சுடாத வீடு கட்டுவோம் வாருங்கள்!

அன்று இயற்கைச் சீற்றங்களிலிருந்தும் காட்டு விலங்குகளிடமிருந்தும் தம்மைக்காத்துக்கொள்ள ஆதிமனிதன் வடிவமைத்துக்கொண்ட வாழிடங்கள் இன்று கூடுதலாகத் தம் இனத்தைச் சார்ந்த விலங்குகளிடமிருந்தும்(!) தம்மைக் காத்துக்கொள்ளும் பொருட்டு மனித
அறிவியலில் விழைந்த உச்சபட்ச நவீன பாதுகாப்பு அம்சங்களையும் உள்ளடக்கி உயர்ந்து நிற்கின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக எந்த உச்சபட்சப் பாதுகாப்பும் அவனை இயற்கையின் சக்திக்குமுன் நிராயுதபாணியாகவே வைத்திருக்கிறது என்பதைச் சமீபத்திய இயற்கைச் சீற்றங்கள் நமக்கு உணர்த்துகின்றன. தேன்சுவைப் பழ மரங்கள் சூழ்ந்த சோலைகளில், பச்சை மண்ணால் சுவரெழுப்பி, பனை மற்றும் தென்னை ஓலைகளால் வேயப் பட்ட கூரைகளின்கீழ், பசுஞ்சாணத்தால் மெழுகிய தரையின்மேல், பறவைகளின் இன்னிசையில், காடுகளினூடே காட்டுயிராய் வாழ்ந்து செழித்திருந்த தலைமுறை முற்றுபெற்று இப்போது வீடுகள் என்று சொல்லப்படும் காங்கிரீட் காடுகளுக்குள்ளே தொடுதிரை கைப்பேசிகளுக்குள்ளும் அகன்று விரிந்த டிஜிட்டல் திரைகளுக்கு முன்னுமாய் மரத்துப்போன ஒரு தலைமுறை பிழைத்துக் கொண்டிருக்கிறது. வீடுகள் மனிதர்கள் வாழும் இடங்கள் என்ற நிலையிலிருந்து வீழ்ந்து மனிதர்களின் அந்தஸ்த்தைக் காட்டவும், அவர்கள் வாங்கிய பொருட்களை பதுக்கிவைப்பதற்கும் அதிகபட்சம் ஒரு குட்டித் தூக்கம் போடவும் கட்டப்படும் கட்டு மானங்களாக மாறிவருகின்றன. பொருட்களை இந்த கட்டடங்களை சொந்தமாக்க வாங்கிய வங்கிக் கடனை திருப்பிச் செலுத்துவற்காக தினமும் காலையில் எழுந்து பணம் ஈட்ட வெளியே செல்லும் மனிதர்கள் பெரும்பாலும் இரவில் தூங்க திரும்பி வருகின்றனர். இங்கு எப்போதாவது தாம் இழந்த வாழ்வை மீண்டும் வாழ நினைக்கும் குடும்பங்கள் காடுகளை அழித்துக் கட்டப்பட்ட “எகோ ரிசாட்டுகளின்” ஓலைக் கூரை களுக்குக் கீழ் பல ஆயிரங்கள் கொடுத்து வார விடுமுறைகளில் வாழ்ந்துவிட்டு வருகிறார்கள். பல்லாயிரம் ஆண்டுகளாய் மண்ணில் வேரூன்றி செழித்து வளர்ந்திருந்த மனித கால்கள் காங்கிரீட் தரைகளாலும், சுவர்களாலும், கூரைகளாலும் மண்ணிலிருந்து அறுக்கப்பட்டபோது மரணித்துப் போனது அவனது வாழ்வும் உறவுகளும் மட்டு மல்ல. திண்ணையில் உண்டு மகிழ்ந்த சிட்டுக் குருவிகள், உத்திரங்களில் தலைகீழாய் தவமிருந்த வெளவால்கள், கொல்லைப் புறத்து மரங்களில் பாடிக் களித்த குயில்கள், முற்றத்து தென்னை மரங்களில் குடியிருந்த அணில்கள், பக்கத்தில் மண்டிக் கிடந்த புதர்களில் வாழ்ந்துவந்த எண்ணற்ற பூச்சிகள் ஊர்வன என அது ஒரு பல்லுயிரினப் பேரழிவு. நவீன கட்டுமானங்கள் இயற்கை யின் மீது ஒரு பெரும் வன்முறையை ஏவியிருக்கின்றன. இந்த காங்கிரீட் கட்டுமானங்களுக்காக அழிக்கப்பட்ட, மேலும் தொடர்ந்து அழிக்கப்பட்டுக் கொண் டிருக்கும் இயற்கை வளங்களைக் கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால் அவற்றின் மரண ஓலம் நம் அகக் காதுகளில் கேட்கக்கூடும். மணல் கொள்ளையால் வற்றிப்போன ஆறுகள், சிமெண்டு ஆலைகளால் அழிந்துபோன விளைநிலங்கள்,அவற்றில் விம்மிக் கொண்டிருக்கும் மக்கள், காடுகளை அகழ்ந்து நிர்வாணமாக்கும் இரும்பு ஆலைகள், அவற்றிலிருந்து வெளியேறும் கொல்லும் வலுப்பெற்ற கழிவுகள், கிரானைட் மார்பிள் தரைகளுக்காய் மொட்டையாகிப்போன மலைகள், செங்கல் சூளைகளுக்காய் அழிக்கப்படும் நெடிதுயர்ந்த மரங்கள், நிலங்கள், இன்னும் புதிய புதிய நவீன கட்டு மானப் பொருட் களால் மாசுறும் நீர், நிலம் காற்று என இயற்கை வளங்களின் அழிப்பு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. வரைமுறையற்ற கட்டுமானப் பொருட்களின் உற்பத்தியும் அவற்றின் நுகர்வும் எரிகிற நெருப்பில் எண்ணெய் விடுவதுபோல வெந்து கொண்டிருக்கும் பூமியின் மீது கொதிக்கக் கொதிக்க கார்பன் டை ஆக்சைடை டன் கணக்காய் உமிழ்கின்றன. உலகின்மொத்த சிமெண்ட் உற்பத்தி மட்டும் ஒரு வருடத்தில் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடின் அளவு 2012 ஆம் ஆண்டின் கணக்குப்படி 5.6 பில்லியன் டன்கள்என்றும், ஒவ்வொரு வருடமும் இது தொடர்ந்து அதிகரிப் பதாகவும் ஒரு ஆய்வு கூறுகிறது. வெறும் சிமெண்ட் உற்பத்தி மட்டுமே உலகின் மொத்த கார்பன் உமிழ்வில் 5 சதவீதத்தை எடுத்துக்கொண்டிருக்கிறது. அது மட்டுமன்று. அரியலூர் போன்ற மாவட்டங்களில் நேரடியாய் சிமண்ட் தொழிற்சாலைகள் ஏற்படுத்தும் சூழல் மாசும் அதனால் மூச்சுக்காற்றே நஞ்சாகி தினமும் வெந்து கருகும் மக்களின் வாழ்வும் எளிதில் புறந்தள்ளக்கூடிய விஷயமல்ல. கட்டுமானப் பொருட்கள் என்றதும் வெறும் சிமெண்டும் கான்கிரீட்டும் மட்டுமல்ல. உண்ணும் உணவிலிருக்கும் நச்சுக்களையே இன்னும் முழுதாக உணர இயலாத நிலையில் இருக்கும் நாம், நம் வீட்டுச்சுவர்களில் பூசப்படும் பல வண்ண பெயிண்டுகளில் இருக்கும் பல்லாயிரம் வேதிக்கலவைகளையும் அவை நம் உடல்நலத்தின்மீது செலுத்தும் பராக்கிரமங்களையும் எப்போது அறிய முற்படப்போகிறோம்? வெறும் சுண்ணாம்பில் வெள்ளையடித்த கட்டிடங்களிலிருந்து எவ்விதத்தில் அவை மேம்பட்டவை. நீடித்த ஆயுள் வரும் பெயிண்டுகள் நம் நீடித்த ஆயுளைக் குறைப்பதைப் பற்றி எப்போது பேசப் போகிறோம்?

நம் கட்டுமானங்கள் இயற்கையை நோக்கி பயணிக்கவேண்டிய நெருக்கடி நமக்கு ஏற்பட்டுள்ளது. இயற்கையை நோக்கிய பயணம் என்பது இயற்கை வளங்களை கொள்ளையடித்து வீட்டில் காட்சிக்குக்கு வைப்பதல்ல. மாறாக நம் வீடுகளின் கட்டுமானப் பொருட்களும் கட்டுமான முறைகளும் இயற்கை வளங்களின் பயன்பாட்டையும் அவற்றின் மாசையும் முடிந்தமட்டும் குறைப்பவையாகவும், அவற்றின் வடிவமைப்புகள் குறைவான மின்சாரத்தை உறிஞ்சுவதாயும், அதன் குழாய்கள் தண்ணீரை விரையமாக்கததாயும், அதன் உள்வெளி அலங்காரங்களுக்கான பொருள் விரையங்கள் குறைவாகவும், வீட்டு உபயோகப் பொருட்களும் அவற்றை சேமிக்கும் அறைக்கலங்களும் மேலும் அதன் வண்ணப் பூச்சுகள் நச்சற்றவையாகவும், வீட்டின் உள்கட்டமைப்பு தன் கழிவுகளைத் தானே மறுசுழற்சி செய்யக்கூடியதாகவும், கூடுதலாய் மழை நீரை சேமிக்கும் வடிவமைப்புகளைக் கொண்டதாகவும், அவற்றின் தோட்டங்கள் நீரை உறுஞ்சும் புற்தரைகள், பூச்செடிகள் இன்றி தம் அமை விடத்தின் அத்தனை புழுப் பூச்சிகளையும், பறவைகளையும் அரவணைக்கும் அ ம் ம ண் ணி ன் த £ வ ர ங் க ¬ ள ப் பெற்றிருப்பதாயும் அமைய வேண்டும். அங்கே கூண்டுக் கிளிகளின் கீச்சொலி கேட்கவேண்டாம். ஆனால் கூடுகட்ட கிளிகள் வரவேண்டும். இப்போதும்கூட ஒன்றும் குடிமுழுகிப் போகவில்லை. நாம் உலகத்தரம் என நினைக்கும் கட்டுமானங்கள் தினம் தினம் உதிர்ந்து விழுந்தாலும், அறிவியலின் ஆணவம்போல் உயர்ந்து விண்ணைமுட்டி நம்முன் நின்ற பலமாடிக் கட்டிடங்கள் ஒரே மழையில் மண்ணில் புதைந்து போனாலும்அதிர்ஷ்டவசமாக நமக்கு கற்றுத்தர நம் தாத்தாக்கள் கட்டிய மண் சுவர்கள் நூற்றாண்டுகள் கண்டும் இன்னும் நம் முன்னே உயிர்வாழ்ந்து கொண்டிருக் கின்றன. நாம் உறுதி என உறுதியாய் நம்புவதை மறுபரிசீலனை செய்வோம். வாருங்கள் சுடாத வீடுகள் கட்டுவோம், நம்மை வாழவைக்கும் இப்புவியும் அதன் மண்ணும் மட்டுமல்ல நம் மனங்களும் குளிரட்டும்.

 

ஜீயோ டாமின்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments