பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கானக் கொள்கை அளவிலான ஒப்புதலை ஒன்றிய விமானப் போக்குவரத்து அமைச்சகம் கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி தமிழ்நாடு அரசுக்கு வழங்கியிருந்தது.
இவ்வனுமதி வழங்குவது தொடர்பாக 12.03.2025 அன்று ஒன்றிய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் Steering Committee கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் பிரத்யேக ஆவணங்களைப் பூவுலகின் நண்பர்கள் ஒன்றிய அரசிடமிருந்து பெற்றுள்ளது. ஆவணங்களின் அடிப்படையில் பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம், பொருளாதார விவகாரங்களுக்கான துறை, விமான நிலையங்களுக்கான பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம், இந்திய வானிலைத் ஆய்வுத்துறை, வருவாய்த் துறை, ஒன்றிய அரசு
பாதுகாப்பு இயக்குனரகம், நிதி ஆயோக், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட ஒன்றிய அரசின் அனைத்துத் துறைகளும் முதற்கட்ட இசைவளித்துள்ளதை அறிந்து கொள்ள முடிகிறது.
Steering Committee கூட்டத்தில் சில நிபந்தனைகளையும் கோரிக்கைகளையும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) தமிழ்நாடு அரசிடம் வைத்துள்ளது. அவை,
- சென்னை விமான நிலையம் ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகளைக் கையாளும் நிலையை அடையும் முன்பே பரந்தூர் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்துவிட்டால் 3.5 கோடி பயணிகள் என்கிற நிலையை எட்டும் வரையிலான காலத்திற்கு இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு தமிழ்நாடு அரசு இழப்பீட்டுத் தொகையைச் செலுத்த வேண்டும்.
- சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் கட்டுவதற்கான உரிமையைத் தமிழ்நாடு அரசு இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்கு வழங்கக் கோரிக்கை.
- சென்னை விமான நிலையத்தில் உள்ள சரக்குகள் கையாளும் பகுதியை விரிவாக்கம் செய்ய பள்ளிகள், குடியிருப்புகளைக் கொண்டிருக்கும் 90 ஏக்கர் பரப்பளவிலான பகுதியைத் தமிழ்நாடு அரசு இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்கு வழங்கக் கோரிக்கை.
இதில், இழப்பீடு தொடர்பான நிபந்தனையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
பரந்தூர் விமான நிலையத்துக்குப் பதிலாக தற்போதைய சென்னை விமான நிலையத்தை அதன் அருகிலேயே உள்ள 300 ஏக்கர் நிலத்தைப் கையகப்படுத்தி விரிவுபடுத்தலாம் என பூவுலகின் நண்பர்கள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அந்நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான செலவு அதிகம் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் அப்போதைய தொழிற்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால், அந்நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு ஆகும் செலவைக் காட்டிலும் அதிகமான செலவை சென்னை முதல் பரந்தூர் வரையிலான மெட்ரோ தடம் அமைப்பதற்குத் தமிழ்நாடு அரசு செலவிடவுள்ளது. தற்போது கூடுதலாக சென்னை விமான நிலையத்திற்கு அருகில் 90 ஏக்கர் குடியிருப்பு, பள்ளிகள் கொண்ட இடத்தையும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் கோருகிறது.
வேளாண் நிலங்களையும், நீர்நிலைகளையும் அழித்து அதிக செலவில் பரந்தூரில் விமான நிலையம் அமைத்துவிட்டு, சென்னை விமான நிலையத்துக்கு அருகில் உள்ள 90 ஏக்கர் நிலத்தையும் இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு வழங்குவதில் எவ்வித அர்த்தமும் இல்லை.
மேலும், நமக்குக் கிடைத்த ஆவணங்களின்படி, Steering Committee கூட்டத்தில் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதால் ஏற்படும் வெள்ள அபாயம் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. அதில் விமான நிலையப் பகுதிகளில் நீர்தேங்குவது மற்றும் வெள்ளம் ஏற்படுவதைக் கருத்தில்கொண்டு இதுகுறித்து ஆராய உயர்மட்டக் குழு ஏற்படுத்தப்பட்டதாகத் தமிழ்நாடு அரசு Steering Committee கூட்டத்தில் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வானது வடிகால்கள் அமைப்பது ஏற்கெனவே இருக்கும் வாய்க்கால்களை மாற்றியமைப்பது உள்ளிட்ட பணிகள் குறித்தானது. உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சில பணிகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விமான நிலையத்திற்கான கொள்கை அனுமதி வழங்கும் கூட்டத்தில் வெள்ள அபாயம் குறித்து இவ்வளவும் விரிவாக விவாதிக்கப்பட்டிருப்பது தொடர்ந்து பூவுலகின் நண்பர்கள் எழுப்பி வரும் விமர்சனங்களை உண்மையாக்குவதாகவே உள்ளது. ஆனால், இந்நீர்நிலைகளை மாற்றியமைப்பது தொடர்பாக அதைப் பயன்படுத்தி வரும் மக்களிடமோ நீரியல் நிபுணர்களிடமோ கருத்தைப் பெறாமல் அரசாங்கமாகவே முடிவுகளை எடுப்பது உகந்ததல்ல. திரு.மச்சேந்திரநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை பொதுவெளியில் வைத்து அனைத்துத் தரப்புக் கருத்துகளையும் அறிய வேண்டியது அரசின் கடமையாகும்.
ஆனால், இதற்கு மாறாக தொடர்ந்து திரு. மச்சேந்திரநாதன் குழு அறிக்கை விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை இன்றி தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கூட இவ்வறிக்கையைத் தர அரசு மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
விமான நிலையங்களுக்கான பொருளாதார ஒழுங்குமுறை ஆணையமானது (Airports Economic Regulatory Authority of India (AERA)), பரந்தூர் புதிய விமான நிலையத்தின் பயணிகளைக் கையாளும் “கட்டிடக் கொள்ளவையும்” மாற்றியமைக்கச் சொல்லியுள்ளது. குறிப்பாகக் கட்டம் ஒன்றில் (Phase 1) 2 கோடி பயணிகளைக் கையாளும் வகையில் 3,51,830 sqm பரப்பில் விமான நிலையம் அமைக்க திட்டமிட்டிருப்பது அதிகமானது மற்றும் இது பன்னாட்டு விமான நிலைய மேம்பாட்டு வழிகாட்டுதல்களுக்கு (IMG / IATA ADRM) மாறானது எனத் தெரிவித்துள்ளது.
தற்போது சென்னையில் செயல்பட்டு வரும் விமான நிலையமே அதன் முழு திறனுக்கு மாறாக குறைவான திறனில்தான் இயக்கப்பட்டு வருகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்தினாலே அதிக விமானங்களையும் பயணிகளையும் திறம்படக் கையாள முடியும் என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்நிலையில் தேவைக்கு அதிகமான மடங்கில் புதிய விமான நிலையத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு தயாரித்து வருவது விமான நிலையங்களுக்கான பொருளாதார ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்துகளிலிருந்துத் தெரிய வருகிறது.
மேற்கண்ட விஷயங்களின் அடிப்படையில் கீழ்காணும் கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசுக்குப் பூவுலகின் நண்பர்கள் சார்பில் முன்வைக்கிறோம்.
- தமிழ்நாடு அரசு உடனடியாக திரு. மச்சேந்திரநாதன் குழு அறிக்கையை பொதுவில் வெளியிட வேண்டும்.
- இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் நிபந்தனைகளில் ஒன்றான சென்னை விமான நிலையத்திற்கு அருகில் 90 ஏக்கர் நிலத்தை ஒன்றிய அரசுக்கு வழங்குவது குறித்த தனது நிலைப்பாட்டைத் தமிழ்நாடு அரசு தெரிவிக்க வேண்டும்.
- தொடர்ந்து போராடி வரும் மக்களின் கோரிக்கையைத் தமிழ்நாடு அரசு பரிசீலித்து இத்திட்டத்தைக் கைவிட வேண்டும்.