நம்பிக்கையளிக்கும் ‘வரையாடு பாதுகாப்புத் திட்டம்’

உலகில், மேற்குத் தொடர்ச்சி மலைகளைத் தவிர்த்து வேறெங்கும் காணக்கிடைக்காத வரையாடுகளைக் காப்பதற்காக ‘Project Nilgiri Tahr’ என்னும் திட்டத்திற்கு, இந்த ஆண்டு பட்ஜெட்டில் 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு. வரையாடுகளைக் காப்பதற்காக முன்மொழியப்படும் இத்திட்டம், சோலைப் புல்வெளிகளைப் பாதுகாத்திட உதவும் என்பதால், இது இயற்கையாளர்கள் மற்றும் சூழல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பைப் பெற்றுள்ளது.

மழைக்காடுகள், புல்வெளிகள், அதற்கே உரிய உயிரினங்கள், ஆங்காங்கே உயிர்ந்தெழும் ஊற்றுகள், ஈரநிலங்கள் போன்ற பிரம்மிப்புகளைக் கொண்டு, இந்தியாவின் தென்-மேற்கு எல்லைக்கு எழில் சேர்த்து நிற்கிறது மேற்குத் தொடர்ச்சி மலை. இமயமலையைக் காட்டிலும் பழமை வாய்ந்த இம்மலை, உலகின் முதல் 8 மிகச் செழிப்பான உயிர்பன்மயப் பகுதிகளுள் (hottest biodiversity hotspots) ஒன்றாக உள்ளது. இது தனித்துவமான பல்லாயிரத் தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் வாழ்விடம் என்பது யாவரும் அறிந்த உண்மை. குறிப்பாக, மரப்பொந்தில் அடை காத்துக்கொண்டிருக்கும் பேடைக்கு உணவு சேமித்துக்கொண்டு கானகத்தினூடே பிரம்மாண்டமாகப் பறந்து செல்லும் மலபார் இருவாச்சிகள் (Malabar Grey Hornbill), சிங்கம் போன்ற பிடரியைக் கொண்ட சோலை மந்திகள் (Lion Tailed Macaque), இராகங்களால் கவர்ந்திழுக்கும் சோலைக்கிளிகள் (Nilgiri Blue Robin) என்று நூற்றுக்கணக்கான விலங்கினங்களும், சுமார் 1500 தாவர இனங்களும் மேற்குத்தொடர்ச்சி மலையில் மட்டுமே வாழ்ந்து வருபவை. இவற்றை உலகில் வேறெந்த இடத்திலும் காணமுடியாது. இப்படிக், குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டுமே வாழும் உயிரினங்களை Endemic Species என்பர்.

செங்குத்தான மலைச்சரிவுகளிலும், பாறைகளிலும் புவி ஈர்ப்பு சக்தியைப் பொருட்படுத்தாது அங்கும் இங்கும் புற்களை மேய்ந்து ஓடிக்கொண்டிருக்கும் வரையாடு கூட, மேற்குத் தொடர்ச்சி மலையை மட்டுமே புகலிடமாகக் கொண்டுள்ள ஒரு endemic உயிரினமே. மேற்குத் தொடர்ச்சி மலையின் உயர்ந்த பகுதிகளில் உள்ள சோலைப் புல்வெளிகளே (Montane Shola Grassland) இவற்றின் வாழ்விடம். யானைகளையும், குரங்குகளையும் போலச் சமூகமாக வாழும் இவை, ஒரு காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் பல்வேறு இடங்களில் பரவி இருந்ததாக நம்பப்படுகின்றது. இன்று தமிழக-கேரள எல்லையில் வெறும் 5% நிலப்பரப்பில் மட்டுமே காணப்படும் இவற்றின் எண்ணிக்கை வெறும் 3122 ஆகக் குறைந்துள்ளது. அழிவின் விளிம்பில் இருக்கக்கூடிய உயிரினமான (Endangered species) வரையாடுகளைக் காத்திடும் பொருட்டு,  வன உயிர் பாதுகாப்புச் சட்டம் பட்டியல் I இன் கீழ் வரையாடு பாதுகாக்கப்பட்ட உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ளது (Protected species under Schedule I).

[முகூர்த்தி மற்றும் எரவிகுளம் தேசியப் பூங்காக்கள் வரையாடுகளைக் காணலாம்]

வரையாட்டின் சிறப்பம்சம்

1850 களில், ஆடுகளைப் பற்றின ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த பிரிட்டன் உயிரியல் ஆய்வாளர் ஜான் எட்வர்டு க்ரே(John Edward Gray) என்பவர் ‘வரையாடு’ என்ற தமிழ் பெயரைத் தழுவி ஆங்கிலத்தில் இவற்றை ‘வரையடோஎன்று அவரது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். வரை என்பதன் பொருள் ஆங்கிலத்தில் செங்குத்தான மலை (cliff) என்பதாகும். அக்காலத்தில், இதற்கு வேறு சில பெயர்கள் இருந்த போதும், செங்குத்தான மலை உச்சிகளில் சுலபமாக நடமாடும் தன்மையுடையதால் ‘வரையாடு’ என்னும் பெயரை அவர் தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியம் இல்லை. இதற்கு வருடை என்ற மற்றொரு தமிழ் பெயரும் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பொதுவாகக், கால்நடைகளான ஆடுகள் கூட, மலைகளிலும், சரிவான பாறைகளிலும் சுலபமாக ஏறுவதை நாம் கண்டிருப்போம். ஆனால் வரையாட்டை போன்ற மலையாடுகள், சற்றே சுவாரசியம் மிகுந்தவை. யாரும் அடைய முடியாத உயர்ந்த மலை உச்சிகள், செங்குத்தான பிடிப்பே இல்லாத பாறைகள் போன்றவற்றில் வளரக் கூடிய புற்கள், செடிகளை உண்ணவும், பாறைகளில் அவற்றுக்கு தேவையான தாதுக்களை உட்கொள்ளவும் (salt licking) பயன்படும் வகையில் இவற்றின் கால்களும், குளம்புகளும் பரிணமித்துள்ளன; தங்கள் வாழ்நாட்களில், தங்களுக்கு ஏதுவான பாதைகளை இவை  பழகிக்கொள்கின்றன.

(மான், ஆடு, யானை போன்ற விலங்கினங்கள் அவற்றின் உடல் செயல்பாட்டிற்கு தேவையான தாதுச் சத்துக்களை, நீரோட்டங்களின் ஓரத்திலுள்ள பாறைகளை நக்குவதன் மூலம் பெற்றுக்கொள்கின்றன. இது Salt licking எனப்படும்)

தென் இந்தியாவில் உள்ள ஒரே வன ஆட்டு வகை வரையாடுகள் (Nilgiritragus hylocrius). இவற்றை ஒத்த மற்றொரு வகை இமாலய மலைகளில் காணக்கிடைக்கும் ‘இமாலய வரையாடுகள்’, காண்பதற்கு மட்டுமல்லாது செயல்பாடுகளிலும் கிட்டத்தட்ட இவற்றைப் போலவே இருப்பினும், இவை இரண்டிற்கும் நெருங்கிய உறவுகள் கிடையாது. வரையாடு nilgiritragus என்னும் இனக்குழுவில் தனி இனமாக வைக்கப்பட்டுள்ளது. பெண் வரையாடுகள் பெரும்பாலும் ஒரேயொரு குட்டியைத் தான் ஈனும்; அதுவும் ஒரு வருடத்தில் இரண்டு முறை மட்டுமே. இவற்றிலும் சிறுத்தை, செந்நாய் போன்றவற்றால் வேட்டையாடப் படுவதாலும், இதர காராணங்களாலும் 50% மட்டுமே பிழைக்கின்றன. வரையாடுகளுக்குக் கிட்டத்தட்ட 120 வகை செடிகள், புற்கள் உணவாகின்றன. சோலைப் புல்வெளிகளின் சத்து மறுஉற்பத்தியில் (Nutrient Recycling), இவை புற்களை மேய்வதும், எச்சமிடுவதும் முக்கியப் பங்கு வகிப்பதால், இவை மறைமுகமாக புல்வெளிகளின் நலனுடன் தொடர்பு கொண்டுள்ளன. எனவே, மிஞ்சியிருக்கும்  இவற்றை காப்பது மிகவும் அவசியமான செயலாகும்.

சோலைப் புல்வெளிகள்

மேற்குத் தொடர்ச்சி மலையின் உயரமான பகுதிகளில் உள்ள புல்வெளிகளும், அதனிடையில் மலை மடிப்புகளில் உள்ள அடர்ந்த காடுகளும் சேர்ந்து ‘சோலா’ (Shola) எனப்படுகிறது. வரையாட்டின் வாழ்விடமான சோலைப் புல்வெளிகள் இறுதிக்கட்டச் சூழல் அமைப்பாகக் கருதப் படுகின்றது (Climax Communities). கடந்த நூறு ஆண்டு காலமாக, இவை எந்த ஒரு குறிப்பிடத்தக்க பரிணாம வளர்ச்சியும் அடையவில்லை. மரங்களைக் காட்டிலும் இவற்றில், நீராவி வெளியேற்றம் (Evapotranspiration) குறைவாக இருப்பதாலும், இவற்றின் சல்லிவேர், செழுமையான மண் அதிக அளவு நீரை பிடித்து வைத்து வருடந்தோறும் ஊற்றாக வெளியேற்றுகின்றது. கார்பன் வாயுவைப் பிடித்து வைப்பதிலும் (Carbon sequestration) இவற்றுக்குப் பெரும் பங்குண்டு. இவை கார்பன் வாயுவை, வேர்களில் சேமிப்பதால் காட்டுத்தீ ஏற்படுகையில் கார்பன் வெளியேறாமல் தடுக்கின்றன. இயற்கையாக நடைபெறும் கார்பன் உமிழ்வில் 3 இல் 1 பங்கு காட்டுத்தீயால் உமிழப்படுகின்றன (IPCC) என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் புல்வெளிகளை நம்பி அதற்கே உரிய பலவகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இத்தகைய சூழல் சிறப்பைப் பெற்ற சோலைப்புல்வெளிகளின் நலனும், வரையாடுகளும்  ஒன்றையொன்று சார்ந்து உள்ளன.

சவால்கள்

தேயிலைத் தோட்டங்கள், யூக்கலிப்டஸ் மற்றும் வாட்டல் (Eucalyptus & Wattle) பயிரீடு ஆகிய காரணங்களாலும், சாலைகள் மற்றும் சமீபத்திய வளர்ச்சியினாலும், இவற்றின் வாழ்விடம் கிட்டத்தட்ட 124 பகுதிகளாக ஆங்காங்கே பிரிந்துள்ளன. இதனால் இவை சிறுசிறு குழுக்களாகத் தனித்தனியாக வாழ்கின்றன. ஒரு சிறு குழுவானது, வேட்டை, நோய், காட்டுத்தீ போன்றவற்றால் எளிதில் அழிந்து போகும் அபாயத்தைச் சந்திக்கின்றது (Local extinction). மேலும், குழுக்களுக்கிடையேயான  தொடர்பு, நடமாட்டம் முற்றிலும் கடினமாகி, inbreeding என்னும் ஒரு குறிப்பிட்ட குழுவினுள்ளேயே மாற்றி மாற்றி நடக்கும் இனச்சேர்க்கையை அதிகப் படுத்துகின்றது. இவ்வாறு நடப்பது, மிகவும் நெருக்கமான தொடர்புடைய விலங்குகள் மேலும் மேலும் இணை சேர்வதைத் தூண்டும். அதனால் அந்த இனத்தின் மரபுப் பன்மயம் (Genetic diversity) குறைந்து, மிகவும் பலவீனமான ஒரு இனமாக மாறி, அழிவைச் சந்திக்கும் வாய்ப்பை அதிகப் படுத்துகின்றது. வாழ்விட அழிப்பு ஒருபுறமிருக்க, முற்றுகைத் தாவரங்கள் (Invasive plants) புல்வெளிகளில் பரவி வருவது மற்றொரு ஆபத்தாக பெருகி வருகின்றது. இது உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதோடு, இவற்றின் வாழ்விடத்தைச் சுருக்கவும், நடமாட்டத்தைத் தடுக்கவும் செய்கின்றன. காலநிலை மாற்றம், இவற்றின் வாழ்விடங்களுள் சில பகுதிகளின் தட்பவெப்ப நிலையைப் பாதிப்பதால், வாழத் தகுதி இல்லாததாக அவை மாறுகின்றன. இது போக, காட்டுத்தீ, வணிக நோக்கில் நடக்கும் வேட்டை ஆகியன வரையாட்டைக் காப்பதில், பெரும் இடையூறாக உள்ளன.

(Inbreeding: ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிக்கிக்கொள்ளும் வரையாடுகள், அவற்றுக்குள்ளேயே தொடர்ந்து இணை சேர நேரிடும். ஒரு கட்டத்தில், அந்தக் குழுவில் உள்ள அனைத்து விலங்குகளும் ஒன்றோடு ஒன்று உறவு முறை கொண்டதாக இருக்கும். இது மரபு பன்மயத்தை (Genetic diversity) குன்றச் செய்யும்; பல்வேறு இன்னல்களை சந்திக்கத் தேவைப்படும் வெவ்வேறு மரபுகள் இல்லாமல் போக நேரிடும். அதாவது அவற்றின் மரபுத் தன்மை, ஒரு குறிப்பிட்ட தாய் தந்தையிடம் இருந்து பெற்றதாக மட்டும் இருக்கும். இப்படி இருக்கையில், அந்தத் தாய் தந்தை பலவீனமானதாகவோ, நோயெதிர்ப்பு சக்தி குறைவாகவோ, அல்லது ஒரு குறிப்பிட்ட சூழல் மாற்றத்தை எதிகொள்ள முடியாததாகவோ இருப்பின், மொத்த குழுவும் இதனால் ஒன்று போல பாதிக்கப்படும். இன்னல்கள் நேரிடுகையில், ஒன்று கூட தப்பிப்பிழைக்க முடியாமல் போகும்) .

வரையாடு பாதுகாப்புத் திட்டம்

இத்திட்டத்தில், வரையாட்டின் நலனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகள் மொழியப் பட்டுள்ளன.

  1. வரையாடுகளின் பாதைகள், பரவல் போன்றவற்றைப் பற்றிய போதுமான தரவுகளைச் சேகரித்தல்,
  2. வரையாடுகளின் உடல் நலனையும், வாழ்விட நலனையும் ஆய்ந்தறிந்து மேம்படுத்துதல். முற்றுகைத் தாவரங்களை அகற்றி வாழ்விட மேலாண்மை செய்தல்
  3. தோட்டங்களை அகற்றி சோலைப் புல்வெளிகளை மறு உருவாக்கம் செய்தல்,
  4. வரையாடுகள் முன்பு வசித்த இடங்களில் அவை மீண்டும் வாழ்வதற்கான சாத்தியங்களை உருவாக்குதல்,
  5. மலைவாழ் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

ஆகியவை அடங்கிய இத்திட்டம் நம்பிக்கை அளிப்பதாகவும், வரவேற்கத்தக்கதாகவும் உள்ளது. வரையாடுகளை காப்பது மிகவும் முக்கியமான ஒரு தேவையாக இருந்தாலும், ஒரு இனத்தை அழிவின் விளிம்பிற்குத் தள்ளிய பின் காப்பதைத் தவிர்த்து, மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியத்துவம் புரிந்து, தேயிலைத் தோட்டங்கள், தாது சுரங்கத் தொழிற்சாலைகள், காடழிப்பு போன்ற சீர்கேடுகளில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றும், அழிந்து போன ஈர நிலங்கள், மர வகைகள் ஆகியவற்றை மலைவாழ் மக்களின் ஈடுபாடோடு மீட்டுருவாக்கம் செய்யவும், பாதுகாக்கவும் வேண்டும் என்றும் சூழல் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேகா சதீஷ்

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Gracy
Gracy
1 year ago

Thank you