உயிரினப் பன்மயச் சட்டத் திருத்த மசோதோ நாடாளுமன்றத்தில் அறிமுகம்

Bio Diversity
Image: giz

இந்தியாவின் உயிரினப் பன்மயத்தைப் பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட Biological Diversity Act,2002ல் திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதாவை கடந்த 16ஆம் தேதி மக்களவையில் ஒன்றிய வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் அறிமுகம் செய்தார்.

இச்சட்டத்தை ஒன்றிய அரசு மக்களவையில்  அறிமுகம் செய்வதற்கு முன்னதாக பொது வெளியில் கலந்தாசிக்கவோ, கருத்துக்களை பெறவோ எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இது சட்டமியற்றுதலுக்கான கலாந்தாய்வு கொள்கைக்கு எதிரானதாகும்.

 

BDA Bill 2021

 

இந்தியாவின் உயிர்ப் பன்மய வளங்களான காடுகளில் உள்ள தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் அவற்றின் மரபணு வளங்கள் மற்றும் இயல்பான வழித்தோன்றல்கள் மற்றும் அவற்றின் திறன் குறித்த மரபு சார்ந்த அறிவு போன்றவற்றை பாதுகாக்க 2002ஆம் ஆண்டு இச்சட்டம் இயற்றப்பட்டது.

உயிரியல் வளங்களை பாதுகாத்தல், அவற்றை நீடித்து நிலைத்திருக்கும் வகையில் பயன்படுத்துதல், அத்தகைய உயிரியல் வளங்களின் பயன்பாட்டினால் கிடைக்கும் பலன்களை  நியாயமாகவும், சமமாகவும் பகிர்ந்து கொள்வதை உறுதிசெய்தல் என்பதுதான் இச்சட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.

1992ஆம் ஆண்டு டியோ டி ஜெனிரொவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் உயிரினப் பன்மயம் குறித்த மாநாட்டில் எட்டப்பட்ட உடன்பாட்டில் இந்திய அரசு கையெழுத்திட்டுள்ளது. அந்த உடன்பாட்டின்படி ஒரு நாடு அதன் எல்லைக்குள் உள்ள இயற்கை செல்வம் மற்றும் வளங்களின் மீது முழு இறையாண்மை கொண்டதாகும். இந்த உடன்பாட்டின் அடிப்படையில்தான் 2002ஆம் ஆண்டு Biological Diversity Act இயற்றப்பட்டது.

இச்சட்டத்தின் முக்கிய நோக்கமே இந்தியாவின் உயிர்ப்பன்மய வளங்களைப் பாதுகாப்பதுதான். ஆனால், தற்போது முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் அனைத்தும் இவ்வளங்களை பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள்  எளிதாகவும் எவ்வித முன் அனுமதியும் பெறாமல் சுரண்டுவதற்காக வழி செய்கிறது.

எவ்வித கலந்தாய்வும் மேற்கொள்ளாமல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சட்டத்தை திருத்தும் மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தியதைக் கண்டித்து அவையில் கடுமையான எதிர்ப்பை எதிர்கட்சிகள் பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் ஒன்றிய சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ”மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மசோதாவை அதனுடன் தொடர்புடைய நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு பரிசீலனைக்காக அனுப்புவதற்கு முன்னால் தேர்வுக் குழுவிற்கு அனுப்பியது கண்டிக்கத்தக்கது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு உயிரியல் வளத்தை பயன்படுத்துகிற நபரோ, நிறுவனமோ அதனால் கிடைக்கும் பலனை  அந்த உயிரியல் வளங்கள் மூலம் கிடைக்கக் கூடிய உபபொருட்கள் மற்றும் அதை பயன்படுத்தும் முறை ஆகியவற்றை பற்றிய மரபு சார்ந்த அறிவை நன்கு பெற்றவர்களுடன் நியாயமாகவும் சமமான அளவிலும் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். அதற்குத் தகுதியான நபர்களை Benefit Claimers என இச்சட்டம் குறிப்பிடுகிறது.

தற்போது முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தின்படி நெறிமுறைப்படுத்தப்பட்ட மரபார்ந்த அறிவை பயன்படுத்தினால் அதனால் கிடைக்கும் பலனை பங்கிட்டுக் கொள்ள அவசியமில்லை என்கிறது. இது Bio Piracy க்கு வழிவகுக்கும்படியாக உள்ளது. மேலும் ஒரு மரபு சார்ந்த அறிவை நெறிமுறைப்படுத்தியிருந்தாலும் நெறிமுறைப்படுத்தாவிட்டாலும் அதனால் கிடைக்கும் பலனை நியாயமான முறையில் பங்கிட்டுக் கொள்ளதான் வேண்டும். இந்த திருத்தமானது ஏற்கெனவே மஞ்சள், வேம்பு உள்ளிட்டவற்றின் மீது நம் நாட்டிற்கு உள்ள காப்புரிமையை நிலை நாட்டும் சட்டப் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்து விடும்.

மேலும் இச்சட்ட வரையறுத்தலில் பிரிவு இரண்டில் உள்ள (d)ல்  Bio Utilization என்கிற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. உயிரின ஆய்வு அல்லது உயிரின பயன்பாடு என்பதற்கான அர்த்தம், எந்த ஒரு காரணத்திற்காகவும் சிற்றினங்கள், துணை சிற்றினங்கள், மரபணு மற்றும் உயிரின ஆதாரங்களின் உறைசத்து போன்ற உயிரியல் வளங்களை ஆய்வு செய்வது அல்லது சேகரிப்பது எனப்படும். தர்போது முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தில் உயிரின பயன்பாடு(Bio Utilization), சிற்றினம்(Species), துணை சிற்றினம்(Sub Species) ஆகிய வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஏதோவொரு பயன்பாட்டிற்காக ஒரு நிறுவனமானது மேற்கூறிய  மரபணு, சிற்றினம், துணை சிற்றினம், ஆகியவற்றை சேகரித்தால் அதற்கான முன் அனுமதியை தேசிய அல்லது மாநில உயிர்ப்பன்மய வாரியத்திடம் பெற வேண்டிய கட்டாயமில்லை. இந்த திருத்தம் நிச்சயமாக சிற்றினங்கள், துணை சிற்றினங்களின் மீதான அக்கறையோடு கொண்டு வரப்படவில்லை என்பது தெளிவாகிறது.

இச்சட்டத்தின் பிரிவு 2ன் படி குறிப்பிட்ட சில நோக்கத்திற்காக உயிரியல் வளங்களைப் பெற வேண்டுமென்றால் மாநில உயிரினப் பன்மய வாரியத்திடம் முன் தகவல் தர வேண்டும். இருப்பினும் அபகுதியில் உள்ள உள்ளூர் மக்கள் மற்றும் சமுதாயத்தினருக்கும் அதாவது உயிரினப் பன்மய வளங்களை வளர்ப்போர், பாதுகாப்போர் மற்றும் வைத்தியர்கள் மற்றும் பாரம்பரியமான வைத்தியம் செய்பவர்களுக்கு இப்பிரிவு பொருந்தாது.

தற்போது முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தின் படி பயிர் செய்யப்பட்ட மூலிகைத் தாவரங்களை நிறுவனங்கள் பெறுவதை இச்சட்டம் கட்டுப்படுத்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த அளவுக்கு நன்மை இருக்கிறதோ அந்த அளவிற்கு தீமையும் இருக்கிறது. அதாவது பயிர் செய்யப்பட்ட மூலிகைத் தாவரங்களை எளிதாக நிறுவனங்கள் பெற முடியும் என்பதால் பயிர் செய்த நபருக்கு அதிலிருந்து லாபம் கிடைக்கும் மேற்கொண்டு அவர் தனது உற்பத்தியை அதிகரிக்க முடியும். ஆனால், இயற்கையாகவே காடுகளில் இருந்து கிடைக்கக்கூடிய மூலிகை தாவரங்களைக்கூட பெருநிறுவனங்கள் தங்களுக்கு சொந்தமான அல்லது தங்களால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலங்களில் பயிர் செய்யப்பட்ட மூலிகை தாவரங்கள் என கணக்கு காண்பிக்கும் அபாயமும் இதில் உள்ளது. இது மிகப்பெரிய அளவில் காடுகளின் இயல்புத் தன்மையை சீரழிக்கவல்லது.

மேலும் பாரம்பரிய முறையில் வைத்தியம் செய்பவர்களுக்கு இச்சட்டத்தின் வரையறையில் இருந்து ஏற்கனவே விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களோடு இந்திய மருத்துவ முறையை (ஆயுஷ்)  பயிற்சி செய்யக்கூடிய மருத்துவர்களுக்கு (Ayush Practitioners) விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சித்தா, யுனானி உள்ளிட்ட சிகிச்சை பெறுபவர்களுக்கு இந்திய சிகிச்சை முறை மருந்துகளை வழங்குவதற்கு இந்தச் சட்டம் தடையாக இருந்து விடக் கூடாது என்பது ஆயுஷ் பயிற்சி செய்யகூடிய மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. அந்த வகையில் இந்த விலக்கு அளிக்கப்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டியது. ஆனால், இந்த விலக்கை டாபர், பதஞ்சலி போன்ற பெரிய நிறுவனங்கள் பயன்படுத்தி விடாதபடி தெளிவான திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக வெளிநாட்டு நிறுவனங்கள் நம் நாட்டின் வளங்களை எளிமையாக சுரண்டுவதற்கு ஏதுவாக  சலுகைகளை அளிக்கும் நோக்கில் பிரிவு 19ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி இந்திய குடியுரிமை இல்லாத நபர்,  1961ஆம் ஆண்டின் வருமான வரி சட்டத்தின் பிரிவு 2 உட்பிரிவு (30)ல் வரையறுக்கப்பட்டுள்ள இந்தியாவில் வசிக்காத இந்திய நபர் மற்றும் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் ஆகியோர் இந்தியாவில் கிடைக்கக்கூடிய உயிரியல் வளம் அல்லது ஆராய்ச்சிக்கு வழிவகுக்கும் அறிவாண்மை அல்லது உயிரின விவரங்களை அறிதல் மற்றும் உயிரின உபயோகம் அல்லது இந்தியாவில் உள்ள அல்லது கிடைக்கக்கூடிய உயிரியல் வளத்தைப் பற்றிய ஆராய்ச்சி முடிவுகளைப் பெறுதல் போன்ற காரியங்களுக்கு தேசிய உயிரினப் பன்மய வாரியத்திடம் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

இது முற்றிலும் இந்திய அரசு தன் நாட்டின் உயிரியல் வளங்களின் மீதான இறையாண்மையை விட்டுக் கொடுப்பதற்குச் சமமாகும். நம் நாட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட உயிரியல் வளம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்ட ஒரு வெளிநாட்டு நிறுவனம் அதை வைத்துக் கொண்டு என்ன மாதிரியான பலன்களைப் பெறுகிறது என்பதை கண்காணிப்பது மிகவும் கடினமாகும்.

தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி பிரிவு 3, 4 மற்றும் 6ஐ மீறினால் ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனையோ அல்லது 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். மேலும் அத்தவறினால் ஏற்பட்ட சேதம் 10 லட்ச ரூபாய்க்கு மேற்பட்டிருந்தால் இந்த அபராதம் அதற்கு தக்கவாறும் அல்லது இவ்விரண்டு தண்டனைகளுமே சேர்ந்து விதிக்கப்படும். பிரிவு 7ன் கீழான விதிமுறைகள் அல்லது பிரிவு 24 உட்பிரிவு (2)ன் கீழான விதிமுறைகளை மீறினால் மூன்று வருட காலம் வரையிலான சிறைத்தண்டனை அல்லது ஐந்து லட்சம் அளவிலான அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும் என்றிருந்தது.

தற்போது இந்த தண்டனை பிரிவில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தின்படி சிறைத்தண்டனை முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய மோசடியாகும். குறிப்பாக ஆயுஷ் துறையில் பெரிய அளவிலான முதலீடுகளுடன் வணிகம் நடைபெற்று வருகிறது. அவர்கள் இந்தச் சட்டத்தின் பல்வேறு விதிகளை மீறுகிறார்கள். தமிழ்நாட்டு உயிரினப் பன்மய வாரியம் மட்டும் இச்சட்டத்தின் பல்வேறு பங்கீடு விதிகளை மீறிய 677 நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை வழங்கியுள்ளது. இந்தச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் தாங்கள் செய்யும் தவறுகளுக்கும் விதிமீறல்களுக்கும் இந்த நிறுவனங்கள் அபராதத் தொகை செலுத்தினால் மட்டும் போதுமானது. பெரு நிறுவனங்களுக்கு அபராதத் தொகை செலுத்துவதில் எந்த சிக்கலும் இருக்காது. சிறைத்தண்டனை மட்டுமே அவர்களை மேற்கொண்டு தவறிழைப்பதில் இருந்து தடுக்கும். அது நீக்கப்பட்டிருப்பது இந்தச் சட்டத்தின் உண்மையான நோக்கத்தையே சிதைக்கும் படியாக உள்ளது.

இப்படி பல்வேறு சிக்கல் நிறைந்த இச்சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்விற்கு அனுப்ப வேண்டும். அதற்கு முன்னர் பொதுத் தளத்தில் வெளியிடப்பட்டு உரிய கலந்தாலோசனை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவில் மிகவும் மோசமான முறையில் செயல்படுத்தப்படும் சூழல் பாதுகாப்புச் சட்டங்களில் இந்தச் சட்டமும் ஒன்று. நீண்ட சட்டப் போராட்டத்தின் விளைவாகத்தான் Biodiversity Management Committees எனும் குழுக்கள் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகளை எல்லாம் வீண்டிக்கும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டத் திருத்த மசோதாவை அரசியல் கட்சிகள் எதிர்க்க வேண்டும்.

இந்தியாவின் உயிர்ப் பன்மய வளங்களான காடுகளில் உள்ள தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் அவற்றின் மரபு பொருட்கள் மற்றும் இயல்பான வழித்தோன்றல்கள் மற்றும் அவற்றின் திறன் குறித்த மரபார்ந்த அறிவு போன்றவற்றை பாதுகாக்க 2002ஆம் ஆண்டு இச்சட்டம் இயற்றப்பட்டது.

 

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments