வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள ஆசிய சிங்கங்களுள் 5 சிங்கங்களுக்கு கடந்த மே 26ஆம் தேதி இருமல் உள்ளிட்ட உடல் நலக் குறைபாடு தென்பட்டதை அதிகாரிகள் கவனித்தனர். இதனையடுத்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக நிபுணர்கள் அழைக்கப்பட்டு 11 சிங்கங்களின் சளி மாதிரிகளை சேகரித்து சோதனை செய்ததில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் கடந்த 3ஆம் தேதி மாலை 9 வயது நீலா என்கிற பெண் சிங்கம் உயிரிழந்தது. இந்த செய்தியை உறுதிப்படுத்திய தமிழ்நாடு வனத்துறை தேசிய அளவில் உள்ள துறை அறிஞர்கள் மற்றும் விஞ்ஞானிகளிடம் இதுகுறித்து ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளது.
Zoonoses என்பது மனிதர்கள் அல்லாத விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு தாவும் தொற்று நோயாகும். இயற்கையாக அமைந்துள்ள வாழ்விடங்களை பல்வேறு மனித பயன்பாட்டிற்காக அழிப்பது மற்றும் மனித செயல்பாடுகளால் உந்தப்படும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் ஏற்படும் நிகழ்வுகளால் நோய்க்கிருமிருகளை கொண்ட விலங்குகளின் இடப் பெயர்வால் மனிதர்களுக்கு இந்த நோய் பரவுகிறது. இப்படி ஒரு தொற்றால் ஏற்பட்ட நோய்தான் SARS-CoV-2 எனப்படும் Covid-19. இந்த விலங்கியல் நோய் குறித்து அதாவது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவது குறித்து அறிஞர்கள் மட்டத்திலிருந்து சாதாரண பொது மக்கள் வரை கொரோனா பரவலின் முதல் அலை தொடங்கி இப்போது வரை ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால், தற்போது ‘Reverse Zoonoses’ குறித்து அறிந்து கொள்ளவும் விவாதிப்பதற்கான நேரம் வந்து விட்டதையே இந்த நீலா பெண் சிங்கத்தின் மரணம் நமக்கு எடுத்துரைக்கிறது.
விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய் குறித்து அறிந்து கொண்ட நாம் மனிதர்களும் சில வகை நோய்களை விலங்குகளுக்கு கடத்த வல்லவர்கள் என்பது குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக 2014ஆம் ஆண்டு PLOS ஆய்விதழில் Reverse Zoonotic Disease Transmission (ZOOANTHROPONOSIS) A Systematic Review of Seldom-Documented Human Biological Threats to Animals எனும் தலைப்பில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் அடிப்படையில் மனிதர்களால் 21 பாக்டீரியா, 12 வைரஸ், 7 பூஞ்சைக் கிருமிகளை விலங்குகளுக்கு கடத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக கடந்த ஆண்டு The Wire தளத்தில் வெளியான கட்டுரை ஒன்றில் உலகில் உள்ள மொத்த கால்நடைகளில் 17% கால்நடைகள் இந்தியாவில் இருப்பதும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மனித குடியிருப்புகள் அமைந்திருப்பதும் மனிதர்களிடமிருந்து நோய்க் கிருமிகள் விலங்குகளுக்கு பரவுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக கட்டுரையாளர்கள் ப்ரியா ரங்கநாதன் மற்றும் நோபின் ராஜா ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.
இப்படியான Reverse Zoonoses தொற்று பரவல் சம்பவங்கள் கடந்த ஆண்டே நடந்தன. குறிப்பாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள ப்ரான்க்ஸ் வன உயிரியல் பூங்காவில் 4 வயதான நாடியா என்ற பெண் புலிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அந்த புலியிடம் இருந்து மேலும் 4 புலிகளுக்கும், மூன்று ஆப்ரிக்க நாட்டு சிங்கங்களுக்கும் கொரோனா பரவியது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலும் கூட இதுபோன்ற சம்பவங்கள் குறிப்பாக ஐதராபாத், ஜெய்பூர் மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள இட்டவா ஆகிய இடங்களில் உள்ள ஆசிய சிங்கங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாக அரசு தெரிவித்திருந்தது.
சரி இப்படி விலங்குகளிடமிருந்து மனிதர்களிடம் பரவிய கோவிட்-19 நோயானது மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு பரவி பின்னர் மீண்டும் பாதிக்கப்பட்ட விலங்கிடமிருந்து மனிதர்களுக்கு பரவுமா என்று கேட்டால் அதற்கான வாய்ப்பு இருப்பதாகவே Environmental Chemistry Letters என்கிற ஆய்விதழில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது. “ Backward transmission of COVID‑19 from humans to animals may propagate reinfections and induce vaccine failure” என்கிற தலைப்பில் வெளியான அந்த ஆய்வுக் கட்டுரை மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு பரவியதும் விலங்குகள் உடம்பில் அந்த வைரஸ் மேலும் உருமாற்றம் பெற்று முன்பை விட அதிக வீரியத்துடன் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அது மீண்டும் மனிதர்களுக்கு பரவி ஒரு சங்கிலித் தொடரான சுழற்சியை உண்டாக்கி விடும் என்று அந்தக் கட்டுரை கூறுகிறது. இந்த Reverse Zoonoses ஒரு சுழற்சியாக மாறுகையில் மரபணு மாற்றம் பெற்ற உருமாறிய வைரசை எதிர்த்து தடுப்பூசிகள் குறைந்த அளவிலேயே செயலாற்றும் என அந்தக் கட்டுரை எச்சரிக்கிறது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உயிரிழந்த பெண் சிங்கம் தொடக்கத்தில் எந்த அறிகுறியும் உடல் நலக் குறைவும் இல்லாமல்தான் இருந்துள்ளது. இறப்பதற்கு ஒரு நாள் முன்புதான் அதற்கு சளித்தொல்லை ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் திடீரென இறந்து விட்டதால் கொரோனா தொற்றை மேலும் உறுதி செய்வதற்காக இந்த விலங்குகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை SARS-CoV-2 நுண்ணுயிரியின் மரபணுவை வகைப்படுத்தும் ஹைதரபாத்தில் உள்ள ஆய்வகமான LaCONES-CCMB ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகளின் அடிப்படையில் Reverse Zoonoses நிகழ்வு மேற்கொண்டு சங்கிலித் தொடர் சுழற்சியாக மாறி பரவல் தொடங்கி விடக்கூடாது என்பதால் உயிரியல் பூங்காவில் சிங்கங்களை கண்காணித்த அனைவரையும் உரிய சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்பது துறை சார் அறிஞர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- சதீஷ் லெட்சுமணன்
பெண் சிங்கம் இறப்பு தொடர்பான அரசின் செய்திக் குறிப்பு
இணைப்புகள்
1.https://link.springer.com/article/10.1007/s10311-020-01140-4
2.https://www.researchgate.net/publication/344404954_The_Possible_Risk_of_Reverse_Zoonosis_in_COVID-19_An_Epidemiological_Driving_Approach_for_the_One_Health_Future_Challenges_A_Review
3.https://science.thewire.in/environment/reverse-zoonosis-when-humans-pass-diseases-on-to-animals/