மேற்குத் தொடர்ச்சி மலையில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக இன்று வெளியான புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டிற்கான புலிகள் கணக்கெடுப்பு தொடர்பான Status of Tigers in India 2022. அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி இன்று கர்நாடகாவில் வெளியிட்டார். 2018ல் 2967ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது 3167 ஆக உயர்ந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இவ்வறிக்கையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் புலிகளின் எண்ணிக்கையின் தற்போது நிலை பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. 6 மாநிலங்களில் 1600 கி.மீ. தூரத்திற்கு 1,40,000Km2 பரப்பளவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் 12 புலிகள் காப்பகங்கள், 20 தேசிய பூங்காக்கள், 68 காட்டுயிர் சரணாலயங்கள் உள்ளன. இதில் களி, பத்ரா, நாகர்ஹோளே, பந்திப்பூர், பிலிகிரி ரங்கநாதசுவாமி கோயில், முதுமலை, சத்தியமங்கலம், ஆனைமலை, பெரியார், பரம்பிக்குளம், திருவில்லிபுத்தூர்-மேகமலை, களக்காடு-முண்டந்துறை ஆகிய இடங்களில் அதிகளவில் புலிகள் காணப்படுகின்றன.
உயிர்ப்பன்மைய முக்கியத்துவம் வாய்ந்த மேற்குத் தொடர்ச்சி மலை யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் காடழிப்பு, வாழிட இழப்பு, காலநிலை மாற்றத்தின் தாக்கம் ஆகியவற்றால் கடும் பாதிப்படைந்து வருகிறது. 2022 கணக்கெடுப்பில் மேற்குத் தொடர்ச்சி மலையில் 400 தொகுதிகளில் 824 புலிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன.
புலிகள் எண்ணிக்கையானது முதுமலை, பெரியார் உள்ளிட்ட புலிகள் காப்பகங்களில் நிலையாகவும் நாகர்ஹோளே, பந்திப்பூர் உள்ளிட்ட காப்பகங்களில் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. ஆனால், சரணாலயம், காப்பகங்கள் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட இடங்களுக்கு வெளியே உள்ள காடுகளில் புலிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.குறிப்பாக வயநாடு மற்றும் பிலிகிரி ரங்கநாதசுவாமி கோயில் காடுகளில் புலிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கர்நாடகாவின் சிர்சி, தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் புலிகள் அற்றுப்போய்விட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது (Locally Extinct – குறிப்பிட்ட பகுதியில் ஒரு உயிரினம் இல்லாமல் போதல்). ஆனால், 7 ஆண்டுகளுக்கு முன்பு பேச்சிப்பாறை அணைப் பகுதியில் ஒரு புலி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டிருந்தது. 2018ல் களியல் காட்டுப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கேமராவிலும் ஒரு புலி தென்பட்டிருந்தது. கன்னியாகுமரி காட்டுயிர் சரணாலயத்தில் பெரும்பான்மையான பகுதி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகமாகவும் இருப்பதால் இங்கு புலிகள் முற்றிலும் அற்றுப்போய்விட்டதாகக் கூறமுடியாது என்கின்றனர் வனத்துறை அதிகாரிகள்.
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மனிதர் – காட்டுயிர் எதிர்கொள்ளல் அதிகரித்து வருவதாகவும் பாதுகாக்கப்பட்ட காடுகளில் அயல்தாவரங்கள் அதிக பரப்பளவில் பரவியிருப்பதும் புலிகளின் வாழிடத்தைப் பாதிப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
– செய்திப் பிரிவு.