மனிதர்கள் வந்திருக்கிறார்கள்!

2 Bambi-5734-768x580

Bambi  1942 என்ற சுற்றுச்சூழல் திரைப்படத்தை முன்வைத்து.

கட்டுரையின் தலைப்பைப் படத்தில் சொல்லும் ஒரு தருணம் இருக்கிறது. மான் குட்டியான பேம்பியிடம் அதன் அம்மா சொல்வது. பேம்பி எதிர்க் கேள்வி கேட்பதில்லை. படம் தொடங்கிக் கொஞ்ச நேரத்தில் முதல் முறையாக வருகிற ஒரு தினுசான அமைதி. நம்மால் ஒரு கணம் மூச்சு விட முடிவதில்லை. ஒரு மனிதன், மனிதனைப் பற்றிக் கேள்விப்படும்போது மலைப்பதாவது? ஆனால் முப்பது முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால் இப்படத்தைப் பார்க்கும்போது அது நடந்தது. இக்கட்டுரையை எழுதுவதற்காக நேற்று பார்த்தபோதும் நடந்தது. 1942இல் வெளிவந்த படம், இப்போதும் அதன் ஜீவன் குன்றாமல் அல்லது பழுதுபடாமல் புத்திளமையுடன் இருக்கிறது.அதே சமயத்தில், படம் பேசுகிற அவலங்களும் நீடிக்கின்றன.

படத்தில் தப்பித்தவறி ஒரு மனித முகத்தைக்கூடக் காட்டுவதற்கு அவர்கள் விரும்பவில்லை. அந்த தீய சக்தியை விவரிப்பதற்கு அவர்களுக்கு அவ்வளவு வெட்கமாக இருந்திருக்கிறது. ஏனெனில் ஒரு காடு என்பது அங்கு வாழும் பல்லுயிர்களுக்குச் சொந்தமானது. அதன் அந்தரங்கத்திற்கு அத்துமீறி வருகிற அத்தனை மனிதர்களுக்கும் இருப்பது தீமையின் முகம் மட்டுமே. அது யார், அவன் அல்லது அவள் யார் என்பதை அறிந்துகொண்டு என்ன ஆகப்போகிறது?

முதலில் படத்தின் திரைக்கதை.

தொடக்கக் காட்சியே அற்புதம். தன்னுடைய இரவு உலாவை முடித்துவிட்டு வரும் ஒரு ஆந்தை தன் இருப்பிடத்தில் வந்து சேர்ந்து கொட்டாவி விட்டுத் தூங்க நினைக்கையில் விழித்துக்கொள்ளும் காடு. தொடர்ந்து எளிய உயிர்களின் பரபரப்பும் அணிவகுப்பும்.

அன்றைய நாளின் விசேஷம், முன்பே குறிப்பிட்ட பேம்பி பிறந்திருக்கிறது. அதன் அம்மாவின் அரவணைப்பில் கண் மயங்கியவாறு இருக்கிறது. மான்களுடன் இருக்க முடியக்கூடிய சக உயிர்கள் கூடி நின்று சலசலக்கும்போது பேம்பியால் கண் விழிக்காதிருக்க முடியவில்லை. அது விழுந்தாலும் எழுந்து அவற்றுடன் நடை பழகுகிறது. மொழி பழகுகிறது. இவருக்கு இன்ன அடையாளங்கள் என்பதன் மூலம் பயம் விலக்க அறிந்துகொள்கிறது. ஒரு உயிரின் வாழ்க்கை தொடங்குவதை நமக்கு இதமான வகையில் திரைக்கதை அதைச் சுவாரஸ்யங்களுடன் சொல்லிச் செல்கிறது. இடர்கள் பற்றிய சமிக்ஞைகளுக்கு வரும் வரை நாம் அவற்றின் சுதந்திரங்களைப் பற்றி வியக்கிறோம். பேம்பியின் வளர்ச்சி திரைக்கதையின் மூலமாகவே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதில் மழைக்காலம், பனிக்காலம் என்று வந்து போகிற பருவங்களைப் பற்றி அது அறிந்துகொள்கிறது.

நீண்ட தூரம் நடந்து, கடந்து பனி மூடிய குன்றுகளில் மரப்பட்டைகளை உரித்துத் தின்னும்போதும் இரவில், குளிரில் அம்மாவுடன் ஓட்டிப் படுத்திருக்கும் பேம்பி, தனக்குக் கடுமையாகப் பசிப்பதாகச் சொல்கிறது. அதன் அம்மாவிற்கு அது தெரியும். வயிற்றைச் சமாதானப்படுத்த உணவில்லை. பசியின் அனுபவம் இன்றி வாழ்க்கையே இல்லை. எதிர்காலத்தில், எப்போதும் எச்சரிக்கையுடன் கூடிய உயிர்ப் பிழைப்பைப் பசியின் நினைவுகளே தீர்மானிக்கின்றன. நான் இப்படத்தில் முழுமையாக வசமிழக்க முக்கியமான காரணம் இதில் உயிர்களின் அடிப்படை உந்துதல்கள் பிரமாதமாகச் சொல்லப்பட்டிருப்பதும்தான். அவர்கள் அவற்றை பின்னணியாக வைத்துக்கொண்டுதான் கதாபாத்திரங்களை வடிவமைத்திருக்கிறார்கள்.

இவை நாவலில் மிகவும் விரிவாக எழுதப்பட்டிருக்கலாம்.

ஆங்கிலத்தில் இதன் தலைப்பு  :   Bambi, a Life in the Woods.

ஜெர்மன்-ஆஸ்திரிய நாவல் என்று படித்தேன். 1923இல் எழுதப்பட்டிருக்கிறது. எழுதியவர் பெயர்     Felix Satten.  எழுதப்பட்ட கொஞ்ச காலத்துக்குள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, அதற்குப் பின்னர் முப்பது மொழிகளிலாவது வந்திருக்கிறது. சுற்றுச்சூழல் அக்கறை கொண்ட இந்த நாவலின் மேலதிகத் தகவல்கள் இணையத்தில் கிடைக்கின்றன.

மற்றபடி, நாவலைத் தழுவி எடுத்ததில் திரைப்படக் குழுவினர் மிகப்பெரிய வெற்றியைத் தொட்டிருக்கிறார்கள் என்பதில் ஒரு ஐயமும் இல்லை. இப்படத்தைக் குழந்தைகள் மட்டுமின்றிப் பெரியவர்களும் காலங்காலமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். என் மகன் யாழன் இதை முப்பது முறையாவது பார்த்திருப்பான். படத்தில் ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் கண்திறக்க அதில் ஏதேனும் இருக்கிறது. உதாரணமாக, பேம்பி தன்னுடைய அம்மாவின் தோழிக்கு மகளான பெலினை பால்யத்தில் முதன்முதலாகச் சந்திக்கும் காட்சி. ஒரு ஹலோ சொல்வதற்குள் பேம்பிக்கு வரும் கூச்சம். அதே சமயம் அந்தப் பெண்ணுக்கு இருக்கக்கூடிய துணிச்சல். அவர்கள் தங்களுக்குள் இணங்கி வந்துவிடக்கூடிய மிகக் குறைந்த நிமிடங்களுக்குள் பல்வேறு ஜாலங்களை நிகழ்த்திவிடுகிறார்கள். ஒரு அனிமேஷன் படத்தில் தனது பால்ய சகியை உறுதிப்படுத்திக் கொண்ட பையனின் முகத்தில் தோன்றிய மலர்ச்சியை அப்பட்டமாகப் பார்க்க முடிகிறது.

ஆனால் எல்லா சந்தோஷங்களும் ஒரு கட்டுக்குள் அடங்கியவை என்கிற நிர்ப்பந்தங்கள் இருக்கின்றன. இயற்கை அழகு மேவிக்கொண்டிருக்கும், மென்காற்று வீசும், விரிந்து பரந்திருக்கும் ஒரு காட்டின் கொடையான புல்வெளிகளில் சுதந்திரமாக ஓடித் திரிய முடியாது. அவற்றின் நிலத்தை கைப்பற்ற எண்ணும் எதிரிகள் அவற்றைத் தாக்க முற்படலாம். அல்லது அங்கே மனிதர்கள் அவற்றை வேட்டையாட வரக்கூடும். புலிகளும் செந்நாய்களும்கூட இரையெடுக்க வந்தாக வேண்டுமே. அம்மா பாதுகாப்பாக இருப்பது எப்படி என்று கற்றுக் கொடுக்கிறது. பதுங்கி இருக்க வேண்டிய தருணங்களும்கூட வாழ்வின் ஒரு அங்கம் என்பதைத் தனது மகன் கற்றுக்கொண்டாக வேண்டும் என்பது அதற்குத் தெரியும். ஒருபோதும் தன் மகனுக்கு எந்த ஆபத்தும் நேர்ந்துவிடக் கூடாது என்கிற பதைபதைப்பு அதை செலுத்திக்கொண்டிருந்தாலும், தனது மகனை தப்பவைத்துவிட்டுப் பின்தங்கும்போது துப்பாக்கி வெடிக்கும் சப்தம்.

மான்களுக்குத் தலைவனும் பேம்பியின் தந்தையும் அப்பகுதியின் பிரின்சுமான கம்பீரமான மான் வந்து நிலைகுலைந்து நிற்கும் பேம்பியை அழைத்துச் செல்லும்போது பெருத்த அமைதி.

பெரிய மானைப் பின்தொடர்ந்து செல்லும் பேம்பி, ஒருவேளை அம்மா இருந்துவிடுவாளோ என்று திரும்பிப் பார்க்கும் காட்சி ஒன்று இருக்கிறது. ஒரு நல்ல படத்துக்கு இந்த மாதிரி ஒரு காட்சி மட்டுமே போதும். படத்தில் இக்காட்சியைத் தொடர்ந்து ஒரு மௌனத்தின் இடைவெளி உண்டு. மிகவும் பொருள் பொதிந்த ஒன்று.

படத்தின் ஆரம்பக் காட்சியில் காடு விழித்துக்கொள்ளும் நடைமுறையைச் சொல்லிப் படம் உற்சாகமாக நடை போடுகிறது. பேம்பியின் அம்மா இறந்துபோனது ஒரு நடைமுறை, அதைத் தவிர்க்க முடியாது. மான்களின் வாழ்க்கையைத் தேங்காமல் நின்று ஒரு வளரும் மான் கடந்து செல்ல வேண்டுமல்லவா? திரும்பி வந்திருக்கும் பேம்பி இன்று அழகும் வலுவும் துறுதுறுப்பும் கொண்ட இளைஞன். வசந்த காலத்தில் காட்டின் உயிர்கள் இணைசேரும் பருவத்தில் பெலின் அதைத் தேடி வந்து இணைகிறது. அதன் பொருட்டு நிகழும் ஒரு மோதலில் பேம்பி தனது போர்த் திறமையை அறிகிறது. படத்தின் முடிவு மனிதர்கள் கொண்டுவரும் அழிவு. பேம்பி தன் துணையைக் காப்பாற்றி அதைத் தப்பிக்கச் செய்ய வேண்டிவருகிறது. பிரின்சின் துணை கொண்டு தன்னையும் காப்பாற்றிக்கொள்ளும் பேம்பி, ஒரு பிரின்சாகவும் மாறுகிறது.

பெரிய மான் ஒதுங்கிச் செல்கிறது.

ஏறக்குறைய படம் முடிந்துவிட்ட இந்த நேரத்தில், ஓங்கி ஒலித்த குரல் எதுவும் இல்லை என்பது தெரியும். படம் எந்த நீதியையும் அடிக்கோடிட்டுக் காட்டவில்லை. இது சர்வ நிச்சயமாக சுற்றுச்சூழலைக் காப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் படம்தான். பார்வையாளருக்குப் பாடம் நடத்தும் அபாயத்தைத் தவிர்த்திருக்கிறார்கள். நாம் வாழும் பூமியைப் பற்றிய கவனம் நமக்கு எவ்வளவு இயல்பாக அமைந்திருக்க வேண்டுமோ, அதே கோணத்தில் ஒரு நிலப்பரப்பின் வாழ்வைச் சொல்லி, அவர்கள் அதற்கு உள்ள உரிமையை வலியுறுத்தியிருக்கிறார்கள். நிஜமாகவே, இந்தப் படம் எவ்வளவோ லட்சம் பேருக்குக் காட்டைப் பற்றிய கரிசனத்தைக் கிளறி விட்டிருக்கும். நமக்கு ஒரு காட்டின் மீது எந்த உரிமையும் கிடையாது என்பதை இடித்துக் காட்டியிருக்கும். ஒரு நாவலோ திரைப்படமோ, படைப்பை அடிப்படையாகக் கொண்டது. செய்திகளையோ செய்முறைகளையோ கடைப்பிடிக்கப் பாதை போட்டுக் கொடுப்பது அதன் வேலையாக இருக்க முடியாது. இயற்கையைப் பற்றிச் சொல்லும் படைப்பு இயற்கையாக இருக்கும்போது இயற்கையாகவே மேலும் பலரைத் தொடுவதற்கு அது பொருத்தமுள்ளதாகிறது. எப்போதாவது காட்டுக்குள் திரிகிற நேரத்திலெல்லாம் நான் இந்தப் படத்தை நினைத்துக்கொண்டு இருந்திருக்கிறேன் என்பதுதான் அதனுடைய ஆதாரம். ஏன் மகனை அழைத்துச் செல்கிற, அல்லது அவனாகப் போகும் தருணம் நேர்ந்தால், அவனால் பேம்பியை நினைத்துக்கொள்ளாமல் இருக்க முடியாது.

இப்போது கடைசி அத்தியாயத்திற்கு வரலாம். மனிதர்களின் அலட்சியத்தினால் காட்டில் எவ்வளவோ உயிர்ச் சேதங்கள். அது முடிந்து பெலின் இரண்டு குழந்தைகளை ஈன்றிருப்பது விசேஷம். கடைசி ஷாட் பேம்பி காட்டைப் பாதுகாக்க பிரின்சாகத் தலைமை ஏற்றுப் பாதுகாவலனாக இருப்பது வரும். இதற்கு முன்பாக வழக்கம் போல் காடு விழித்துக்கொள்ளும் காட்சியும் வரும். படத்தில் பங்குபெற்றிருந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் அவற்றுக்குப் பிறந்த குழந்தைகளுடன். அடுத்த தலைமுறை. அவர்கள் அங்கே வாழ்வாங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டிலும் ஒரு படம் வேறு எதையும் சொல்லத் தேவையில்லை. படக்குழுவை, இயக்குநர்களைப் போற்றிக்கொள்கிறேன்.

நீங்கள் இந்தப் படத்தைப் பாராதவராக இருந்து, இதற்கு மேல் பார்க்க நேர்ந்தால் நான் சொன்னதை நீங்களும் சொல்லக்கூடும்.

  • மணி எம் கே மணி

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments