காலநிலை நீதிக்கே முன்னுரிமை வழங்குக; புதிய ஆட்சிக்கு வாழ்த்துகள்!

காலநிலை

தமிழ் நாடு அரசின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்குப் பூவுலகின் நண்பர்கள் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தால் உந்தப்பட்ட புவி வெப்பமயமாதலின் தாக்கத்தால் பாதிக்கப்படாத பகுதிகளே கிடையாது என்கின்றனர் ஆய்வாளர்கள். நீண்ட கடற்கரையைக் கொண்ட இந்தியா காலநிலை மாற்றத்தின் அனைத்துத் தாக்கங்களையும் எதிர்கொண்டு வருகிறது. காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 12ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் நாட்டில் காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவுகளான பேரிடர்களின்  எண்ணிக்கையும் தீவிரமும் அதிகரித்து வருகிறது. ஒரு பேரிடரைச் சந்திப்பது, அதிலிருந்து மீள்வது, மீண்டும் ஒரு பேரிடரை எதிர்கொள்வது என்பதே தமிழ் நாட்டின் புதிய இயல்பாக மாறியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை ஆய்வு மையத்தின் அறிக்கை, வட கிழக்குக் கடலோரப் பகுதிகள் தீவிர வானிலை நிகழ்வுகளால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவை எனவும், வடகிழக்குப் பருவமழையின்போது, பெருவெள்ளம், சூறாவளி, கடல் மட்ட உயர்வு, பல நாள்களுக்கு நீர் தேங்குவதால் விவசாயத்தில் ஏற்படும் கடும் சேதம் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்கிறது எனக் குறிப்பிட்டுள்ளதைப் பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அடர்ந்த காடுகள் காரணமாகக் கரியமில வாயு குறைவாக வெளிப்படுவதால் ஒப்பீட்டளவில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் குறைந்த பாதிப்பை எதிர்கொள்வதாகவும். அதே வேளையில் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் பாதிப்புக்குள்ளாவதால் வறட்சி அதிகரித்து, விவசாய உற்பத்தியைப் பாதிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

வேளாண் புள்ளிவிவரங்கள் ஒரு கண்ணோட்டம் (2024) அறிக்கையின்படி, தமிழ்நாடு எண்ணெய் வித்துகள், நிலக்கடலை, கரும்பு உற்பத்தித்திறனில் முதலிடத்திலும், மக்காச்சோள உற்பத்தித்திறனில் இரண்டாம் இடத்திலும், நெல் உற்பத்தித்திறனில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. வணிக விவசாய விரிவாக்கம், தமிழ்நாட்டின் முதன்மைப் பயிர்களின் உற்பத்தித்திறன் அதிகரிப்பு ஆகியவை ரசாயன உரங்களையும் நிலத்தடிநீரையும் அதிகமாகப் பயன்படுத்துவதன் வாயிலாக எட்டப்படுகின்றன.

உணவுப் பொருட்களின் விலையானது காலநிலை மாற்றத்தால் கடும் தாக்கத்தைச் சந்திக்கிறது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் நிலவும் வெப்ப அலைகளும் கணிக்க முடியாத மழைப்பொழிவும் உணவுப்பொருள் உற்பத்தியைக் குறைக்கின்றன. உணவு மற்றும் பானங்களின் பணவீக்கம் 2023-2024 இல் 7.4% ஆக உயர்ந்துள்ளது. இது மற்ற அனைத்துப் பிரிவுகளின் பணவீக்கத்தை விடவும் அதிகமாகும். தட்பவெப்ப நிலையில் ஏற்பட்ட பாதகமான மாற்றம்தான் இவ்வுயர்வுக்குக் காரணம் என்கிறது பொருளாதார ஆய்வறிக்கை.

இப்படி ஒரு இக்கட்டான நிலையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டியது அவர்களின் தலையாய கடமை என்பதை நினைவூட்டக் கடமைப் பட்டுள்ளோம்.

  1. தமிழக வெற்றிக் கழகம் தங்களது தேர்தலுக்கு முந்தையை அறிவிப்புகள், தீர்மானங்களில் அணுக்கனிம சுரங்கங்கள், பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக எடுத்த முடிவுகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
  2. காவிரி டெல்டா மாவட்டங்களில் செயல்பட்டு வரும் ONGCயின் எண்ணெய்க் கிணறுகளால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பாக பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் அரசிடம் சமர்ப்பித்த அறிக்கையை உடனடியாக வெளியிட்டு அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  3. தொழிற்சாலைத் திட்டங்களுக்காக வேளாண் நிலங்களை கட்டாயப்படுத்திக் கையகப்படுத்தக் கூடாது.
  4. தமிழ் நாடு முழுவதும் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இயற்கை வளங்களைச் சுரண்டிய மணல்/கல் குவாரிகள் மூடப்பட வேண்டும்.
  5. கடந்த காலங்களில் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், சூழல் விரோதத் திட்டங்களுக்கு எதிராகவும் போராடிய மக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.
  6. அனைத்து விதத் திட்டங்களையும் காலநிலை மாற்றக் கண்ணோட்டத்தில் அணுக வேண்டும்.

தமிழ் நாடு எத்தனையோ சமூக மாற்றங்களுக்கு சிறந்த உதாரணமாகவும், முன்னோடியாகவும் இருந்துள்ளது. காலநிலை நீதியே உண்மையான சமூக நீதி என்பதை மனதில் வைத்து  நம் மாநிலத்தை சூழலுக்கு இசைவான வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கோருகிறோம்.

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted