தென்றலை சுவாசிக்கும் வீடுகள்!

கடும் வறட்சியிலும் சுட்டெரிக்கும் சூரியனின் உக்கிரத்திலும் வெந்து கொண்டிருக்கிறது தமிழகம். விவசாயம் ஒருபுறம் செத்துக்கொண்டிருக்க, வெப்பத்தால் தூக்கமின்றிக் கரைகின்றன நீண்ட இரவுகள். வேர்வையால் தலையணை நனைந்துட இதமான தென்றல் ஜன்னல் வழியே வீசி மேனியை குளிரச்செய்துவிடாதா என ஏக்கப்பார்வை பார்த்துக்கொண்டிருக்கும்போதே சேவல் கூவத்தொடங்கிவிடுகிறது. இதற்கிடையே கொசுக்களின் ஓயாத ரீங்காரம் வேறு!

குளிரூட்டிகள்:

அறைக்கு வெளியே வானிலை கொதித்தாலும் குளிர்ந்தாலும் தன் அறையின் வெப்பத்தை தானே தீர்மானித்துக்கொள்ள மனிதன் கண்டுபிடித்த உன்னதக் கண்டுபிடிப்புகளில் ஒன்றான ஏர்கண்டிஷனர்கள் பலவிதமான உடல்நலப் பாதிப்புகளை உருவாக்குவதாய் பல ஆய்வுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி அறை குளிரூட்டிகள் உறிஞ்சும் மின்சாரமும் அவை உருவாக்கும் சூழல்மாசுபாடும் பொறுப்புள்ள சூழலைக் காக்கவிரும்பும் எந்த குடிமகனும் புறந்தள்ளக் கூடியதல்ல. மின்சாரத்தால் இயங்கும் குளிரூட்டிகள் அறையினை குளிர்விப்பது மட்டுமல்லாது அறையின் ஈரப்பதத்தை முற்றிலுமாக உறிஞ்சிவிடுகின்றன. எனவே தோல் எளிதில் வறண்டுவிடுகிறது. மேலும் குளிரூட்டப்பட்ட அலுவலகம் அல்லது வீட்டின் அறையிலிருந்து வெப்பம் மிகுந்த சூழலுக்கு அடிக்கடி மாறும்போது இந்தத் திடீர் மாற்றத்திற்கு ஈடுகொடுக்க முடியாது தோல் அதிகம் பாதிக்கப்படுகிறது. குளிரூட்டப்பட்ட அறையில் தொடர்ந்து வேலை செய்பவர்களுக்கு இயற்கையான வெப்பத்தைத் தாங்கும் திறன் குறைகிறது. இதனால் கோடைகாலங்களில் எளிதில் அவர்கள் பாதிக்கப்படுவார்கள். இப்படி அடுக்கடுக்கான சிக்கல்கள் பட்டியலிடப் பட்டாலும் மின்சாரக் குளி ரூட்டிகளின் தேவையை முற்றிலுமாக நாம் ஒதுக்கமுடியாதெனினும் சரியான முறையில் நம் கட்டிடங்களைத் திட்டமிட்டால் குறைந்தபட்சம் அவற்றின் பயன்பாட்டைக் கணிசமாக குறைக்க முடியும். இதனால் நம் பணத்தை சேமிப்பது மட்டுமின்றி தேவையற்ற மின்விரயத்தால் ஆகும் சூழல் சீர்கேட்டையும் தவிர்க்க முடியும். புதிதாய் வீடுகள் கட்டுபவர்கள் தங்கள் வீட்டில் இயற்கையான குளிர்ச்சியைப்பெற என்ன செய்யமுடியும் என பார்க்கலாமா?

பாரம்பரியமும் நவீனமும்:

இப்புவியில் இரத்தத்தை உறையச்செய்யுமளவு குளிர்ப்பிரதேசங்களிலும் உடலின் அத்தனை நீரையும் வற்றச்செய்யுமளவு சூடான பாலை நிலங்களிலும் மக்கள் பரவலாக பல்லாயிரம் ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். ஒவ்வொரு இடங்களிலும் வீடுகள் கட்ட ஒவ்வொரு விதமான கட்டுமானப் பொருட்களும் கட்டுமான முறைகளும் பாரம்பரியமாக கடை பிடிக்கப்பட்டு வந்திருக்கின்றன. வெப்பம் மிகுந்த தென்னிந்தியாவில், பல்வேறு தரப்பு மக்களின் பொருளாதார வசதிகளுக்கேற்ப வீடுகளின் கூரைகள் வைக்கோல் அல்லது ஓலை வேயப் பட்டவையாக இருந்தாலும் சரி அல்லது சுட்ட ஓடுகள் வேயப்பட்டவையாக இருந்தாலும் சரி வெப்பத்தைத் தாக்குப்பிடிக்க பொதுவான சில அம்சங்கள் அவற்றில் இருந்தன. குளிர்ந்த காற்றைவிட சூடான காற்று அடர்த்தி குறைவாதலால் அறையின் உள்ளிருக்கும் வெப்பக் காற்று உட்பகுதியில் மேலே எழும்பி கீற்று அல்லது ஓடு வேயப்பட்ட கூரையின் உச்சியில் இடைவெளிகள் வழியாக வெளியேற, அறையில் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப அடர்த்தி குறைந்த குளிர்ந்த காற்று கதவு மற்றும் ஜன்னல்கள் வழியாக உள்ளிழுக்கப்படும். அறைக்கு வெளியே காற்றோட்டம் இல்லையென்றாலும் அறைக்குள்ளே காற்றோட்டத்தை ஏற்படுத்த இந்த பாரம்பரிய கட்டுமானங்களின் கூரை களிலிருந்த இடைவெளிகள் உதவின. இது போன்று கட்டுமானப் பொருட்களைத் தெரிவுசெய்வதிலிருந்து கட்டிடங்களை வடிவமைத்து கட்டிமுடிப்பதுவரை பலவிதமான தொழில்நுட்பங்கள் உலகின் ஒவ்வொரு பகுதி மக்களாலும் அவரவர் பகுதியின் தட்ப்பவெப்பநிலை, வாழ்க்கைமுறை மற்றும் அவ்விடத்தில் எளிதில் கிடைக்கும் கட்டுமானப் பொருட்களைக்கொண்டு கட்டப்பட்டன.

இவை ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒன்றுக்கொன்று பெரிதும் மாறுபட்டவை. தனித்துவமானவை. அப்பகுதிக்கு மட்டுமே உரித்தானவை. உதாரணமாக காரைக்குடியின் கட்டிடங்கள் காரைக்குடிக்கானவை. அவற்றைக் கன்னியாகுமரியில் பயன்படுத்துவது பொருத்தமற்றது. இராஜஸ்தானின் வீடுகள் கேரளத்துக்குப் பொருத்தமற்றவை. அதேபோன்று மலைவாழ்மக்களின் வீடுகள் கடல்தொழில் புரியும் மக்களுக்கு பொருத்த மற்றவை. ஏனெனில் ஒவ்வொரு மக்களின் தேவைகளும் அவர்களின் வாழும் வட்டாரத்தின் தேவைகளும் வெவ்வேறானவை. எல்லாருடைய வெவ்வேறான சிக்கல்களுக்கு எப்படி ஒரே தீர்வு இருக்கமுடியாதோ அதேபோன்று இரு வெவ்வேறான காலநிலைகளுக்குப் பொருத்த மான ஒரு கட்டுமானம் இருக்கமுடியாது. ஆனால் எப்போது நவீன கட்டுமான முறையை எல்லாருடைய பிரச்சினையையும் தீர்க்க வல்லதுபோல நாம் நம்பத் தொடங்கினோமோ அங்குதான் சிக்கல் தொடங்கியது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் நகரங்களில் வாழ்வை நகர்த்த அடுக்ககங்களின் தேவை இன்றியமையாதது. தனி வீடு கட்டுபவர்களும் கூட கூடுதலாக மாடியில் சில வீடுகள் கட்டி வாடகை வருமானத்தில் வங்கிக் கடனை அடைக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் நவீன கட்டுமானங்களின் தேவை மறுக்கமுடியாதது. இந்த நவீன கட்டுமானங்களில் வெப்பம் தணிக்கும் “தென்றல் காற்றை” இலவசமாய்ப் பெற சில வழிமுறைகளைப் பார்க்கலாம். முதலாவது வெப்பமானது (1) வெப்பக்கதிர் வீசல், (2) வெப்பக்கடத்தல் மற்றும் (3) வெப்ப சலனம் என மூன்று விதங்களில் பரவுகின்றது. கட்டிடங்களை பொறுத்தவரை வெப்பம் அலையாகவோ அல்லது துகளாகவோ நேரடியாக சூரியனிலிருந்து சுவரிலோ கூரையிலோ விழுந்து வெப்பப் படுத்துவதை வெப்பக் கதிர்வீசல் எனலாம். சூரியஒளி சுவரின் வெளிப்புறத்தை வெப்ப மடையச் செய்யும்போது அது சுவரின் உட் பகுதிக்குப் பரவுவதை வெப்பசலனம் எனலாம். சுவரின் உட்பகுதியின் வெப்பம் அறையில் அடை பட்ட காற்றை வெப்பப்படுத்துவதை வெப்பக் கடத்தல் எனலாம். இந்த மூன்று விதங்களிலும் நம் கட்டிடங்கள் வெப்பமடைகின்றன. அவற்றை எப்படிக் கட்டுப்படுத்தலாம் என பார்ப்போமா?

சுற்றுச் சுவர்:

அன்றைய நாட்களில் பெரிய அளவில் வீடு களுக்கு சுற்றுச்சுவர்கள் இல்லையெனினும் தோட்டங்களில் கட்டப்பட்ட வீடுகள் மரங்களால் சூழப்பட்டோ அல்லது திறந்த வெளிகளில் கட்டப்பட்ட வீடுகள் நெருக்கமாக கட்டப் பட்டதாலோ வீட்டைச்சுற்றி இயற்கையாகவே நிழல் போர்வை அமைந்திருந்தது. ஆனால் பாது காப்புக் காரணங்களுக்காக இன்று சுற்றுச்சுவர் அத்தியாவசியமாகிப் போனது. கருப்பான தார்ச் சாலைகள் மிக அதிக வெப்பத்தை உட்கிரகித்து உமிழக் கூடியவை. வீட்டின் சுற்றுச்சுவர் தார்ச் சாலைகளிலிருந்து வீட்டுச் சுவரையும் ஜன்னல்களையும் மறைப்பதாக இருத்தால் வெப்ப உமிழ்வை கொஞ்சம் மட்டுப் படுத்தலாம். அதேநேரத்தில்
காற்றின் திசையில் சுற்றுச்சுவரின் உயரம் குறைவாக இருப்பது அதிக காற்றோட்டத்துக்கு வழிவகுக்கும். மேலும் வீடு சாலையிலிருந்து போதிய இடைவெளி விட்டு அமைப்பதும் வெப்பமாவதை குறைக்கும். சுற்றுச்சுவருக்கும் வீட்டுக்கும் இடைப்பட்ட காலியிடத்தில் சிமெண்ட் கற்கள் பதிப்பது தரையை மேலும் அதிகச் சூடாகச்செய்யும். எனவே மண்தரையை தோட்டம் அமைத்து மறைப்பதோ அல்லது அப்படியே விடுவதோ நல்லது.

கூரைகள்:

நேரடியாக சூரிய ஒளி கூரையின்மீது விழுவதை முடிந்த மட்டும் தடுக்க வேண்டும். கட்டிடத்துக்கு அருகில் கட்டிடத்தை குடை போல் காக்கும் உயர்ந்த மரங்கள் இருப்பின் நலம். மாடியில் தோட்டம் அமைப்பதும் ஓரளவுக்கு நேரடியாக சூரியஒளி கூரையில் விழுவதைத் தவிர்க்கும். முடிந்தால் பசுமைக் குடில் அல்லது கீற்றுக் கூரைகள் மொட்டை மாடியில் அமைப்பது வெப்பத்தைக் குறைப்பது மட்டுமின்றி வேறு விதங்களிலும் பயன்படும். மொட்டை மாடியில் தரையில் பதிக்கப் பட்டிருக்கும் ஓடுகள் அதிகவெப்பத்தை உறிஞ்சி காங்கிரீட்டுக்கு அளிக்கும். காங்கிரீட் தனது வெப்பத்தை நீண்டநேரம் தக்கவைத்துக் கொள்ளும் பண்புள்ளது. எனவே தரையில் விழும் வெப்பத்தை எதிரொளிக்கும் வெண்மையான வண்ணம் பூசலாம். இதற்காகவே தயாரிக்கப் படும் பலவிதமான வெண்பூச்சுகள் சந்தையில் கிடைக்கின்றன. இவை அறையினுள் குறிப்பிடத் தகுந்த அளவு வெப்பத்தைக் குறைக்கும். சூரியமின் தகடுகளைப் பொருத்துவது கூரையில் நேரடியாக சூரியஒளி விழுவதை குறிப்பிடத்தக்க அளவு தடுப்பதோடு அதனால் மின்சாரச் செலவையும் மிச்சப்படுத்தலாம். அதுமட்டுமின்றி மின்சார பயன்பாட்டால் ஏற்படும் சூழல் மாசுபாட்டையும் குறைக்கலாம். தரையிலிருந்து காங்கிரீட் கூரைகளின் உயரத்தை அதிகப்படுத்துவது வெப்பத்தின் தாக்கத்தை சற்று குறைக்கும். மேலும் வெப்பத்தடுப்பானாக (weathering course)  பாரம்பரிய முறையான கடுக்காய், சுண்ணம் உடைந்த செங்கல் சேர்த்த கலவையின்மீது ஓடு பதிக்கலாம்.

சுவர்கள்:

சுவர்களின் வெளிவண்ணம் வெண்மை யாகவோ அல்லது வெளிர்வண்ணமாகவோ இருப்பது சூரிய ஒளியை எதிரொளிக்க உதவும். சுவரில் நிழல் விழுபடியான செடிகள் வளர்க்கலாம். மாலையில் வெளிப்புறச் சுவர்களில் உட்க்கிரகிக்கப்பட்டும் வெப்பம் இரவில் உமிழப்படும். இதனைத் தவிர்க்க படுக்கை அறையின் சுவர்கள் மாலை வெயில் விழும் திசையில் அமையாதபடி வடிவமைக்கலாம். செங்கற்களை நெருக்கமாக அடுக்கும் முறையைத் (English Bond) தவிர்த்து நடுவில் இடைவெளி இருக்கும்படியான முறையை
(Rat Trap Bond) பின்பற்றினால் அறைக்குள் வெப்பம் கடத்தப் படுவது வெகுவாகக் குறைக்கப்படுவது மட்டுமின்றி கட்டுமானச் செலவும் குறையும். மறைமுகமாக சிமெண்ட் உபயோகத்தையும் குறைக்கலாம். சூரிய ஒளித் தடுப்பான்களை (sun shade) முறையாக அமைத்து நேரடியாக சூரிய ஒளி அறைக்குள் விழுவதைக் கட்டுப்படுத்தலாம். சுவர்களில் வெப்பக்காற்று வெளியேற போதுமான இடைவெளியில் துவாரங்கள் அமைப்பதன்மூலம் குளிர்ந்த காற்று உள்நுழைய வழிசெய்யலாம். படுக்கையறைகளும் வரவேற்பறையும் நல்ல காற்றோட்டமுள்ள திசையை நோக்கியவாறு இருக்கவேண்டும்.

ஜன்னல்கள்:

சமீபத்தில் ஒரு கல்லூரிக்குச் சென்றிருந்தேன். வெளியே அழகான தென்றல் வீசிக் கொண்டிருக் கிறது. போதுமான எண்ணிக்கையில் ஜன்னல்கள் இருந்தும் அவை அனைத்தும் திறந்து வைக்கப்பட்டிருந்தும் உள்ளே காற்றின் ஒரு சிறு அசைவுகூட இல்லை. அப்புறம் உற்றுப் பார்த்தபோதுதான் தெரிந்தது. அந்த ஜன்னலின் கண்ணாடிப் பலகைகளின் அமைப் பானது. கீழிருந்து மேலாக சாய்வாக திறக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வடிவமைப்பு பனிமூடிய நாடுகளுக்கானது. மேலைநாடுகளில் காற்றோடு பனித்துகள்கள் நேரடியாக வீட்டிற்குள் வந்துவிடாமலிருக்கவும் மேலும் கண்ணாடியில் படும் பனித் துகள்கள் சேர்ந்து கெட்டியாகிவிடாது வழுக்கி விழுமாறும் ஜன்னல் பலகைகள் (Window panels) சாய்வாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் நம் பகுதியின் சூழலுக்கு இது முற்றிலும் முரணானது. ஜன்னல்களை அந்தப் பகுதியின் காற்றுவீசும் திசையை அறிந்து அதற்கேற்றவாறு பொருத் துவது காற்றோட்டத்தை அதிகரிக்கும். அறையில் ஒரே சுவரில் இரு ஜன்னல்களைப் பொருத்து வதைவிட அடுத்தடுத்த அல்லது எதிரெதிர் சுவர்களில் ஜன்னல்கள் பொருத்துவது காற் றோட்டத்தை அதிகரிக்கும். காற்று வீசும் திசை ஒவ்வொரு பருவகாலங்களிலும் வெவ்வேறாக இருப்பது மட்டுமன்று அது குறிப்பிட்ட மனையின் அருகிலிருக்கும் பெரிய மரங்கள், கட்டிடங்கள், குன்றுகள் அவற்றின் உயரம், தூரம் போன்றவற்றைப் பொறுத்து பெரிதும் மாறுபடும். ஒரு முழுவருடமும் காற்று எந்தெந்தத் திசையிலிருந்து எந்தெந்த பருவங்களில் வீசுகிறது எனத்தெரிந்துகொண்டு ஜன்னல்களை அதற்கேற்றவாறு அமைப்பது நல்லது. அதேநேரத்தில் வீட்டிற்குள் மிக அதிக காற்றோட்டம் இருந்தாலும் தொந்தரவாக அமைந்துவிடும். மனிதர்கள் வீட்டினுள் ஒவ்வொரு அறையாகச்சென்று வெளியேற எப்படி பாதைகளைத் திட்டமிடுகிறோமோ அதேபோன்று குளிர்ந்த காற்றும் கட்டிடத்தின் உள்வந்து சூடான காற்றை வெளியேற்றும் வழி திட்டமிடப்பட வேண்டும். ஜன்னல்களைத் திறந்து வைத்தால் கொசுக்கள் மொய்க்கும் வாய்ப்புள்ள பகுதிகளில் ஜன்னலுக்கு கொசுவலைகள் பொருத்தலாம். இப்போது பலரும் வீடுகளுக்கு வெளிப்பக்கமாக திறக்கும்படியல்லாத தள்ளும் வகையிலான ஜன்னல்களை (Sliding window) அமைக்கின்றனர். அவை எப்போது ஒரு பக்கம் மூடியே இருக்கும். அதாவது ஜன்னல் பெரிதாக இருந்தாலும் அதன் பாதிப்பகுதியை மட்டுமே திறக்கமுடியும். இதனால் உள்நுளையும் காற்றின் அளவும் குறையும்.

மின்விசிறிகள்:

மின்விசிறிகளை கூரையில் அமைப்பது (Ceiling fan) இடத்தை மிச்சப்படுத்தினாலும் அவை அறையின் மேலிருக்கும் வெப்பக்காற்றையே கீழே தள்ளுகின்றன. ஆனால் மேசை மின்விசிறிகள் பக்கவாட்டிலிருந்து குளிர்ந்த காற்றை அறைக்குள் தள்ளுகின்றன. அவற்றை ஜன்னலுக்கு அருகில் பின்புறம் ஜன்னலை நோக்கியவாறு வைப்பதால் வெளியிலிருந்து காற்றை உள்ளிழுக்கமுடியும். மின்விசிறிகளின் அமைவிடமானது படுக்கை அல்லது அமரும் இடத்தைக் கவனத்தில்கொண்டு முதலிலேயே திட்டமிடப்படுவது நல்லது. கொஞ்சம் திட்டமிட்டால் பல்லாயிரம் செலவு செய்து குளிர்ந்த தென்றல் காற்றை பெரும் விலைகொடுத்து வாங்குவதிலிருந்து நாம் தப்பிக்கொள்வதோடு இப்புவியையும் தப்புவிக்கலாம். (படத்தில் இருப்பவை லாரிபேக்கரால் தென்னிந்திய காலநிலைக்காக வடிவமைக்கப்பட்ட சுவாசிக்கும் சுவர்கள்)

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments