சென்னையில் தீவிரமடையும் காற்று மாசு

Image: Veeterzy

அண்மைக் காலங்களில் காற்று மாசு மிகப் பெரிய சூழலியல் பிரச்சனையாக உலகெங்கும் தலைதூக்கி வருகிறது. குறிப்பாகக் காற்று மாசுபாட்டில் இந்திய நகரங்கள் மிக மோசமான நிலையில் உள்ளன. IQ AIR அமைப்பு நடத்திய ‘World Air Quality Report 2020’ இன் படி உலகில் காற்று மாசுபாட்டில் மோசமான இடத்தில் உள்ள 30 நகரங்களில் 22 நகரங்கள்இந்தியாவில் உள்ளதாகத் தெரியவருகிறது.

காற்று மாசுபாட்டினால் இந்தியாவில் 2017ம் ஆண்டு மட்டும் 12.4 லட்சம் பேர் உயிர் இழந்திருக்கிறார்கள் என்று “State of Global Air 2019” ஆய்வறிக்கை கூறுகிறது. குறிப்பாக டெல்லியில் மட்டும் ஆண்டிற்கு 10,500 பேர் காற்று மாசுபாட்டால் இறக்கிறார்கள் மூன்று நிமிடத்திற்கு ஒரு குழந்தை நச்சுக் காற்றைச் சுவாசிப்பதால் இந்தியாவில் இறக்கிறது என்று “Global Burden of disease 2017” அறிக்கை குறிப்பிடுகிறது.

தலைநகர் டெல்லி காற்று மாசை பற்றி இவ்வளவு கவலைப்படும் பொழுது நம் தமிழ்நாட்டில் உள்ள நகரங்களில் காற்றின் தரத்தை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது . குறிப்பாகச் சென்னை, கடலூர், தூத்துக்குடி , மேட்டூர் போன்ற தொழிற்சாலைகள் மிகுந்த நகரங்களில் காற்றின் மாசு மோசமாகிக் கொண்டே தான் போகிறது.

இந்தியாவில் காற்று மாசுபாடு மோசமாக உள்ள நகரங்களை (122 நகரங்கள்) பட்டியலிட்டு அவற்றில் காற்றின் தரத்தை உயர்த்துவதற்கு National Clean Air Program (NCAP) என்ற செயல் திட்டத்தைக் கடந்த 2019ம் ஆண்டு மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் துவங்கியது. ஆனால் அந்த மாசடைந்த 122 நகரங்களின் பட்டியலில் சென்னை சேர்க்கப்படவில்லை.

மாசடைந்த நகரங்களின் பட்டியலில் சென்னை இல்லாதது நல்ல செய்தியா இல்லை கேட்ட செய்தியா?

நல்ல காற்றைச் சுவாசிக்க முடியாமல் ஏற்கனவே மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் சென்னை வாசிகளுக்கு நிச்சியம் இது ஒரு கெட்ட செய்தி தான். சென்னையின் காற்றின் தரம் மொத்தமாக ஒரு நாள் சராசரி 50AQI முதல் 100AQI ஆக இருக்கிறது. இது சுவாசிக்கப் பாதுகாப்பான அளவு. அதனால் நாம் குறைவாகக் காற்று மாசு செய்கிறோம் என்று அர்த்தம் இல்லை, டெல்லி, பாட்னா, அகமதாபாத் போன்ற நகரங்களுக்கு இணையான காற்று மாசினை நாமும் தினந்தோறும் வெளியிடுகிறோம்.

இதற்கு ஒரு முக்கியச் சான்று கடந்த 2019ம் ஆண்டுச் சென்னையில் ஏற்பட்ட அதிகப்படியான காற்று மாசு. 04.11.2019 முதல் 09.11.2019 ஆகிய நாட்களில் டெல்லிக்கு சமமான காற்று மாசுபாட்டால் சென்னை பாதிப்புகளுக்கு உள்ளானது. 06.11.2019 அன்று டெல்லியின் காற்று மாசு 242AQI ஆகவும் சென்னையின் காற்றின் தரம் 271 AQI ஆகவும் பதிவாயிருந்தது. PM2.5 அளவை பொறுத்தவரையில் மணலியில் 334 Microgram/cubic meter, வேளச்சேரியில் 321 Microgram/Cubic meter, ஆலந்தூரில் 317Microgram/Cubic meter எனும் அபாயகரமான அளவு பதிவாகி இருந்தது.

சென்னையில் அப்பொழுது நிலவி இருந்த Temperature Inversion னும் வழக்கமாகச் சென்னையின் காற்று மாசை உள்வாங்கிக்கொள்ளும் கடல் இந்த முறை அதைச் செய்யத் தவறியதும் ஒரு முக்கியக் காரணம். மிகக் குறைவான காற்றின் வேகமும் (1.7Km/Hr) , கடல் காற்று இல்லாததும், அதிக ஈரப்பதமும் (95%), மேலடுக்கு காற்று ஈரப்பதமாகவும் , தரை மட்ட காற்று சூடாகவும் இருக்கும் (Temperature Inversion) நிலையும் நச்சுப் புகையுடன் சேர்ந்து சென்னை காற்றைச் சுவாசிக்க முடியாத அளவிற்கு மிக மோசமானதாக உருவாகி இருந்தது.

 

ஆனால், மற்ற நாட்களில் சென்னையின் தட்ப வேட்பத்தின் காரணமாகவும், அருகாமையில் கடல் இருப்பதாலும் காற்று மாசின் கொடூரம் தெரியாமல் தப்பித்துக்கொண்டிருக்கிறோம். இதனால் தான் NCAP பட்டியலில் சென்னை விடுபட்டுள்ளது.

மேலோட்டமாகப் பார்த்தால் சென்னையின் காற்றின் தரம் நன்றாக உள்ளது போல் தோன்றும். ஆனால் வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை என்று பிரித்து ஆராய்ந்தால் சென்னையின் காற்றின் தரம் பகுதிக்கு பகுதி மாறுபடுவது புரியும். காற்று மாசில் உள்ள சல்பர் டை ஆக்சைட், நைட்ரஜென் ஆக்சைட், கார்பன் மோனாக்சைடு , PM2.5 நுண்துகள்கள் போன்றவற்றைத் தனித்தனியே ஆராய்ந்தால் அது அப்பகுதியில் உள்ள தொழிற்சாலை நடவடிக்கைகள், வாகன நெரிசல் போன்றவற்றைப் பொறுத்து பகுதிக்கு பகுதி மாறுபடும். வட சென்னையில் உள்ள அனல் மின் நிலையங்கள் மற்றும் காற்று மாசுப்படுத்தும் தொழிற்சாலைகள் காரணமாக அங்குச் சல்பர் டை ஆக்சைட், நைட்ரஜென் ஆக்சைட்களின் அளவுகள் தென் சென்னையைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக இருக்கும். அதே போல், போக்குவரத்து நெரிசலாக இருக்கும். காலை மற்றும் மாலை வேலைகளில் காற்று மாசு அதிகமாகக் காணப்படும்.

சென்னை காற்று மாசை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் காற்றுமாசு காரணிகள், நேரம் காலம் , தென் சென்னை வட சென்னை எனப் பிரித்துப் பிரித்துப்பார்த்தால் மட்டுமே உண்மை நிலவரம் புலப்படும். இதையே தான் காற்று மாசு தொடர்பாகச் சமீபத்தில் வெளிவந்த மூன்று முக்கிய ஆய்வறிக்கைகள் (CPCB’s Report On Impact Of Lockdown On Ambient Air Quality, Greenpeace Report Behind the Smokescreen, Health Energy Initiative Study on Chennai Air Pollution) நமக்கு உணர்த்துகின்றன.

மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரிய ஆய்வறிக்கை, CPCB’s Report On Impact Of Lockdown On Ambient Air Quality:

மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் நடத்திய ஆய்வில், பொது முடக்கத்திற்கு முன்பு (மார்ச் 2020) உள்ள காற்றின் தரத்தையும் ஏப்ரல்-மே 2020 பொது முடகத்தின் பொழுது சென்னை உட்பட நாடு முழுவதிலும் உள்ள 12 நகரங்களின் இருந்த காற்றின் தரத்தையும் ஆராய்ந்தது. இந்த ஆய்வின் முடிவில் 2019ம் அதே மாதம் இருந்ததை விடப் பொது முடகத்தின் பொழுது (ஏப்ரல் மே 2020) காற்றில் நுண்துகள்களின் அளவு 42% குறைந்திருந்தது எனவும் நைட்ரஜென் டைஆக்சைடின் அளவு 30% வரை உயர்துள்ளதாகவும் தெரிவிக்கபட்டிருந்தது.

table

பொது முடக்கத்தின் பொழுது வாகன நெரிசல் குறைந்ததின் காரணமாகச் சல்பர் டைஆக்சைட் முந்தைய ஆண்டு அளவுகளை விட 28% குறைந்து காணப்பட்டது ஆனால் நைட்ரஜென் டைஆக்சைடின் அளவு 30% அதிகரிக்கக் காரணம் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இடம் வட சென்னையில் உள்ள மணலி, எண்ணூர். மணலி பகுதியில் உள்ள அனல் மின்நிலையங்களும் தீவிர காற்று மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளும் பொது முடக்கத்தின் பொழுதும் இயங்கி வந்தது.

அதே போல மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் நடத்திய மற்றுமொரு ஆய்வில் 2020 பிப்ரவரி 22 – மார்ச் 21, மார்ச் 22 – ஏப்ரல் 21, 2020 ஆகிய காலகட்டத்தை ஒப்பிடுகையில் பொது முடக்கத்தின் பொழுது சென்னையில் கார்பன் மோனாக்சைடு அளவு 43% குறைந்திருந்ததாகவும் ஆனால் பொது முடக்கதிற்கு முந்தைய பிப்ரவரி மாதத்தை ஒப்பிடும் பொழுது நைட்ரஜென் டைஆக்சைடின் அளவுகளில் எந்த ஒரு பெரிய மாற்றமும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

ஒரே பொது முடகத்தின் பொழுது சென்னை காற்றில் கார்பன் மோனாக்சைடு கணிசமாகக் குறைகிறது ஆனால் நைட்ரஜென் டைஆக்சைடு குறைய வில்லை. கார்பன் மோனாக்சைடு மாசுக்கு வாகன புகை முக்கியக் காரணமாக உள்ளது, நைட்ரஜென் டைஆக்சைடு மாசுக்கு அனல் மின் நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகள் காரணமாக உள்ளன. ஆகையால் சென்னை காற்றின் தரத்தை உயர்த்த வேண்டும் என்றால் நாம் ஒவ்வொரு காற்று மாசு காரணியையும் தனித் தனியே அணுக வேண்டியது அவசியமாகிறது.

table 1

பொது முடக்கத்தின் பொழுது டெல்லி, மும்பை, கொல்கட்டா, பெங்களுரு போன்ற நகரங்களில் எல்லாம் நைட்ரஜென் டைஆக்சைடின் அளவு குறைந்திருந்த போதும். சென்னையில் நைட்ரஜென் டைஆக்சைடு அதிகரித்துக் காணப்பட்டது. இதையே தான் சமீபத்தில் வெளிவந்த கிரீன்பீஸ் ஆய்வறிக்கையும் உறுதிசெய்கிறது.

கிரீன் பீஸ் ஆய்வறிக்கை– Behind the Smokescreen, Greenpeace Report on NO2 pollution in Indian cities:

கிரீன்பீஸ் என்ற பன்னாட்டு சூழலியல் அமைப்பு நடத்திய ஆய்வில் ஏப்ரல் 2020 மற்றும் ஏப்ரல் 2021 ஆகிய இரண்டு பொதுமுடக்கக் காலகட்டத்திலும் காற்றில் நைட்ரஜென் டைஆக்சைடின் அளவை ஒப்பிட்டு முடிவுகளை வெளியிட்டது. அதில் சென்னையில் கடந்த ஆண்டு 2020 ஏப்ரலை விட 2021 ஏப்ரலில் நைட்ரஜென் டைஆக்சைடின் அளவு 55% அதிகரித்துள்ளது என்பது தெரிய வருகிறது. இந்த ஆய்வை கிரீன்பீஸ் மத்திய சென்னையில் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 2020 பொது முடக்கத்தைக் காட்டிலும் 2021 ஏப்ரல் பொதுமுடக்கதின் பொழுது மத்திய சென்னையில் வாகன பயன்பாடு அதிகரித்ததும், வட சென்னையில் காற்று மாசு குறிப்பாக அனல் மின்நிலைய நச்சுபுகை 25கிமீ வரை பாதிப்பு உண்டாக்கும் என்பதும் அதுவே 55% நைட்ரஜென் டைஆக்சைட் அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாக இருக்கக் கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். நைட்ரஜென் டைஆக்சைடு வாயு ஆஸ்த்மா , மூச்சுக் குழாய் பிரச்சனைகளை மேலும் அதிகரிப்பதோடு பல்வேறு நுரையீரல் சார்ந்த நோய்களுக்குக் காரணமாக அமைகிறது. இது மட்டுமல்லாமல் காற்று மாசில் பெரும் பங்கு வகிக்கக் கூடிய நுண் துகள் உருவாக்கத்திருக்கும் ஒரு வகைக் காரணமாக உள்ளது.

 

எந்தெந்தப் பகுதியில் எந்த எந்தக் காற்று மாசு காரணிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன, அவற்றை உற்பத்தியில் இருந்து (Controlling from the source) குறைக்க என்ன செய்ய வேண்டும் என்ற Demographic Approach இங்குத் தேவை படுகிறது. இந்த அடிப்படையில் தான் நாம் வட சென்னையையும் , தென் சென்னையையும் பிரித்து ஆராய்ந்து பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. அப்படிப் பிரித்துப் பார்க்கையில் தென் சென்னையை விட வட சென்னையில் காற்றின் தரம் பல மடங்கு மோசமாகவும் அப்பகுதியை வாழ தகுதியற்ற இடமாகவும் மாற்றிக்கொண்டிருப்பதும், வடசென்னை தென்சென்னைக்கு இடையே உள்ள சூழலியல் பாகுபாடும் புரிந்துக்கொள்ள முடியும். இதே கருத்தை தான் Health Energy Initiative அமைப்பின் ஆய்வறிக்கையும் ஆதராதுடன் விளக்குகிறது.

ஹெல்த் எனெர்ஜி இனிசியேட்டிவ் ஆய்வறிக்கை Health Energy Initiative’s, Unfit to Breathe:

கடந்த ஜூலை 2021 Health Energy Initiative என்ற அமைப்புச் சென்னையில் உள்ள 20 இடங்களில் காற்றின் தரத்தை ஆய்வு செய்தது. இதில் பெரும்பான்மையான இடங்களில் காற்றில் நுண் துகள்களின் அளவு பாதுகாப்பான அளவாக வரையறை செய்யப்பட்டுள்ள 60µg/m3 அளவைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. குறிப்பாகத் திருவொற்றியூர், காசிமேடு(துறைமுகம்), துரைப்பாக்கம்(குப்பை கிடங்கு), குருவிமேடு(வல்லூர் அனல் மின் நிலையம்), சோழிங்கநல்லூர்(OMR சாலை), வேளச்சேரி, நொச்சிக்குப்பம், கொடுங்கையூர்(குப்பை கிடங்கு), மீஞ்சூர், ஊரணம்மேடு, செப்பாக்கம்(வடசென்னை அனல் மின் நிலையம்), ஸ்ரீபெரும்புதூர், தி.நகர், அத்திப்பட்டு, காட்டுக்குப்பம், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் PM2.5 நுண் துகள்களின் அளவு 60µg/m3 முதல் 128µg/m3 வரை இருந்தது. PM2.5 நுண் துகள்களை மனிதர்கள் தொடர்ச்சியாகச் சுவாசிக்க நேர்ந்தால் நுரையீரல் பிரச்சனை முதல் இருதயப் பிரச்சனை வரை வரும். மிக முக்கியமாகக் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலே குறிபிட்டுள்ள மூன்று ஆய்வறிக்கைகளை வைத்துப் பார்க்கையில் சென்னையின் காற்றின் தரம் மோசமாகவும் சுவாசிக்க ஆபத்தானதாகவும் உள்ளது. இந்தச் சூழல் மேலும் தொடர்ந்தால் தொழில்மயமாதல், மக்கள் தொகை பெருக்கம், பெருகும் மாசு இதனுடன் காலநிலை மாற்றமும் சேர்ந்து சென்னையை வாழத் தகுதியற்ற இடமாகவே மாற்றி விடும்.

சென்னை காற்று மாசை குறைக்கத் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டிய நடவடிக்கைகள்:

  1. வருடத்தில் 130 நாட்களுக்கு மேல் காற்றின் தரம் மோசமான நிலையில் உள்ள சென்னை நகரத்தையும் NCAP-National Clean Air Program இணைக்க வேண்டும்.
  2. எண்ணூர்-மணலி தொழிற்பேட்டையில் மேலும் தொழிற்சாலைகளைப் புதிதாக அமைக்கவோ , விரிவாக்கம் செய்யவோ தடை விதிக்க வேண்டும்.
  3. வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை எனப் பகுதி வாரியாகக் காற்று மாசு ஆராய்ந்து ஒவ்வொரு பகுதியிலும் எந்த எந்தக் காற்று மாசு கருணிகள் அதிகமாக உள்ளன அதற்குக் காரணம் என்ன என்பதைக் கண்டறிய வேண்டும்.
  4. அரசு நகரத் திட்டமிடுதலின் பொழுது காலநிலை மாற்றம், அப்பகுதியின் தட்பவெட்பம், புவியியல், மக்கள் தொகை , போக்குவரத்து, அதனால் உண்டாகும் மாசு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு சென்னை மற்றும் அதன் துணை நகரங்களை விரிவாக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
  5. காற்று மாசினை உருவாக்கத்தில்(Reduction from source) இருந்தே குறைப்பதற்கான திட்டமிடல் வேண்டும்.
  6. காற்று மாசை கண்காணிப்பதற்கும் அதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்.
  1. காற்று மாசை கண்காணிக்கும் தொடர் கண்காணிப்பு நிலையங்களின் (Continuous Monitoring Stations) எண்ணிக்கையினை அதிகரிக்க வேண்டும். சமிபத்திய சென்னை காற்று மாசின் மூலம் சென்னையின் 38 பகுதிகள் காற்றின் தரம் பாதிப்புக்குள்ளாகும் vulnerable points பகுதிகளாக அடையாளம் காணப் பட்டிருக்கின்றன, 38 இடங்களிலும் தொடர் கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.
  1. அதிக அளவிலான Sulphur Dioxide, Nitrogen Dioxide முதலிய நச்சு வாயுக்களையும், காற்றை மாசுப்படுத்தும் PM2.5 துகள்கள் மற்றும் FlyAsh சாம்பல்களை வெளியிடும் வட சென்னை அனல் மின்நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம், எண்ணூர் அனல் மின் நிலையத்தையும் விரைவில் மூடுவதற்கான முயற்சிகளையும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியில் இருந்து தமிழ்நாட்டின் மின்சாரத் தேவையைப் பூர்த்திச் செய்வதை நோக்கிய முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும்.
  1. சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் காற்று மாசுப்படுத்தும் தொழிற்சாலைகளைக் கண்டறிந்து அதனைக் குறைக்கும் நடவடிக்கைகளைத் தமிழ்நாட்டு மாசு கட்டுபாட்டு வாரியம் எடுக்க வேண்டும். சென்னையில் புதிதாக எந்தக் காற்று மாசுப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கும் அனுமதி வழங்கப்படாது என்று அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
  2. சென்னை தனிநபர் வாகன பயன்பாட்டினை குறைக்கப் பொதுப் போக்குவரத்தை மேலும் மேம்படுத்த வேண்டும். சென்னை மெட்ரோ ரயில் கட்டணக் குறைப்பு, நவீன சாலைகள், முக்கிய வழித்தடங்களில் அதிக அரசு பேருந்துகளை இயக்குவது போன்ற வாகனப் புகை குறைக்கும் வழிமுறைகளை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்
  3. காற்று மாசுப்பாட்டினால் உடல் நலத்திற்கு ஏற்படும் தீமைகளையும், அதில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்து கொள்வதற்கான வழிமுறைகளையும். பிரச்சாரங்கள், பொது நிகழ்சிகள், தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைத்தளங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
  4. சென்னை நகரத்தில் ஆங்காங்கே மேலும் புதிதாகப் பசுமை பூங்காக்களையும், பசுமை தோட்டங்களையும் உருவாக்க வேண்டும்.
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments