தொழிற்திட்டங்களுக்கும், கட்டுமானங்களுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் முன்னர் காலநிலை மாற்ற தாக்க ஆய்வை கட்டாயப்படுத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் மனுத்தாக்கல் செய்திருந்தது. இம்மனு மீது ஒன்றிய அரசு 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புவி வெப்பமயமாதலால் உந்தப்பட்ட காலநிலை மாற்றத்தால் ஏற்படும் புயல், வெள்ளம், பெருமழை, வறட்சி, வெப்ப அலைகள், காட்டுத்தீ, நிலச்சரிவு, இடி-மின்னல் தாக்குதல் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளின் எண்ணிக்கையும் தீவிரமும் நாளுக்கு நாள் உலகளவில் அதிகரித்து வருகிறது. இனி இயல்பான வானிலையே எங்கும் கிடையாது என்கிற அளவுக்கு காலநிலை மாற்றமடைந்துள்ளது.
புவியின் சராசரி வெப்ப நிலையை தொழிற்புரட்சி காலத்திற்கு முந்தைய சராசரி வெப்பநிலையைவிட 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மேல் உயராமல் தடுக்கவில்லை என்றால் மீண்டும் சரிசெய்யவே முடியாத பாதிப்புகளை உலகம் சந்திக்கும் என காலநிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். 2030ஆம் ஆண்டுக்குள் பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வை 2019ஆம் ஆண்டு இருந்த அளவிலிருந்து 43% குறைக்காவிட்டால் புவியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் உயர்ந்துவிடும் என IPCC தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் தொடங்கப்படும் அல்லது ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்துத் தொழிற்திட்டங்களையும் கட்டுமானங்களையும் காலநிலை மாற்றம் எனும் கண்ணாடி வழியே பார்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் கோ.சுந்தர்ராஜன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகள் அல்லது வளர்ச்சி திட்டங்களைத் தொடங்க வேண்டுமென்றால் சுற்றுச்சூழல் சட்டம் 1986ன் கீழ் அனுமதி பெற வேண்டும். ஒரு தொழிற்சாலைக்கோ, திட்டத்திற்கோ சுற்றுச்சூழல் அனுமதி வாங்க வேண்டும் என்றால் அந்தத் திட்டம் சுற்றுச்சூழலின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை ஆராய்ந்து அதை அறிக்கையாக அரசுக்கு அந்த நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும்.
இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் உங்கள் குடியிருப்புப் பகுதிக்கு அருகே ஒரு ரசாயன ஆலை கட்டப்படவிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த தொழிற்சாலை அமையவுள்ள இடம், பரப்பளவு, அதிலிருந்து வெளியேறும் கழிவுகளின் அளவு மற்றும் கழிவின் தன்மை, அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள், அருகாமையில் வசிக்கும் மக்களின் உடல்நிலையில் அது ஏற்படுத்தப் போகும் பாதிப்புகள், மக்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள் இவற்றோடு சூழலியல் பாதிப்புகளைக் களைய சூழலியல் மேலாண்மைத் திட்டம் (EMP-Environmental Management Plan), பாதிப்புகளை குறைக்க தணிப்பு நடவடிக்கைகள் (Mitigation Measures), போன்றவற்றை விரிவான ஆய்வு செய்த பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனம் தனது சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
அரசு சார்பில் அமைக்கப்பெற்ற நிபுணர் குழு அதை ஆய்வு செய்து சுற்றுச்சூழலுக்கு ஆபத்து இல்லாத திட்டமாக இருப்பின் அனுமதி வழங்கவோ, அல்லது நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கவோ, இல்லாத பட்சத்தில் அனுமதி மறுக்கவோ செய்யும். இதுவே தற்போது இருக்கும் நடைமுறை.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திராசூட் மற்றும் நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஷ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு மார்ச் 21, 2024ல் MK Ranjitsinh & Ors. v Union of India & Ors. (Writ Petition (Civil) No.838 of 2019) எனும் வழக்கில் பிறப்பித்த உத்தரவில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்தும் அரசியலமைப்பின் பிரிவு 14 மற்றும் உயிருக்கும் உடல்சார் உரிமைக்கும் பாதுகாப்பு வழங்கும் அரசியலமைப்பின் பிரிவு 21 ஆகிய இரண்டின் அடிப்படையில் காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளில் இருந்து விடுபட அனைவருக்கும் உரிமை இருப்பதாகக் கூறியுள்ளது.
இதனடிப்படையில் பார்த்தால் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2006ல் ஒரு தொழிற் திட்டத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு எப்படித் தயாரிக்க வேண்டும் என்பதை வரையறுக்கும் பிரிவு 7 (II) Scoping என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் மற்றும் 21க்கு எதிரானதாகும். ஏனெனில் ஒரு திட்டத்துக்கான சுற்றுச்சூழல் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை ஆய்வு செய்வதை வரையறுக்கும் அப்பிரிவு 7 (II)ல் காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்தும் ஆய்வு செய்ய வலியுறுத்தும் வார்த்தைகள் இடம்பெறவில்லை.
சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து ஆய்வு செய்யும்போது ஒரு தொழிற் திட்டத்தின் கட்டுமானம், செயல்பாடு ஆகியவற்றினால் காலநிலையில் அது ஏற்படுத்தும் தாக்கம் குறிப்பாக அத்திட்டத்தின் கட்டுமானம் தொடங்கி ஆயுட்காலம் முடியும் வரையில் ஏற்படும் கார்பன் வளித்தடம், பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம், கடல்மட்ட உயர்வு, கடலரிப்பின் வேகத்தில் ஏற்படும் மாற்றம், வெப்பநிலை உயர்வு போன்றவற்றையும் மதிப்பீடு செய்வது அவசியமாகும். ஒரு திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கு முன்னர் காலநிலை மாற்றம் குறித்த ஆய்வு மேற்கொள்வதை கட்டாயமாக்க வேண்டும். அதனை உறுதிப்படுத்தும் வகையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2006ன் பிரிவு 7 (II) இல்லாதது குறித்து இம்மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையில் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 14 மற்றும் 21க்கு எதிராக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2006ன் பிரிவு 7 (II) இருப்பதாகவும், ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் குறிப்பிட்ட அப்பிரிவில் காலநிலை மாற்றத்தையும் முக்கிய சுற்றுச்சூழல் காரணியாக சேர்க்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இம்மனுவானது 09.07.2024 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பூவுலகின் நண்பர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் மற்றும் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் ஆகியோர் ஆஜரானார்கள். மனுவைப் பரிசீலித்த நீதிமன்றம் ஒன்றிய அரசை இதுகுறித்து 2 வாரங்களில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டது.