மை தீண்டாமை!

இந்திய ஒன்றியத்தின் 18வது மக்களவையைத் தேர்வு செய்வதற்கான முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று முடிந்தது. ஆனால், கடந்த 3 மக்களவைத் தேர்தல்களைக் காட்டிலும், தமிழ்நாட்டில் இம்முறை வாக்குகள் குறைவாகவேப் பதிவாகி உள்ளது. (2009-ல் த்பதிவான வாக்குகள் 73.02%; 2014-ல் – 73.74%; 2019-ல் – 72.47%; 2024-ல் – 69.46%).

10 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் ஜனநாயகமும், பன்முகத்தன்மையும் செத்து மடிந்து கொண்டிருக்க, தமிழ்நாட்டில் பதிவாகியுள்ள குறைவான வாக்குச் சதவீதத்தால் தேர்தல் முடிவுகளில் எத்தகைய தாக்கம் ஏற்படும் என அரசியல் திறனாய்வாளர்கள் ஒரு பக்கம் மயிர்கூச்செரியும் விவாதங்களை அரங்கேற்றினாலும், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் போட்டியில் பங்கெடுக்காமல் தமிழ்நாட்டின் பல குக்கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய வரலாற்றில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இத்தேர்தலில், தமிழ்நாட்டின் வரைபடத்தில் கூட காண இயலாத சின்னஞ்சிறு கிராமங்களை நாடாளுமன்றத் தேர்தல் புறக்கணிப்பு எனும் எதிர்ப்புரட்சியில் இணைக்கும் மையப்புள்ளியாக சூழலியல் போராட்டங்கள் உருவெடுத்துள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணியில் தங்கள் கிராமத்தைச் சுற்றி அமைந்துள்ள மீன் கழிவு ஆலைகளை நிரந்தரமாக அகற்றக்கோரி கிராம மக்கள் பலமுறை போராட்டம் நடத்தி வந்துள்ளனர். அவர்களது இந்த கோரிக்கையும், போராட்டமும் எளிதில் தேர்தல் புறக்கணிப்பாக மாறவில்லை. சுற்றுச்சூழல் மாசுபாட்டால் அனுதினமும் அவர்கள் அனுபவிக்கும் சுகாதாரச் சீர்கேடுகளாலும், தங்களைக் கண்டுகொள்ளாத அரசின் மெத்தனப் போக்காலும்தான் பொட்டலூரணி கிராம மக்கள் வாக்குச்சாவடிகளை ஈயாட வைத்துள்ளனர்.

பொட்டலூரணியைப் பொறுத்தமட்டில் இந்நிறுவனங்கள் உற்பத்தியில் ஈடுபடும்போது அவற்றில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தால் கிராம மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. நள்ளிரவில், மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்தக் கழிவு, மீன் ஆலைகளிலிருந்து மீத்தேன், ஹைட்ரஜன் சல்ஃபைடு போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த வாயுக்கள் திறந்து விடப்படுகின்றன. இதனால் கண் எரிச்சல் ஏற்பட்டு குழந்தைகள், முதியவர்கள் உட்பட அனைவருக்கும் மூச்சுத்திணறல் உண்டாகி வாந்தி, மயக்கம் எனக் கடுமையாக அவதிப்படுகின்றனர்.

போதாக்குறைக்கு, மீன் கழிவு நீரை கிராமத்தைச் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகளில் கலந்து விடச் செய்கின்றனர். இதனால் அப்பகுதியில் விவசாயமும் மிக மோசமாக பாதிப்படைந்துள்ளது. இவ்வாறு, பொட்டலூரணி கிராமத்தின் அடுக்கடுக்கான சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சீர்கேடுகள் பல முறை ஆட்சியாளர்களின் கவனத்துக்கு எடுத்துச் சென்றும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.

சுமார் 931 வாக்குகள் கொண்ட அந்த கிராமத்தில் 9 வாக்குகள் மட்டுமே பதிவானது. அதைத் தொடர்ந்து, தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தேர்தல் நாள் (ஏப்.19) அன்று கிராமத்திற்குள் காரில் ஆயுதங்களுடன் வந்த 8 பேரை காவல்துறை பிடித்துச் செல்லவே, அந்த வாகனத்தை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. அசாதாரண சூழல் உருவானதால், தேர்தலைப் புறக்கணித்த கிராம மக்கள் 50 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

அடுத்ததாக, தமிழ்நாட்டின் மிகத்தீவிரமான சூழலியல்-விவசாயப் பிரச்சனையான பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஏகனாபுரம், நாகப்பட்டு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். ஏகனாபுரம் கிராமத்தில் மொத்தம் 1375 வாக்காளர்கள் உள்ளனர். அங்கு இரண்டு வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்ட நிலையில், இறுதியாக 21 பேர் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். இதேபோல் நாகப்பட்டு கிராமத்தில் 280 வாக்குகள் உள்ள நிலையில், அங்கு வெறும் 40 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 630 நாட்களுக்கு மேலாகப் போராடியும் தீர்வு இல்லை என பொதுமக்கள் கடும் ஆத்திரத்தில் தேர்தலைப் புறக்கணிக்கவே, கிராம மக்கள் 10 பேர் மீது பிணையில் வெளிவர முடியாத சட்டப்பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. தற்போது வரை இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை. இச்சம்பவம் நடந்து ஓராண்டு கடந்துவிட்ட போதிலும், இயற்கை வளங்களைத் தீண்டாமைக்கான கருவியாக பயன்படுத்தி சாதிய வன்கொடுமை நிகழ்த்தப்பட்டதில் இன்னும் தீர்வு எட்டப்படாததால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க தேர்தலைப் புறக்கணிக்க இருப்பதாக வேங்கைவயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். சொன்னதைப் போலவே திட்டமிட்டபடி அவர்கள் தேர்தலைப் புறக்கணித்தனர்.

மொத்தம் 561 வாக்காளர்களைக் கொண்ட வேங்கைவயலில் இறையூர் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேர் மட்டுமே வாக்குகளைப் பதிவு செய்தனர். வேங்கைவயல், இறையூர் ஆகிய இரண்டு கிராமங்களைச் சேர்ந்த மக்களிடமும் அதிகாரிகள் தொடர்ந்து சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியும் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க முன்வரவில்லை.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி – காரியாபட்டி சாலையில் உள்ள கே.சென்னம்பட்டி கிராமத்தில் கேரளாவைச் சேர்ந்த தனியார் உரத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் கோழி இறைச்சிக் கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகளைப் பதப்படுத்தி, அதன் மூலம் உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் புகையால் துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் குழந்தைகள், வயதானவர்கள் மூச்சுத் திணறலால் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள குராயூர், ஓடைப்பட்டி, மேலப்பட்டி, பேய்க்குளம் உள்ளிட்ட ஐந்து கிராம மக்கள்(கே.சென்னம்பட்டி உட்பட) போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மேலும், இந்த ஆலையால் 5 கிராமங்களின் மண்வளம், நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளதால் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்த பகுதி வறண்ட பூமியாக மாறிவிடும் அபாயம் உள்ளது. இந்த உர ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தி ஏற்கனவே மனு அளித்திருந்த நிலையில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நள்ளிரவில் 5 கிராம மக்களும் ஒன்று திரண்டு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வட்டாட்சியர் ஆலையை மூட நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

அவரது வாக்குறுதியை நம்பி கிராம மக்களும் தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிட்டனர். ஆனால், தொடர்ந்து ஆலையை மூட நடவடிக்கை எடுக்காததால் ஏப்ரல் 18-ம் தேதி வட்டாட்சியரிடம் உரத் தொழிற்சாலை மூட நடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக 5 கிராம மக்களும் மனு அளித்திருந்த நிலையில், தேர்தல் நாள் வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் தேர்தலை புறக்கணித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், 5 கிராம மக்களையும் சேர்த்து 5,050 வாக்குகளில் வெறும் 167 வாக்குகள் மட்டுமே பதிவானது. இந்த நிலையில், வாக்குச்சதவீதம் குறைந்ததால் அதிமுக எம்.எல்.ஏ ஆர்.பி.உதயகுமார் ஆலையை மூடக்கோரி ஆட்சியருக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து, உர ஆலையை மூட ஆட்சியர் ஆணையிட்டுள்ளார். மேலும், சுற்றுச்சூழல் பொறியாளர்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஆய்வு செய்து அறிக்கையளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை முன்கூட்டியே செய்திருந்தால் ஐந்தாயிரம் வாக்குகள் வீணாகியிருக்காது.

இதேபோல, சிவகங்கை அருகே சித்தூரணி, கல்லூரணியைச் சேர்ந்த கிராம மக்கள் 1000 பேர் வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சி பகுதியில் இருந்து மருத்துவக் கழிவுகள், வீட்டுக் கழிவுகள் உள்ளிட்டவை சித்தூரணி, கல்லூரணி கிராமப் பகுதியில் உள்ள பாசன கால்வாயில் கலப்பதாகவும், அதனால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் பல முறை முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை என்பதால் அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

மேலும், அடிப்படை வசதிகள் எதுவும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும், கடந்த 30 ஆண்டுகளாக அரசியல் கட்சியினரிடமும், அதிகாரிகளிடமும் பல முறை கோரிக்கை வைத்தும் தங்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் கிடைக்கவில்லை என்பதால் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர். அதன்படி, கல்லூரணி, சித்தூரணி கிராமங்களில் சுமார் 1000 வாக்காளர்கள் உள்ள நிலையில், அனைவரும் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணித்து அவர்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

திருவள்ளூரில் ஆறு வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்தும், செங்கல்பட்டு அருகே கல்குவாரியை எதிர்த்தும் தேர்தல் புறக்கணிக்கப்பில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். காலநிலை மாற்றம் மற்றும் சூழலியல் பிரச்சனைகள் தேர்தல் அரசியலின் பேசுபொருளாக இருந்த நிலை மாறி, தற்போது தேர்தல் புறக்கணிப்பின் மையப்பொருளாக மாறி இருப்பது ஜனநாயகத்தின் கேலிக்கூத்து.

தனிமனிதனின் இளைப்பாறும் நேரத்தைக் கூட அவன் எப்படி செலவு செய்ய வேண்டும் எனப் பெருமுதலாளிகள் தீர்மானிக்கும் நுகர்வு யுகத்தில், வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று ஓட்டுப்போடுவதை மக்கள் நேரவிரயமாக கருதத் தொடங்கிவிட்டனரா? அல்லது யாருக்கு ஓட்டு போட்டாலும் தங்களது அன்றாட வாழ்வியல் பிரச்சனைகள் தீரப்போவதில்லை என்று விரக்தியின் விளிம்பிற்குச் சென்றுவிட்டனரா?

ஆண்டுதோறும் பெருவெள்ளம், தண்ணீர்ப் பஞ்சம், உடலை உருக்கும் வெப்ப அலைகள் என காலநிலை மாற்றத்தின் விளைவுகளை ஒரு சேர சந்திக்கும் சென்னையில்தான் வாக்குச்சதவீதம் மிகக் குறைவாக பதிவாகியுள்ளது. குறிப்பாக மத்திய சென்னை மற்றும் தென் சென்னையில் வாக்குப் பதிவு மிகவும் குறைவு. ஊழலும், லஞ்சமும் அரசியல் கட்சிகள் இயங்க அடிப்படைக் கட்டமைப்புகளாக நிலைநிறுத்தப்பட்டிருக்கும் இன்றைய தேர்தல் அரசியல் தளத்தில், நேர்மையான தலைவர்களின் வருகையை எதிர்நோக்கும் இளைஞர்கள் மற்றும் மத்தியத்தர வர்க்கத்தினருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும். மேலும், அரசியல் தூய்மையை காரணம் காட்டி வாக்களிக்காமல் இருப்பதன் மூலம், அது மறைமுகமாக பாசிசத்தையும், சர்வாதிகாரத்தையும், பிரிவினைவாதத்தையும் பதவியில் அலங்கரிக்க உதவும். இவை மூன்றும் தான் காலநிலை மாற்றத்தை உந்தித் தள்ளும் விஷமிகளும்கூட. உலகமயமாக்கலுக்குப் பிந்தைய அரசியலானது ஊழல் கலாச்சாரத்தோடு ரத்தமும், சதையுமாக பின்னிப் பிணைந்தது இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் சாபக்கேடு.

எனினும், மனித இனம் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு தாம் வாழும் இடத்தைச் சுற்றியுள்ள சூழலியல் சிக்கல்கள், பொருளாதாரச் சீர்திருத்தங்கள், சமூகக் கட்டமைப்புகள் குறித்துதான் முதலில் ஆராய்ந்து தீர்வுகளை நோக்கி நகர வேண்டும். நமது கிராமங்கள், சிற்றூர்கள், நகரங்கள், பெரு நகரங்கள் தாய் நிலம், இந்தியத் துணைக்கண்டம் என்ற வரிசையில் சூழலியல் பிரச்சனைகளை பகுத்தறிந்து அரசியல் களம் காண்பதே சாலச்சிறந்த சூழலியல் அரசியலாக இருக்கும். இக்கட்டுரையில் இடம்பெற்ற கிராமங்களில் வாக்கு எண்ணிக்கை குறைவாக உள்ளதால்தான், அவர்களின் பிரச்சனைகளுக்கு ஆட்சியாளர்கள் செவி சாய்ப்பதில்லை. அந்த அலட்சியம்தான் இவ்வளவு காலப் போராட்டத்திற்கு பின்பும், இத்தனை கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தாலும் கவலைப்பட நாதியில்லை எனும் நிலையாக உருமாறியுள்ளது. இந்த நிலை தொடருமேயானால், பெரும்பான்மைவாதத்துக்கு இட்டுச் செல்லும்.

எந்த ஒரு தனிமனிதனும், தன்னுடைய அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்த கடைசி ஆயுதமாக இருப்பது வாக்குரிமை மட்டும்தான். சுட்டெரிக்கும் வெயிலில் கால்கடுக்க நின்று விரல் ரேகை தேயத் தேய இத்தனை ஆண்டுகளாக ஓட்டுப் போட்டவர்களும், போடாதவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டியது ஒன்றுதான். இனி வரும் தேர்தல்களில் வாக்குப்பெட்டியை நிறைக்கப்போவது வெறும் ஓட்டுகள் அல்ல, அவை காலநிலை மாற்றத்தை ஆட்சியாளர்களுக்கு உரக்கச் சொல்லும் ஒலிப்பேழையாக அமையும்!

– மணிஷங்கர்

 

குறிப்பு: இக்கட்டுரை 2024 மே மாத பூவுலகு இதழில் வெளியானது.

 

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments