திருடப்படும் கடலோரங்கள்! – ஆவணப்பட விமர்சனம்

அலீனாவுக்கு 14 வயது. அவளுக்குப் புறாக்கள் பிடிக்கும். பந்தயங்களுக்காக அவளின் புறாக்கள் பயன்படுத்தப்படுவதுண்டு. ஆனால் புறாக்களுக்கு இருக்கும் சுதந்திரம் அவளுக்கு இல்லை.

அலீனா ஒரு காலநிலை அகதி!

Stolen Shorelines  என்கிற ஆவணப்படம்  சூழலியல் சீர்கேட்டைப் பற்றி பேசுகிறது. கேரளாவின் மூத்த மற்றும் முக்கியமானச் சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் கே.ஏ.ஷாஜி இயக்கியிருக்கும் இந்த ஆவணப்படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. இப்படம் கொடுக்கும் அதிர்ச்சிகள் பல. அதில் முக்கியமானது இப்படம் பேசும் சூழலியல் சீர்கேடு நேர்வது கேரளமாநிலத்தின் திருவனந்தபுரத்தில் என்பது தான்.

ஒக்கிபுயலில் கரையேறிய கடலால் கடலோரங்களில் வாழ்ந்த அலீனா போன்றோரின் குடும்பங்கள் முகாம்களில் வசித்துக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே திருவனந்தபுரக் கடலோரங்கள் கடலரிப்பைச் சந்தித்து வருவது முக்கியமான பிரச்சனையாக இருக்கையில், அதையும் விட பெரும்பிரச்சினை ஒன்று கடலின் சூழலியலை நாசப்படுத்துவதாக ஆவணப்படம் குற்றஞ்சாட்டுகிறது.

அதானி துறைமுகம்!

திருவனந்தபுரத்தின் விழிஞ்சம் பகுதியில்தான் அதானி குழுமத்தின் பன்னாட்டுத் துறைமுகம் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது.கடலரிப்பால் கிட்டத்தட்ட 300 மீனவக்குடும்பங்கள் முகாம்களில் வசிக்கும்நிலை. கடலோரங்களில் கிரானைட் தடுப்புகள் நிறைந்திருக்கின்றன. மீனவக் குடிகளுக்கு வாழ்வாதாரம் இல்லை. கடல்வாழ் சூழலும் பாதிப்பில்இருக்கிறது. அலீனாவும் குடும்பமும் பள்ளிக்கூட முகாமில் வசிக்கிறது. அலீனாவின் பள்ளிப்படிப்பு செல்பேசியில் நேர்கிறது.

இவைபற்றிய எந்தக் கவலையுமின்றி அதானியின் துறைமுகம் திருவனந்தபுரத்தில் எப்படி வளர்ந்துகொண்டிருக்கிறது என்கிற கேள்வியை ஆவணப்படம் முன்வைக்கிறது. கிட்டத்தட்ட 590 கிலோமீட்டருக்கு நீண்ட கடற்கரையை கேரளா கொண்டிருக்கிறது.திருவனந்தபுரத்தின் கடற்கரை 79.3 கிலோமீட்டர் நீளம். திருவனந்தப்புரக் கடலோரத்தில் பல மீனவக்கிராமங்கள் இருந்தன. அவற்றில் பல கடலரிப்பை எதிர்கொண்டு முகாம்களில் தஞ்சம் அடைந்திருக்கின்றன.

சங்கு முகம் என்கிற கடலோரப்பகுதியைப் பற்றிப்படம் குறிப்பிடுகிறது. சங்குமுகக் கடலோரச்சாலை வழியாகத்தான் திருவனந்தபுர விமானநிலையத்துக்குச் செல்லமுடியும். அச்சாலையின் வழியே செல்கையில் சங்குமுகத்தின் கடலோரம் அற்புதமான காட்சியாக இருக்கும். ஆனால் இப்போது அங்கு சுற்றுலா வாசிகள் வருவதில்லை. காரணம், கடல் மேலேறிச் சாலைக்கு அருகே வந்துவிட்டது. விமான நிலையத்துக்குச் செல்லும் சாலையையும் கடல் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

மீனவக் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் முகாம்களில் பெரும்வசதிகள் இல்லை. இருக்கும் ஒரே வசதி தலைக்குமேலே ஒருகூரை, அவ்வளவுதான். முகாம்கள் வீடுகளாக இருப்பதில்லை. ஒரு பெரிய அரங்கு தடுப்புகள் கொண்டு அறைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அறையிலும் ஒன்றுக்கு மேற்பட்டக் குடும்பங்கள் வசிக்கின்றன. இதுதான் முகாம். கடலை ஆளும் மீனவக்குடிகள் அறைகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.

அதானி துறைமுகத்துக்கான வேலைகள் 2015ம் ஆண்டு துவங்கப்பட்டன. அப்போது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி. அரசு-தனியார் கூட்டில் 7,525 கோடி ரூபாய் செலவில் துறைமுகம் கட்டத் திட்டமிடப்பட்டது. 2018ம் ஆண்டில் முடிக்கப்படும் என உறுதி கொடுக்கப்பட்டது. திட்டத்தின் நிதியில் முறைகேடு நடந்திருப்பதாக இடது ஜனநாயக முன்னணி குற்றம் சாட்டியது. 2016ம் ஆண்டு ஆட்சி மாறியதும் இடது ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்தது. ஆனால், காட்சி மட்டும் மாறவில்லை. அதானியின் துறைமுகத் திட்டம் தொடர்ந்தது.

துறைமுகக் கட்டுமானத்துக்கென கேரள அரசு 360 ஏக்கர் நிலத்தை வழங்கியிருக்கிறது. அது மட்டுமின்றி கடலின் 130 ஏக்கரையும் அதானி குழுமம் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கியிருக்கிறது. ஏற்கனவே கடலரிப்பு மற்றும் மீனவர் வாழ்வாதார பாதிப்பைத் துறைமுகமும் கடல்நீர் தடுப்புகளும் அதிகரிக்கும் என்கின்றனர் வல்லுநர்கள். உலகம் முழுக்கக் காலநிலை மாற்றம் பற்றிய விவாதங்கள் நடந்துகொண்டிருக்கும் சூழலில் கடல் என்ற பெரும் ஆகிருதியை தனியாருக்குத் தாரை வார்ப்பது என்ன மாதிரியான மக்கள் நல அரசியல் என்பது புரியவில்லை.

கேரளாவின் முதல் கடலோரச் சுற்றுலாத் தளம் கோவளம். கோவா போலப் பல சுற்றுலா வாசிகள் வரும் தளமாக இருந்த கோவளத்தில் சூழல் மாறியிருப்பதாக ஆவணப்படம் சுட்டுகிறது. சுற்றுலா வாசிகள் கடலை நெருங்கவேண்டாம் என எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. சுற்றுலா வருபவர்களுக்குக் கோவளம் ஏமாற்றத்தை மட்டுமே அளித்துக் கொண்டிருக்கிறது. அதானி துறைமுகத்துக்கு வடக்கே கோவளக் கடலோரம் அமைந்திருக்கிறது.

ஏன் கடலரிப்பு அதிகரிக்கிறது, ஏன் மீனவர்கள் தொடர்ந்து தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து கொண்டிருக்கின்றனர், ஏன் அதானி துறைமுகத்துக்கு வடக்கே இருக்கும் கடலோரங்கள் அழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன முதலிய கேள்விகளை ஆவணப்படம் முன்வைக்கிறது. பொருளாதாரம், வளர்ச்சி ஆகிய காரணங்கள் பதிலாக அளிக்கப்பட்டு அக்கேள்விகள் முடக்கப்படுவதாகவும் ஆவணப்படம் குற்றஞ் சாட்டுகிறது.

திருவனந்தபுரத்து மீனவர்கள் தற்போது கடலோரத்தில் இல்லை. அவர்களின் மீன்வலைகள் காய்வதற்கான இடங்களும் அங்கு இல்லை. வாழ்வாதாரம் மட்டுமின்றி மீனவக்குடிகளின் உரிமைகளும் பறிக்கப்பட்டிருக்கின்றன. வசிப்பிடம் இழந்து முகாம்களில் தவிக்கும் அவர்களுக்கு நிவாரணமாக அரசு 10 இலட்சம் ரூபாய் வழங்கி இருக்கிறது. அந்த 10 இலட்சத்தைக் கொண்டுதான் அவர்கள் திருவனந்தபுரம் போன்ற நகரத்துக்குள் இடமும் வாங்க வேண்டும். வீடும் கட்ட வேண்டும். ஏழ்மையும் நிச்சயமின்மையும் மீனவக்குடிகளின் வாழ்க்கைகளை நிரப்பியிருக்கிறது!

இவ்வளவுக்குப் பிறகும் துறைமுகக் கட்டுமானம் எவ்வளவு முடிந்திருக்கிறது எனத் தெரியுமா? 800 மீட்டர்கள். மொத்தமாக அதானி துறைமுகத்துக்கென கட்டப்படும் கடல் தடுப்பின் அளவோ 3.1 கிலோமீட்டர். மொத்தக் கட்டுமானம் முடியும்போது திருவனந்தபுரக்கடலும் திருவனந்தபுரமும் எந்த நிலையில் இருக்கும் என்பது நாம் அனைவரும் வெளிப்படுத்தத் தயங்கும் உண்மை.  துறைமுகக் கட்டுமானத்துக்காக 6 இலட்சம் டன் கிரானைட் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அவற்றின் பெரும்பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து கொண்டு வரப்பட்டவை. திட்டத்தைக் கட்டி முடிக்க மொத்தம் 1 கோடி டன் கிரானைட் தேவைப்படுமாம்.

ஆனால், அரசின் தரப்பும் அதானி நிறுவனமும் துறைமுகக் கட்டுமானம் சூழல் சீர்கேடு எதையும் ஏற்படுத்தவில்லை என்றே கூறிக் கொண்டிருக்கின்றன.  சரி, சூழலியலை விடுவோம். பொருளாதாரம், வளர்ச்சி என்கிறார்களே.. அது என்னவென சற்று பார்ப்போம். துறைமுகக் கட்டுமானச் செலவான 7,525 கோடி ரூபாயில் அதானி குழுமத்தின் பங்கு 2,454 கோடிகள் மட்டுமே . ஒன்றிய அரசின் பங்கு 1,635 கோடிகள். கேரள அரசின் பங்கோ 3,436 கோடி ரூபாய். அதானியின் துறைமுகம் 40 வருடங்களுக்கு இயங்கும். 20 வருடங்களுக்கு உரிமத்தை நீட்டித்துக்கொள்ளலாம். ஆனால் கேரள அரசு, துறைமுக வருமானத்திலிருந்து ஒருபங்கைப் பெற 50 வருடங்கள்காத்திருக்கவேண்டும். இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் நிறுவனம் திருவனந்தபுரத்துத் துறைமுகத்தின் கட்டுமானச் செலவு திட்டமிட்டதைக்காட்டிலும் அதிகமாகிக் கொண்டிருப்பதாகக் கணித்திருக்கிறது. தற்போதைய நிலையில் கட்டுமானம் முடிந்தாலும் கேரள அரசுக்கு நஷ்டமே நேரும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

செப்டம்பர் 2021-ல் அதானி குழுமம் திருவனந்தபுர விமான நிலைய நிர்வாகத்தை 50 வருடக் குத்தகைக்கு வாங்கியது. ஒன்றிய அரசின் அந்த நடவடிக்கையை கேரளாவை ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசு கடுமையாக எதிர்த்தது. கடலரிப்பு தொடர்ந்தால் அது திருவனந்தபுர விமானநிலையத்தையும் விட்டுவைக்காது என்கிறது ஆவணப்படம்.

ஆவணப்படம் உருவாக்கும் பெரும் அதிர்ச்சிகளில் முக்கியமானது இடது முன்னணியும் சூழலியலைப் பொறுத்தவரை பிற கட்சிகளிலிருந்து பெரிய பேதம் கொண்டிருக்கவில்லை என்கிற விஷயமே. இந்திய ஒன்றியத்தின் அரசமைப்பின்படிப் பிரமாணம் எடுத்து இயக்கும் நிலையில் இருக்கும் எல்லா மாநில அரசாங்கங்களும் அரசுகளும் இந்திய ஒன்றியத்தின் பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றியாக வேண்டும் என்பது கட்டாயம். அந்தக் கட்டாயத்துக்கு இடதுசாரிகள் ஒன்றும் விதிவிலக்காக இருக்கவில்லை என்கிற யதார்த்தமே ஆவணப்படம் பார்க்கும்போது நம்மை உறுத்தும் விஷயமாக இருக்கிறது.

இடதுசாரிகளுக்கு எதிரானப் பிரசாரத்துக்கு உலகமூலதனம் வழங்கும் பெரும் நிதியின் ஒரு பகுதியாகத் தான் இத்தகைய ஆவணப்படங்கள் என இடதுசாரிகள் வாதிடலாம்.உலகின் பிரதான முரணாக மானுடத்தின் இருப்பு மாறிக்கொண்டிருக்கும் சூழலில், காடுகள் தனியார்மயப்படுத்தப்பட்டதை எதிர்த்த மார்க்ஸைப் புரிந்துகொள்ள வேண்டியதே காலக் கட்டாயம்.

உலகளாவிய பல நாடுகளில் பசுமை இடதுசாரியம் உருவாகி இருக்கிறது. பசுமை இடதுசாரிகளின் குரலை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். முதலாளித்துவ உற்பத்திமுறைக்கு மாற்றான வாழ்க்கையை, பொருளாதாரத்தைப் பசுமை இடதுசாரிகள் முன் வைக்கின்றனர். அவர்களுக்கு மக்கள் அதிகாரத்தையும் வழங்கியிருக்கின்றனர். காலநிலை மாற்றம் தீவிரமாகிக்கொண்டிருக்கும் நிலையிலும் கூட உற்பத்திமுறை மாற்றத்தைப் பற்றியோ முதலாளித்துவ அறிவியல் மற்றும் பொருளாதார வளர்ச்சி பற்றியோ பேச மறுப்பது மார்க்சியம் காட்டிச்சென்ற சூழலியல் சிந்தனையை மறுப்பதற்கு ஒப்பாகும்.

Stolen Shorelines என்கிற ஆவணப்படம் முடிவாக நாம் கொண்டிருக்கும் கருத்தைதான் உறுதிப்படுத்துகிறது.

காலநிலை மாற்றத்தை உருவாக்கியது இயற்கை அல்ல, இலாபவெறி முதலாளிகளே!

-பூவுலகின் நண்பர்கள்
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
K. Bharath Kumar
K. Bharath Kumar
2 years ago

Very important alert article. Many Thanks. At this point, Indians should become aware that Communist Revolution in Russia was fully funded and boosted by none other than its primary ‘enemy’ – Wall Street Bankers and a few wealthy American Industrialists. See Professor Anthony C. Sutton’s book about this. https://www.amazon.com/Wall-Street-Bolshevik-Revolution-Capitalists/dp/190557035X
Thanks.

K. Bharath Kumar
K. Bharath Kumar
2 years ago

Very important alert article. Many Thanks. At this point, Indians should become aware that Communist Revolution in Russia was fully funded and boosted by none other than its primary ‘enemy’ – Wall Street Bankers and a few wealthy American Industrialists. See Professor Anthony C. Sutton’s book about this. https://www.amazon.com/Wall-Street-Bolshevik-Revolution-Capitalists/dp/190557035X
Thank you.