தாதுமணல் கொள்ளையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குக!

தாதுமணல் கொள்ளையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குக; சேதமடைந்த கடற்கரை மறுசீரமைக்கப்பட வேண்டும்.

பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை!

தென் மாவட்டக் கடற்கரைகளில் சட்டவிரோதமாக தாதுமணல் எடுத்தது தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்ட கடலோரப் பகுதிகளில் வி.வி.மினரல்ஸ் உட்பட சில நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக தாது மணலைச் சட்டவிரோதமாக எடுத்தது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் 17.02.202025 அன்று தீர்ப்பளித்துள்ளது.

இவ்வழக்கு விசாரணையில், சட்டவிரோதமாகத் தாதுமணல் எடுக்கப்படுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து தாதுமணல் எடுப்பதற்கும் கொண்டு செல்வதற்கும் 2013ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டதாகவும், தடைக்கு முன்பும் பின்பும் சட்டவிரோதமாகத் தாதுமணல் எடுத்ததால் ஏற்பட்ட 5 ஆயிரத்து 832 கோடியே 44 லட்சம் ரூபாய் இழப்பீட்டைத் தனியார் தாதுமணல் ஏற்றுமதியாளர்களிடமிருந்து வசூலிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அரசு சார்பில் கூறப்பட்டது.

அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் 17.02.2025 அன்று இந்த வழக்கில் நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வு தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்பில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி கடற்கரைகளில் சட்டவிரோதமாகத் தாதுமணல் எடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பிறகும் தாதுமணல் எடுக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் சரியானதுதான் என்றும் சட்டவிரோதமாகத் தாதுமணல் இருப்பு வைக்கப்பட்டதும், கடத்தப்பட்டதும் உறுதி செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், சில உத்தரவுகளையும் நீதிமன்றம் பிறப்பித்தது. அவை பின்வருமாறு;

• தனியார் நிறுவனங்களுக்கு அரசால் விதிக்கப்பட்ட அபராதம் செல்லும்.
• தாதுமணல் தொடர்பாக இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் ககன் தீப் சிங் பேடி, சத்யபிரதா சாகு ஆகியோர் சமர்ப்பித்த அறிக்கை செல்லும்.
• சட்டவிரோதமாக எடுக்கப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ள தாதுமணலை உடனடியாக ஒன்றிய அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.
• தடை செய்யப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட தாது மணலுக்கான தொகை மற்றும் ராயல்டியை தனியார் நிறுவனங்களிடம் அரசு வசூலிக்க வேண்டும்.
• இந்த விவகாரத்தில் அரசு அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.
• தாதுமணல் முறைகேடு தொடர்பான வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படுகிறது.
• மாநில காவல்துறை பதிவு செய்த வழக்குகளும் சி.பி.ஐ.க்கு மாற்றப்படுகிறது. சி.பி.ஐ.யிடம் மாநில போலீசார் நான்கு வாரங்களில் வழக்கின் ஆவணங்களை வழங்க வேண்டும்.
• இந்த முறைகேட்டில் அரசியல்வாதிகளின் பங்கு இருப்பதை புறந்தள்ள முடியாது. எனவே, சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனங்களின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்து அமலாக்கத்துறை, வருமான வரித்துறைக்கு ஒன்றிய அரசு தெரிவிக்க வேண்டும்.
என்பன உள்ளிட்ட உத்தரவுகளை இத்தீர்ப்பின் மூலம் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

பூவுலகின் நண்பர்கள் சார்பில் இத்தீர்ப்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை வரவேற்கிறோம். ஆனால், இத்தீர்ப்பின் உத்தரவுகளில் தாதுமணல் கொள்ளையால் சுற்றுச்சூழலுக்கும் பொதுமக்களின் உடல் நலத்திற்கும் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான விவாதங்களோ உத்தரவுகளோ இடம்பெறவில்லை.

மூன்று மாவட்டங்களிலும் நடந்த தாதுமணல் கொள்ளையில் சுற்றுச்சூழல் விதிகள், கடற்கரை மண்டல மேலாண்மை விதிகள், மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இசைவாணைகள் மீறப்பட்டுள்ளன. இதனைச் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்துள்ளது. சுற்றுசூழல் பாதுகாப்பு விதிகளை மீறி மேற்கொள்ளப்பட்ட தாதுமணல் கொள்ளையால் மூன்று மாவட்டங்களின் கடற்கரை வளம் கடுமையாகச் சுரண்டப்பட்டுள்ளது. குறிப்பாக கடற்கரை வளங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சூழலமைவான மணற்குன்றுகள் பல இடங்களில் அழிக்கப்பட்டுள்ளன.
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் உள்ள 75 கடலோரக் கிராமங்களில் ஏறத்தாழ 50 கிராமங்கள் தாதுமணல் கொள்ளையால் பாதிப்படைந்துள்ளன. குமரி முதல் தூத்துக்குடி வரை நடந்தே செல்லக்கூடியதாக இருந்த கடற்கரையின் நிலை மாறி, இன்று பல கிராமங்களில் கடற்கரையே இல்லாமல் போய்விட்டது. இதனால் கடலரிப்பு அதிகமாகிவிட்டது.

கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உப்பாகிவிட்டது. கடற்கரையும் கடலோரத் தாவரங்களும் அழிக்கப்பட்டதால் இனப்பெருக்கத்திற்காக நிலத்தையும் உணவிற்காகக் கடலையும் நம்பி வாழும் இருவாழ்விகளான ஆமைகள் இக்கடலோரத்தின் பல பகுதிகளுக்கு வந்து முட்டையிடுவதையே நிறுத்திவிட்டன. கடற்கரையின் வளம் அழிக்கப்பட்டால் அது ஆழமற்ற கடல்பகுதியின் வளத்தையும் அழித்துவிடும். இக்குறிப்பிட்ட சீரழிவு மட்டும் அப்பகுதிகளில் நீண்டகால பாதிப்ப்பை ஏற்படுத்தவல்லது.

மேலும் தாதுமணல் கொள்ளையில் ஈடுபட்ட நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் சுரண்டல் நிகழ்ந்த கிராமங்களைச் சுற்றி வசிக்கும் மக்கள் மிகக் கடுமையான கதிரியக்க பாதிப்புக்கு ஆளாக்கப்பட்டனர். இதன் காரணமாக மூன்று மாவட்டங்களிலும் கடற்கரையோர கிராம மக்கள் பலருக்கும் புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு, தைராய்டு, மலட்டுத் தன்மை, தோல்நோய், ஆஸ்துமா, கருச்சிதைவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. முழுக்க முழுக்க கடற்கரையிலேயே அமர்ந்து கொண்டும், நடந்து கொண்டும் வேலை பார்க்கும் மீனவர்களுக்கு கதிரியக்கம் நிறைந்த மணற்பகுதியை அகழ்ந்ததால் கதிரியக்க பாதிப்பு அதிகம் நேரிட்டது.

ஆகவே, மேற்குறிப்பிட்ட அனைத்தையும் தமிழ்நாடு அரசு கருத்தில் கொள்வதோடு, பின்வரும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் சார்பில்
வலியுறுத்துகிறோம்.

கோரிக்கைகள்:

1. தாதுமணல் கொள்ளை நடந்த இடங்களில் பொதுமக்களின் உடல்நலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய விரிவான மருத்துவ ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.
2. தாதுமணல் சுரண்டல் நடந்த இடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்புகளை விரிவாக ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.
3. பொதுமக்களுக்கான சிகிச்சைத் தேவை மற்றும் பாதிக்கப்பட்ட கடற்கரையை மறுசீரமைப்பு செய்வதற்கான நிதியை தாதுமணல் கொள்ளையில் ஈடுபட்ட நிறுவனங்களிடமிருந்து இழப்பீடாகப் பெற வேண்டும்.
4. மணற்குன்றுகள் உள்ளிட்ட கடற்கரை வளங்கள் அழிக்கப்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு நெய்தல் இயக்கத்தின் (TN-SHORE) மூலமாக மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
5. பாதிக்கப்பட்ட இடங்களில் மேற்கொண்டு IREL நிறுவனத்துக்கோ பிற நிறுவனங்களுக்கோ தாது வளங்களை அகழ்ந்தெடுக்க எவ்வித அனுமதிகளையும் தமிழ்நாடு அரசு வழங்கக் கூடாது.

தென்மாவட்டங்களின் சூழல் வளத்தையும் மக்கள் நலத்தையும் கருத்தில்கொண்டு மேற்கூறிய கோரிக்கைகளைப் பரிசீலித்து உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

முக்கியமானக் கனிமங்களை அகழ்ந்தெடுப்பதில் தனியாரை அனுமதிப்பதன் தீவிர விளைவுகளுக்கு தென்மாவட்டங்களில் நடந்த தாதுமணல் கொள்ளை சிறந்த உதாரணமாகும். சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் மூலம் Critical Mineral என வரையறுக்கப்பட்ட கனிமங்களைத் தனியார் அகழ்ந்தெடுக்க ஏலம் விட்டு வருகிறது ஒன்றிய அரசு. இதை உடனடியாக ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

BSM MHC Judgement

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments