சூழலியல் பார்வையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்

நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தமிழகத்தின் தற்போதைய  சுற்றுச்சூழல் பிரச்சினைகள்  குறித்துத் தங்களுடைய  நிலைப்பாட்டைத் தெரிவிப்பதோடு,  சுற்றுச்சூழலை பாதிக்காத நீடித்த  நிலையான  வளர்ச்சிக்கான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். சூழலியல் சார்ந்து கட்சிகள்     தங்களது தேர்தல் அறிக்கையில் இடம் பெற செய்ய வேண்டிய  பல்வேறுகோரிக்கைகளை “சுற்றுச்சூழல் தேர்தல்அறிக்கை 2021” யை தயார் செய்து      தமிழ்நாட்டின் அநேக கட்சிகளுக்குப்  பூவுலகின்  நண்பர்கள் குழு வழங்கியிருந்தது.

தற்போது  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் பெரும்பாலான கட்சிகள் தங்களது  தேர்தல்  அறிக்கையை  வெளியிட்டுள்ளனர்.  நான்கு கூட்டணிகளுக்கு தலைமை வகிக்கும் கட்சிகளின் அறிக்கையில் சுற்றுச்சூழல் குறித்து இடம்பெற்றுள்ள அறிவிப்புகள் குறித்த எங்கள் விமர்சனத்தை இங்கு முன்வைத்துள்ளோம்.

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

அதிமுகவின் 49 பக்கம் கொண்ட இந்தத் தேர்தல் அறிக்கையைச் சுற்றுச்சூழல் அடிப்படையில் பார்த்தோமானால் இதைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு எதிரான ஒரு அறிக்கை என்றுதான் குறிப்பிட முடியும். இந்த அறிக்கையில் உள்ள மிக  முக்கியமான சுற்றுச்சூழலுக்கு எதிரான ஒரு அறிவிப்பு என்னவென்றால் “தமிழகத்தின் அனைத்து ஆறுகளும் இணைக்கப்பட்டு 5 லட்சம் ஏக்கர் பரப்பிலான விளை நிலங்கள் பாசன  வசதி பெற வழிவகைச் செய்யப்படும்” என்று கூறப்பட்டிருப்பதே ஆகும். நதிநீர்  இணைப்பு என்பது ஒரு கவர்ச்சிகர அறிவிப்பு மட்டுமே என்று நாம் தொடர்ந்து  வலியுறுத்தி வருகிறோம். நதிகளை இணைப்பதால் ஏற்படும் பல்லுயிர்  பாதிப்புகள்  குறித்துப்பல்வேறு அறிவியல் பூர்வ ஆய்வுகள் வந்துவிட்ட நிலையில் தொடர்ந்துஎவ்வித    தரவுகளும் ஆய்வுகளும் இல்லாமல் வெள்ளநீரை உபரிநீராகக் கருதி  நதிகளை இணைப்பது பெரியளவில் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

உரிய ஆய்வுகளின்றி ஏற்கனவே தொடங்கப்பட்ட கருமேனியாறு – நம்பியாறு – தாமிரபரணி ஆறுகள் இணைப்புத் திட்டம், மேட்டூர் சரபங்கா திட்டம், காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டங்கள் அனைத்தும் சுற்றுச்சூழல் அடிப்படையில் பல  எதிர்ப்புகளைச்                சந்திந்து வருகின்ற நிலையில் தமிழகத்தின் அனைத்து ஆறுகளையும் இணைப்போம் என அறிவிப்பது நீர் மேலாண்மையில் அதிமுகவின்     அலட்சியத்தையே காட்டுவதாக அமைந்துள்ளது. இத்தனை ஆயிரம் கோடிகளை “எவ்வித    பயனையும்” அளிக்காத திட்டங்களில் முதலீடு செய்வது மற்ற  நீர்மேலாண்மை திட்டங்களுக்குத்  தேவைப்படும் நிதியை இல்லாமல் செய்துவிடும்.

“மாநிலம் முழுவதும் விரிவான ஆய்வு மேற்கொண்டு நீர் மேலாண்மையை  உறுதிப்படுத்தும் வகையில் வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரை தடுத்து நீர் பாசன    வசதிகளையும் குடிநீர் ஆதாரத்தைப் பெருக்கத் தேவையான இடங்களில்  அணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற அறிவிப்பு சுற்றுச்சூழலுக்கு எதிரான  திட்டமாகும். குறிப்பாகக் காவிரி ஆற்றில் கடைமடை வரை தண்ணீர் சென்று  நிலத்தடி நீர் ஆதாரத்தைப் பெருக்காமல் இருப்பதனால் காவிரி டெல்டாவே இறங்கிக்     கொண்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. இதே போன்ற நிலைதான் மற்ற  ஆறுகள் பாய்கின்ற பகுதிகளுக்கும் ஏற்படும். மேலும் ஆறுகள் வாயிலாக நன்னீர் கடலுக்குச் செல்வது   கடலின் சமநிலை பாதிக்கப்படாமல் இருக்கும். இப்படியான  நிலையில்  அதிமுகவின் இந்த அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது.

சுற்றுச்சூழலுக்கு நேரடியாக மாசு ஏற்படுத்தாத பொதுப் போக்குவரத்து திட்டத்திற்காக 5000 மின்சாரப் பேருந்துகளை இயக்குவது வரவேற்கத்தக்க அறிவிப்பு என்றாலும் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.  படிப்படியாகப் பழைய  பெட்ரோல், டீசல் வாகனங்களைக் கைவிடுவது குறித்த அறிவிப்பு (பொருளாதார  இழப்பீடு உடன்) இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.

சூரிய மின் சக்தியில் இயங்கும் அடுப்புகள் வழங்கப்படும் என்று கூறியிருப்பது  வரவேற்கத்தக்கது.கடல் நீரோட்டத்தைத் தடுத்து எழுப்பப்படும் கட்டுமானங்களினால் கடல்    அரிப்பும், கடற்கரை பரப்பு அதிகரிப்பதையும் மெரினாவிலும்,  திருவெற்றியூரிலும் நாம் பார்த்திருக்கிறோம். ஓரிடத்தில் கடலரிப்பைத் தடுக்கப்  போடப்படும் கருங்கல் பாறை தடுப்புச் சுவர்கள் அல்லது தூண்டில் வளைவுகள்  வேறொரு இடத்தில் கடலரிப்பு ஏற்படும் என்பதற்குத் தமிழகக் கடலோரத்திலேயே பல      சான்றுகள் உள்ள நிலையில் இதைப் புரிந்து கொள்ளாமல் தமிழகக்  கடற்கரையோரம் கருங்கல் தடுப்புச் சுவர்கள் திட்டத்தை முன்னெடுப்போம் என அறிவித்திருப்பதும் எதிர்க்கப்பட வேண்டியதாகும்.

அரசின் உரிய அனுமதியின்றியும்  வழிகாட்டுதல்களைப்  பின்பற்றாமலும்  செயல்பட்டுவரும் உள்நாட்டு மீன் வளர்ப்பு நிலையங்களால் நிலம் மற்றும் நீலத்தடி நீர்     மாசுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் அதைச் சீர் செய்யாமல் விவசாயத்திற்குப்  பயன்படாத கடலோர பகுதிகளைக் கண்டறிந்து அவற்றைக் கடலோர  மீன்வளர்ப்பிற்குப் பயன்படும் திட்டங்களை உருவாக்குவது தவறான முயற்சியாகும்.

வறண்ட நில விவசாய ஆராய்ச்சிக் கூடம், நம்மாழ்வார் பெயதில் இயற்கை வேளாண் ஆராய்ச்சி நிலையம், மாநில வேளாண்மை ஆணையம் உருவாக்கல்,  பனை மரம்

வளர்ப்பை ஊக்குவித்தல் போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்க விஷயங்களாகும். கூடங்குளம் அணுவுலைகள் விரிவாக்கம், எட்டுவழிச்சாலை, காட்டுப்பள்ளி

துறைமுகம், செயல்பட்டுக்கொண்டிருக்கும் “ஹைட்ரோகார்பன் கிணறுகள்” குறித்த எந்த    நிலைப்பாடும் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளித்தது. பொன்னேரியில்  நடந்த  பிரச்சாரத்தின்போது துணை முதல்வர் ஒ.பன்னீசெல்வம் காட்டுப்பள்ளியில் அதானி  துறைமுக விரிவாக்கத்திற்கான அனுமதியை வழங்க முடியாது என்று கூறியதை      வரவேற்கிறோம்.

திராவிட முன்னேற்றக் கழகம்      

தி.மு.கவின் தேர்தல் அறிக்கை 2021இல், பூவுலகின் நண்பர்கள் முன்னெடுத்த சூழலியல் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன, இதனைப்  பூவுலகின்  நண்பர்கள் அமைப்பு வரவேற்கிறது.

தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்களில் சூழலுக்குச் சாதகமானவை;

வேளாண்மை மற்றும் விவசாயிகளின் நலன் எனும் தலைப்பில், புதிய வேளாண்  சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. காவிரி     டெல்டா பகுதியில் மீத்தேன் வாயு மற்றும் ‘ஷேல்வாயு’ எடுக்கும் திட்டங்கள்  தடுத்து நிறுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

வேளாண்மைக்கு என்று நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று  கூறப்பட்டுள்ளது. சிறு தானிய வகைகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை உறுதி  செய்வதோடு, சிறு தானியங்களை அரசே கொள்முதல் செய்து நியாய  விலைக்கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுள்ளது.

இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த வேளாண் துறையில் தனியே ஒரு பிரிவு உருவாக்கப்பட்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இயற்கை வேளாண் அறியிவல் அறிஞர் கோ.நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆய்வு மையம் நிறுவப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு  இடு பொருள் மானியம் வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சீமை கருவேல  மரங்களும், ஆகாயத் தாமரை மலர்களும் அழிக்கப்பட்டு நீர் நிலைகள் முறையாகப்  பராமரிக்கப்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும்  இடையே ஏற்படும் மோதலை(Human-Animal Conflict) தவிர்க்க அணைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.    பன்னாட்டு நிறுவனங்களின் மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தை  இந்தியாவில் புகுத்த மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்ச்சியை தி.மு.கழகம்  முற்றிலுமாக எதிர்ப்பதோடு தமிழகத்தில் அதற்க்கான சோதனை முயச்சிகளுக்கும்  அனுமதி வழங்கப்படமாட்டாது என்று கூறப்பட்டுள்ளது. நீர் பாசனதுறைக்கெனத்  தனியாக ஒரு அமைச்சகம் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.  நீர் மேலாண்மை ஆணையம் (Water Management Authority) ஒன்றினை அமைப்பதற்குச் சட்டம் இயற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.  சென்னை பெருநகர் வெள்ள தடுப்பு மேலாண்மை குழு (Chennai Metro Flood Management Committee) ஒன்று அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆறுகள்  பாதுகாப்பு திட்டம்(Tamil Nadu River Conservation Project) உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்த நிலப்பகுதியில் குறைந்தபட்சம் 33% காடுகள் உருவாக்க  நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஹைட்ரோகார்பன்,  ஸ்டெர்லைட், மீத்தேன், கூடங்குளம் அணு உலை போன்ற திட்டங்களுக்கு எதிராகப்      போராட்த்தில் பங்கேற்றவர்கள் மீதான பொய் வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. டெல்லியில் இயக்கப்படுவது போல CNG  எரிவாயுவில் இயங்கும் புகையில்லா பேருந்துகள் தமிழத்தில் உள்ள அணைத்து  மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் படிப்படையாக இயக்க நடவடிக்கை  மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய  நிலம் பாதுகாக்கப்படும், பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி பறவைகள்  சரணாலயமாக மேம்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தனியார் குளிர்பான  நிறுவனங்கள் நீர் நீராதாரங்களிலிருந்து நீர் எடுப்பதைத் தடுக்க நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் அறிக்கை  வெளியியானதற்குப் பிறகு கன்னியாகுமரியில் நடந்த பிரச்சாரத்தின்போது பேசிய  திமுகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள சரக்குப்  பெட்டக துறைமுகத் திட்டத்தைத் திமுக ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்தாது என  அறிவித்தார். இந்த அறிவிப்பும் வரவேற்கத்தக்கதாகும்.

 

தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்களில் சூழலுக்குப் பாதகமானது எனக்      கருதத்தக்கவை;

இந்திய நதிகளை இணைக்கும் திட்டத்தை நிறைவேற்றுமாறு மத்திய அரசை  வலியுறுத்துவதோடு முதற்கட்டமாகத் தென்னக நதிகளை இணைக்கும் திட்டம்  ஒன்றை உருவாக்கி செயல்படுத்திட முயற்ச்சிகள் மேற்கொள்ளப்படும் எனக்  கூறப்பட்டுள்ளது. கால நிலை மாறி வருகின்ற தற்போதைய நிலையில் இத்தைகைய செயல்     திட்டம் சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்புகளையே உருவாக்கும். தமிழகத்தில்  உள்ள ஆறுகளை இணைப்பதற்க்கான பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள.  இவையும் எதிர்க்கப்பட வேண்டியதே. நதிகள் இணைப்பு என்பது சூழலுக்கும்  அங்குள்ள உயிரினங்களுக்கும் எதிரானது. நீர்வள பாதுகாப்பிற்கும், பயன்பாட்டிற்கும் நதிநீர்   இணைப்பு எந்த வகையிலும் பயனளிக்காது.

சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனக்  கூறப்பட்டுள்ளது.சூழலியல் பார்வையில் இத்திட்டம் எதிர்க்க பட வேண்டியதாகும்.  இத்திட்டத்திற்கான தேவையான கட்டுமானத்தில் பல இலட்ச்சக்ககான கடல் வாழ்  உயிரினங்கள் அழிவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

புதிய கனிம வளங்கள் மற்றும் சுரங்கங்கள் அமைச்சகம் உருவாக்கபடும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாகக் கனிம வளங்கள் அனைத்தும்  பெருவாரியாக எடுக்கப்பட்டுச் சூழல் சீர்கேடுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள்  உள்ளது.

ஜெயங்கொண்டம் அனல்மின் நிலையம், உடன்குடி அனல்மின் நிலையம் போன்ற  திட்டங்கள் நிறைவேற்றப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மாற்று எரிசக்தி  அறிவிக்கப்பட்ட போதிலும் அனல்மின் திட்டத்திற்கான அறிவிப்புகள் எதிர்க்கப்பட      வேண்டியவையே. கால நிலை மாற்றத்தை எதிர்கொள்ள அனல்மின்  நிலையங்களைப் புறக்கணிப்பது மிகவும் அடிப்படையானது..

கடல் நீரைக் குடிநீராக்கும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சூழலியல் பார்வையில் இத்தகைய திட்டங்களும் எதிர்க்கப்பட வேண்டியவையே.காலநிலை மாற்றம்   தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றத்தை  அளிக்கிறது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்

அமமுகவின் தேர்தல் அறிக்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அதிக  முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது, தமிழகத்தின் முக்கியச் சூழல்           பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் சரியாக முன்மொழிந்துள்ள இந்தத்  தேர்தல் அறிக்கையில் முரணாகச் சூழலுக்குக் கேடான விஷயங்களும் இருக்கத் தான்   செய்கிறது.

கூடங்குளம் விரிவாக்க திட்டத்தைக் கைவிடக் குரல் கொடுப்போம் எனவும்,  பாதுகாப்பும் பராமரிப்பும் இன்றி அணுவுலை செயல்படும் விதம் பற்றிச் சுதந்திரமான     அமைப்பை கொண்டு விசாரணை நடத்தப்பட்டுப் பாதுகாப்பு உறுதி  செய்யப்படும்  எனவும் துணிவாக எடுத்துரைக்கிறது அமமுகவின் தேர்தல் அறிக்கை.

“விவசாயத்தைப் பாதிக்கும் ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற எந்தத்   திட்டங்களையும் அனுமதிக்க மாட்டோம்”. “காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கபட்ட வேளாண் மண்டலமாக  அறிவித்திருப்பதை வெறும் வார்த்தைகளோடு நிறுத்தாமல், அது முழுமையாக  அமல்படுத்தபடும்”. “காவிரி நதி நீர் வாரியம் முறையாக அமல்படுத்தப்படும்” போன்ற வாக்குறுதிகள்  காவிரி விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கைகளின் பிரதிபலிப்பாக  இடம்பெற்றுள்ளது.

இது மட்டுமல்லாமல் “இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் பெயரில் காவிரி டெல்டாவில் இயற்கை வேளாண் பல்கலைக்கழகம் மற்றும்  ஆராய்ச்சி  நிறுவனம் அமைக்கப்படும். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கச் சிறப்புத்   திட்டங்கள் செயல்படுத்தப்படும்”. “மரபணு மாற்றப்பட்ட விதைகள், செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள்  ஆய்கியவற்றின் பயன்பாடு படிப்படியாகக் குறைக்கப்படும்”, “இயற்கை வழி உரங்கள், மருந்துகள் பயன்ப்பாட்டினை அதிகப்படுத்துவதுடன்  அவற்றிற்கான உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளும் உருவாக்கப்படும்”. “அடுத்த 10 ஆண்டுகளில் முழுமையாக இயற்கை வழி வேளாண்மையை  மேற்கொள்கிற மாநிலமாகத் தமிழ்நாட்டினை மாற்றுவதற்கான சிறப்புப் பல்நோக்குத் திட்டம் செயல் படுத்தப்படும்” ஆகிய வாக்குறுதிகள் கட்சிக்கு மக்கள் மீதும் மண் மீதும் உள்ள      அக்கறையைக் காட்டுகிறது.

கூடங்குளம் அணுவுலை திட்டம், தூத்துக்குடி ஸ்டர்லைட், கதிராமங்கலம் மீத்தேன்  திட்டம், உயர் மின் கோபுரம் அமைத்தல், கெயில் குழாய் பதித்தல் போன்ற  திட்டங்களுக்கு எதிராக மக்கள் நல போராட்டங்களில் பங்கேற்றவர்களின் மீதான  வழக்குகள் திரும்பப் பெறப்படும் எனக் கூறப்பட்டிருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கது.

இந்தத் தேர்தல் அறிக்கையின் மிக முக்கிய அம்சமாக நீர் மேலாண்மை குறித்த வாக்குறுதிகள்   திகழ்கின்றன. நிலத்தடி நீரை பாதுகாப்பதற்கான உரிய சட்டம்  நிறைவேற்றப்படும், தமிழ்நாட்டில் இருக்கிற ஆறுகளும், வாய்க்கால்களும், வடிகால்களும்     சீரழிவில் இருந்து மீட்டெடுக்கப்படும், ஏற்கனவே இருக்கும்  நீர்நிலைகளைப் பராமரிப்பதுடன்  புதிய நீர் நிலைகளை உருவாக்குவதை முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்படும்  போன்ற வாக்குறுதிகள் வரவேற்கதக்கதாக இருந்தாலும் காவிரி நதி நீர்  பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாகத் தென் மாநில நதிகளை இணைக்கும் திட்டம்  நடைமுறைப்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டிருப்பது சூழலியலாலர்களை முகம்  சுளிக்கச் செய்திருக்கிறது. நதி நீர் இணைப்பு போன்ற சாத்தியமில்லாத ஆடம்பர  திட்டங்கள் சுற்றுச்சுழலை திரும்பச் சரிசெய்ய முடியாத தீவிர பாதிப்புகளை  ஏற்படுத்தும் என நீண்டகாலமாக அறிவியல் பூர்வமாகப் பூவுலகின் நண்பர்கள்  சார்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“புவி வெப்பமயமாதல் சிக்கல்களை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள்  எடுக்கப்படும்” “இருக்கின்ற வனங்களை, இயற்கை வளங்களை, உயிரினங்களைப் பாதுகாக்கவும் காடுகளை   வளர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்”. “தமிழகம் முழுவதும் சாலை ஓரங்களில் மரம் நட்டு, பசுமை தமிழகம் திட்டம்  நடைமுறை படுத்தப்படும்” போன்றவை வரவேற்க்கப்பட வேண்டியவை.

தமிழ்நாட்டிலுள்ள முக்கியக் கட்சிகள் பலவும் அதானி காட்டுப்பள்ளி துறைமுகத்தை எதிர்க்கும் சூழலில் , “சென்னை, எண்ணூர், தூத்துக்குடி, காட்டுப்பள்ளி, கொளச்சல், நாகப்பட்டினம் உள்ளிட்ட எட்டு   துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறனை உரிய  கட்டமைப்புகளோடு  சர்வதேச தரத்துடன் உயர்த்த தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். துறைமுக  விரிவாக்கதிற்காகப் போதிய நிலங்கள் அளிக்கப்படும். இது குறிப்பிட்ட  துறைமுகத்தின் மேம்பாட்டிற்காக மட்டுமல்லாமல் துறைமுகத்தோடு தொடர்புடைய தொழிற்சாலைகள் அமைந்த தொழிற்பேட்டையாக அமையும் வகையில்  இருப்பது  உறுதி செய்யப்படும். அந்தத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான அனுமதிகளை  அந்தத் துறைமுக மேம்பாட்டு கழகமே அளிக்கும் வகையில் அதிகாரம் வழங்கப்படும்” என்றெல்லாம் மீனவ மக்கள் நலனுக்கு எதிராக அமமுகத் தேர்தல் அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

அதே வேளையில்    கன்னியாகுமரி மாவட்டம் மீனவர்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் இணையம் பெட்டக துறைமுகத் திட்டத்தை வரவிடமாட்டோம் என்று  அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. அது எப்படிக் காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு ஆதரவு    கன்னியாகுமரியில் துறைமுகத்திற்கு எதிர்ப்பு ? இது எந்த  அடிப்படையில் சரியாகும் ?

கஞ்சமலை, சேர்வராயன்மலை , கொல்லிமலை , திருவண்ணாமலை, கௌந்தி வேடியப்பன்   மலை ஆகிய பகுதிகளில் பெருமளவு இருக்கும் உலகத்தரம் வாய்ந்த  இரும்புத் தாது உள்ளிட்ட கனிமங்களைச் சூழலியல் பாதிப்பில்லாமல் வெட்டி எடுத்து ஏற்றுமதி செயப்படும் என்று குறிபிடப்பட்டுள்ளது, அது எப்படிச் சூழலியல்  பாதிப்பு இல்லாமல் காடுகளை அழித்து,   மலைகளைக் குடைந்து கனிமங்களை வெட்டி எடுக்கப்  போகிறார்கள் என்று புரியவில்லை.

கொடைக்கானல் Hindustan uniliver நிறுவனத்தின் பாதரச நச்சுக்கழிவுகள் பாதுகாப்பான முறையில் சர்வதேச  தரத்தில் அகற்றப்படும் என்று பலரும் மறந்துபோன ஒரு முக்கியப் பிரச்னையைப்  பேசி இருப்பது வரவேற்கத்தக்கது.

“மெட்ரோ ரயில் சேவை கட்டணக் குறைப்பு மற்றும் விரிவாக்கம் செய்யப்படும்”  என்பது மக்களைப் பொதுப் போக்குவரத்திற்கு ஊக்கபடுத்தவும் வாகன புகையைக்  குறைத்து நகர்ப்புற காற்று மாசை கட்டுபடுத்த உதவும் ஒரு நல்ல வாக்குறுதியாக  இடம்பெற்றுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சி

முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை 108 பக்கங்களில் வெளியாகியுள்ளது.

தனது பொருளாதாரக் கொள்ளைகளில் நெல், கரும்பு போன்ற பணப்பயிர்களின்  உற்பத்தி இரண்டு மடங்காக்கப்படும் என்றும் விவசாய உற்பத்தி நிறுவனங்களாக  இயங்கும் FPO வை விவசாய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களாக  மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு விஷயங்களிலுமே  அதிக நீர் தேவைப்படும் சூழல் உள்ளது. தமிழ்நாடு தற்சமயம் பெரும் தண்ணீர்  தட்டுப்பாட்டில் உள்ள நிலையில் தண்ணீரை குறைவாகப் பயன்படுத்தும் நடவடிக்கைகளை    மட்டுமே ஊக்குவிக்க வேண்டும்.. இதே பகுதியில் எங்கெல்லாம்  வறட்சி,   தண்ணீர் குறைபாடு இருக்கிறதோ அங்குக் குறைந்த தண்ணீரைப் பயன்படுத்தி  அறிவியல் சார்ந்த இயற்கை விவசாயம் செயல்படுத்தப்படும் என்று கூறியிருப்பது  வரவேற்கத்தக்கது.

நீலப்புரட்சி என்கிற தலைப்பில் ஏரிகள், கண்மாய்த் தூர்வாரல், மழைநீர் சேகரிப்பு,  நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக நடவடிக்கைகள் குறித்துச் செயல்திட்டங்கள்      இடம்பெற்றிருப்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும்  பல்லுயிர்  பெருக்கத்திற்கு  எதிரான நதிநீர் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவோம் எனக் கூறுவதைக்  கடுமையாக எதிர்க்கிறோம்.நிரந்தரப் பசுமைப் புரட்சி எனும் தலைப்பில் விளை  நிலங்களை மறு நில பாகுபாடு செய்யத் தடை விதிக்கப்படும் என்கின்ற அறிவிப்பு  வரவேற்கத்தக்கது. இதே பகுதியில் பி.டி.காட்டன், சீட் காட்டன் முறையில் பருத்தி  உற்பத்தி பெருக்கப்படும் என்று தெரிவித்திருப்பது அதிர்ச்சியளித்தது. இந்தப் பகுதி  மட்டும் இல்லாமல் அறிக்கையில் பல்வேறு தலைப்புகளில் மரபணு மாற்றம்  செய்யப்பட்ட தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பது குறித்து மக்கள் நீதி மய்யம் மிகத்  திடமான அறிவிப்புகளைச் செய்துள்ளது. மரபணு மாற்ற தொழில்நுட்பத்தின் பாதிப்புகள்    குறித்துக் கடந்த 2008ஆம் ஆண்டிருந்து பூவுலகின் நண்பர்கள் செய்து  வந்த  தொடர் பிரச்சாரத்தின் விளைவாகத் திமுகழ் அதிமுக உள்ளிட்ட முக்கியமான பல  கட்சிகளும் இதற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில் மக்கள் நீதி  மய்யம் இந்தத் தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதாக அறிவித்துள்ளது வினோதமாக  உள்ளது.

கிராமப்புற சுயச்சார்பு குறித்த பகுதியில் ஊரணிகள், குளங்கள், ஏரிகளைப்  பாதுகாக்க சுவர்கள் நடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும்  மனிதர்களைத் தவிர்த்த பிற உயிரினங்களுக்கு எதிரானது ஏரிகளும், குளங்களும்,  ஊரணிகளும் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. கால்நடைகள், பறவைகள்  எனப் பல உயிரினங்களுக்கும் அவை சொந்தம். சுவர் எழுப்புவது சரியான தீர்வாகாது.

எரிசக்தி சுதந்திர கொள்கை என்கிற பகுதியில் காற்றாலை மின்சார மின் கட்டமைப்பு        மேம்படுத்துவது குறித்துக் கூறப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். ஆனால்,  பிரச்னைக்குரிய அனல் மின் மற்றும் அணு மின் நிலைய பயன்பாட்டைக் குறைப்பதை பற்று  கூறாதது ஏமாற்றமளிக்கிறது. நகர்ப்புற மேம்பாடு பகுதியில் சாலையில் நடப்பவர்க்கு முதல்   உரிமையும், சைக்கிளில் செல்வோருக்கு இரண்டாவது உரிமையும், மோட்டார் வாகனங்களில் செல்வோருக்கு மூன்றாவது உரிமையும் வழங்கப்படும் என்ற  அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

மீனவ மக்களின் எதிர்பார்ப்புகளை அறியாமல் குளச்சல் துறைமுகத்தைச் சிங்கப்பூர் துறைமுகம் போலக் கட்டமைப்போம் எனக் கூறியிருப்பதை மறுபரிசீலனை  செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் மணல் கொள்ளையால் ஏற்பட்ட சுற்றுச்சூழல்  பாதிப்புகளை நாம் பார்த்து வருகிற நிலையில் மணல் கொள்கை என்ற தனித்  தலைப்பில் வெளிநாடுகளில் இருந்து மட்டும் மணல் இறக்குமதி, மாற்று கட்டுமான பொருட்கள் பயன்பாடு, பசுமை கட்டிடம் சார்ந்த தொழில்நுட்ப வழிமுறை  போன்ற  அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.

சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பகுதியில் மாசு கண்காணிப்பில் உள்ளூர் மக்கள்  பங்களிப்பு, உயிர்ச்சூழல் அமைப்புகள் பாதுகாப்பு குறித்த அறிவிப்புகள்  வரவேற்கப்பட வேண்டியது என்றாலும் அதனைத் தொடர்ந்து கனிம வள ஏற்றுமதி 50%      அதிகரிக்கப்படும் என அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கனிம வள  உற்பத்தியை அதிகரிப்பது என்பது இயற்கை வள சுரண்டலை ஊக்குவிக்கும் என்பதால்  எதிர்க்கப்பட வேண்டும்.

எரிவாயு திட்ட தலைப்பில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை டெல்டா மாவட்டங்களில்      அனுமதிக்க முடியாது என்று கூறியிருப்பதை வரவேற்றாலும் ஆழ்கடல்  திட்டங்களை ஆதரிப்பதை தவறான முடிவாகும். ஏழை எளிய மக்களுக்குச் சூரிய ஒளி மின்சாரக்  கட்டமைப்பு உருவாக்கி அதன் மூலம் மூன்று LED விளக்கு ஒரு ஃபேன், ஒரு டிவி மற்றும் மொபைல் சார்ஜர் கொண்ட சோலார் கிட் வழங்கப்படும் என்கிற  அறிவிப்பும்  வரவேற்கத்தக்கதாகும்.

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments