கிரிஜா வைத்தியநாதன் பசுமைத் தீர்ப்பாய உறுப்பினாராக சென்னை உயர்நீதிமன்றம் தடை

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக  தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற  கிரிஜா வைத்தியநாதனை நியமித்த மத்திய அரசின் உத்தரவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் காலியாக இருக்கும் நிபுணத்துவ உறுப்பினர்கள் பணியிடத்திற்கு தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற கிரிஜா வைத்தியநாதன், வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றி ஓய்வுபெற்ற சத்யகோபால் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி அருண்குமார் வருமா ஆகிய மூவரை நியமித்து அண்மையில் மத்திய அரசு உத்தரவிட்டது.
இதில் கிரிஜா வைத்தியநாதனுக்கு உரிய அனுபவம் இல்லாத காரணத்தினால் அவரது பணி நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டிருந்தது.
அந்த மனுவில், தேசிய பசுமை தீர்ப்பாய சட்டத்தின் பிரிவு 5ன் படி  நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்யப்பட கூடிய நபருக்கு, 15 ஆண்டுகள் இந்திய ஆட்சிப்பணி அனுபவமும், அதில் 5 ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் பணியாற்றிய அனுபவமும் இருக்க வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கிரிஜா வைத்தியநாதனுக்கு 15 ஆண்டுகளுக்கு மேல் இந்திய ஆட்சிப்பணி அனுபவம் இருந்தாலும், சுற்றுச்சூழல்  சார்ந்த பணிகளின் அனுபவம்  3 ஆண்டுகள் 6 மாதம் மட்டுமே உள்ளது என்பதால் இவரது நியமனம் தேசிய பசுமைத் தீர்ப்பாய விதிகளுக்கு எதிரானது என்றும்,  அதனால் அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும்  கோரப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பூவுலகின் நண்பர்கள் தரப்பில்  மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வாதாடினார். தனது வாதத்தில் சுற்றுச்சூழல் சார்ந்த துறைகளில் தேவைப்படும் அடிப்படை அனுபவத்தை கிரிஜா வைத்தியநாதன் பெற்றிருக்கவில்லை என்றும், அரசின் தலைமை செயலாளராக இருந்து அவர் முடிவெடுத்து விசயங்களை நிபுணத்துவ உறுப்பினராக இருந்து ஒப்புதல் அளிக்கும் வகையில் அவர் நியமனம் நடைபெற்றுள்ளது முறையானதல்ல என்று தெரிவிக்கப்பட்டது. ஏப்ரல் 19ல் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் நிபுணத்துவ உறுப்பினராக பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் சுட்டிகாட்டப்பட்டது.
 நமது தரப்பில்  முன்வைக்கப்பட்ட  சுற்றுசூழல் சார்ந்த அனுபவம் இல்லை என்ற குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, சட்டப்படியான அடிப்படை தகுதியை பெற்றிருக்கவில்லை என தெரிவித்து அவரது நியமன உத்தரவிற்கு தடை விதித்தனர்.
மேலும் வழக்கு குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை, மத்திய பணியாளர் துறை, கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments