அனல்மின் நிலையக் காற்று மாசைக் குறைக்க மேலும் 15 ஆண்டுகள் கால நீட்டிப்புக் கேட்கும் மின்சாரத் துறை

ennore-north-chennai-tamil-nadu-260nw-1218538411

அனல் மின் நிலையங்களில் இருந்து வரும் காற்று மாசினைக் கட்டுப்படுத்தும் பொருட்டு 2015ம் ஆண்டு அனல்மின் நிலையங்களுக்கான புதிய மாசுக் கட்டுப்பாடு விதிகளை ஒன்றியச் சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்தது. புதிய விதிகளின் படி அனல் மின் நிலையங்களில் FGD(Flue Gas Desulfurizer) எனப்படும் காற்று மாசு கட்டுப்படுத்தும் கருவி பொருத்தப்பட வேண்டும்.

புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்த முதலில் 2017ம் ஆண்டு வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்து வந்த அறிவிப்புகளின் மூலம் அந்த காலக்கெடு 2024/25 வரை நீட்டிக்கப்பட்டது.இது மட்டுமல்லாமல் அடுத்தடுத்த அறிவிப்புகளில் அனல் மின் நிலைய நிறுவனங்களுக்குச் சாதகமாக நிறைய தளர்வுகள் கொண்டுவரப்பட்டன.

கடந்த 01.04.2021  அன்று வெளியான அறிவிப்பில் அனல் மின் நிலையங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிற்கும் ஏற்றால் போல புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தக் காலநீட்டிப்பும் வழங்கப்பட்டிருந்தது.இதன் படி தலைநகர் டெல்லியில் இருந்து பத்து கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கும் அல்லது 10 இலட்சத்துக்கும் மேல் மக்கள் தொகை உள்ள நகரங்களில் இருக்கும் அனல் மின் நிலையங்களை  A பிரிவிலும்.ஏற்கனவே அதீதக் காற்று மாசினால் அவதிப்படும் மாசடைந்த நகரங்களில் உள்ள அனல் மின் நிலையங்கள் B பிரிவிலும்,நாட்டின் மற்றப் பகுதிகளில் உள்ள அனல் மின் நிலையங்கள் C பிரிவிலும் வரையறை செய்யப்பட்டிருந்தன.

இதில் A பிரிவிற்கு 2022 வரையிலும்,  B பிரிவிற்கு 2023 வரையிலும்,   C பிரிவிற்கு 2024 வரையிலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் 03.05.2022 அன்று, கொரோனா பொதுமுடக்கம், FGD கருவியின் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாட்டையும் கரணம் காட்டி, C பிரிவின் கீழ் வரும் அனல் மின் நிலையங்களுக்கு 2035 வரை கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் எனஒன்றிய எரிசக்தி அமைச்சகம் கோரியுள்ளது. இந்தக் கோரிக்கையைச் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏற்றுக்கொண்டால் பொது மக்களின் நலன் மற்றும் சுற்றுச்சூழல் நலனில் ஒன்றிய அரசிற்கு எவ்வித அக்கறையும் இல்லை என்றே அர்த்தம்.

இது தொடர்பாக எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள அலுவலகக் குறிப்பில் இதற்கு முன் FGD அமைப்ப்பதற்கு ஒரு மெகா வாட்டுக்கு 0.39 கோடி செலவானது , தற்பொழுது நாடு முழுவதும் நிலவும் தட்டுப்பாட்டின் காரணமாக ஒரு மெகா வாட்டுக்கு FGD அமைப்பதற்கு 1.14 கோடி செலவாவதாகவும் இதனால் கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் FGD பொருத்துவது சிக்கலாகி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் கொரோனா பொதுமுடக்கதின் காரணமாக FGD பொருத்துவதும் அதற்கான திட்டமிடலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் அனைத்து அனல் மின் நிலையங்களுக்கும் FGD  பொருத்துவதற்குக் கூடுதல் இரண்டு ஆண்டுகள் கால அவகாசமும், C பிரிவு அனல் மின் நிலையங்களுக்கு 2035 வரையில் கால அவகாசமும் தேவை எனக் கூறப்பட்டுள்ளது.

2035ம் ஆண்டு வரை இந்த அனல் மின் நிலையங்கள் எல்லாம் காற்றை மாசுபடுத்தப் போகிறது என்றால் இந்த விதி முறைகள் 2015ல் கொண்டு வந்ததற்கான அர்த்தமே இல்லை.2035ம் ஆண்டு வரை அனல் மின் நிலையங்கள் காற்று மாசு கட்டுபாட்டுக் கருவிகள் பொருத்தாமலே செயல் படும் என்றால், காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்த பிரதமர் மோடி க்ளாஸ்கோ காலநிலை மாநாட்டில் கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆவது?

பிரதமரின் பஞ்சமிர்த வாக்குறுதிகளின் படி இந்தியா 2030ம் ஆண்டிற்குள் 50% புதுபிக்கத்தக்க ஆற்றலுக்கு மாற வேண்டும். நாட்டின் 78% அனல் மின் நிலையங்கள் C பிரிவில் தான் உள்ளது. Cபிரிவில் உள்ள அனல் மின் நிலையங்கள் 2035 வரை புதிய விதிமுறைகளை நடைமுறைபடுத்தாது என்றால், நிச்சயம் இந்தியாவின் காலநிலை மாற்ற வாக்குறுதிகள் எதுவும் நிறைவேறப் போவதில்லை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் செயல்பாட்டில் உள்ள 40 அனல் மின் நிலைய அலகுகளில், 16 அனல் மின் நிலைய அலகுகள் C பிரிவில் வரையறை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அனல் மின் நிலையக் காற்று மாசினால் தமிழ்நாடு பாதிப்புக்குள்ளாகிவரும் சூழலில், இந்த 16 அலகுகளும் 2035 வரை இப்படியே காற்று மாசுடன் இயங்கினால் மக்களின் ஆரோக்கியதிற்கு யார் பொறுப்பு?

இந்த அறிவிப்பின் மூலம் அடுத்த 15 வருடங்களுக்கு இந்த அனல் மின் நிலையங்கள் சூழலையும் மக்களின் ஆரோக்கியத்தையும் சீர்குலைக்கத் தான் போகிறது என ஒன்றிய அரசு மறைமுகமாகக் கூறி இருக்கிறது. இவ்வாறு அனல் மின் நிலையங்களின் வசதிக்காக மக்களின் ஆரோக்கியத்தையும் சுற்றுச்சூழலையும் பலியாக்கும் இந்த கால அவகாச நீட்டிப்பினை ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறை நிராகரிக்க  வேண்டும்.

பிரபாகரன் வீர அரசு

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments