மாலை நேரத்தில் பூங்காக்களில் இளைப்பாறும் நேரங்களிலும், மரம், செடி, பூக்கள் நிறைந்த பகுதிகளில் நண்பர்களுடன் விளையாடிய நேரங்களிலும் பல வண்ணப்பூக்களின் நிறங்கள் பெரிய அளவில் வியப்பை ஏற்படுத்திடவில்லை. ஆனால், தொலைக்காட்சியில் கடல் பகுதியில் பல நிறங்களில் நிரம்பியிருக்கும் பவளத்திட்டுகளை கண்டபோது வியப்பில் ஆழ்ந்த நினைவு இன்றளவும் அப்படியே இருக்கிறது. பற்பல வண்ணங்களில் பவளத்திட்டுகள் எப்படி இருக்கின்றன? பல நிறச் சாயங்களை அப்பவளத்திட்டுகளின் மீது ஊற்றியது யார்? பவளத்த்திட்டுகள் எப்படி உருவாகின்றன?
பவளத்திட்டுகள் கடற்பகுதியின் முக்கியமான உயிர்ச்சூழலாகும். பெரும்பாலும் அனைத்து வெப்பமண்டலப் பகுதிகளிலும் பவளத்திட்டுகள் காணப்படுகின்றன. உயிர்ச்சூழலில் சங்கு உயிரிகள் (coral polyps) குழுவாக அதிக பரப்பளவில் வாழ்பவை. இவை பார்ப்பதற்கு ஜெல்லி மீன்கள் மற்றும் கடற்சாமந்தி போல் இருப்பவை. இவை பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து பிறகு இறக்கும்போது, அவ்ற்றின் எலும்புகளில் உள்ள கால்சியம் கார்பனேட்டை (Calcium carbonate, CaCo3) விட்டுச்செல்லும். அவை படிப்படியாக அடுக்குகளாக உருவாகின்றன. பவளத்திட்டுகள் கிட்டத்தட்ட மொத்த கடல்பரப்பில் 1% பகுதியில் படர்ந்து, 25% கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆதராமாய் உள்ளன.
பவளத்திட்டுகள் கடற்பகுதியின் வெப்பமண்டலக் காடுகள் என்றழைக்கப்படும் அளவிற்கு இவை முக்கியத்துவம் வாய்ந்தவை.. இந்திய- பசுபிக் பெருங்கடல் பகுதிகளான இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மலேசியா போன்ற பகுதிகளில் ‘முக்கோண பவளப்பகுதி’ (coral triangle) உள்ளது. மிக முக்கியமான உயிர்பன்மையப் பகுதியாக இது கருதப்படுகிறது. ஆஸ்திரேலியப் பகுதிகளில் இருக்கும் great barrier reef, ஆஸ்திரேலியாவின் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய பவளத்திட்டு அமைப்பாகும். இது லட்சக்கணக்கான பவள உயிரிகளால் உருவானது.
கரீபியன் மற்றும் மேற்கு அட்லாண்டிக் பகுதியில் உலகின் இரண்டாவது பெரிய பவளத்திட்டு அமைப்பு அமைந்துள்ளது. வெப்பமண்டல, மித வெப்பமண்டலப் பகுதிகளில் கடல் நீர் 23-29℃ வரையிலும், சூரிய ஒளி விழும் ஆழம் குறைந்த பகுதிகளில், பாறைகளோ அல்லது ஏற்கனவே இறந்த பவள உயிரிகளை அடிப்பகுதியாகக் கொண்டு இவை உருவாகின.
புவி வெப்பமயமாதலால் உந்தப்பட்ட காலநிலை நெருக்கடி புவியின் அனைத்து சூழல் அமைவுகளையும் பாதித்து வருகிறது. இதில் கடற்பகுதிகள் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. பூமியில் விழும் அதிகளவிலான வெப்பத்தைக் கடல்தான் உள்வாங்குகின்றது. இதன் காரணாமாகவே அதிக எண்ணிக்கையிலான புயல்கள், காற்றழுத்தத் தாழ்வு பகுதிகள், கடல் நீரோட்டங்களின் சிதைவுகள் ஏற்படுகின்றன. இதன் நீட்சியாக பவளத்திட்டுகளும் அழிந்து வருகின்றன.
பவளத்திட்டுகள் அழிவது என்பதை பவள நிறமிழப்பு (coral bleaching) எனக் கூறலாம். கடல் பகுதிகள் அதிகமாக வெப்பமடைவதால் பாசிக்களை இழக்கின்றன. இப்பாசிக்கள் மூலம்தான் அவை ஒளிச்சேர்க்கை நடத்தி மிகப்பெரிய உயிர்மண்டலமாகத் திகழ்கின்றன. பாசிக்களின் நிறமிகள் அழிவதால் பவளத்திட்டுகள் நிறமிழக்கின்றன. இது கடல் உயிர்பன்மைய அழிவின் ஆரம்ப நிலை.
1998-ம் ஆண்டிலிருந்து 3 முறை பெரியளவில் பவளத்திட்டுகள் நிறமிழப்பு நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளது. முதல்முறையாக 1998-ம் ஆண்டு ஏற்பட்ட வெப்ப அழுத்தத்தின் விளைவாக உலகவில் 21% பவளத்திட்டுகள் நிறமிழந்தன. இரண்டாவது முறையாக 2010-ம் ஆண்டில் ஏற்படும் போது 37%, 2014 – 2017ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 68% பவளத்திட்டுகள் நிறமிழந்தன. தற்போது ஏற்பட்டு கொண்டு இருக்கும் நான்காவது நிகழ்வில் முன்னெப்போதும் இல்லாத அளவில் உலகளவில் 84% பவளத்திட்டுகள் நிறமிழந்துள்ளன.
மனித வரலாற்றில் இல்லாத அளவில் தீவிர நிறமிழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிறமிழப்பின் தீவிரம் அளவுகோலில் 5 ஆகக் கணக்கிடப்பட்டுள்ளது. முதல் மூன்று முறை ஏற்பட்ட நிறமிழப்பு நிகழ்வுகள் அளவுகோல் இரண்டில் வருகின்றன. அளவுகோல் இரண்டின்படி, எளிதில் அழியக்கூடிய, பாதிக்கக்கூடிய பவளத்திட்டுகள் அழியும். தற்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கிற நான்காவது நிறமிழப்பு அளவுகோல் 3-5 வரை உள்ளது. இந்த அளவுகோல் பல்வேறு வகையான உயிரினங்கள் சுமார் 80% வரை அழிவை சந்திக்கும் நிலையாகும்.
பெரியளவில் பவளத்திட்டுகள் அழிவதற்குக் கடல் பகுதியின் அதிக வெப்பமே காரணம். 202ஆம் ஆண்டில் 4 உலக அளவில் தொழிற்புரட்சி காலத்தைவிட 1.5℃ அளவு அதிகமான வெப்பநிலை பதிவாகியிருந்தது. பவளத்திட்டுகள் மீண்டும் நிறமிகள் பெற்று உயிர்ப்புடன் மீள வேண்டுமென்றால் கடலின் வெப்பம் குறையவேண்டும், கடல் வெப்பநிலை குறையாமல் இருந்தால் பவளத்திட்டுகள் பெரும் அழிவைச் சந்திக்கும்.
Reference
- https://oceanservice.noaa.gov/education/tutorial_corals/media/supp_coral05a.html
- Gove, J.M., Williams, G.J., Lecky, J.et al. Coral reefs benefit from reduced land–sea impacts under ocean warming. Nature 621, 536–542 (2023). https://doi.org/10.1038/s41586-023-06394-w
- Zhou Q, Dong X, Wang J, Ye Y, Yang Y, Xiang P, Chen Y and Zheng X (2024) Critical factors driving spatiotemporal variability in the phytoplankton community structure of the coral habitat in Dongshan Bay, China. Microbiol. 15:1355028. doi: 10.3389/fmicb.2024.1355028
- https://icriforum.org/bleaching-hub/
- NOAA Coral Reef Watch. 2019, updated daily.NOAA Coral Reef Watch Version 3.1 Daily 5km Satellite Regional Virtual Station Time Series Data for Southeast Florida, Mar. 12, 2013-Mar. 11, 2014. College Park, Maryland, USA: NOAA Coral Reef Watch. Data set accessed 2020-02-05 at https://coralreefwatch.noaa.gov/product/vs/data.php.
- https://www.britannica.com/science/coral-reef
- லோகேஷ் பார்த்திபன்
