியோ ஏதும் அறிந்திராதவர்கள் சோம்ப்பன் மக்கள்” – ஆன்ஸ்டிஸ் ஜஸ்டின் (பூர்வகுடி நிகோபாரிகள் குறித்த மானுடவியலாளர் மற்றும் இந்திய மானுடவியல் ஆய்வுநிறுவனத்தின் முன்னாள் இணை இயக்குநர்)
நோய்கள்
வெளியுலகத்தோடு அவ்வளவாகத் தொடர்பிலில்லாத பூர்வகுடி மக்கள் வெளியுலகத்தாராடு தொடர்புகொள்ளும் சூழ்நிலை ஏற்படும் போது, வெளியுலகித்தினரின் நோய்களால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் சுமார் 6 லட்சத்து ஐம்பதாயிரம் நிரந்தரக் குடியேறிகளை இந்திய அரசாங்கம் கிரேட் நிகோபர் தீவுகளில் குடியமர்த்துவது என்பது சோம்ப்பன் பூர்வகுடிகளின் சமூக மற்றும் சூழலமைப்பில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
இவ்வாறு 1980களில் அந்நியர்களோடு தொடர்பிலிருந்த காரணத்தால் சுமார் 100க்கும் மேற்பட்ட சோம்பன் பூர்வகுடிகள் உயிரிழந்தனர். 1990களில் வெளியான இந்திய அரசாங்கத்தின் அறிக்கை ஒன்று, “அந்நிய மக்களோடு அடிக்கடி தொடர்பிலிருப்பது சோம்ப்பன் குழுக்கள் முற்றிலும் அழிந்து போகவோ அல்லது அவற்றின் மக்கள்தொகை கடுமையான பாதிப்பைச் சந்திக்கவோ வழிவகுக்கிறது”. மேலும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் படி “ஒருமுறை தொற்று பரவத் தொடங்கிவிட்டால், அதன் காரணமாக ஒட்டுமொத்த சோம்ப்பன் பூர்வகுடிகளும் அழிய வாய்ப்புள்ளது. இத்தகைய ஆபத்தான சூழ்நிலையில் வாழும் சோம்ப்பன் பூர்வகுடியினரை ஒட்டுமொத்தமாக இப்புவியிலிருந்து துடைத்தெறியும் அபாயகரமான நோய்களை ஏற்படுத்தவல்லது கிரேட் நிகோபார் திட்டம்.
“என்னைப் பொறுத்தவரையில் இத்தகைய பெரும் கட்டுமானத் திட்டங்கள் சரியானவை அல்ல (கிரேட் நிகோபர் தீவுகளில்)… சோம்ப்பன் மக்களின் எண்ணிக்கை மிகக்குறைவேயானாலும், அவர்களின் தீவிலுள்ள காடுகளைப் பற்றிய அறிவு மிகவும் உயர்வானது. அவர்கள் மகிழ்ந்திருக்கின்றனர், ஆனந்தமாக உள்ளனர். இப்பிரபஞ்சத்தைப் பற்றி அவர்களுக்கேயான தனித்தப் புரிதலுள்ளது. அவர்களை அவர்கள் போக்கிலேயே விடுங்கள். நாம் அவர்களின் வசிப்பிடத்திற்குள் நுழைந்தால், நோய் போன்ற காரணிகளால் அவர்களின் அழிவு மிக வேகமானதாக இருக்கக்கூடும்.” – திரிலோக்நாத் பண்டிட் (இந்திய மானுடவியல் ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்)
மனித சுற்றுலாக்கள்(Human Safaris) மற்றும் சுரண்டல்
ஆயிரக்கணக்கான நிரந்தரக் குடியேறிகளை குடியமர்த்துவதுடன், சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் லட்சக்கணக்கான மக்களை இத்தீவுப்பகுதிக்கு இந்திய அரசாங்கம் கொண்டுவருவது சோம்ப்பன் மக்களின் வாழ்வாதாரங்களைக் கடுமையாகப் பாதிப்பதுடன், அவர்களின் மீதான சுரண்டலுக்கு வழிவகுப்பதாக அமையும். ஏற்கனவே, சோம்ப்பன் மிக மோசமான இனவாதத்தை சந்தித்து வருவதுடன், ஊடகங்களாலும், சில சமயங்களில் அரசாத்தினாலே கூட பழைமைவாதிகளாக சித்திரிக்கப்படுகின்றனர்.
சுற்றுலா, வளர்ச்சி என்கிற பெயரில் அமைக்கப்படும் சாலைகள் மற்றும் கட்டுமானங்கள், சோம்ப்பன் மக்களையும் அவர்களின் வாழ்விடங்களையும் சுற்றிக்காட்டும் (அந்தமானில் வாழும் ஆங் எனப்படும் ஜார்வா பழங்குடினரைச் சுற்றிகாட்டுவது போன்ற) மனித சுற்றுலாக்கள் நடைபெறும் ஆபத்தை ஏற்படுத்தும். இவை நோய் தொற்றுகள், விபத்துகள் மற்றும் சோம்ப்பன் அந்நியர்களைச் சார்ந்து வாழும் நிலைக்கு தள்ளப்படுதல் போன்ற ஆபத்துகளுடன், போதைப் பழக்கம், பாலியல் குற்றங்கள் மற்றும் மேலும் பிற மோசமான அனுபவங்களை ஏற்படுத்தக்கூடும்.
இனப்படுகொலை அபாயம்
மேற்கண்ட தகவல்களின் மூலம் கிரேட் நிகோபார் திட்டமானது சோம்ப்பன் பூர்வகுடிகளை முற்றிலும் அழிந்துவிடும் அபாயமிக்கது என்பதனை புரிந்துகொள்ள முடியும். இந்திய அரசாங்கம் இனப்படுகொலை வழக்கத்தை எதிர்த்தாலும், வெளிப்படையாக சோம்ப்பன் பூர்வகுடிகளை அழிக்கும் எண்ணத்தை அறிவிக்காவிட்டாலும், ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் அரசு தயாரித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடே அழிவுக்கான அபாயத்தை விவரித்திருக்கும் நிலையில், இனப்படுகொலை குறித்த ஆய்வாளர் மார்க் லெவனின் கூற்றுப்படி”இதன் விளைவு குறித்து இத்திட்டத்தினை மேற்கொள்ளவிருப்பவர்கள் ஏற்கனவே அறிந்திருப்பதால், அப்பாவிகளின் எந்தவொரு குறைந்தபட்ச கோரிக்கையும் ஏற்றுக்கொள்ள வாய்ப்பிருக்காது.”
பன்னாட்டளவில் இந்நிகழ்வு கவனம் பெற்றுவரும் நிலையில் 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இனப்படுகொலை குறித்து ஆராய்ந்துவரும் 13 நாடுகளைச் சேர்ந்த 39 ஆய்வாளர்கள் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், இத்திட்டம்”சோம்ப்பன் மக்களுக்கான மரண தண்டனை போன்றதும், பன்னாட்டளவிலான இனப்படுகொலைக்குச் சமம்“ எனவும் கூறியுள்ளனர்.
இதேபோல் 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவைச் சேர்ந்த 12 முன்னணி மானுடவியல் ஆய்வாளர்கள் இத்திட்டத்தைக் கைவிட வலியுறுத்தினர். அவர்களின் கூற்றுப்படி, “இத்திட்டம் கைவிடப்படவில்லையெனில், இந்திய அரசாங்கமானது, கிரேட் நிகோபார் தீவின் மக்களை மீட்க முடியாத துயரத்திற்கு கூட்டிச் செல்வதுடன் அவர்களின் இன அழிவுக்கு வழிவகுக்கும்” என கூறியுள்ளனர்.
கிரேட் நிகோபர் தீவுகளின் வளர்ச்சித் திட்டங்களின் விளைவுகள் சோம்ப்பன் மக்களுக்கு மீளமுடியாத இழப்பை ஏற்படுத்தவல்லது… இனப்படுகொலை என்பது மனிதர்களைத் தனித்தனியாக அழிப்பது மட்டுமேயல்ல ஒரு இனம் அது தொடர்ந்து வாழவே முடியாத நிலையை ஏற்படுத்துவதுமேயாகும் – முனைவர். மார்க் லெவனி(இனப்படுகொலைகள் குறித்த சர்வதேச ஆய்வாளர்)
பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான சட்டங்களை மீறும் இத்திட்டம்
FPIC எனப்படும் சுதந்திரமான, முன்கூட்டிய அறிவிக்கப்பட்ட ஒப்புதலை (Free Prior and Informed Consent (FPIC) பெறாததன் மூலம் பூர்வகுடிகளை பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட (ILO Convention
169) சட்டம் மீறப்படுகிறது. இது சோம்ப்பன் மக்கள் வாழ்வதற்கான உரிமையப் பறிக்கும் செயலாகும்.
பட்டியலிடப்பட்ட பூர்வகுடிகளுக்கு தேசிய ஆணையத்தின் முன்கூட்டிய ஆலோசனையைப் பெறாததன் மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 338A(9) மீறுகிறது. மேலும், சோம்ப்பன் மற்றும் நிகோபாரி பூர்வகுடிகளின் ஒப்புதலை பெறாதது வன உரிமைச் சட்டம் 2006-ஐயும் மீறுகிறுது. இறுதியாக எந்தவொரு இத்தீவில் மிகப்பரந்தளவிலான வளர்ச்சித் திட்டங்களை விடவும் சோம்ப்பன் பூர்வகுடிகளின் நலனுக்கும், ஒருமைப்பாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் சோம்ப்பன் கொள்கை 2015-ஐயும் மீறுகிறது.
முடிவும் தீர்வும்
சோம்ப்பன் பூர்குடிகள் எளிதில் தொடர்புகொள்ள முடியாதவர்களாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வாழும் பகுதிகளில் ஏற்படுத்தப்படும் கிரேட் நிகோபார் திட்டம் போன்ற திட்டங்கள் அவர்களின் வாழ்வாதாரங்களை அழிப்பதுடன், நோய்த்தொற்றுகள் போன்றவற்றவை அந்த இனத்தை முற்றிலும் அழிக்கவல்லது என்பதை மேற்கண்ட தேசிய மற்றும் சர்வதேச அளவிலான நிபுணர்களின் கூற்றிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. எவ்வளவு திட்டமிட்டாலும் கிரேட் நிகோபர் திட்டம் போன்றவற்றிலிருந்து அவர்களைக் காப்பது என்பது இயலாத காரியம் என்பதால் இத்திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
மேலும் இந்திய அரசு, சோம்ப்பன் மற்றும் நிகோபாரி மக்கள் வசிக்கும் பகுதியைப் பாதுகாப்பட்ட பூர்வகுடியினருக்கான மண்டலங்களாக மீண்டும் அறிவிக்கவும், அதனை சோம்ப்பன் மக்களுடைய உண்மையான எல்லை வரை விரிவாக்கவும் செய்வதுடன், நிகோபாரி மக்கள் சுனாமிக்கு முன்பிருந்த அவர்களின் பூர்வகுடி கிராமங்களுக்கு திரும்பிச் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
பன்னாட்டுச் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு இத்திட்டத்தைக் கைவிட ஐ.நா.வைச் சார்ந்த சம்பந்தபட்ட அதிகாரிகள் இந்திய அரசை வலியுறுத்துவதுடன், ஐ.நா.வின் பிற அங்கங்களிலும் இது குறித்து வலுவான ஆட்சேபணையைத் தெரிவிக்க வேண்டும்.
இத்திட்டத்தில் ஆர்வமுள்ள நிறுவனங்கள் மற்றும் நிதி அமைப்புகள் இதை முற்றிலுமாகப் புறக்கணிப்பதுடன், இதற்காக, நிதி, காப்பீடு மற்றும் முதலீடு போன்ற ஒரு உதவியையும் செய்யக் கூடாது.
கிரேட் நிகோபார் திட்டத்தைத் தடுத்து சோம்ப்பன் பூர்வகுடிகளைக் காக்க மேற்கண்ட நடவடிக்கைகளை சம்பந்தபட்டவர்கள் விரைந்து எடுக்க சர்வைவலின் அறிக்கை வலியுறுத்துகிறது.
“அவர்களும்(சோம்ப்பன்) பிற பூர்வகுடிகளும் இந்நிலத்தின் உண்மையான வாரிசுகள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவர்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்” – ஆன்ஸ்டிஸ் ஜஸ்டின் (பூர்வகுடி நிகோபாரிகள் குறித்த மானுடவியலாளர் மற்றும் இந்திய மானுடவியல் ஆய்வுநிறுவனத்தின் முன்னாள் இணை இயக்குநர்)
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
– விக்னேஷ் குமார் கோ
Source:
https://www.survivalinternational.org/documents/ShompenReport
