கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிமீறல்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வட்டார/மண்டல அளவில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அலுவலகங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் 1076கி.மீ. தூரத்திற்கு கடற்கரை உள்ளது. கடற்கரை மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகள், கடற்கரையை ஒட்டிய சூழல் அமைவுகளில் ஏதேனும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றால் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அனுமதி அவசியமாகும். இதற்காக உருவாக்கப்பட்டதுதான் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை, 2006. கடற்கரைப் பகுதிகளில் அமைக்கப்படும் அனைத்துத் திட்டங்களுக்கும் இந்த அறிவிக்கையின்கீழ் பல்வேறு நிபந்தனைகளுடன் மாநில அளவிலும் ஒன்றிய அளவிலும் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், அண்மைக் காலமாக தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் உரிய முன் அனுமதி பெறாமலோ அல்லது நிபந்தனைகளைப் சரிவர பின்பற்றாமலோ CRZ பகுதிகளில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதுகுறித்து சூழல் ஆர்வலர்களும், பொதுமக்களும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறைக்கு புகார் அளித்து வருகின்றனர். ஆனால், தமிழ்நாடு முழுவதும் நடக்கும் இதுபோன்ற விதிமீறல்களின்மீது சென்னையில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் துறை நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனைக் கருத்தில்கொண்டு வட்டார/மண்டல அளவில் நடவடிக்கை எடுப்பது அளவில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அலுவலகங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
இம்முடிவானது அண்மையில் நடந்த தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பேசிய ஆணையத்தின் தலைவர் சுப்ரியா சாகு IAS, “கடற்கரை மண்டல மேலாண்மைப் பகுதிகளில் நடக்கும் விதிமீறல்களைக் கண்டறிவதற்கும், நடவடிக்கைகள் எடுப்பதற்கும் திறன் வாய்ந்த கண்காணிப்பு அமைப்புகள் தேவைப்படுவகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். இதனைக் கருத்தில்கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் கடற்கரை மண்டல மேலாண்மை விதிகளை நடைமுறைப்படுத்த வட்டார/மண்டல அளவில் தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறையின் அலுவலகங்களை அமைப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதற்கான முன்மொழிவைத் தயார் செய்யுமாறும் ஏற்கெனவே கண்டறியப்பட்ட CRZ விதிமீறல்கள் குறித்து தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்ட அளவிலான கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையங்களுக்கு சுற்றறிக்கைகளை வழங்குமாறும் ஆணையத்தின் தலைவர் சுப்ரியா சாகு IAS, உறுப்பினர் செயலாளர் தீபக் பில்கியிடம் தெரிவித்துள்ளார்.
– செய்திப் பிரிவு