உத்தரப் பிரதேசத்தில் மே 13, 2026 அன்று பலத்த காற்றுடன் பெய்த மழை, இயல்பான கோடை மழை நிகழ்வு அல்ல என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். உத்தர பிரதேச பேரிடஃர் மேலாண்மைத் துரையின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இப்புயலில் 117 பேர் உயிரிழந்துள்ளனர். சில இடங்களில் காற்று மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் வீசியதால் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இது கடலில் உருவான புயல் அல்ல. நிலப்பரப்பில், இடியுடன் கூடிய கடும் புயலாக உருவானது என்பதே இதன் முக்கியமான அம்சம்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, 2026ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் தேதி, வடமேற்கு உத்தரப் பிரதேசத்தில் இருந்து பல மிதமான முதல் கடுமையான இடியை உருவாக்கக்கூடிய மழை மேகங்கள் முற்பகல் நேரத்தில் உருவாகி, மத்திய உ.பி. வழியாக தென்கிழக்கு உ.பி. நோக்கி நகர்ந்துள்ளன. இதனால் உ.பி. மாநிலம் முழுவதும் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இந்த மேகக்கூட்டம் தென்கிழக்கு நோக்கி நகரும்போது படிப்படியாக தீவிரமடைந்துள்ளன; அதனால் தென்கிழக்கு உ.பி. மாவட்டங்களில் மிகவும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
Report on Thuderstorm Event over UP on 13th May 2026இவ்வானிலை நிகழ்வுடன் பல மாவட்டங்களில் சூறாவளி / பலத்த காற்று, மாநிலத்தின் சில இடங்களில் ஆலங்கட்டி மழை, மிதமான முதல் தீவிரமான மின்னல் தாக்கம், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை உள்ளிட்டவையும் நிகழ்ந்து பலத்த சேதம் உண்டானது. இப்பாதிப்புக்கு முக்கியக் காரணம், 13ஆம் தேதிக்கு முந்தைய நாள்களில் அப்பகுதிகளில் நிலவிய கொடும் வெப்பத்தன்மை என்பதையும் IMD தெரிவித்துள்ளது. கோடைகாலத்தில் நிலம் அதிகமாக சூடாகும்போது, தரைக்கு அருகில் இருக்கும் காற்றும் சூடாகிறது. சூடான காற்று எடை குறைவதால் வேகமாக மேலே எழுகிறது. இதையே அறிவியலில் “convection” என்கிறோம். இந்த மேலேறும் காற்றுதான் இடியுடன் கூடிய மேக உருவாக்கத்திற்கு அடித்தளம் அமைக்கிறது.
இரண்டாவது காரணம், ஈரப்பதம். வெப்பம் மட்டும் புயலை உருவாக்காது. காற்றில் ஈரப்பதமும் அதிகமாக இருக்க வேண்டும். சூடான ஈரமான காற்று மேலே எழுந்து குளிரும்போது, அதிலுள்ள நீராவி நீர்த்துளிகளாக மாறுகிறது. இந்த செயல்முறை மேகங்களை வேகமாக வளரச் செய்கிறது. அங்கிருந்து மின்னல், கனமழை, ஆலங்கட்டி மழை, திடீர் காற்றழுத்த மாற்றம், தீவிரக் காற்று ஆகியவை உருவாகின்றன.
மூன்றாவது காரணம், மேற்கு சலனம். Down To Earthல் குறிப்பிடப்பட்டுள்ள விளக்கத்தின்படி, வடக்கு பாகிஸ்தான் மற்றும் ஜம்மு பகுதிகளுக்கு அருகே இருந்த western disturbance, வட இந்திய வானிலையை மாற்றியுள்ளது. இதனுடன், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா, மத்தியப் பிரதேசம் போன்ற பகுதிகளில் இருந்த மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த அமைப்புகளும் இணைந்தன. இவை காற்றின் திசையையும் வேகத்தையும் மாற்றி, புயலை மேலும் தீவிரப்படுத்தின.
ஆனால், இதை ஒரு நாள் வானிலை நிகழ்வாக மட்டும் பார்க்க முடியாது. IPCC அறிக்கை தெளிவாகச் சொல்வது என்னவென்றால், மனிதச் செயல்களால் ஏற்பட்ட காலநிலை மாற்றம், நீர்சுழற்சியை தீவிரப்படுத்துகிறது. அதனால் சில பகுதிகளில் மழை மிகக் கடுமையாகவும், சில பகுதிகளில் வறட்சி மிக மோசமாகவும் மாறுகிறது. மேலும், உலக வெப்பநிலை அதிகரிக்கும் போது, பெருமழை நிகழ்வுகள் அதிக தீவிரம் பெறும் என்று IPCC கூறுகிறது.
WMO-வின் உலக காலநிலை அறிக்கைகளும் இதை உறுதி செய்கின்றன. 2015 முதல் 2025 வரையிலான 11 ஆண்டுகளும் மிக அதிக வெப்பம் கொண்ட ஆண்டுகளாக அமைந்துள்ளன என்று WMO கூறுகிறது. உலகம் சூடாகும்போது, வளிமண்டலம் அதிக ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்கிறது. அந்த கூடுதல் ஈரப்பதம் புயல்களுக்கும் கனமழைக்கும் கூடுதல் எரிபொருளாக மாறுகிறது.
உத்தரப் பிரதேசப் புயல் நம்மிடம் ஒரு முக்கிய கேள்வியை எழுப்புகிறது. புயல் வந்தது இயற்கை. ஆனால் 117 உயிர்கள் போனது இயற்கையா? பலவீனமான வீடுகள், பாதுகாப்பற்ற மின்கம்பங்கள், விழும் நிலையில் உள்ள மரங்கள், போதிய முன்னெச்சரிக்கை இல்லாமை, பாதுகாப்பற்ற தங்குமிடங்கள் அனைத்து மக்களிடமும் சென்றடையாத பேரிடர் முன்னெச்சரிக்கைகள் உள்ளிட்டவையே ஒரு தீவிர வானிலை நிகழ்வை மனிதப் பேரழிவாக மாற்றுகின்றன.
காலநிலை மாற்றம் இனி எதிர்கால ஆபத்து அல்ல. அது இன்றைய செய்தி. அது வெப்ப அலைகளில் தெரிகிறது. திடீர் வெள்ளங்களில் தெரிகிறது. இப்போது உத்தரப் பிரதேச புயலிலும் தெரிகிறது. இதைக் கருத்தில் கொண்டு நிவாரணம் அறிவிப்பது மட்டும் அல்ல. ஒவ்வொரு மாவட்டத்திலும் அறிவியல் அடிப்படையிலான முன்னெச்சரிக்கை அமைப்பு, பாதுகாப்பான வீடுகள், நிலைத்த மின்கட்டமைப்பு, அவசரகால தங்குமிடங்கள், கிராம அளவிலான பேரிடர் பயிற்சி ஆகியவற்றில் கூடுதல் வேண்டும்.
புயலை நிறுத்த முடியாது. ஆனால் புயலில் மக்கள் இறப்பதைத் தடுக்க முடியும். அதற்கான அறிவியல் நம்மிடம் உள்ளது. இப்போதைய தேவை, அரசியல் விருப்பமும் நிர்வாகப் பொறுப்பும்தான்.
- செய்திப் பிரிவு
Down To Earth இல் வெளியான முழு கட்டுரையை வாசிக்க:
