தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ச்சியாக காட்டுத் தீ சம்பவங்கள் அதிகரித்து வருவது ஒன்றிய வனத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் மக்களவையில் தெரிவித்த பதிலின் மூலம் தெரியவந்துள்ளது.
மக்களவை அடூர் பிரகாஷ் காத்துத் தீ சம்பவங்கள் குறித்து எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக ஜூலை 29ஆம் தேதி பதிலளித்திருந்தார் ஒன்றிய வனத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங். இத்தகவலின்படி இந்திய அளவில் காட்டுத்தீ சம்பவங்களின் எண்ணிக்கையானது கடந்த 4 பருவங்களில் குறைந்து வருவதாகத் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் நவம்பர் முதல் ஜூன் வரையிலான 8 மாதங்கள் காட்டுட்தீ அதிகம் ஏற்படும் பருவமாக உள்ளது. மொத்தமுள்ள மாநிலங்களில் 62% க்கும்அதிகமான மாநிலங்கள் மிகத் தீவிரமான காட்டுத் தீ ஏற்படும் மாநிலங்களாக உள்ளன. காலநிலையில் ஏற்பட்டு வரும் அதிவேக மாற்றத்தால் கூடுதல் மற்றும் தீவிரமான காட்டுத் தீ அதிகம் உருவாகக் கூடிய மாநிலங்களாக ஆந்திரா, அஸ்ஸாம், சட்டிஸ்கர், ஒடிஷா, மகராஷ்டிரா போன்ற மாநிலங்கள் இருப்பதாக CEEW மேற்கொண்ட ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது.
காட்டுத் தீயானது இயற்கையான மற்றும் மனிதர்களின் செயல்பாடுகளினால் உண்டாகிறது. புவி வெப்பமயமாதல் ஏற்படும் அதீத வெப்பம், மழைப்பொழிவு பற்றாக்குறையால் காட்டில் அதிகளவிலான இலைகள் உதிர்கின்றன. மனிதர்களால் காட்டுத்தீ ஏற்படுகையில் அது அதிக பரப்பளவிலும், தீவிரமாகவும் பற்றி எரிகிறது.
ஒன்றிய இணை அமைச்சர் அளித்த பதிலில் 2020ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவில் காட்டுத் தீ சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக க் கூறப்பட்டிருந்தது. ஆனால், காட்டுத் தீயால் பாதிப்படைந்த காடுகளின் பரப்பளவு மற்றும் உயிரிழந்த காட்டுயிர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் ஏதும் அமைச்சகத்திடம் இல்லை எனவும் இணை அமைச்சர் பதிலளித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் ஏற்பட்ட காட்டுத் தீ சம்பங்களின் எண்ணிக்கை.
| ஆண்டு | 2020 நவம்பர் – 2021 ஜூன் | 2021 நவம்பர் – 2022 ஜூன் | 2022 நவம்பர் – 2023 ஜூன் | 2023 நவம்பர் – 2024 ஜூன் |
| காட்டுத் தீ எண்ணிக்கை | 3,45,989 | 2,23,333 | 2,12,249 | 2,03,544 |
இந்திய அளவில் காட்டுத் தீ சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் தமிழ்நாட்டில் இந்த எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
| ஆண்டு | 2020 நவம்பர் – 2021 ஜூன் | 2021 நவம்பர் – 2022 ஜூன் | 2022 நவம்பர் – 2023 ஜூன் | 2023 நவம்பர் – 2024 ஜூன் |
| காட்டுத் தீ எண்ணிக்கை | 1,220 | 1,035 | 1,998 | 3,380 |
குறிப்பாக கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் காட்டுத் தீ சம்பங்களின் எண்ணிக்கை 1.5 மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
https://x.com/supriyasahuias/status/1648340517208588288?t=SE31AcTTUsXSLAydtnHgoA&s=19
தமிழ்நாடு அரசு காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 2024-25 ஆண்டில் காட்டுத் தீ பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மைப் பணிகளுக்காக ரூ.94.44 கோடி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. காட்டுத் தீ தொடர்பான தகவல் மற்றும் ஒருங்கிணைப்பை விரைவுபடுத்துவதற்காக, மாநில வன தீயணைப்பு கட்டுப்பாட்டு மையம் வனத்துறை தலைமையகத்தில் 77.69 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த 33 மாவட்டத் தலைமையகங்களில் மாவட்ட வன தீயணைப்பு கட்டுப்பாட்டு மையங்கள் ரூ. 628.55 லட்ச ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
புவி வெப்பமயமாதலின் தீவிரத்தால் ஏற்படும் அதீத வெப்பமும் பற்றாக்குறையான மழைப்பொழிவும் நம் காடுகளை காட்டுத் தீ ஏற்படும் அபாயங்கள் அதிகமுள்ளதாய் மாற்றியுள்ளது. முறையான திட்டமிடல் மூலம் நம் காடுகளையும் காட்டுயிர்களையும் ஒன்றிய, மாநில அரசுகள் காப்பாற்ற வேண்டும்.
- சதீஷ் லெட்சுமணன்
forest fire
