ஒட்டுமொத்த பருவமழை காலத்திற்கும் பெருமழைக்குத் தயார் நிலையில் இருப்போம். – பூவுலகின் அறிக்கை

நடப்பாண்டின் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 3வது வாரத்தில் தொடங்க வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது. இப்பருவமழை காலத்திற்கான நீண்டகால வானிலை முன்னறிவிப்பை அண்மையில் இந்திய  வானிலை ஆய்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கடலோர ஆந்திரா, ராயலசீமா, கேரளா, மாஹே, தெற்கு உள் கர்நாடகா ஆகிய பகுதிகளில் மழைப்பொழிவு 112% ஆக, அதாவது இயல்பைவிட அதிகமாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. தற்போது எல் நினோ நடுநிலையாகவும், அடுத்த மூன்று மாதங்களில் லா-நினா ஏற்படச் சாதகமான சூழல் (80% வாய்ப்பு) நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் வட தமிழ்நாட்டில் இயல்பைவிட அதிகமாகவும், தென் தமிழ்நாட்டில், இயல்பைவிடக் குறைவாகவும் வடகிழக்குப் பருவமழை பதிவாக வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்துள்ளார். கடந்த 82 ஆண்டுகளில் லா-நினா ஆண்டுகளாக இருந்த 42 ஆண்டுகளில் 23 ஆண்டுகள் இயல்பாகவும், 13 ஆண்டுகள் இயல்பைவிடக் குறைவாகவும், 6 ஆண்டுகள் இயல்பைவிட அதிகமாகவும் மழைப்பொழிவு இருந்துள்ளது. அதாவது, 69% இயல்பு, இயல்பைவிட அதிகமாகவும், 31% இயல்பைவிடக் குறைவாகவும் மழைப்பொழிவு இருந்துள்ளது.

காயல்பட்டினத்தில் 24 மணிநேரத்தில் 95 செ.மீ.மழைப்பொழிவு பதிவானது; ஆனால், இது தொடர்பான தெளிவான முன்னெச்சரிக்கைகளை இந்திய வானிலை ஆய்வுத்துறை முன்கூட்டியே தமிழ்நாடு அரசுக்கு வழங்கியிருக்கவில்லை. ஆகவே, குறைந்த கால அளவில் வரலாறு காணாத பெருமழை பெய்வது தொடர்ந்து நடக்கக்கூடிய நிகழ்வுகளாக மாறிவிட்டது. இதற்குக் காரணம் புவி வெப்பமயம்மாதலால் உந்தப்பட்ட காலநிலை மாற்றம்தான். வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் அதிக எண்ணிக்கையில் புயல்கள் உருவாவதும், அவை மிகக் குறைவான நேரத்திற்குள் அதி தீவிரப் புயல்களாக வலுப்பெறுவதும் அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழலில் ஒட்டுமொத்த வடகிழக்குப் பருவமழை காலத்திற்கும் நாம் வெறும் பருவமழையை எதிர்கொள்வதற்கெனத் தயாராகாமல் அதி தீவிரப் புயல் மழை பாதிப்புகளைச் சந்திக்கத் தயாராக வேண்டும். அப்படித் தயாராவது மட்டுமே பாதிப்புகளை மட்டுப்படுத்த உதவும்.

மேலும் வடகிழக்குப் பருவமழை காலம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட பல தனியார் வானிலை ஆய்வாளர்களும்  சென்னை முதல் நாகப்பட்டினம் வரையிலான கடற்கரை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவு இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயல் ஆகியவற்றால் அதிக மழைப்பொழிவு இருக்கக்கூடும் என எச்சரித்துள்ளனர்.

மேலும், இந்த வடகிழக்குப் பருவமழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய காலத்தில் வட கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் குறைந்த காலத்தில் அதிக மழைப்பொழிவு இருக்கும் எனவும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புயல்கள் நேரடியாக மேற்கூறிய மாவட்டங்களில் கரையைக் கடக்கும் எனத் தெரிவித்துள்ளனர். இந்த எச்சரிக்கைகள் அனைத்தையும் தீவிரமாக எடுத்துக்கொண்டு மாவட்ட அளவில் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும்.

செப்டம்பர் மாதம் தொடங்கி முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டங்கள், நீர்வளத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மின்சாரத்துறை அமைச்சர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டங்கள், சென்னையில் மண்டல வாரியாக இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை நியமித்தது உள்ளிட்ட செயல்பாடுகள் இப்பருவமழையை எதிர்கொள்ள அரசு உரிய முறையில் தயாராகி வருகிறது என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஆனாலும், புவி வெப்பமயமாதலால் உந்தப்பட்ட காலநிலை மாற்றம் யாரும் கணிக்க முடியாத தாக்கத்தை குறுகிய காலத்தில் ஏற்படுத்திச் செல்கிறது. பேரிடருக்குத் தயாராவது, பேரிடரை எதிர்கொள்வது, பேரிடலிருந்து மீள்வது, மீண்டும் அடுத்த பேரிடருக்குத் தயாராவது என தொடர்ச்சியாக இதற்கு மட்டுமே அரசு இயந்திரம் இயங்கிக் கொண்டிருப்பதை காலநிலை மாற்றம் உறுதி செய்கிறது.

மேலும், அன்றாடம் செய்தித்தாள்களிலும் சமூக வலைதளங்களிலும் மெட்ரோ, வெள்ளநீர் வடிகால் உள்ளிட்ட பணிகளுக்காக சகதியாலும் பள்ளங்களாலும் நிறைந்த சாலைகள் குறித்த பதிவுகள் வந்துகொண்டே இருக்கின்றன. பருவமழை தொடங்கப்போகும் இக்காலத்திற்கு முன்பே முடிந்திருக்க வேண்டிய பணிகள் இன்னமும் நடந்துகொண்டிருக்கின்றன. இப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். அதேபோல கூவம் ஆற்றில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் கொட்டப்பட்ட கட்டிடக் கழிவுகளை விரைந்து அகற்ற வேண்டும். மிகவும் குறிப்பாக சென்னையின் வெள்ள பாதிப்பைக் குறைப்பதற்காக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஆட்சிப்பணி அதிகாரி திருப்புகழ் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை வெளியிட வேண்டும்.  கூடுதல் விழிப்புடன் செயல்பட்டு பாதிப்புகளைக் குறைக்கவும், பாதிப்புகளிலிருந்து உடனடியாக மீளும் வகையில் வடகிழக்குப் பருவமழை செயல்பாடுகளை முடுக்கிவிட தமிழ்நாடு அரசைக் கோருகிறோம்.

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments