அம்பேத்கரியமும் சூழலியல் அரசியலும்

 

 

நகரம், கிராமம் இடையிலான முரண்பாடுகள் தொடர்ந்து விவாதிக்கப்படும் பொருளாக உள்ளது. கிராமிய வாழ்வு முறை மீதான காதல் பரவலாக காணப்படுகிறது. நகர வாழ்வியல் மீது ஒருவித நரக பிம்பமும் பரவலாக கட்டமைக்கப்படுகின்றன. இவைதான் சரியான சூழலியல் பார்வை என்றும் சிலரால் கருத்தப்படுகிறது.

எந்த ஒரு வாழ்முறையையும் அதன் இயல்தன்மையோடும், இயக்கதன்மையோடும் ஆராய வேண்டும். அதன் மூலம் மட்டுமே இயற்கை சூழல் மீதான தாக்கத்தை புரிந்துக் கொள்ள முடியும்.

நகர வாழ்வு என்பது இயற்கையை சீர்கெடுக்கும் வாழ்வியல் என்றும், கிராம வாழ்வியலே இயற்கையை காக்கும் வாழ்வியல் என்னும் கருத்து சிலரால் முன்வைக்கப்படுகிறது. ஒப்பீடு அளவில் கிராமங்கள் இயற்கை சூழலை பாதுகாக்கவே செய்கின்றன. அப்படி இருப்பதால் நகர வாழ்வியலை முற்றிலுமாக அழித்துவிட வேண்டுமா?  நாம் எதிர் கொள்ளும் சுற்றுச்சூழல் சீர்கேடிற்கு இதுதான தீர்வா?

கிராம வாழ்வியல் குறித்தான புனித தன்மை இங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. முதலில் அது உடைக்கப்பட வேண்டும். எந்த ஒரு வாழ்வுமுறையும் அறிவியல் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். கிராம வாழ்வியலாக இருந்தாலும் சரி, நகர வாழ்வியலாக இருந்தாலும் சரி, அதன் அறிவியல் தன்மை கொண்ட ஆராயப்பட வேண்டும். சமூக அறிவியல் தன்மையிலும், இயற்கை அறிவியல் தன்மையிலும் அனுகப்பட வேண்டும்.

நவீன கலாச்சாரம், இயந்திரமயம், கொண்ட நகரம் – முற்போக்கான சமூக்கத்தின் வெளிப்பாடு என்றும்; கிராமங்கள் மூடநம்பிக்கையின், பழங்கால நடைமுறையின் வெளிப்பாடு என்றும் வாதம் செய்யப்படுகின்றன. கிராமங்களின் வாழ்வியல் பொரும்பாலும் வேளாண்மை சார்ந்தும், நகர வாழ்வியல் பொரும்பாலும் தொழில்சாலை சார்ந்தும் உள்ளன என்பது நாம் அறிந்தது தான். இப்படியான உற்பத்தி முரை மனித சமூகத்தை பல்வேறு வித மாற்றங்கள் உருவாக காரணமாக உள்ளன. இத்தகைய உற்பத்தி முறை, மனித சமூகத்தையும், சூழலையும் எப்படி பாதித்துள்ளன என்பதை கணக்கில் கொண்டு கிராம – நகர முரண்களை அனுகலாம்.

கிராமம், நகரம் இடையிலான முரண்பாடுகள் குறித்தும், நவீன கலாச்சாரம், இயந்திரங்களின் தேவை குறித்தும் அண்ணல் அம்பேத்கர் எழுதியுள்ளார். “தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன?”  என்னும் நூலில் அம்பேத்கர் இப்படி கூறுகிறார்:

பொருளாதாரக் கேடுகள் பற்றிய காந்திய ஆய்வில் புதுமையானது ஏதேனும் உண்டா? காந்தியப் பொருளாதாரம் ஆரோக்கியமானதா? சாமானிய மனிதனுக்கு, வாழ்க்கை வளமிழந்தவனுக்கு காந்தியம் எத்தகைய நம்பிக்கையை அளிக்கிறது? அவனுக்கு ஒரு மேம்பட்ட வாழ்வை, மகிழ்ச்சி பொங்கும் வாழ்வை, பண்பட்ட வாழ்வை, சுகந்திர வாழ்வை, இல்லாமையிலிருந்து விடுபடும் சுகந்திரம் மட்டுமன்றி முன்னேறும் சுதந்திரத்தை, அவனுக்குள்ள ஆற்றலக்ள் மேலே மேலே உயர்ந்து, மிளிர்ந்து, வளர்ந்து செல்லும் சுதந்திரத்தை வழங்க அது உத்தரவாதம் தருகிறதா?

பொருளாதார சீர்கேடுகளுக்கெல்லாம் இயந்திரங்களும் நவீன நாகரிகமும்தான் காரணம் என்று காந்திய ஆய்வு கூறுகிறது. இதில் புதுமை ஒன்றுமில்லை. நிர்வாகமும் கட்டுப்பாடும் ஒருசிலரது கைகளில் குவிவதற்கு எந்திரங்களும் நவீன நாகரிகமும் உதவுகின்றன; எல்லா மூலப் பொருள்களும் தொழிற்சாலைகளும் ஆலைகளும் மேலும் ஒரு சிலரது கைகளில் குவிவதற்கு வங்கிகளும் கடன் வசதிகளும் துணைபுரிகின்றன; தங்கள் குச்சில் குடிலக்ளிலிருந்து ஆயிரக்கணக்கான மைல் தொலைவிலுள்ள பிரம்மாண்ட தொழில்களுக்கு ஆதாரபலமாக இருக்கும் பொருட்டு இந்தத் தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் வேலை செய்யும் லட்சோபம் லட்சம்பேர் தங்களது கண்ணீரையும் செந்நீரையும் சிந்த வேண்டியிருக்கிறது; எந்திரங்களும் நவீன நாகரிகமும் யுத்தம் சாவு கொள்வதை விட அதிகமானோரை மரண கெபிக்கு அனுப்புகின்றன, எண்ணற்றோரை ஊனமாக்குகின்றன, முடமாக்குகின்றன; பெரிய பெரிய நகரங்கள் வளர்ந்து அவற்றின் புகையம், தூசியும், அழுக்கும், காது செவிடுபடும் இரைச்சலும், அசுத்தக் காற்றும், போதிய சூரிய வெளிச்சமில்லாமையும், திறந்தவெளி வாழ்க்கை இன்மையும், நாற்றமெடுக்கும் சேரிகளும், அவற்றின் குப்பை கூளங்களும், பரத்தையர் விடுதிகளும் இன்னும் பலவும் விதம் விதமான கொடிய நோய்களைப் பரப்புகின்றன, உடல் நலத்தைப் பெரிதும் சீர்குலைக்கின்றன. இவை எல்லாம் காந்தியம் கூறும் கேட்டுக்கேட்டுக் காது புளித்துப் போன பழைய வாதங்கள். இவற்றில் புதியது எதுவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் ரூசோ, ரஸ்கின், டால்ஸ்டாய் போன்றோரின் கருத்துக்களையே காந்தியம் கிளிப்பிள்ளைபோல் திரும்பத் திரும்பக் கூறுகிறது.

காந்தியத்துக்கு ஆதார அடிப்படையாக அமைந்துள்ள கருத்துகள் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்டவை, நாகரிகம் முதிர்ச்சியடையாத காலத்திற்குரியவை. இயற்கை வாழ்க்கைக்கு, விலங்கின வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்லுவதை அது குறிக்கிறது. இக்கருத்துகளின் ஒரே சிறப்பு அவை எளிமையானவை என்பதுதான். இந்தக் கருத்துக்களால் கவரப்படுகின்ற எதையும் எளிதில் நம்பிவிடுகின்ற ஏராளமானோர் எப்போதும் இருப்பார்களாதலால் இத்தகைய எளிய கருத்துகள் மடிவதில்லை; அது மட்டுமல்ல இவற்றைப் பிரசாரம் செய்யக் கூடிய சில அப்பாவிகள் எப்போதும் இருக்கவே செய்வார்கள். எனினும் மக்களின் இயலறிவுத்திறன், உள்ளார்ந்த உந்துணர்வுஇது தவறான வழியில் செல்லுவது அரிதுஇக்கருத்துக்கள் பயனற்றவை என்பதை இனம் கண்டு விடுகிறது: முன்னேற்றத்தை நாடும் சமுதாயம் இவற்றை நிராகரிப்பதே சாலச்சிறந்தது என்ற முடிவுக்கு வந்து விடுகிறது.

காந்தியப் பொருளாதாரம் மிகவும் தவறானது. இயந்திரங்களும் நவீன நாகரிகமும் பல தீமைகளைத் தோற்றுவித்துள்ளன என்பதை ஒப்புக் கொள்ளலாம். ஆனால் இந்தத் தீமைகளுக்க இயந்திரங்களும் நவீன நாகரிகமும் காரணமல்ல. தனிச் சொத்துரிமையையும் சொந்த சுயநல ஆதாயங்களில் நாட்டம் கொள்வதையும் புனிதமானவையாக, மீறவொண்ணாதவையாக ஆக்கியுள்ள தவறான சமூக அமைப்பே இந்தத் தீமைகளுக்கெல்லாம் காரணம். இயந்திரங்களும் நாகரிகமும் ஒவ்வொருவரையும் பயனடையச் செய்யவில்லை என்றால் இதற்கான பரிகாரம் இயந்திரங்களையும் நாகரிகத்தையும் கண்டனம் செயவதில் அடங்கியிருக்கவில்லை; மாறாக, இவற்றின் பலன்களை ஒரு சிலர் மட்டும் அபகரித்துக் கொண்டுவிடாமல், அந்தப் பலன்கள் எல்லோருக்குமே கிட்டச் செய்யும் வகையில் சமுதாயத்தை மாற்றி அமைப்பதில்தான் அந்தப் பரிகாரம் பொதிந்துள்ளது.

காந்தியத்தில் சாமானிய மனிதனுக்கு எதிர்காலம் ஏதுமில்லை. அது மனிதனை ஒரு மிருகமாகத்தான் பாவிக்கிறது. உடலமைப்பு, உணவு வகை, இனப்பெருக்கச் செயல்பாடுகளின் ஒரு சில அம்சங்களில் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் ஓரளவு ஒற்றுமை இருக்கக் கூடும் என்பது உண்மையே. ஆனால் இவையே மனிதனுக்கே உரிய தனித்த செயல்பாடுகளாக மாட்டா. மனிதனுக்கே உரிய தனித்தன்மை வாய்ந்த, தனிச்சிறப்பு கொண்ட செயல்பாடு அவனுக்குள்ள பகுத்தறிவேயாகும். மனிதன் எதையும் நுணுகிக் காணபதற்கும், உள்ளாராய்வதற்கும், சிந்திப்பதற்கும், ஆராய்ச்சி செய்வதற்கும் பிரபஞ்சத்தின் வனப்புகளை, அழகுகளை, நேர்த்திகளை, சிறப்புகளை கண்டுணர்வதற்கும், தனது வாழ்க்கையின் கீழான விலங்கு அம்சங்களைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்கும் பகுத்தறிவு உதவுகிறது. இவ்வாறு மனிதன் உயிரின அமைப்பில் மிக உன்னதமான, கொடுமுடியான இடத்தை வகிக்கிறான். இது உண்மையாயின் இதிலிருந்து தோன்றும் முடிவு என்ன? அந்த முடிவு இதுதான்:  ஒரு விலங்கு அதன் உடல் பசிகளைத் தீர்த்துக் கொண்டதும் அதன் வாழ்க்கையின் இறுதிக் குறிக்கோளை அடைந்துவிடுகிறது; அதனால் மனிதன் தனது மனத்தை முழு அளவுக்கப் பண்படுத்திக் கொள்ளாதவரை மனித வாழ்க்கையின் இறுதிக் குறிக்கோள் பூர்த்தியடைந்ததாகாது. சுருக்கமாகக் கூறினால் விலங்கை மனிதனிடமிருந்து பிரிந்துக் காட்டுவது பண்பாடு அதாவது கலாசாரம். விலங்குக்கு கலாசாரம் சாத்தயமில்லைஆனால் மனிதனுக்கு அது இன்றியமையாதது. எனவே, ஒவ்வொருவரும் ஒரு பண்பட்ட வாழ்க்கை நடத்துவதைச் சாத்தியமாக்குவது மனித சமுதாயத்தின் குறிக்கோளாக இருக்க வேண்டும்; அதாவது வேறு விதமாகக் கூறினால் மனதைப் பண்படுத்துவது என்பது வெறும் உடல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதிலிருந்து வேறுபட்ட ஒன்றாக இருக்க வேண்டும். இது எவ்வாறு சாத்தியமாகும்?

சமுதாயத்தை எடுத்துக் கொண்டாலும் சரி, தனி நபரை எடுத்துக் கொண்டாலும் சரி ஏனோதானோ என்று வாழும் சாதாரண வாழ்க்கைக்கும் பெருமதிப்பு மிக்க வாழ்க்கைக்கும் எப்போதுமே ஓர் இடைவெளி இருந்து வருகிறது. ஒருவர் பெருமை சான்ற வாழ்க்கை வாழ வேண்டுமானால் முதலில் அவர் வாழ்ந்தாக வேண்டும். ஏதேனும் பிழைப்பாதாரத்தைத் தேடிக் கொண்டு, ஏனோ தானோவென்று சாதாரண வாழ்க்கை வாழ்வதற்கே நிறைய நேரமும் சக்தியும் செலவிட வேண்டியிருப்பதன் காரணமாக மனித இயல்புக்கே உரிய தனித்தன்மை வாய்ந்த செயல்பாடுகளுக்கு, அதாவது கலாசார வாழ்க்கை வாழ்வதற்குத் தேவைப்படும் நேரமும் சக்தியும் குறைந்து விடுகின்றன. அப்படியானால் கலாசார வாழ்க்கை வாழ்வதை எப்படிச் சாத்தியமாக்குவது? போதிய ஓய்வுநேரம் இருந்தாலொழிய இது சாத்தியமல்ல. ஏனென்றால் ஓய்வுநேரம் இருந்தால்தான் ஒருவர் கலாசார வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியும். மனித சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் எல்லாம் முக்கியமான பிரச்சினை ஒவ்வொருவருக்கும் எவ்விதம் ஓய்வு நேரத்தை ஒதுக்குவது என்பதேயாகும். ஓய்வுநேரம் என்பது எதைக் குறிக்கிறது? ஓய்வு நேரம் என்பது வாழ்க்கையின் உலகாயதத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு அவசியமான உழைப்பையும் முயற்சியையும் குறைப்பதைக் குறிக்கிறது. சரி, ஓய்வு நேரத்தை எவ்வாறு பெறுவது? மனிதனது தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய பண்டங்களை உற்பத்தி செய்வதற்குத் தேவையான உழைப்பைக் குறைக்கும் ஏதேனும் வழிமுறைகளைக் கண்டுபிடித்தாலொழிய ஓய்வு நேரம் என்பது முற்றிலும் சாத்தியமில்லை. இத்தகைய உழைப்பை எவற்றால் குறைக்க முடியும்? மனிதனது இடத்தை இயந்திரங்கள் நிரப்பினால்தான் இது சாத்தியம். ஓய்வு நேரத்துக்கு வகை செய்வதற்கு வேறு எந்த மார்க்கமும் இல்லை. எனவே, விலங்கு வாழ்க்கை வாழ்வதிலிருந்து கலாசார வாழ்க்கை வாழ்வதைச் சாத்தியமாக்குவதற்கும் இயந்திரங்களும் நவீன நாகரிகமும் இன்றியமையாதவை என்பது தெளிவு. இயந்திரங்களையும் நவீன நாகரிகத்தையும் ஒருவர் கண்டிக்கிறார் என்றால் அவற்றின் நோக்கத்தையும், மனித சமுதாயம் அடைய முயலும் இறுதிக் குறிக்கோளையும் அவர் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அதற்குப் பொருள்.

ஜனநாயகத்தை தனது குறிக்கோளாக ஏற்றுக் கொள்ளாத ஒரு சமுதாயத்துக்கு வேண்டுமானால் காந்தியம் பொருத்தமானதாக இருக்கக்கூடும். ஜனநாயகத்தில் நம்பிக்கை கொள்ளாத ஒரு சமுதாயம் இயந்திரங்களின் பாலும் அவற்றை ஆதார அடிப்படையாகக் கொண்ட கலாசாரத்தின் பாலும் அலட்சிய மனோபாவத்தை மேற்கொள்ளக்கூடும். ஆனால் ஒரு ஜனநாயக சமுதாயம் அவ்வாறு செய்ய முடியாது. முந்தைய சமுதாயம் ஒரு சிலருக்கு ஏராளமான ஓய்வு நேரத்துடன் கூடிய கலாசார வாழ்க்கையையும் மிகப் பலருக்கு கடும் முயற்சியும் மட்டுமீறிய உழைப்பும் கொண்ட கடினமிக்க வாழ்கைகயையும் வழங்குவதோடு திருப்தியடையக் கூடும். ஆனால் ஜனநாயக சமுதாயமோ குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் மிகுந்த ஓய்வுநேரத்துடன் கூடிய கலாசார வாழ்க்கையை உத்தரவாதம் செய்தாக வேண்டும். மேற்கண்ட ஆய்வு சரியானதாக இருக்குமானால், இயந்திரங்கள், மேலும் மேலும் இயந்திரங்கள், நாகரிகம், மேலும் மேலும் நாகரிகம் இருக்க வேண்டும் என்பது தெள்ளத் தெளிவு. ஆனால் காந்தியத்தின் கீழோ சாமானிய மனிதன் அற்ப சொற்ப ஊதியத்துக்காக ஓய்வு ஒழிச்சலின்றி, இடைவிடாது மாடாக உழைத்து ஓடாகத் தேய வேண்டும், பேசும் ஒரு மிருகமாக இருந்து வர வேண்டும். சுருக்கமாகக் கூறினால் மிகப் பெரும்பாலான மக்களைப் பொறுத்தவரையில் இயற்கைக்கு மீண்டும் திரும்புவோம் என்ற காந்தியத்தின் கோஷம் ஆடைகள் அணியாத பழைய நிலைக்குத் திரும்புவோம், அழுக்கடைந்த, இல்லாமைக்கும் கல்லாமைக்கும் திரும்புவோம் என்பதே குறிக்கும்.” (பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 16, பக்கம் 453-457)

அம்பேத்கரின் கருத்துகளை இப்படி தொகுத்துக் கொள்ளலாம்: (1) இயந்திரங்களும் நவீன நாகரிகமும் பல தீமைகளைத் தோற்றுவித்துள்ளன என்ற போதிலும், அதற்கான காரணங்கள் தனிச் சொத்துரிமையையும், சுயநலவாதமும், அது சார்ந்த சமூக கட்டமைப்பு தான் என்று கூறுகிறார். (2) மனித சாரத்துடன் வாழ இயந்திரங்களின் தேவை உள்ளன என்றும் கூறுகிறார்.

இயந்திரங்கள் தன்னளவில் தீமையானவை அல்ல. மாறாக எத்தகைய உற்பத்தி முறையில் அவை பயண்படுத்தப்படுகின்றன, எத்தகைய சமூகத்தில் அவை பயண்படுத்தப்படுகின்றன என்பதை பொருத்தே அதன் நன்மை, தீமை அராயப்பட வேண்டும். மனித சமூகத்திற்கு தேவையான ஒய்வையும், கலாச்சார வாழ்வியலையும் வழங்க இயந்திரங்களின் பயண்பாடு ஆவசியம் என்று அம்பேத்கர் கூறுகிறார்.

காந்தியம் முன்வைக்கும் தனி மனித ஒழுக்கம், தற்சார்ப்பு வாழ்வியல் ஆகியவை தேவையான அம்சமாக இருந்த போதிலும், அது மட்டுமே தற்போதைய பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்க முடியாது. சீர்திருத்தப்படாத பண்டைய இந்திய கிராமங்கள் என்பது ஜனநாயக விரோத தன்மை கொண்டதாக இருக்கிறது.

சாதியின் காரணமாக நில உரிமை, அரசியல் சமூக உரிமைகள் மறுக்கப்படும் இடமாக இந்திய கிராமங்கள் உள்ளன. இவை உற்பத்தி சார்ந்து கட்டமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வேளாண்மை சார்ந்து கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்த உற்பத்தி முறையில் சமஉரிமை என்பது மறுக்கப்படுகிறது. எனவே தான் இந்த உற்பத்தி முறையை மாற்ற  வேண்டிய தேவை உள்ளது. எனவே தான் வேளாண்மை உற்பத்தி முறைக்கு மாற்றாக தொழில்சாலை சார்ந்த நகர உற்பத்தி முறை முன்வைக்கப்படுகிறது.  அம்பேத்கர் இந்த பார்வையிலேயே காந்தியத்தை அனுகிறார். தற்சார்பு தன்மையை ஏற்றுக்கொள்ளும் அம்பேத்கர், காந்தியத்தின் நிலவுடைமை சார்ப்புதன்மையில் தான் முரண்படுகிறார்.

 

மு.வெற்றிச் செல்வன்

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments