காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதா மீதான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை அரசிடம் சமர்ப்பிப்பு

jairam ramesh

2021ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதாவில் பல்வேறு விதிகளை மாற்றியமைக்கக்கோரி அறிவியல் தொழில் நுட்பம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் காட்டு விலங்குகள், பறவைகள் தாவரங்கள் ஆகியவற்றை பாதுகாக்கவும், அவற்றின் வாழிட மேலாண்மைக்கும், அவை வேட்டையாடப்படுவதையும், கடத்தப்படுவதையும் தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் காட்டுயிர் பாதுகாப்பு சட்டம். 1972ஆம் ஆண்டு இந்த சட்டம் இயற்றப்பட்டது. பின்னாட்களில் சிலமுறை இச்சட்டம் திருத்தப்பட்டது. கடைசியாக இச்சட்டம் 2006ம் ஆண்டில் திருத்தப்பட்டது.

இச்சட்டத்தில் புதிதாக பல்வேறு திருத்தங்களை கொண்டு வர நினைத்த ஒன்றிய அரசு காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத்திருத்த மசோதா 2021ஐ கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி மக்களவையில் அறிமுகம் செய்தது. பொதுமக்களிடையே உரிய கலந்துரையாடல் மேற்கொள்ளாமல் திடீரென அறிமுகம் செய்யப்பட்ட இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் டிசம்பர் 25ஆம் தேதி இம்மசோதாவானது அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர்  ஜெயராம் ரமேஷ் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு இந்தச் சட்டத் திருத்த மசோதா மீது பொதுமக்கள் தஙகள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு காட்டுயிர் பாதுகாப்பு அமைப்புகளும், காட்டுயிர் ஆர்வலர்களும், இந்திய வனப்பணி அதிகாரிகளும் தங்களது கருத்துகளை வழங்கியிருந்தனர். இக்கருத்துகள் அனைத்தையும் தொகுத்த நாடாளுமன்ற நிலைக்குழு தனது இறுது அறிக்கையை 21.04.2022 அன்று மாநிலங்களவைத் தலைவரிடம் சமர்ப்பித்துள்ளது.

இந்த மசோதா மேற்கொள்ள நினைக்கும் 6 முக்கியமான நோக்கங்கள் குறித்து நிலைக்குழு தனது நிலைப்பாட்டை விரிவாகக் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக CITES ( Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) எனப்படும்  காட்டுயிர்கள் மற்றும் தாவரங்களில் ஆபத்தான நிலையில் உள்ள இனங்களைப் பாதிக்காத வகையில் வர்த்தகம் செய்வதை உறுதி செய்வதற்கான பன்னாட்டு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது, பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் மேலாண்மையை மேம்படுத்துதல், கைப்பற்றப்பட்ட மற்றும் ஒப்படைக்கப்பட்ட காட்டுயிர்களின் பாதுகாப்பை மற்றும் கவனிப்பை மேம்படுத்துதல், அபராதத் தொகையை அதிகரிப்பதன் மூலம் குற்றங்களைக் குறைக்க முனைதல், அட்டவணைப்படுத்தப்பட்ட உயிரினங்களின் பட்டியகை மறு வரையறை செய்தல் தொடர்பாகவும் மசோதாவில் இடம்பெறாத மனிதர் – விலங்குகள் எதிர்கொள்ளல் மற்றும் காட்டுயிர் அறிவியல் பார்வை குறித்தும் நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையின் வாயிலாக கருத்துகளைத் தெரிவித்துள்ளது.

முதலாவதாக CITES ஒப்பந்தத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என்கிற முடிவுடன்  ஒத்துப்போவதாக நிலைக்குழு தெரிவித்துள்ளது. CITES ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமே உயிர்ப்பன்மயத்தின் வளங்குன்றா பயன்பாடுதான் என்பதால் உயிர்ப்பன்மயச் சட்டம் 2002ல் தான் திருத்தம் கொண்டு வந்து CITES ஒப்பந்தத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டுமே தவிர காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியதில்லை என நிலைக்குழு தெரிவித்துள்ளது.

ஒருவேளை ,CITES ஒப்பந்தத்தை அமல்படுத்த காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத்தை திருத்துவது மிக அவசியம் என ஒன்றிய அரசு கருதினாலும் அதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஏற்புடையதாக இல்லை என நிலைக்குழு தெரிவித்துள்ளது.  CITES ஒப்பந்தத்திற்கென தனிச் சட்டம் இயற்றுவது அல்லது தற்போது முன்மொழியப்பட்டதுபோல இதற்கென தனி பகுதியை சட்டத்தில் இணைக்காமல் ஏற்கனவே உள்ள சட்டத்தின் பிரிவுகள் 2(5), 2 (18A), 2 (19), 2 (27), 2 (36), 3(1), 3(2), 3A, 9, 40, 40A(1), 41(1b), 48 (bii), 49A, 51(1A), 51A and 57ல் திருத்தம் கொண்டு வருவதன் மூலம் CITES ஒப்பந்தத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியும் என்பதால் இதுகுறித்து ஒன்றிய அரசு சிந்தித்து முடிவெடுக்க வேண்டுமென நிலைக்குழு கோரியுள்ளது.

இந்தியப் பூர்வீக மரபணு பன்மயத்தை பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களுடன் நிலைக்குழு உடன்படுவதாகவும் அதேவேளையில் இந்தியாவின் எல்லைக்குள்ளாகவே ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த உயிரினம் வேறோரு பகுதிக்கு அந்நிய உயிரினமாக இருக்கும் என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வருவது மட்டும் அந்நிய உயிரினமாகாது என்பதையும் உள்நாட்டிற்குள்ளாகவே ஒவ்வொரு இடம் சார்ந்து அந்நிய உயிரினங்களை வகைப்படுத்த வேண்டும் என நிலைக்குழு தெரிவித்துள்ளது. எனவே அந்நிய வகை உயிரினங்களை மதிப்பிடுவதில், பட்டியலிடுவதிலும் மிகவும் ஆழமான அறிவியல் அடிப்படையிலான வெளிப்படையான தேர்வு நடைமுறையைக் கையாள வேண்டும் என நிலைக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் உள்ளூர் வாசிகளின் குடிநீர்த்தேவை மற்றும் வீட்டுப் பயன்பாட்டிற்காக நீரை பயன்படுத்துவதற்கு கொண்டு வரப்பட்ட திருத்தத்தில் கூடுதல் விளக்கங்கள் தேவைப்படுவதாக நிலைக்குழு தெரிவித்துள்ளது. பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் எந்தத் தேவைக்காக நீர் சார்ந்த நடவடிக்கைகள் அரசு மற்றும் தனியார் நிலத்தில் அனுமதிக்கப்படும் என்பது தொடர்பாக தெளிவான விதிகள் வேண்டும் என நிலைக்குழு கூறியுள்ளது. அதேபோல மாநில காட்டுயிர் வாரியத்திற்கு ஒரு நிலைக்குழுவை (Standing Committee) உருவாக்க வேண்டும் என்கிற திருத்தம் குறித்து சூழல் ஆர்வலர்களிடையே எழுந்த எதிர்ப்பை  நாடாளுமனற நிலைக்குழு தனது அறிக்கையில் எதிரொலித்துள்ளது. இப்படி மாநில வாரியங்களுக்கு நிலைக்குழு ஒன்றை ஏற்படுத்துகையில் 12 பேருக்கு மிகாமல் அந்த இடங்களில் அரசு அதிகாரிகள் மட்டுமே இடம்பெறுவார்கள். இதனால் மாநில காட்டுயிர் வாரியத்தின் சுதந்திரம் பறிக்கப்படுவதோடு மட்டுமில்லாமல் திட்டங்களுக்கு வேகமாக அனுமதி கொடுக்கக் கூடிய தலையாட்டி பொம்மை போல வாரியம் மாறிவிடும் என நிலைக்குழு தெரிவித்துள்ளது.

காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடைபெறும் குற்றச் செயல்களுக்காக விதிக்கப்படும் அபராதத்தொகையானது பொது விதிமீறலுக்கு 25 ஆயிரத்திலிருந்து 1 லட்சமாகவும், பாதுகாக்கப்பட்ட விலங்குகள் தொடர்பான குற்றங்களுக்கு குறைந்தது ரூ. 10 ஆயிரத்திலிருந்து குறைந்தது ரூ. 25 ஆயிரமாகவும் உயர்த்தும் வகையில் திருத்தம் கொண்டு வரப்பட்டிருந்தது. இதை வரவேற்பதாகக் கூறிய நிலைக்குழு அதேநேரத்தில் தெரிந்தே நிகழும் குற்றங்களுக்கும் தெரியாமல் பிழையாக நிகழும் விதிமீறல்களையும் ஒரே மாதிரி அணுகக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது. குறிப்பாகக் கல்வி மற்றும் அறிவியல் ஆய்வுகளுக்காக வழங்கப்படும் அனுமதிகளில் நடைபெறும் பிழையான விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கலாம் ஆனால், சிறைத் தண்டனை அவசியமில்லை என நிலைக்குழு தெரிவித்துள்ளது.

காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத்தின் படி பாதுகாக்கப்பட்ட அட்டவணை பட்டியலின எண்ணிக்கையை ஆறிலிருந்து மூன்றாக குறைத்தது மற்றும் பட்டியலில் சில உயிரினங்கள் விடுபட்டுள்ளதையும் முதல் அட்டவணையில் இருக்க வேண்டிய உயிரினங்கள் இரண்டு அல்லது மூன்றாவது பட்டியலில் இடம்பெற்றுள்ளது பற்றியும் தனது கவலையை பதிவு செய்துள்ள நிலைக்குழு இத்திருத்தங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளது.

மேலும் மனிதர் – காட்டுயிர் எதிர்கொள்ளல் சம்பவங்களை வேட்டைக்கு நிகரான சிக்கலாகக் கருத வேண்டும் எனவும் இப்படியான சம்பவங்கள் நிகழும்போது ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை சமாளிக்க காவல்துறை அதிகாரிகளை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட யோசனைகளை புதிய திருத்தங்களாக காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத்தில் இணைக்க வேண்டும் எனவும் நிலைக்குழு தெரிவித்துள்ளது.

காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் 1972 இயற்றப்பட்டு 50 ஆண்டுகள் ஆன நிலையில் காட்டுயிர் மேலாண்மை அறிவியலில் இந்திய நிறுவனங்களும் தனி நபர்களும் உலக அளவில் மிக முக்கியமான உயர்ந்த நிலையை அடைந்துள்ளன என்று பாராட்டியுள்ள நிலைக்குழு, காட்டுயிர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை மேற்கொள்ள நமக்கிருக்கும் கட்டமைப்புகளை இன்னும் அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளது. டேராடூனில் அமைந்துள்ள இந்திய காட்டுயிர் ஆராய்ச்சி நிறுவனத்தை வலுப்படுத்த கூடுதல் நிதி ஒதுக்குவது உள்ளிட்ட விஷயங்களையும் அரசு சிந்திக்க வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.

  • சதீஷ் லெட்சுமணன்
WP Parliament committee part 1

 

WP Parliament committee part 2

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments