வேலைப்பளுவிலிருந்தும், நகர வாழ்க்கையின் இரைச்சலிலிருந்தும், கொடிய வெப்பத்திலிருந்தும் சில நாட்கள் விலகி இருக்க வேண்டும் என்றாலே, நம்மில் பலரின் மனதில் முதலில் தோன்றும் இடங்களில் ஒன்று நீலகிரி மலைகள்தான்.
1990-களிலும் 2000த்தின் தொடக்கத்திலும் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி என எங்கு சென்றாலும் பனிமூட்டம் சூழ்ந்த சாலைகள், இதமான குளிர், அமைதியான சூழல் என இயற்கை நம்மை வரவேற்றது. அப்போது சுற்றுலாப் பயணிகள் இன்றைய அளவுக்கு அதிகமாக இல்லை. தங்கும் விடுதிகளும் எண்ணிக்கையில் குறைவாகவே இருந்தன. அன்றைய நீலகிரி, சுற்றுலா மையமாக இருந்ததைவிட இயற்கையின் புகலிடமாகவே எனக்குத் தோன்றியது.
அவற்றைக் கேட்டவுடன் எனக்கும் அங்கு செல்லவேண்டும் என்ற ஆசை தோன்றி பல ஆண்டுகளுக்குப் பிறகு, 2017-ல் அங்கு சென்றபோது, நான் கேட்டு படித்தறிந்தற்கு மாறாக நீலகிரி வேறொரு முகத்தைக் காட்டியது. புதிய கட்டிடங்கள், அதிகரித்திருந்த சுற்றுலா, நிலப்பயன்பாடு மாற்றமடைந்த பல பகுதிகள் என வளர்ச்சியின் தடயங்கள் எங்கும் தென்பட்டன.
2017இல் இருந்து இன்று வரை சமூக ஊடகங்களைத் திறந்தாலே, “யாரும் பார்த்திராத இடங்கள்”, “ரகசிய சுற்றுலாத் தலங்கள்”, “தனித்துவமான தங்கும் விடுதிகள்” என்று எண்ணற்ற பதிவுகள் நம்மை ஈர்க்கின்றன. வளர்ச்சி அவசியம்தான். ஆனால், அது இயற்கையையும் அங்கு வாழும் உயிரினங்களையும் மதிக்கும் வகையில் அமைய வேண்டும். இம்மாற்றங்களின் பின்னால், சுற்றுலாப் பயணிகளாகிய நம்மில் பலர் கவனிக்காத இன்னொரு மாற்றமும் அமைதியாக நடந்துகொண்டிருக்கிறது.
பறவைகளைக் கவனிப்பதிலும், அவற்றைப் பற்றிப் படிப்பதிலும் எனக்கு நீண்டகால ஆர்வம் உண்டு. அண்மையில், நீலகிரியில் கண்ணாடிக் கட்டிடங்களால் பறவைகள் உயிரிழப்பது தொடர்பான ஒரு ஆய்வறிக்கையை படிக்க நேர்ந்தது. ஓங்கில் இயற்கை அறக்கட்டளை ( Ongil Nature Trust) மற்றும் தன்னார்வ உயிரியியல் ஆய்வாளர்கள் & இயற்கையியலாளர்கள் குழு ( Independent Biologist and Naturalist ) இணைந்து நடத்திய ஆய்வ அது. உயிரியியல் ஆய்வாளர் மொய்னுதீன் தலைமையில், சாம்சன், அபினேஷ், ஆசாத் காமில், ரிஷி, யஷ்வந்த், விக்னேஷ் ஆகியோர் இணைந்து ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
அதை வாசித்தபோது, சுற்றுலாப் பயணிகளாக நாம் ரசிக்கும் அதே அழகான கட்டிடங்கள், பறவைகளுக்குக் கண்ணுக்குப் புலப்படாத மரணப் பொறிகளாக மாறி வருகின்றன என்கிற தகவல் என்னைக் கவலையுறச் செய்தது. நீலகிரியைப் பூர்விகமாக கொண்ட பறவைகள், அங்கே தனக்கான ஒரு இடம் உள்ளது என்று ஒரு வாழ்க்கைப் பயணத்தை நடத்துகின்றன. அதேபோல் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பறந்து வரும் வலசைப் பறவைகள்கூட, தலைமுறைகள் கடந்து அதே வழித்தடங்களைப் பின்பற்றி நீலகிரியை வந்தடைகின்றன.
“Glass Traps: Investigating Bird Mortality at Glass-fronted Buildings in the Nilgiris” என்ற தலைப்பில் வெளியான ஆய்வறிக்கை, நீலகிரிப் பகுதியில் கண்ணாடி கட்டிடங்களால் பறவைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து 2024 ஜனவரி முதல் டிசம்பர் வரை ஓராண்டு காலமாக நடத்தப்பட்ட முதல் முறையான ஆய்வாகும்.
காலை (06.00 AM – 12.00 PM), மதியம் (12.00 PM – 04.00 PM), மற்றும் மாலை (04.00 PM – 08.00 PM) ஆகிய நேரங்களில் இந்த ஆய்விற்காக குன்னூர் மற்றும் ஃபாரஸ்ட்டேல் (Forestdale) ஆகிய இரு பகுதிகளில் உள்ள வணிகக் கட்டிடங்கள் கண்காணிக்கப்பட்டன. ஓராண்டில் மட்டும் மொத்தம் 35 கண்ணாடி மோதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இச்சம்பவங்களில்ன் கண்ணாடியில் மோதியதில் 16 பறவைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளன, 18 பறவைகள் படுகாயமடைந்தன. ஒரே ஒரு பறவை மட்டுமே நல்வாய்ப்பாக தப்பித்துப் பறந்துள்ளது.

புகைப்படம்: ஆசாத்
சுற்றுலாப் பயணிகளாகிய நம்மைக் கவரும் வகையில் கட்டப்படும் சமூக ஊடகங்களில் வைரலாகும் நவீன தங்கும் விடுதிகளும் கண்ணாடிக் கட்டிடங்களும்தான் (Reflective glass) பறவைகளின் எமனாக மாறுகின்றன. கட்டிடங்களுக்கு அருகில் மரங்கள், புதர்கள் இருப்பது அல்லது அவற்றின் நிழல்கள் ஜன்னல்களில் விழுவது ஆபத்தை மேலும் கூட்டுகிறது. இக்கண்ணாடிகள் எதிரே இருக்கும் வானத்தையும், அழகான சோலைக்காடுகளையும் அப்படியே பிரதிபலிப்பதால் ஏமாறும் பறவைகள், அது ஒரு திறந்தவெளி அல்லது காட்டின் தொடர்ச்சி என நினைத்து முழு வேகத்தில் வந்து மோதி விடுகின்றன.
ஏன் இந்த பறவைகள் எளிதாக ஏமாறுகின்றன?
இக்கேள்விக்கான விடை பறவைகளின் பழக்கங்களில் ஒளிந்துள்ளது. நான் பறவைகளைப் பற்றிப் படித்துப் புரிந்துகொண்ட, ஆய்வறிக்கையில் இல்லாத சில சுவாரசியமான, அதே சமயம் வேதனையான விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். பறவைகளின் உணவு தேடும் மற்றும் பறக்கும் தனித்துவமான பழக்கவழக்கங்களே (Flight and foraging behaviors) அவற்றுக்கு வினையாக முடிகின்றன:
- தரையிலும் புதர்களிலும் வாழும் பறவைகள் (Ground & Understory Foragers): கடந்த பிப்ரவரி மாதம் கொடைக்கானல் சென்றிருந்த பொது நான் மிகவும் ரசித்தது, நீலகிரிக்கு வலசை வரும் அழகான ‘நீலச்சிட்டு’ (Indian Blue Robin). இப்பறவை மே முதல் ஜூலை மாதம் வரை இமயமலைப் பகுதியில் இனப்பெருக்கம் செய்கிறது, மற்ற மாதங்களில் தென்னிந்தியா மற்றும் இலங்கைக்கு வலசை வருகிறது. மலைகள் மற்றும் நம் ஊர் அருகில் எப்பொழுதும் காணப்படும் மணிப்புறா (Spotted Dove).

இந்த ஆய்வறிக்கையில் உள்ள இவ்விரண்டு பறவைகளும் தரைக்கு அருகிலுள்ள புதர்களில் பூச்சிகளையும் விதைகளையும் இரையாக உட்கொண்டு வாழ்பவை. மனித நடமாட்டத்தைக் கண்டோ அல்லது பிற எதிரிகளாலோ இவை திடீரென மிரட்டப்படும்போது, செங்குத்தாக மேலே பறக்காமல், தரைக்கு இணையாக நேர்கோட்டில் மிக வேகமாகப் பறந்து தப்பிக்க முயலும். அப்போது கட்டிடங்களின் கீழ் தளக் கண்ணாடிகளில் பிரதிபலிக்கும் அடர்ந்த புதர்களை மறைவிடம் என நம்பி, முழு வேகத்தில் மோதி விடுகின்றன. (இந்த ஆய்வில் வலசை வரும் பறவைகளில் ‘நீலச்சிட்டு( indian Blue Robin )’ தான் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.)
- மர உச்சிப் பறவைகள் (Canopy Foragers): நீங்கள் நமது காடுகளில் எப்பொழுதும் சாதாரணமாகக் கேட்கும் ஒரு பறவையின் குரல் என்றால் அது ‘சின்னக் குக்குறுவான் (வெண் கன்னக் குக்குறுவான்’ (White-cheeked Barbet) ஆகத்தான் இருக்க முடியும். மரங்கள் அடர்ந்த சோலைகள், காடுகள் மற்றும் மலைப்பகுதிகளில் அதிகமாக இவை வாழ்கின்றன.
மேற்குத் தொடர்ச்சி மலைக்கே உரிய, பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் வழங்கப்படும் சிவப்புப் பட்டியலில் அழிய வாய்ப்புள்ள அச்சுறுத்தலுக்குள்ளான நலிவடைந்த இனம்தான் ‘நீலகிரி காட்டுப் புறா’ (Nilgiri Wood Pigeon)
இப்பறவைகள் மரங்களின் உச்சியில் உள்ள பழங்களை உண்பவை. இவை ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குப் பறக்கும்போது நேர்கோட்டில், அதிக விசையுடன் பறக்கும் (Heavy, direct flight) தன்மையைக் கொண்டவை. கட்டிடங்களின் மேல் தளங்களில் உள்ள பெரிய கண்ணாடிகள் வானத்தையும் மரங்களின் உச்சிப் பகுதியையும் பிரதிபலிக்கும் போது, அவை காட்டின் தொடர்ச்சி என்று ஏமாந்து மரண மோதலைச் சந்திக்கின்றன.
- மின்னல் வேக வேட்டைக்காரர்கள் (Flycatchers & Insectivores): காசுமீர ஈப்பிடிப்பான் (Kashmir flycatcher) எனும் பறவை வடமேற்கு இமயமலை மற்றும் காஷ்மீர் பகுதிகளில் கோடை காலத்தில் (மே முதல் ஜூலை வரை) இனப்பெருக்கம் செய்கிறது. குளிர்காலம் தொடங்கியவுடன் (அக்டோபர் வாக்கில்) தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் (குறிப்பாக நீலகிரி, ஊட்டி) மற்றும் இலங்கையின் மத்திய மலைப்பகுதிகளுக்கு இடம்பெயர்கிறது. டிக்கெல்ஸ் புளூ ஃப்ளைகேட்சர் (Tickell’s blue flycatcher) அடர்ந்த காடுகள் மற்றும் தோட்டங்களில் காணப்படும் ஒரு சிறிய, சுறுசுறுப்பான பறவை.

இவ்வகைப் பறவைகள் ஒரு கிளையில் அமர்ந்துகொண்டு, காற்றில் பறக்கும் பூச்சிகளைக் குறிவைத்து மின்னல் வேகத்தில் பாய்ந்து பிடிக்கும் குணம் கொண்டவை. பூச்சிகளைத் துரத்தும்போது இவற்றின் கவனம் முழுவதும் இரையின் மீது மட்டுமே இருப்பதால், கண்ணாடிகளுக்கு அருகே வரும்போது வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மோதி விடுகின்றன.
Glass_traps_Investigating_bird_mortality_at_glass-fronted_buildings_in_the_Nilgiris (1)AIWCயின் ஆய்வில், பெரும்பாலான மோதல்கள் காலை நேரத்திலேயே (Morning – 18 சம்பவங்கள்) நிகழ்ந்துள்ளன என்பதும், பனிமூட்டமும் மழையும் அதிகம் உள்ள பருவமழைக் காலத்திலேயே அதிகபட்ச பாதிப்புகள் (15 சம்பவங்கள்) ஏற்பட்டுள்ளன என்பதும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுள்ள அனைவரும் கவனிக்க வேண்டிய தரவுகள்.
மேலும் ஆய்வில் குறிப்பிடப்படாமல் உள்ள மோதல் இரவாடிப்பறவைகளின் மோதல்தான். முன்பு மாலை 5 மணிக்குள்ளயே மலைகளில் இரவாகி அனைவரும் தங்களது வீட்டிற்குள் சென்றுவிடுவார்கள். ஆனால், இப்பொழுது இரவு நேர பயணம், இரவில் அதிக பிரகாசமுள்ள செயற்கை விளக்குகளால் குறிப்பிட்ட பகுதிகள் எப்பொழுதும் வெளிச்சம் கொண்டவையாகவே உள்ளன. இதில் இரவாடிப் பறவைகள் (Nocturnal Birds) திசைமாறி, நகர்ப்புறக் கண்ணாடி கட்டிடங்களில் மோதி பெருமளவில் உயிரிழக்கின்றன என்ற உலகின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும்.
நாமும் நம் கடமையும்
நாம் மலைகளுக்குச் செல்வது தவறில்லை. ஆனால், நாம் தங்கும் அந்த ‘தனித்துவமான விடுதிகள்’ மற்றும் சொகுசுக் கட்டிடங்கள் பல இயற்கை மற்றும் பறவைகளின் வாழ்விடங்களை சிதைத்துக் கட்டப்பட்டவை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. சூழல் எழுத்தாளர் சு. தியடோர் பாஸ்கரன் கூறியது போல நாம் காடுகளை அழித்து பச்சை பாலைவனமாக நமது மலைகளை மாற்றிவிட்டோம். அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் கண்ணாடி கட்டிடங்களில் மோதி, ஒவ்வொரு ஆண்டும் நூறு கோடிக்கும் (1 Billion) அதிகமான பறவைகள் உயிரிழக்கின்றன, இவை இந்தியாவில் மிகக் குறைவு. இவை அதிகரிக்காமல் இருக்க நாம் முயற்சிகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
அத்ற் நேரத்தில் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நடந்து வரும் வழக்கு விசாரனை ஒன்று குறித்தும் ன்ஆன் அறிந்துகொள்வது மிக அவசியம். அவ்வழக்கு பெருநகரங்களில் கண்ணாடி முகப்புகளைக் கொண்ட உயர்மாடி வணிக கட்டிடங்களின் கட்டுமானத்தின் தாக்கம் தொடர்பானது. கண்ணாடி முகப்பு அமைப்பதனால் இயற்கையாக காற்றோட்டம் இல்லாத இக்கட்டிடங்களுக்கு உட்புறத்தில் குளிரூட்டும் சாதனங்களை (ஏர் கண்டிஷனிங் அமைப்புகளை) பொருத்த வேண்டியிருப்பதாலும், இதனால் மின்சார நுகர்வு அதிகரிப்பதாகவும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. இதில் அனைத்து மாநிலங்களும் பதில் மனுத் தாக்கல் செய்ய தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இவ்வழக்கின் தீர்ப்பு கண்ணாடி முகப்பு கட்டிடங்களின் சூழல் தாக்கத்தைக் குறைக்க நல்ல தீர்வுகளை வழங்கும் என நம்புவோம்.
நீலகிரியைப் பொருத்தவரையில் இச்சிக்கலுக்குப் பெரிய செலவில்லாத எளிய தீர்வுகள் இருப்பதாகவும் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது:
- கட்டிடங்களின் கண்ணாடிகளில் பறவைகளுக்கு மட்டும் தெரியக்கூடிய புற ஊதா எதிரொளிப்புப் படலங்களை (UV-reflective window films) ஒட்டுவது.
- ஜன்னல்களில் வட்ட வடிவ ஸ்டிக்கர்களை (Circular decals) ஒட்டுவது அல்லது வெளிப்புறத் பாதுகாப்புத் திரைகளை (External screens) அமைப்பது.
- கண்ணாடியில் செடி, கொடிகளின் நிழல் விழாதவாறு தாவரங்களைச் சற்றுத் தள்ளி நடுவதன் மூலம் பறவைகளை ஏமாற்றத்தில் இருந்து காப்பது.
இத்தீர்வுகளை நீலகிரியில் இத்தகையைக் கண்ணாடி கட்டிடங்கள்: வைத்திருப்பவர்கள் பின்பற்ற வேண்டும். . மேலும் அடுத்த முறை நாம் நீலகிரிக்கு ஒரு பயணத்தைத் திட்டமிடும்போதும் அல்லது அங்கே தங்குவதற்கு சமூக ஊடகங்களில் ஒரு அழகிய விடுதியைத் தேர்ந்தெடுக்கும்போதும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வுள்ள ஒரு பயணியாக மாறுவோம். நமக்கு அது சில நாட்கள் மட்டுமே நீடிக்கும் ஓர் ஓய்வுப் பயணம் மட்டுமே. ஆனால், அம்மலைகளில் வாழும் பறவைகளுக்கு அதுவே ஆயுள் முழுவதற்குமான வீடு.
அடுத்த முறை நீலகிரியில் பனிமூட்டம் விலகும் ஒரு காலையில், ஒரு சிறிய பறவை சோலைக்காட்டிலிருந்து பறந்து வந்து கண்ணாடியில் பிரதிபலிக்கும் வானத்தை நம்பி மோதாமல், தனது பயணத்தைத் தொடர வேண்டும். அந்தப் பொறுப்பு நம்மிடமும் இருக்கிறது.
பா. சக்திவேல் [email protected]

Thank you so much. Good article
Good article, Every one must read this article and have to contribute oneself to avoid the obstacles which was created by the human beings to the life of the wonderful Birds in the Nilgiris.