கோவிட்-19 பெருந்தொற்று தொடங்கிய 2020ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் வரையிலான காலத்தில் மட்டும் அதி தீவிர காலநிலை நிகழ்வுகளால் உலகம் முழுவதும் 13.9 கோடி பேர் பாதிப்படைந்துள்ளனர். 433 பேரிடர் சம்பவங்களில் 17,242பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா மற்றும் அதி தீவிர காலநிலை நிகழ்வுகளின் கூட்டு தாக்கத்தால் மட்டும் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து சர்வதேச செஞ்சிலுவை சங்கங்களின் கூட்டமைப்பு தயாரித்துள்ள The compound impact of extreme weather events and COVID-19 என்கிற ஆய்வறிக்கை ஜெனிவாவில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் உலகம் முழுவதும் கொரோனா மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பேரிடர்களின் கூட்டு தாக்கத்தால் மக்கள் எவ்வாறு பிரச்சனைகளை சந்தித்தனர் என்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் ஏற்கனவே அபாயத்தில் இருக்கும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை கோவிட்-19 பெருந்தொற்று மேலும் பாதித்துள்ள நிலையில் இந்த இரண்டு பிரச்சனைகளையும் ஒரே நேரத்தில் அடையாளப்படுத்த வேண்டியதன் கட்டாயம் குறித்தும் இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
report RCCC IFRC Climate disasters COVID-20210910_V2அண்மையில் வெளியான ஐ.பி.சி.சி.யின் அறிக்கையானது புவி வெப்பமடைதலுக்கு முக்கியக் காரணம் மனித செயல்பாடுகள் மட்டுமே என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் எடுத்துரைத்திருந்தது. உலகில் மக்கள் வசிக்கும் அத்தனை பகுதிகளும் ஏதோ ஒரு பேரிடரால் பாதிப்படைந்து கொண்டிருந்தது அல்லது பாதிப்பிலிருந்து மீண்டு வந்து கொண்டிருந்தது. இந்த சூழலில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வரும் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிப்புகள் அதிகமாகியுள்ளது. இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் மட்டும் அதி தீவிர காலநிலை நிகழ்வுகளால் உலகம் முழுவதும் 13.9 கோடி பேர் பாதிப்படைந்துள்ளனர். 433 பேரிடர் சம்பவங்களில் 17,242பேர் உயிரிழந்துள்ளனர். தெற்காசியாவில் மட்டுமே 39 பேரிடர் சம்பவங்களில் 4,649 பேர் உயிரிழந்துள்ளனர், 4 கோடியே 23 லட்சத்து 69 ஆயிரத்து 624 பேர் பாதிப்படைந்துள்ளனர். அதிகம் பேர் பாதிக்கப்பட்ட பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது கடந்த ஆண்டு பங்களாதேஷ், இந்தியா மற்றும் இலங்கையில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய அம்பான் புயல். இந்தப் புயலால் மூன்று நாடுகளைச் சேர்ந்த 2 கோடியே 6 லட்சம் பேர் பாதிப்படைந்தனர். தெற்கு ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட வறட்சி, ஈராக் மற்றும் சிரியாவில் ஏற்பட்ட வறட்சி, சீனாவில் ஏற்பட்ட வெள்ளம், வங்காளதேசத்தில் ஏற்பட்ட வெள்ளம், எத்தியோப்பியா, சோமாலியா, கென்யாவில் ஏற்பட்ட வறட்சி, ஆஃப்கானிஸ்தாலின் ஏற்பட்ட வறட்சி மற்றும் உள்நாட்டு நெருக்கடி, மத்திய அமெரிக்காவில் ஏற்பட்ட தீவிரப் புயல் போன்ற அதி தீவிர காலநிலை நிகழ்வுகள் கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்டதால் பேரிடருக்குத் தயாராவதிலும் பேரிடரை எதிர்கொள்வதிலும் சமூக இடைவெளியை பின்பற்றுவது பெரும் சவாலாக இருந்துள்ளது.
- கென்ய நாட்டில் பெருந்தொற்று காலத்தில் மட்டும் தொடக்கத்தில் வெள்ளம் பின்னர் பெரும் வறட்சி, வெட்டுக்கிளி படையெடுப்பு போன்ற சம்பவங்களால் நாட்டின் உணவு பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது.
- ஹோண்டுராஸ் நாட்டில் Eta மற்றும் Iota என்கிற இரண்டு புயல்களால் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது.
- ஆஃப்கானிஸ்தானில் ஏற்பட்ட உள்நாட்டுப் பிரச்சனையும் வற்ட்சியும் கொரோனா தொற்றின் தாக்கத்தை அதிகரித்தது.
- கனடா மற்றும் அமெரிக்காவில் நிலவிய வெப்ப அலை தாக்கத்தால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
ஒரு பேரிடருக்குத் தயாராவது, எதிர்கொள்வது, அப்பேரிடரிலிருந்து மீள்வது, மீள்வதற்குள்ளாகவே அடுத்த பேரிடரைச் சந்திப்பது என்பது போன்ற நிகழ்வுகளால் அநநாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமடைகிறது. கொரோனா தொற்றின் தாக்கத்திலிருந்து மீண்டு வந்து தங்கள் பொருளாதார நிலைமையை சரிசெய்து கொண்டிருக்கும் நாடுகள் இந்த கூட்டு பாதிப்புகளின் தாக்கத்தை உணர்ந்து காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் முதலீடு செய்ய வேண்டுமென்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.