அலையாத்திகள் (Mangroves),வெப்பமண்டல மற்றும் துணைவெப்பமண்டலப் பகுதிகளில் உவர்நீர் சூழலில் வளரும் தாவரக் குழுமங்களாகும். உப்பு நிறைந்த நீரில் மற்றும் ஆக்சிஜன் குறைந்த மண்ணில் வாழ்வதற்குத் திறன்பெற்ற மிகத் தனித்துவமான சூழலியல் அமைப்புகளில் வாழும் வெகுசில உயிரினங்களில் அலையாத்திகள் குறிப்பிடத்தக்கவை. இவை உயிர்ப்பன்மயச் சூழலை உருவாக்கும் மற்றும் அவற்றைப் பாதுகாக்கும் திறன் பெற்ற பவளத்திட்டுகள் மற்றும் கடற்புற்களின் முக்கியத்துவத்துக்கு நிகரானவை.
இவற்றின் சிக்கலான வேரமைப்பானது அலையின் ஆற்றல்/வேகத்தை 60% முதல் 70% வரை குறைக்கும் திறன் பெற்றிருப்பதால் புயல் மற்றும் கடல் அலைச் சீற்றத்தின் தாக்கத்தை மட்டுப்படுத்துகிறது. மேலும் இவற்றின் வேர்கள் வண்டல் படிவுகளைத் தக்க வைப்பதால் கடல் அரிப்பை தடுக்கின்றன. இது டெல்டா பகுதியின் பாதுகாப்பிற்கு முக்கியப் பங்காற்றுகிறது. இவற்றின் வேர்கள் மற்றும் கிளைகள் பல மீன், நண்டு போன்ற நீர் வாழ் உயிரினங்கள் மற்றும் வலசைப் பறவைகளின் வாழ்விடமாகும்.
சிலவகையான அலையாத்தி மரங்கள் மருத்துவ குணமிக்கவை. உலகளவில் வெப்பமண்டலக் காடுகளில் ஒரு விழுக்காடிற்கும் குறைவாகவே உள்ள அலையாத்திக் காடுகள் வெப்பமண்டலக் காடுகளின் கார்பன் உற்பத்தியில் மூன்று விழுக்காடை உறிஞ்சி தக்கவைத்துக் கொள்கிறது. மேலும், இம்மரங்கள் இறந்த பின்பும் நீருக்கடியில் புதைந்து கார்பனை வெளியிடாமல் இருப்பதால் அவை நீருக்கடியில் சேமிக்கப்படுகிறது. மேலும் அலையாத்தி மரங்கள் சுற்றுப்புற மக்களின் வாழ்வாதாரத்தில் பெரும் பங்குவகிக்கிறது.
தற்சமயம் தமிழ்நாட்டில் மொத்தம் 41.91 சதுர கிலோமீட்டர் அளவிலான அலையாத்திக் காடுகள் உள்ளன. இது இந்தியாவின் அலையாத்திக் காடுகளின் பரப்பளவில் சுமார் 0.84% ஆகும். தமிழ்நாட்டில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 16 வகை அலையாத்தி மரங்கள் காணப்படுகிறது. இவை தமிழ்நாட்டின் தஞ்சாவூர், கடலூர், திருவாரூர் உட்பட 11 கடற்கரை மாவட்டங்களில் பரவியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள இரண்டு முக்கியமான அலையாத்தி சூழலமைவுகள், கடலூர் மாவட்டத்தின் பிச்சாவரத்தில் மற்றும் காவிரி டெல்டாவின் ஒரு பகுதியாக உள்ள திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு இடையிலான முத்துப்பேட்டை பகுதியில் காணப்படுகின்றன. இவற்றைத் தாண்டி தமிழ்நாட்டின் பிற கடற்கரைப் பகுதிகளிலும் சிறிய அளவிலான அலையாத்திகள் காணப்படுகின்றன. இவை நாகப்பட்டினம் மாவட்டத்தின் வேதாரண்யம், கோடியக்கரை (Point Calimere) பகுதிகள், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள மன்னார் வளைகுடா தீவுகள், மேலும் திருவள்ளூர், விழுப்புரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆங்காங்கே அமைந்துள்ளன. ஆங்காங்கே இருந்தாலும், அலையாத்திகளின் கடற்கரை நிலைத்தன்மை, மீன்வள மேம்பாடு மற்றும் உயிரியல் பல்வகைமையைப் பாதுகாப்பதில் அவை முக்கியப் பங்காற்றுகின்றன. மொத்தத்தில், தமிழ்நாட்டில் அலையாத்திகள் பெரும்பாலும் முகத்துவாரங்கள்(estuaries), கழிமுகங்கள்(lagoons), மற்றும் தீவுகளுக்குள் பரவியுள்ளன. இவை பெரும்பாலும் தொடர் பரப்புகளாக அல்லாமல், தனித்தனி பாகங்களாகவே காணப்படுகின்றன. இப்பரவல் முறை, தமிழ்நாட்டு கடற்கரையின் குறுகிய தன்மை, வரையறுக்கப்பட்ட டெல்டா வடிவங்கள் மற்றும் உள்ளூர் சேற்று நில(mudflat) உருவாக்கம் ஆகியவற்றால் நிகழ்ந்துள்ளது.

நீண்டகால தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக தமிழ்நாட்டில் அலையாத்திக் காடுகளின் வளர்ச்சி ஆரோக்கியமாக உள்ளது. 1987 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட அலையாத்திக் காடுகளின் பரப்பளவு வெறும் 23 சதுர கிலோமீட்டர் மட்டுமே ஆகும். ஆனால், இது 2023 ஆம் ஆண்டில் 41.91 சதுர கிலோமீட்டர் ஆக உயர்ந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் சுமார் 82 விழுக்காடு வளர்ச்சியைத் தமிழக அலையாத்திக் காடுகள் எட்டியுள்ன.
தமிழ்நாட்டில் அலையாத்திக் காடுகளின் பரப்பளவு அதிகரித்ததற்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக, கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரம் மற்றும் தஞ்சாவூர்-திருவாரூர் எல்லைப் பகுதியில் உள்ள முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகளை மீட்டெடுக்கும் மற்றும் பாதுகாக்கும் முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. பிச்சாவரத்தில், உலகளாவிய அளவில் சமூக பங்கெடுப்பின் மூலம்(community-based) அலையாத்திக் காடுகளைச் சீரமைக்கும் பணிகள் சிறந்த முன்மாதிரித் திட்டங்களுள் ஒன்றாக சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது.
பசுமைத் தமிழ்நாடு இயக்கம் (Green Tamil Nadu Mission), தேசிய கடலோர மண்டல மேலாண்மைத் திட்டம் (National Coastal Zone Management Programme), உலக வங்கி (World Bank), ஐ.நா. மேலாண்மைத் திட்டம் (UNDP) போன்றவற்றின் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் மூலம் அலையாத்திகள் பரப்பளவு அதிகரிப்பு மற்றும் மறுசீரமைப்புக்கு உதவியுள்ளன. இப்பணிகளில் உள்ளூர் மக்களை இணைத்துச் செயல்படுத்தியதும் இவ்வெற்றிக்கான முக்கியக் காரணமாகும்.

தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கமானது (TN SHORE) கடலோர சூழலியல் அமைப்புகளின் நிலைத்தன்மை மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்குள், இத்திட்டம் 12 கடலோர மாவட்டங்கள் முழுவதும் 300 ஹெக்டேரில் புதிய அலையாத்திக் காடுகளை உருவாக்கவும், 700 ஹெக்டேரில் சேதமடைந்த அலையாத்திக் காடுகளை மீட்டெடுக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் அலையாத்தி காடுகளின் பரப்பளவானது முன்னைக்காட்டிலும் குறைவாகவோ அல்லது எவ்வித வளர்ச்சியுமின்றி தேக்க நிலையிலோ உள்ளபோது, தமிழ்நாட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அலையாத்திகள் நடப்படுவது பாதிக்கப்பட்ட அலையாத்திகளைச் சீரமைப்பது மற்றும் பாதுகாப்புத் திட்டங்களின் சிறப்பான செயல்பாடுகள் அலையாத்திக் காடுகளின் பரப்பளவு அதிகரிப்பதற்கு முக்கியக் காரணங்களாக உள்ளன.
எழில் நிலா
