புவி வெப்பமயமாதலை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று 2015ம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஒவ்வொரு நாடும் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுடன் ஒவ்வொரு ஐந்து ஆண்டிற்கு ஒரு முறை தங்களது காலநிலை நடவடிக்கைகளைத் தெரிவிக்க வேண்டும். இவை தேசிய நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகள் (Nationally determined contributions-NDCs) என்று அழைக்கப்படுகின்றன.
காலநிலை மாற்றத்தைத் தடுக்க இந்தியாவின் NDC வாக்குறுதிகளின் ஒன்று, 2030ம் ஆண்டிற்குள் இந்தியாவின் நிறுவப்பட்ட புதைபடிவ எரிபொருள் அல்லாத ஆற்றலின் (Non-fossil Energy) திறனை 50% உயர்த்த வேண்டும் என்பது ஆகும். புதைபடிவ எரிபொருள் அல்லாத ஆற்றல் என்றால் அதில் சூரிய ஆற்றல் , காற்றலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றலும் , அணுவுலை , பெரிய புனல் மின் திட்டங்களும் அடக்கம். இந்த 50% இலக்கை தற்போதே எட்டிவிட்டதாக மார்தட்டியுள்ளது ஒன்றிய அரசின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை.
கடந்த 14 ஜூலை 2025, அன்று ஒன்றிய அரசின் பத்திரிகை தகவல் பணியகம் (Press Information Bureau (PIB)) சார்பாக வெளியிடப்பட்டிருக்கும் இந்தச் செய்தி அறிக்கையில் “ NDC வாக்குறுதியில் கூறியதை விட ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்தியா தனது நிறுவப்பட்டுள்ள ஆற்றல் திறனில் 50% க்கு மேல் புதைபடிவ எரிபொருள் அல்லாத ஆற்றலின் மூலம் நிறுவியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலோட்டமாக பார்க்கும்போது இது ஒரு சாதனையாகத் தெரியலாம், ஆனால் இதில் பாதி உண்மை தான் உள்ளது, இதில் மறைக்கப்பட்டுள்ள தகவல்களையும் உண்மை நிலவரத்தையும் தெரிந்துகொள்ள நாம் பின் வரும் தரவுகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.
தரவு 1:

01 நவம்பர் 2021 அன்று கிளாஸ்கோவில் நடைபெற்ற காலநிலை மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் காலநிலை மற்றதைத் தடுக்க பஞ்ச்மிர்த் எனும் ஐந்து வாக்குறுதிகளைத் தந்தார். 2030ம் ஆண்டிற்குள் இந்தியாவின் நிறுவப்பட்ட புதைபடிவ எரிபொருள் அல்லாத ஆற்றலின் திறன் 500GW ஆகா உயர்த்தப்படும் என்பது தான் அதில் முதல் வாக்குறுதியாக இருந்தது. பிறகு 2022 ஆகஸ்ட் மாதம் இந்தியச் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட NDC அறிக்கையில் இது 2030க்குள் 50% புதைபடிமம் இல்லாத ஆற்றல் நிறுவப்படும் என்று மாற்றப்பட்டது.
இந்தியாவின் தற்போதைய மொத்த நிறுவப்பட்டுள்ள ஆற்றலின் திறனே 484.8 GW தான், அதில் 50% சதவீதத்தை (282.8GW) தான் புதைபடிவ எரிபொருள் அல்லாத ஆற்றல் என்று ஒன்றிய அரசு பெருமை பேசிக்கொண்டிருக்கிறது. உண்மையில் மோடி அவர்கள் சொன்ன 500GW இலக்கை கைவிட்டு விட்டு அதை விட மிகவும் குறைவான 50% இலக்கை புதைபடிவ எரிபொருள் அல்லாத ஆற்றலை நிறுவுவதற்கு வைத்ததே பெரிய தோல்வி தான். தற்போதிருக்கும் வேகத்தில் தொடர்ந்தால் 2050ம் ஆண்டிற்குள் 500GW இலக்கை அடைய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
தரவு 2:
2030ம் ஆண்டிற்குள் நிறுவப்பட்ட புதைபடிவ எரிபொருள் அல்லாத ஆற்றலின் திறனை 60% மாக உயர்த்தினால் கூட அது புவி வெப்பமயமாதலை 1.5’C க்குள் கட்டுப்படுத்த உதவாது என்கிறது ஆய்வுகள். இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சாரம் 80% புதைபடிம எரிபொருள் இல்லாத ஆற்றலாக இருந்தால் தான் இது சாத்தியமாகும்.
தரவு 3:

என்ன தான் இந்தியாவில் நிறுவப்பட்ட புதைபடிவ எரிபொருள் அல்லாத ஆற்றலின் (Non-fossil Energy) திறன் 50% எட்டியிருந்தாலும், கடந்த ஆண்டு அதிலிருந்து கிடைத்த மின்சார ஆற்றலின் அளவு வெறும் 7% தான். ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள Energy Statistics India 2025 அறிக்கையின் படி புதைபடிவ எரிபொருள் அல்லாத ஆற்றல்களான சூரிய சக்தி, காற்றாலை, புனல் மின் திட்டம் , அணுவுலை என இவை அனைத்தையும் சேர்த்தே வெறும் 7% மின்சாரம் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 93% மின்சாரமானது நிலக்கரி, பழுப்பு நிலக்கரி, கச்சா எண்ணெய், எரிவாயு போன்ற புதைபடிம (Fossil Fuels) பொருட்களை அனல் மின் நிலையங்களில் எரித்துத் தயாரிக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது.
இந்தியா போன்ற நாடுகள் தங்களது நிலக்கரி பயன்பாட்டினை 15% க்குள் கொண்டு வந்தால் தான் பாரிஸ் ஒப்பந்த இலக்கான 1.5’C எட்ட முடியும் . ஆனால் நம் நாட்டில் இன்னமும் 80% ஆற்றல் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரியில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது என்பது வேதனை.
தரவு 4:
50% நிறுவப்பட்ட திறன் இருந்தும் ஏன் அதிலிருந்து வெறும் 7% ஆற்றல் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது? இவ்வளவு குறைந்த உற்பத்திக்கு என்ன காரணம்.
இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் பெரும்பான்மையான பங்கு சூரிய ஆற்றல் தான். சூரிய ஆற்றல் உற்பத்தி என்பது பகல் நேரத்திலேயே இருக்கும், ஆனால் நமக்கோ அதிக மின் பயன்பாடு என்பது இரவு நேரத்திலும் காலை நேரத்திலும் தான் இருக்கும், ஆகவே பகல் பொழுதுகளில் உற்பத்தி ஆகும் சூரிய ஆற்றலைச் சேமித்துப் பயன்படுத்த அதிக அளவு மின்கலம் வசதி தேவை. அதே போல் ஆண்டு தோறும் கிடைக்காது என்பதால் காற்றலை மற்றும் புனல் மின் திட்டங்களுக்கும் மின்கலம் வசதி தேவை படுகிறது, இந்தியாவின் மின் தேவையை புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இல் இருந்து பூர்த்தி செய்ய 75GW அளவிற்கான மின்கலம் சேமிப்பு வசதி தேவைப்படும் . ஆனால் தற்போது உள்ளது வெறும் 4GW தான். இந்தத் தொழினுட்பத்தில் முதலீடு செய்யாமல் வெறும் சூரிய ஆற்றல் மையங்களை மட்டும் நிறுவிவிட்டு வாக்குறுதியை ஐந்து வருடத்திற்கு முன்பே செய்துவிட்டோம் என்று சொல்வது வேடிக்கையாகத் தான் உள்ளது.
தரவு 5:
சரி மற்ற நாடுகளிலும் நிலைமை இப்படித்தான் உள்ளதா ? ஓர் உதாரணத்திற்கு ஐக்கிய இராச்சியம் (United Kingdom) எடுத்துக்கொண்டால் அங்கு நிறுவப்பட்டுள்ள ஆற்றல் நிலையங்களில் 61% புதைபடிமம் இல்லாத ஆற்றலாக இருக்கிறது, இந்த 61.5% நிலையங்களிலிருந்து மொத்த மின் தேவையில் 60.3% கடந்த 2023ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. சரி ஐக்கிய இராச்சியம் தீவிரமாக கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தி வருகிறது , தனது கடைசி நிலக்கரி அனல் மின் நிலையத்தை கூட கடந்த ஆண்டு மூடியுள்ளது. இந்திய போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் அது சாத்தியம் இல்லை என்று நமக்கு தோன்றலாம்.
சரி இந்தியாவை விட அதிகம் மக்கள் தொகைக் கொண்ட , இந்தியாவை விட அதிகம் கார்பன் உமிழ்வு செய்யக் கூடிய , கார்பன் உமிழ்வை கட்டுபடுத்தப் முடியாமல் திணறி வருகின்ற சீனாவை எடுத்துக்கொள்வோம்.



சீனாவும் தனது NDC வாக்குறுதியில் 2030ம் ஆண்டிற்குள் 1200GW அளவிற்கு சூரிய மற்றும் காற்றலை மின்சாரத்தை நிறுவுவதாக வாக்குருதியளிதிருந்தது. தற்போது சீனாவில் சூரிய ஆற்றல் மற்றும் காற்றலை மட்டுமே 1500GW திறனுக்கு மேல் நிறுவப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள நிறுவப்பட்ட ஆற்றல் நிலையங்களில் 58% புதைபடிமம் இல்லாத ஆற்றலாக உள்ளது . இதில் இருந்து மொத்த மின்சாரத்தில் 40% கார்பன் உமிழ்வு இல்லாமல் உற்பத்தி செய்கிறது சீனா என்பது குறிப்பிடத்தக்கது.
சரி சீனா பொருளாதாரத்திலும் தொழில்நுட்பத்திலும் வளர்ந்த நாடு , நமது அண்டை நாடான பாகிஸ்தான் என்ன செய்கிறது என்று பார்த்தால், 40% நிறுவப்பட்ட புதைபடிம அல்லாத ஆற்றலை வைத்துகொண்டு மொத்த உற்பத்தியில் 54% புதைபடிமம் இல்லாத ஆற்றலை உற்பத்தி செய்கிறது பாகிஸ்தான்.

இப்படி மற்ற நாடுகளில் எல்லாம் புதைபடிமம் இல்லாத ஆற்றல்கள் மூலம் பெரும்பான்மையான மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் போது வெறும் 7% ஆற்றலை மட்டும் கார்பன் உமிழ்வு இல்லாமல் உற்பத்தி செய்துவிட்டு , ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே NDC இலக்கை எட்டிவிட்டோம் என்று தம்பட்டம் அடிப்பது தேவை தானா ?
இதனால் ஒன்றிய அரசு 100 இந்தியர்களை மற்றும் ஏமாற்றவில்லை , காலநிலை மாற்றச் செயல்பாடுகளைத் தீவிரமாக முன்னெடுக்காமல் ஒரு பெரும் பேரழிவிற்கு வித்திட்டு சர்வதேசத்தின் முன் இந்தியாவைத் தலைகுனியவும் செய்துகொண்டிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு.
பிரபாகரன் வீரஅரசு
